அன்பு ; மனிதம் பேசும் மௌன மொழி

அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு உயரிய மனிதப் பண்பு, உன்னதமான மனநிலை, அற்புதமான வாழ்வியல் நெறி. மனிதநேயத்தின் அடிப்படைச் சாரமாகவும், இயற்கையின் உன்னதமான வாழ்வியல் உணர்வாகவும் அன்பு திகழ்கின்றது.
இந்த அன்பெனும் கொடையானது ஒரு மொழிக்கோ, ஒரு மதத்திற்கோ, ஓர் இனத்திற்கோ சொந்தமானதல்ல. அது ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திற்கும் பொதுவான ஓர் உன்னத உணர்வாகும்.
அன்பு, ஆதரய (Adaraya), பிரேம (Prema), ஸ்நேக (Sneha), ப்ரீதி (Preeti), ப்யார் (Pyaar), லவ் (Love), அமூர் (Amour) என ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும், அவற்றின் அடிப்படை வெளிப்பாடு ஒரே உன்னத உணர்வாகவே அமைகின்றது.
அன்பு ஒரே வடிவத்தில் வெளிப்படுவதில்லை. அது நபர்களுக்கு ஏற்பப் பல்வேறு விதங்களில் வெளிப்படுகின்றது. தாயன்பிலிருந்து தொடங்கும் அன்பானது பல்வேறு பரிணாமங்களில் வெளிப்பட்டு, தன்னலமற்ற உயரிய இறைநிலை உணர்வாகவும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.
அன்பானது புன்னகையாகவும், ஆறுதல் வார்த்தையாகவும், கண்ணீரைத் துடைக்கும் கரங்களாகவும், பசியாற்றும் உணவாகவும், ஆபத்திலிருந்து காக்கும் பாதுகாப்பாகவும் எனப் பல்வேறு அழகிய வடிவங்களில் வெளிப்படுகின்றது.
அன்பு என்பது வார்த்தைகளைக் கடந்த ஓர் அழகிய செயல்பாட்டு வடிவமாகும். அது ஆர்ப்பரிக்காது; அமைதியாகவே தன்னை வெளிப்படுத்தும்.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அன்பில்லாதவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் தங்களுக்காகவே வைத்துக்கொள்வார்கள். ஆனால், அன்புடையவர்கள் தம் பொருளை மட்டுமன்றி, தம் எலும்பையும் பிறருக்காக வழங்கத் துணியும் அளவிற்குத் தன்னலமற்றவர்களாக இருப்பார்கள். அன்பின் ஆற்றலை வள்ளுவர் தனது அன்புடைமை அதிகாரத்தில் அழகாக எடுத்துரைக்கின்றார்.
அந்த வகையில், “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” எனத் தொடங்கும் குறளில், அன்பை மறைத்து வைப்பதற்குப் பூட்டுப் போட முடியுமா என வினவுகின்றார். அதற்கான விடையையும் அடுத்த அடியிலேயே மிக அழகாக வெளிப்படுத்துகின்றார். அன்பு நிறைந்தவர்களின் கண்களில் பெருகும் கண்ணீரே அவர்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அன்பைப் பறைசாற்றிவிடும் என்கிறார்.
மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்வதும், அவர்களின் துயரத்தில் கருணை கொள்வதும் தூய்மையான அன்பின் வெளிப்பாடுகளாகும் எனப் பௌத்த தர்மத்தின் கரணிய மெத்த சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அன்பின் கண்களால் பாருங்கள்; முழுப் பிரபஞ்சமும் அழகாக மாறும்” என்ற கருத்தைத் தத்துவஞானி ஓஷோவும் வலியுறுத்தியுள்ளார்.
பைபிளில் கூறப்பட்டுள்ள அன்பின் பண்புகளும், திருக்குர்ஆன் வலியுறுத்தும் அருளும் கருணையும், பகவத் கீதை எடுத்துரைக்கும் அனைத்து உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய அன்பும் மனிதநேயத்தின் பொதுவான விழுமியங்களை நமக்கு உணர்த்துகின்றன. எல்லா மதங்களும் இறுதியில் போதிப்பது அன்பையே. வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும், தத்துவங்களும் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அவை அனைத்தின் உள்ளார்ந்த சாரமும் அன்பும் மனிதநேயமுமே ஆகும்.
பிறருடைய துன்பத்தைத் தமது துன்பமாக உணர்ந்து, இயன்றவரை உதவிக்கரம் நீட்டும் மனப்பான்மையே உண்மையான அன்பின் வெளிப்பாடாகும். அன்பு பேசுவதற்கு மொழி தேவையில்லை; உணர்வதற்கு நல்ல இதயம் போதும். அன்பு நிறைந்த மனிதர்களால் மட்டுமே அழகான, அமைதியான, மனிதநேயம் மிக்க உலகத்தை உருவாக்க முடியும். அன்பே உலகின் உயர்ந்த மொழி; அதைப் பேசும் இதயங்களே மனிதத்தின் உண்மையான அடையாளம்.
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்; மனிதநேயத்தைப் போற்றி, அன்பால் உலகை அழகாக்குவோம்
This writing is the work of Kobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing




