சமூகவியல்

அச்ச உணர்வு

தன் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரினங்களுக்கு இவ்வுணர்வு தம்மை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே பெரும்பாலும் தோன்றினாலும், ஆறறிவு ஜென்மமான மனிதனுக்கோ பல்வேறுபட்ட பரந்த வகைகளில் அச்சவுணர்வு மனநிலை தோன்றுகின்றது. மனிதனுக்கு மட்டுமேயுள்ள சிந்தனையாற்றலே அச்சவுணர்வு இவ்வாறு ஏற்படுவதற்கான காரணமாகும்.

மனிதன் தாயின் கருவில் குழந்தையாய் உருவெடுத்தது முதல், அவளால் பூச்சாண்டி காட்டப்பட்டு உணவூட்டப்படும் வரை அல்லது உறங்கவைக்கப்படும் வரை அவனுக்கு அச்சவுணர்வு எழுவதில்லை. அது மனதில் அதுவரை செயலற்று இருக்கிறது. அதனைத் தாயானவள் தூண்டி விழிக்கச்செய்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த நேரம் முதல் தூண்டப்படும் அச்சவுணர்வு மனத்தில் நன்கு கருக்கொண்டு வளர்ச்சியடைந்து பல்வேறு விதமாகப் பரிணாமம் பெற்று மனிதனின் இறப்புவரை ஆட்டிப்படைக்கிறது. மனத்தினால் ஆளப்படுபவனே மனிதன் ஆகையினால் மனத்தில் ஊன்றிவிட்ட அச்சவுணர்வினால் அவனது சிந்தனை,செயல்திறன் என்பனவும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது.

குழந்தையாயிருக்கும்போது, தன்னைத் தாய், தந்தையர் கைவிட்டுவிடுவார்களோ, பிரிந்துவிடுவார்களோ என்று அச்சமடைகின்றது. இந்த நியாயமான அச்சம் காரணமாக அது தாய், தந்தையரே தஞ்சம் என எண்ணி அவர்களைவிட்டுப் பிரியாமல் இருக்கிறது. ஓரளவு வளர்ந்ததும் பாடசாலை செல்லும் பருவத்தில் தன் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்களைச் சந்திக்கிறது. ஆசிரியர்களிடம் இயல்பாகவே பிள்ளை அச்சவுணர்வோடு பழகுவது, ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெற்றுக்கொள்வதற்கும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கும் வழிவகுப்பதால் அதுவும் நியாயமான, தேவையான அச்சவுணர்வாகவே இருக்கிறது. தொடர்ந்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் உயர்படிப்புக்களை மேற்கொள்ளும் பொழுது, விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற கல்விமான்களுடன் ஒருவித அச்சவுணர்வுடனேயே மாணவன் பழகுகிறான். அப்போதுதான் கல்விமான்களின் நல்ல அபிப்பிராயத்தையும், அதன்மூலம் அவர்களின் உயர்தர கல்வி ஞானத்தையும் மாணவனால் பெற்றுக்கொள்ள முடிகிறது. கல்லூரி வாழ்க்கை முடிந்து இனி வேலை தேடும் படலம் தொடங்குகிறது. தொழில் ஒன்றில் சேர்வதற்காகப் பல நிபுணர்களின் மத்தியில் நேர்முகப்பரீட்சை நடைபெறுகிறது. அதில் பங்குகொள்ளும்போது அவனுக்கு ஒருவித அச்சவுணர்வு ஏற்படுகிறது. தான் சொல்வதை நிபுணர்கள் ஏற்றுக்கொள்வாரா, தன்னை வேலைக்குச்சேர்த்துக்கொள்வாரோ என்ற சந்தேகங்கள் அவன் மனத்தில் அச்சவுணர்வாகப் பிரதிபலித்து சிலவேளைகளில் நினைத்ததைச்சொல்ல வாயில் வார்த்தைகள் வராமல் ஊமையாய்ப்போவதும் உண்டு. அதனால் நேர்முகப்பரீட்சை தோல்வியில் முடிந்து வேலை வாய்ப்புகள் தடைப்படுதலும் உண்டு. உயர்தர கல்விவரை அவன் வளர்வதற்கு ஊன்றுகோலாய் விளங்கிய அச்சவுணர்வு, நேர்முகப்பரீட்சைக்குச் செல்லும்போது அவனின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் ஒன்றாகவும் மாறலாம். இவ்விதமாகக் கல்வி கற்காதவர்களுக்கு இப்படியான அச்சவுணர்வுக்கு இடமிருப்பதில்லை. ஆனால் யாராயினும் வேலை ஒன்றில் சேர்ந்துவிட்டால் அவ்வேலையைக் கண்காணிக்கும் அதிகாரிகளிடம் அச்சவுணர்வோடுதான் பழகவேண்டியுள்ளது. அதிகாரிகளின் நன் மதிப்பைப்பெறுவதற்காகவும், அவர்களிடமிருந்து தொழில் திறனை நன்கு கற்றுக் கொள்வதற்காகவும், வேலையில் தொடர்ந்து நிலை கொள்வதற்காகவும் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டியுள்ளது.

