அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்…!!

அன்பு 1
ஆதவனோ தன் கடமையை செவ்வனே செய்து முடித்து தன் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, சிவந்த வானமும் தென்றல் காற்றும் என அந்த மாலை பொழுது ரம்யமாய் காட்சியளித்தது.
அதே ரம்யத்துடன் மனதுக்கு குளிர்ச்சி தரும் வகையில் அமைந்திருந்தது அந்தக் கோயில். அதனுள் இரு கைகளையும் தாமரை மொட்டினைப் போல் குவித்து கடவுளை வணங்கிக் கொண்டு…இல்லை வெறித்து கொண்டு நின்றிருந்தாள் ஆத்யா.
அழகிய வட்ட முகம், குண்டு கண்கள், செழுமையான கன்னங்கள், சிவந்த உதடுகள் ,நீளமான அடர்த்தியான கூந்தலை சென்டரில் ஒரு பட்டர்பிளை கிளிப்பினுள் அடக்கி இருந்தாள். எலுமிச்சை நிறத்துடன் ஒரு மெழுகு பொம்மை போல் இருந்தவளை மேனகை கண்டால் சற்று பொறாமை பட்டுதான் போயிருப்பாள் போலும்.
கண்களில் ஜீவன் இல்லாமல் கடவுளையே பார்த்துக் கொண்டிருந்தவள் பூசாரியின்,
” விபூதி எடுத்துக்கோங்கோ ” என்ற குரலில் சுயம் தெளிந்தாள். தன் பிஞ்சு விரலினால் விபூதியை எடுத்து தன் நெற்றியில் கீற்றாய் வைத்துக் கொண்டவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..
லேசான இடியுடன் மழையும் பூந்தூரலாய் தூர ஆரம்பிக்க, தனது நடையையும் எட்டிப் போட ஆரம்பித்த அவளின் கவனத்தில் ஒரு காட்சி தட்டுப்பட்டது.
இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு தகராறு செய்து கொண்டிருக்க அந்த பெண்ணோ அவன் பிடியிலிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தாள்.
அதை பார்த்த ஆத்யாவின் புருவங்கள் இடுங்க வேகமாக அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தலைமுடியை சாக்லேட் நிறத்தில் கலர் செய்து காதில் கடுக்கணும் கை மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை குத்திய பச்சையும் முகத்தில் பணக்கார கலையையும் ஏந்தி திமிருடன் நின்றிருந்தான் அவன்.
அப்பெண் டியூஷன் சென்று விட்டு வருகிறாள் போலும். கையில் இரு நோட்டுப் புத்தகங்களும் நடுவே ஒரு பென்சில் கேசும் இருந்தது. அவளும் பார்ப்பதற்கு வெகுளியாய் சின்னப்பெண் போல் தான் தோன்றினாள் ஆத்யாவுக்கு.
இந்த இடைப்பட்ட நேரத்தில் இருவரையும் தன் குண்டு கண்களால் ஸ்கேன் செய்தபடி நெருங்கினாள் அவள். ” ” டேய் என்னடா பண்ற அந்த பொண்ண விடுடா ” என கோபக் குரலில் கத்திய ஆத்யாவை திரும்பிப் பார்த்த அந்த ஆடவனோ அவளை ஏற இறங்க பார்த்து,
” முதல்ல நீ யாரு ” என திமிராய் கேட்க,
” நான் யாரா வேணாலும் இருந்துட்டு போறேன். இப்படித்தான் யாரும் இல்லாத ரோட்ல ஒரு பொண்ணோட கைய புடிச்சு இழுத்து மிஸ்பிஹேவ் பண்ணுவியா ” என்ன பல்லை கடித்துக் கொண்டு வினவஅதில் அந்த ஆடவன் சிவந்த கண்களுடன்
” நா ஒன்னும் மிஸ்பிஹேவ் பண்ணல. நானும் அவளும் லவ் பண்றோம். நீ எங்க பர்சனல் விஷயத்துல தலையிடாத.உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போயிரு. இல்லன்னா வேற மாதிரி ஆயிரும் ” என அவன் எகிற,
அவ்வளவு நேரம் இருவரையும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண்ணோ அவன் இருவரும் காதலிப்பதாக கூறியதும் அதில் பதறி,
” ஐயோ அக்கா இவன் பொய் சொல்றான். நான் இவன லவ் பண்ணல. இவன்தான் என் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான். எங்க வீட்ல இது தெரிஞ்சா என்ன ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்கன்னு நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். இன்னைக்கு பார்த்து டியூஷன் விட்டு வர வழியில் என் கையை பிடிச்சு இழுத்து வம்பு பண்ணிக்கிட்டு இருக்கான்” என அழுகுரலில் கூற ஆத்யாவுக்கு சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது.