பொதுவாகவே, நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடித்து உயர்ந்த ஒழுக்கநெறியைப் பின்பற்றி வாழும் ஒருவனுக்கு அச்சவுணர்வு அதிகமாகவேயிருக்கும். தனது நடத்தைகள், வார்த்தைகள் எங்கே தனது வாழ்க்கைப்போக்கில் களங்கத்தை உண்டுபண்ணிவிடுமோ என அதிகம் கவலைப்படுவதன் காரணமாகவே இவ்வித அச்சவுணர்வு எழுகிறது. இது அவனை வழி தவறவிடாது பாதுகாக்கும் கவசமாக இருப்பது உண்மையே. எனினும் தொடர்ந்த அச்சவுணர்வின் காரணமாக மனநிலையில் பாதிப்பு ஏற்படவும் இடமளித்துவிடுகிறது.

குறுக்குவழியில் பணம் சேர்க்கும் ஒருவனுக்கு ஏற்படும் அச்சவுணர்வோ வேறுவிதமானது. எந்த நேரத்திலாவது காவலர்களிடம் அகப்பட்டு விடுவோமோ என்ற பயமே அவனைப்போட்டு அரித்துக்கொண்டிருக்கும். அல்லது பிறர் தன் பணத்தை அபகரித்து விடுவார்களோ என்று சிந்தித்து அச்சவுணர்வுத் தீயில் கருகிக்கொண்டிருப்பான்.

அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்பு என இலட்சியப்பெண்களுக்கான நற்குணங்களில் அச்சமே முன்னிலைப்படுத்திக்கூறப்படுகின்றது. தன் கணவரல்லாத பிறரை நேருக்குநேர் காணும்போது பெண்ணுக்கு இயற்கையாகவே உளத்தில் அச்சவுணர்வு எழவேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. அது பெண்மைக்கு ஒரு அணிகலன் என்பர்.

தனி மனிதர் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அச்சவுணர்வில் மூழ்கிக்கிடக்கிறது என்று சொல்லவேண்டும். எங்கே மூன்றாம் உலகப்போர் மூண்டு, அணுக்குண்டுகளாலும், ஐதரசன் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் தாக்கப்பட்டுவிடுவோமோ என்று உலகநாடுகள் பலவும் அச்சவுணர்வினால் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இது போதாதென்று பயங்கர இயற்கைச்சக்திகளான பூகம்பம், எரிமலைக்குமுறல், பெருவெள்ளம், சூறாவளி போன்றவைகளால் அழிவு நேருமோ என்றும் அஞ்சியஞ்சிச்சாகும் மக்களும் உள்ளனர். பஞ்சம், பட்டினிகள் ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுபவர்கள் பலர் உள்ளனர்.

‘எவனொருவன் உலகைக்கண்டு அஞ்சவில்லையோ, எவனைக்கண்டு உலகம் அஞ்சவில்லையோ அவனே எனது பக்தன்‘ என்று பகவான் கிருஷ்ணர் இந்துமத ஆதாரநூலான பகவத்கீதையில் அருளியுள்ளார். ‘ உனது இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக‘ என்று இயேசு கிறீஸ்துநாதர் பரிசுத்த வேதாகமமான பைபிளில் திருவாய் மலர்ந்துள்ளார். பஞ்சமா பாதகங்கள் செய்வதற்கே அஞ்சவேண்டும் என்றே நீதிநூல்கள் யாவும் போதிக்கின்றன. அறந்தவற நேருமிடத்தும், மானம் இழக்கப்போகுமிடத்தும், நன்றி மறக்கும் போக்கு ஏற்படுமிடத்தும் அச்சவுணர்வு தோன்றிஅவை நடைபெறாமல் காக்க வழி ஏற்படுத்தவேண்டும். அச்சவுணர்வானது மனிதனின் பிறழ்வான போக்கினை மாற்றம் செய்யும் ஒரு காரணியாய் அமையும் பொழுதே அது ஆக்க சக்தியாய் வேலை செய்யும்.

மனிதனின் ஒரு பிரதான உணர்வான அச்சத்தைப் போக்குவதற்கென்றே கடவுள் வழிபாடு தோன்றியது. தனக்கு வரக்கூடிய ஆபத்துக்கள், இடர்கள் அனைத்தையும் போக்கி, சுகமாக அமைதியான, சுபீட்சமான வாழ்வு தரக்கூடிய பேராற்றல் ஆண்டவனிடம் உண்டு என்று மனிதன் நம்பிக்கை கொள்ளும்போது, அவன் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும்! என்று துணிவுடன் இருந்து செயற்பட இடம் ஏற்படுகிறது. ஆண்டவனிடம் இவ்வாறு கொள்ளும் நம்பிக்கை படிப்படியாக வளர்ந்து தன்னம்பிக்கையை வலுவூட்டுவதால் அவன் பெரும்பெரும் நற்காரியங்களை இவ்வுலக மனித சமுதாயத்திற்குச் செய்யமுடியும். வேண்டாத, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள அச்சவுணர்வை மனத்திலிருந்து அகற்றி, அவ்விடத்தில் துணிவையும், தன்னம்பிக்கையையும் இருத்தி, இந்த ஓய்வில்லாத வாழ்க்கைப்போராட்டத்தை எதிர்கொண்டு விழிப்பாகச்செயற்பட்டு மனிதகுலத்தின் மாண்பினைக்காக்க உறுதி கொள்வோமாக!

This writing is the work of சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி), who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)

ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)4 Sep 2019

பிரச்சினைகளும் தீர்வுகளும்

பிரச்சினை என்பது எமது உடன்பிறப்பு. எமக்கு எது இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இல்லாத நாள் இல்லை. இல்லவேயில்லை. ஒட்டுண்ணிபோல் எப்படியோ பிரச்சினைகள் எம்மோடு சேர்ந்துகொண்டு எமது ஆற்றலின் சாரத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. வாழ்வின் அமைதியான போக்கினை தற்காலிகமாகவோ…

சமூகவியல்3 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)29 Aug 2019

ஏன் நடுக்கம் புவிமகளே!

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும் என்றேநீமனம் பதறி…

இயற்கை1 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)20 Aug 2019

மாற்றமும் விளைவுகளும்

இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி கோள்மண்டலங்களாக மாற்றப்படுகின்றன.…

ஆய்வுகள்2 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)14 Aug 2019

வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்

சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர் ஊற்றுக்களாகப்புறப்பட்டு வருகிறது.…

ஆய்வுகள்5 min read

More in சமூகவியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x