‘ பளார் ‘ என அந்த திமிர்பிடித்தவனின் கன்னத்தில் அறைந்தவள் பற்களை கடித்தபடி,
” ஏண்டா ரோட்ல அந்த பொண்ணு கைய புடிச்சு இழுத்து வம்பு பண்ணதும் பத்தாதுன்னு, ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு பொய் வேற சொல்றியா. இதுல, வேற மாதிரி ஆயிடும்னு திமிர் பேச்சு வேற. என்ன முறைக்கிற பக்கத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு போலாம் வரியா ” என இவளும் பதிலுக்கு எகிற,
‘ போலீஸ் ‘ என்று அவள் உச்சரித்ததும் ” ஹ, ” இகழ்ச்சியாய் இதழ் வளைத்து சிரித்தவன்,” நான் யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா ” என காலாகாலமாக தன் தந்தையின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பணக்கார பிள்ளைகளின் வசனத்தை அவனும் அச்சு பிசகாமல் கூற,
இப்போது இகழ்ச்சியை இதழ் வளைப்பது அவளின் முறையாயிற்று, ” ஹ, இந்த மாதிரி டயலாக் எல்லாம் சரோஜாதேவி காலத்திலேயே கேட்டுட்டோம் புதுசா ஏதாச்சும் ட்ரை பண்ணு ” என்று நக்கலாய் மொழிந்தாள்.
ஏற்கனவே அவள் அறைந்ததில் வெறியாகி இருந்தவன் இவ்வாறு அவள் கேலி செய்யவும் ” உன்ன ” இன்று கையை ஓங்கி கொண்டு அவளை அறைய வந்தவனின் முன்னாள்,’ சர் ‘ என்று சீறி கொண்டு வந்து நின்றது அந்த யமஹா ஆர்1 ( Yamaha R1 ) வகை பைக் ஒன்று.
புயலாய் வந்து நின்ற பைக்கை மூவரும் விழித்துப் பார்க்க, அந்த பைக்கில் வந்து நின்றவன் யார் என அந்த திமிர் பிடித்தவனுக்கு தெரிந்து விட்டது போல கண்கள் பயத்தில் விரிய ,கைகள் நடுங்க நின்றிருந்தான் அவன்.
” இங்க என்ன பண்ற ” என்ற இரும்புருக்கிய குரலில், அந்த பைக்காரனை நிமிர்ந்து பார்த்தாள் ஆத்யா.
ஹெல்மெட் தலையை மட்டுமல்லாது முகத்தையும் மறைத்திருக்க அதனூடாக அவன் இரு கூர்விழிகள் மட்டுமே தெரிந்தது. கருநிற பேண்ட்டும் அதே நிற டி ஷர்ட் அணிந்து ஆறடியும் ஜிம் பாடியமாக இருந்தவனை,
‘ இவன் என்ன அய்யனார் கணக்கா இருக்கான் ‘ என ஆத்யாவின் மனம் எண்ணிக் கொண்டிருக்க,
” அ.. அது.. அது வந்து ” என்று அந்த திமிர் பிடித்தவனின் குரலில் இப்பொழுது அவனை நோக்கினாள் அவள்.
அவனது திணறலில் அந்த பைக்காரனின் பார்வை மேலும் இடுங்க,
” இங்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேட்டேன் ” என்று அழுத்தமாக கேட்டான்.
அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற்றத்துடன் நிற்க அப்பொழுதுதான் அந்த பைக்காரன் இரு பெண்களையும் கவனித்தான். அதில் அந்த பெண் வேறு பயந்து அழுது கொண்டிருப்பதில் புருவங்களை நெறித்தவன்,
” என்னாச்சு சிஸ்டர் ” என மென்மையாக வினவ,
அவளோ பயத்துடன் அந்த திமிர்பிடித்தவனின் மீது பார்வையை பதித்தாள்.அவளது அழுது சிவந்த முகமும் அவனின் தடுமாற்றமும் அவனுக்கு ஏதோ உணர்த்த, ” என்கிட்ட சொல்லு. ஏதாச்சும் வம்பு பண்ணானா ” என அதே காட்டமான குரலில் வினவ தற்போது அந்த திமிர் பிடித்தவனுக்கோ வயிற்றில் பயப்பந்து உருண்டது.
அவனின் காட்டமான குரலில் பயந்த பெண்ணோ மல மலவென நடந்தவற்றை ஒப்பிக்க, இங்கு ஒருவனுக்கோ வியர்த்து வழிந்தது.
அந்தப் பெண் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த பைகாரனின் கண்கள் மெல்ல சிவப்பேர ஓங்கி ஒன்றுவிட்டான் அந்த திமிர் பிடித்தவன் கன்னத்தில்,
அவன் அறைவான் என எதிர்பார்க்காத இரு பெண்களும் அவனை விக்கித்து பார்க்க, ஆத்யாவோ நெஞ்சில் கை வைத்து, ‘ நான் அடிச்சது என்ன அடி. அடின்னா இதான் அடி ‘ என மனதில் கவுண்டர் கொடுக்க,
அறை வாங்கியவனோ அவமானத்திலும் வலியிலும் முகம் சுருங்க நின்றிருந்தான்.” உன்னல்லாம் திருத்தவே முடியாது. இனிமே இப்படி ரோட்ல பொண்ணுங்க கிட்ட வம்பு இழுத்துட்டு இருந்த தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை ” என்று புலியாய் உரும,
அங்கு நிற்கவே அவமானம் பிடுங்கி தின்ன, தன்னை அறைந்த ஆத்யாவையும் அந்த பைக்காரனையும் கண்களில் குரோதம் மின்ன முறைத்தவன் அத்தனை கோபத்தையும் அவன் வெள்ளை நிற ஆடி காரில் காட்டி ஓட்டி சென்றான்.
” இனிமே இப்படி பிரச்சனை வந்தா பயந்து நடுங்க கூடாது. தைரியமா பேஸ் பண்ணனும் புரிஞ்சுதா ” என்ன அச்சிறு பெண்ணை பார்த்து அந்த பைக்காரன் மென்மையாக கூற, அந்த சிறு பெண்
” புரிஞ்சது ணா ரொம்ப நன்றி ” என்று இருவருக்கும் நன்றியை போட்டு விட்டு சென்றுவிட்டது.
அந்த இடத்தில் தனித்திருந்தது அவனும் ஆத்யாயாவும் மட்டுமே.
தற்போது தான் அவன் ஆத்யாவை கவனித்தான். மேலிருந்து கீழாக தன் கூர்மையான கண்களால் அவளை அளவெடுக்க,
அவ்வளவு நேரம் அப்பெண் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளின் உருவம் மறைந்ததும் மெல்ல நகர எத்தனிக்கும் பொழுது தான் கவனித்தால் அந்த பைக்காரன் தன்னையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை.
அதில் சட்டென்று நின்றவள் அவனை தன் மை தீட்டிய குண்டு விழிகளால் என்ன என்று வினவ,
அந்த விழிகள் அவனை என்ன செய்ததோ சற்று ஜெர்க்கானவன்,’ ஒன்றுமில்லை ‘ என இரு தோள்களையும் குலுக்கி தலையை இடம்பலமாக அசைத்தான்.
திரும்பி நடக்கப் போனவள் பின் எதையோ நினைத்தபடி அவனை திரும்பிப் பார்க்க,அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
” நீ பைக் கொண்டுவந்து நிறுத்தின சரி.இப்படித்தான் உடம்புல உரசுற மாதிரி கொண்டாந்து நிறுத்துவியா? விட்டா என் மேலே பார்க் பண்ணி இருப்ப போல. அவன் ஆளும் ஹெல்மெட்டும் ” என அவன் புயலாக வந்து தன் மேனியில் படும் வகையில் பைக்கை நிறுத்தியதை குறித்து திட்ட,
அவனின் கண்களில் சுவாரசியம் குடிக் கொண்டது.
போகிற போக்கில் தன்னை திட்டிவிட்டு செல்பவளையே இதழில் எழுந்த புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ஹரி..ஹரி பிரணவ்.
” ஏழு மணி ஆயிருச்சா ” என சன்னமாக முனங்கியபடி அங்கும் இங்கும் தன் விழிகளை சுழற்றி தன் தோழி ரியாவை தேடியபடி வீட்டிற்குள் நுழைந்த ஆத்யாவின் கவனத்தை சமையலறையில் இருந்து வந்த பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கவர்ந்தது.
மெல்ல மெல்ல நடையை எட்டிப் போட்டவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் அவள். அங்கு ரியா தீவிரமாக சமைத்துக் கொண்டிருக்க மெதுவாக சத்தம் எழுப்பாமல் பின்னிருந்து ” பூ ” என கத்தினாள்.
அதிரடியாய் கேட்ட சப்தத்தில் வீல் என அலறியவாறு கையில் இருந்த கரண்டியை கீழே போட்டாள் ரியா..
ஆத்யாவோ தோழியின் பேயறைந்த முகத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ரியாவோ தன் தோழியின் முதுகில் கும்மு கும்மு என கும்மி கொண்டிருந்தாள்..
” சனியனே.. நான் ஏற்கனவே நேத்து பார்த்த பேய் பட ஞாபகத்தோட தான் சமைச்சுக்கிட்டு இருந்தேன். இதுல நீ வேற பயமுறுத்துறியா.. ” என பாரபட்சமின்றி அடிகளை வழங்கிக் கொண்டிருந்தாள்.
அத்தனை அடிகளையும் பெற்றும் கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்த தோழியை பார்த்து தன் கண்கள் பொய்யாக முறைத்தாலும் மனமோ அவளின் சிரிப்பினை பார்த்து ரகசியமாய் நிம்மதி அடைந்தது.
” ச்சே உன்ன போய் தைரியசாலின்னு நினைச்சிட்டேனே. நீ பயந்தாங்கோலியால் ல இருக்க..” என சொல்லிவிட்டு கெக்க பெக்க என சிரித்த தோழியை பார்த்து..
” போதும் போதும் ரொம்ப தான் ஓட்டாத. இந்தா இத பிடி..” என காபி கோப்பையை ஆத்யாவின் கையில் திணித்தாள்..
” அப்புறம் இன்னைக்கு காலையில ஒரு இன்டர்வியூ போனியே அது என்ன ஆச்சு ”
அவ்வளவு நேரமும் சுவையான கோபியில் மெய் மறந்து இருந்தவள் தோழியின் கேள்விக்கு ,
” ப்ச்.. அது சரி வரும்னு தோணலடி. வேற ஏதாச்சும் தான் ட்ரை பண்ணனும் ” என சோகமான குரலில் கூறினாள்.
” விடு டி அது ஒரு கம்பெனி மட்டும் தான் இருக்கா.. நம்ம வேற பார்க்கலாம் ” என தன் தோழியின் கவலை தாங்காது ஆறுதல் மொழிகளை கூறினாள் ரியா.
சென்ற வாரம் தான் வேலையை ரிசைன் செய்திருந்தால் ஆத்யா. அவளின் டீம் லீடர் கௌரவ் அவள் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து காரணமே இல்லாமல் அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருக்க, இரண்டு மாதங்கள் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவள் அன்று அவள் செய்யாத பிழைக்கு அவள் மேல் பழி போட்டு எல்லோர் முன்னாடியும் திட்டியதில் பொறுமை காற்றில் பறக்க பொங்கி விட்டாள். அவனை ஆத்திரம் தீரமட்டும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியவள் வேலையை உடனே ரிசைன் செய்துவிட்டாள்.
ரியா வெட்ட வைத்திருந்த காய்கறிகளை கழுவி வெட்டியபடி சில நிமிடங்களுக்கு முன்பு நடந்ததை கூறத் தொடங்கினாள் ஆத்யா.
அதைக் கேட்ட ரியாவும் கோபத்துடன் அந்த திமிர் பிடித்தவனை இரண்டு டாஸ் விட்டவள்,” நல்லவேளை நீ கரெக்ட் டைம்க்கு போயிட்ட ” என நிம்மதி அடைந்தாள் .
” ஆமாடி, எனக்கே ஒரு நிமிஷம் படபடன்னு ஆயிருச்சு. அந்த பொண்ணு பிளஸ் டூ படிக்குது போல. பாவம் முகம் எல்லாம் அழுதழுது சிவந்து போயிருச்சு. ப்ச் இந்தப் பணகாருனுங்கங்களே இப்படித்தான். பணம் இருந்தா என்ன வேணாலும் செய்யலாம் என்ற திமிர். ” இன்று பற்களை கடித்து பேசிய தோழியை பார்த்த ரியா,
” நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் அப்படி இல்லடி ” என சிரித்தபடி கூற,
சட்டென்று எழுந்த சினத்துடன்,
” அப்படிதான் எல்லாரும் அப்படித்தான் பணக்காரன்ங்க எல்லாம் மனித உருவத்துல வாழ்ற மிருகம் ” கண்கள் சிவக்க உரைத்த தோழியின் திடீர் கோபத்தின் காரணம் புரியாது அவளை விசித்திரமாக பார்த்து வைத்தாள் ரியா.
” ஓகே ஓகே டி. கூல் ” என அவளை சமன் செய்து, பேச்சை மாற்ற ” நம்ம தான்யா இருக்கால அவ ஒர்க் பண்ற கம்பெனியில வேக்கன்சி இருக்காம். நீ ஒரு தடவை அவளை காண்டாக்ட் பண்ணி பேசு ” என கூற அது சரியாக வேலை செய்தது.
கோபம் சற்று தணிந்தவள்” ஓகே டி நான் பேசுறேன் அண்ட் சாரிடி. நா ஏதோ…” என்று ரியாவை பார்த்து கண்களை சுருக்கி சொல்ல,
” ஹே லூசு நமக்குள்ள எதுக்குடி சாரி எல்லாம் ” என ஒரு கையால் தோழியை அணைத்தவள், ” வா வா சாப்பிடலாம் ரொம்ப பசிக்குது “
என இருதட்டுகளில் உணவை பரிமாறி தனக்கொன்றும் தோழிக்கொன்றும் கொடுத்தவள் டிவியை உயிர்ப்பித்தபடி சாப்பிட அமர்ந்தாள்..
இருவரும் சாப்பிட்டு முடித்ததும்.ஆத்யா, “ரியா நீ போய் தூங்கு நான் கிச்சனை கிளீன் பண்ணுறேன். நாளைக்கு உனக்கு ஆபீஸ் இருக்குல்ல ” என்று கூற அவளும் இரவு வணக்கத்தை கூறிக்கொண்டு அறைக்கு சென்று அடைந்துகொண்டாள்.
அவ்வளவு நேரம் இருந்து சிரிப்பு மறைந்து முகத்தில் இறுக்கம் வந்து ஒட்டிக்கொள்ள,வேண்டாத நினைவுகள் எல்லாம் அவளின் மனதை அலைகழித்தது.
தொடரும்…
This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing





