அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 3
மெல்ல நாவலை எடுத்துக்கொண்டு நகர எத்தனித்தவளை அவனின் ” எக்ஸ்கியூஸ் மீ ” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.
திருதிருவென கண்ணை உருட்டியபடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் கூர்விழிகள் முதலில் வியப்பில் விரிந்து பின் சுவாரசியமாய் சிரித்தது. முந்தய நாள் அவன் தலைகவசம் அணிந்து இருந்ததால் அவனின் விழிகளை மாத்திரமே பார்க்க முடிந்திருக்க, இப்போது இரு விழிகளுக்கு கீழ் கூரான நாசி, லேசாய் புன்னகைத்தபடி இருந்த முரட்டு அதரங்கள் , ட்ரிம் செய்த மீசை தாடியுடன் , மான் நிறத்தில் நல்ல உயரமாக கிரேக்க சிற்பத்தை போலிருந்தவனை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவள், பின் சுதாரித்து, ” எஸ் ” என்றாள் சாதாரணமாக.
அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததில் உதட்டுக்குள் சிரித்து கொண்டவன்,” என்ன தெரியுதா ” என தலையை சரித்து கேட்டான்.தன் முன்னே கால்களை சற்று அகற்றி பாக்கெட்டில் இரு கைகளை நுழைத்து உடலை தளர்த்தி நின்றிருந்தவனை ஒருமுறை மேலிருந்து கீழாக பார்த்தவள்,
” நா என்ன குருடா.. அதான் இவ்ளோ பெருசா இருக்கீங்களோ..நல்ல தெரியுது ” என தோள்களை குலுக்கியப்படி சொன்னவளை கண்கள் மின்ன பார்த்தான்.
” அது சரி, உன்ன போய் யாராச்சும் குருடுன்னு சொல்ல முடியுமா..யாரு நீ ” என வம்பிழுத்தவனை, அவள் இரு கைகளையும் முன்னே கட்டியப்படி முறைத்துப் பார்க்க, அதில் லேசாய் சிரித்தவன்,” நிஜமா தெரிலையா ” என புருவங்களை சுருக்கி தலையை சற்று முன்னே சாய்த்து கேட்க,அவளும் அதே நிலையில் இருந்து மாறாது,” தெரியாது..யாரு நீங்க ” என கேட்டாள்.
சற்று யோசித்தவன் தான் ஹெல்மெட் அணிந்திருந்தது நினைவு வந்ததும் , ” ஸ்ஸ் ” என ஒரு கண்ணை மூடி பின்தலை கேசத்தை கோதிக்கொண்டவன்,” ஒன்னும் பிரச்சினை இல்ல. நானே நியாபகபடுத்துறேன் ” என கூறியவனுக்கு எப்படி என்று தான் தெரியவில்லை.பின் ஒரு வழியாய், ” நேத்து ரோட்ல ஆளும் ஹெல்மெட்டும்ன்னு திட்டினியே ” என அசடு வழிந்தபடி அவன் கூறியதும் அவளுக்கோ சிரிப்பு திமிறியது.இதழ்களை கடித்து சிரிப்பினை அடக்கினாலும் அவளின் கயல்விழிகள் காட்டிக் கொடுக்க, சிரிப்பில் பளபளத்த அவளின் மிழிகளையே அவன் கண்கள் ரசித்துப் பார்த்தது.
” நேத்தா… நானா..எனக்கு அப்படி ஒன்னும் நியாபகம் இல்லையே ” என அவளும் பிடி கொடுக்காது பேச,தன்னை தெரிந்தும் கலாய்க்கிறாள் என புரிந்தவன்,” ஓ.. அம்னீஷியா பேஷண்ட்டா..” என குறும்பு கொப்பளிக்க அவன் கேட்டதில், இப்போது நன்றாகவே முறைக்க ஆரம்பித்துவிட்டாள்.
அதில் மெலிதாய் சிரித்தபடி இரு கைகளை தூக்கி ‘ சரண்டர் ‘ என்பது போல் பாவனை செய்தவனை பார்த்து அவளின் இதழ்களிலும் லேசான முறுவல் வந்து ஒட்டிக்கொண்டது. அவளின் முறுவலித்த செவ்விதழ்களை பார்த்தபடியே,” பை த வே, ஐயம் ஹ..” என அவன் கூறும் முன்னே அவன் ஐ ஃபோன் அவனை கூப்பிட்டிருந்தது.
” ப்ச் ” என சலித்தபடி காதில் வைத்தவன் அவளை பார்த்து, ” ஒன் செக் ” என கண்களை சுருக்கி சொல்லியபடி பேச ஆரம்பித்தான். அவ்வளவு நேரம் இருந்த மென்மை தொலைந்து தீவிரமாய் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவனை கைகளில் இருந்த நாவலை சுரண்டியபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆத்யா.நேற்று கோபம், இன்று மென்மை இப்போது தீவிரம் என பல பாவனைகளை காட்டிக் கொண்டிருந்தவனை அவளின் விழிகள் விடாது நோக்கிக் கொண்டிருக்க,
அந்நேரம் அவளின் மனசாட்சி’ஏய் ஆத்யா..என்ன பண்ணிட்டு இருக்க ‘ என உறைத்ததும், மாயவலையில் இருந்து விடுபடுபவள் போல கண்களை சிமிட்டி சுயம் தெளிந்தவள்’ நா என்ன பண்ணிட்டு இருக்கேன். ச்சே ‘ என தன்னையே கடிந்து கொண்டாள்.
என்னதான் அவன் அலைபேசியில் தீவிரமாய் உரையாடிக் கொண்டு இருந்தாலும் அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததில் உள்ளுக்குள் சிரித்தவன் அவள் முகம் மாறியதும் புருவங்களை நெறித்தான்.
ஆத்யாவோ சட்டென்று தன் கையில் இருந்தநாவலை செல்ஃபில் வைத்துவிட்டு விறுவிறு என நூலகத்தை தாண்டி நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வாள் என எதிர்பாராதாவன்,” ஹேய் ” என கை நீட்டி அழைக்க,அவளோ நூலகத்தை விட்டு வெளியேறி இருந்தாள்.
” ப்ச்… ஷிட் ” என நெற்றியை வருடிக்கொண்டவன்,அவள் சென்ற திசையை பார்த்தபடியே அழைப்பினை பேசி முடித்தான். அங்கிருந்து நகர எத்தனிக்கும் போது தான் அவள் கையில் வைத்திருந்த நாவலும் கண்ணில் பட, அதை மெதுவாய் கையில் எடுத்தவன் ஏதோ அவள் கையையே வருடிக் கொடுப்பது போல் அதை மிருதுவாய் வருடிக் கொடுத்தான். அவள் தன் கண்ணில் படாமல் திருட்டு முழியுடன் அதை எடுத்துக் கொண்டு நகர முற்பட்டதை நினைத்தவன்,” கள்ளி ” என சிரித்தபடி முணுமுணுத்தான்.
இங்கு ஆத்யாவோ நூலகத்தை தாண்டி வெகுதூரம் நடந்து வந்தவள் அவ்வழியாய் வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.ஜன்னலோரமாய் அமர்ந்துக் கொண்டவளுக்கு லேசாய் மூச்சு வாங்கியது. அவளின் மனசாட்சியோ,’ அவனும் தான் வழிய வந்து பேசுறான்னா…உனக்கு எங்கபோச்சு அறிவு…இவனுங்களெல்லாம் நம்பிராத.. இப்படி தான் பேசுவானுங்க.. உனக்கு நிம்மதியா வாழனும்ன்னு ஆசை இல்லையா’ என இடித்துரைக்க,
அதில் தலையாட்டிய ஆத்யாவும் ” ஆமா.. பேசி இருக்கவே கூடாது..அவனும் அவன் பார்வையும்..” என்று முணுமுணுக்க,
டிக்கெட் காசை எடுக்க வந்த கண்டெக்டர் அவள் தலையாட்டியப்படி தனக்குள் ஏதோ பேசிக்கொண்டதில் அவளை ஒரு மாதிரி பார்த்து வைக்க ‘ ஐயோ ‘ என மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டவள் காசை நீட்டினாள்.
‘ எல்லாம் அந்த கிரேக் ஸ்டேட்ச்சுனால( greek statue ) வந்தது ‘ என மனதிலே பல்லைக் கடித்தாள்.
***********************************
மாலை அலுவலகம் முடிந்து அரக்க பறக்க வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ரியா.தோழியுடன் ஷாப்பிங் செல்ல போகும் ஆர்வம் அவள் முகத்தில் மின்னியது. அவசர அவசரமாய் பிங்கர் ப்ரிண்ட்டினை வைத்தவள் பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைய ஆரம்பித்தாள்.
அங்கு அவள் செல்லும் பேருந்து கிளம்பும் நிலையில் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, எங்கே பேருந்து சென்று விடுமோ என்று பயந்தவள் அவசரமாய் வீதியை கடக்க முற்பட்டாள்.அந்நேரம் அதிவேகமாய் வந்தது பல்சர் ஒன்று.
அதை ஓட்டிக்கொண்டு வந்தவனோ அவள் திடீரென சாலையை கடக்கவும் விக்கித்து நின்றவன் என்ன செய்வது என்று அறியாது பைக்கை அங்கும் இங்குமாய் அசைக்க, ரியாவும் திடீரென வந்த பல்சரைக் கண்டு அஞ்சியவளாய் உறைந்துப்போய் நின்றுவிட்டாள். ‘ ப்ரேக்கை பிடிடா மடையா ‘ என அந்த பல்சர் ஆசாமியின் மூளையோ அவனின் தலையில் தட்டி உணர்த்தியதில் அவனின் கைவிரல்கள் ப்ரேக்கினை உபயோகித்து வண்டியை நிறுத்தியது. பல்லைக் கடித்துக் கொண்டு ரியாவை நெருங்கியவன்,
” ஹே கிறுக்கச்சி… இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா… அப்படியே பாஞ்சிக்கிட்டு வர்ற” என எகிற,அவ்வளவு நேரம் தான் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதில் நிம்மதியடைந்திருந்தவள் அவனின் கத்தலில் சினம் தலைக்கேற இவளும் எகிற ஆரம்பித்தாள்.
” கிறுக்கு அது இதுன்னு சொன்ன அவ்ளோ தான் உனக்கு….உன் கண்ண எங்க பிடரில வெச்சிட்டு வந்தியா…அதான் நா பாஞ்சிக்கிட்டு வர்றேன்னு தெரியுதுல…ஓரமா போகாம பேய் மாறி வர்ற ” என இவளும் பதிலுக்கு எகிறினாள்.
” உன்ன கிறுக்கச்சின்னு சொன்னது தப்பே இல்ல.நீ பேசுறது உனக்கே நியாயமா இருக்கா…” என அவன் முறைத்துக் கொண்டு சீற,
” ஆமா..இவரு பெரிய லாயர்..நியாயம் பார்க்க வந்துட்டாரு.. போவியா..” என இவள் எள்ளலாய் கூற, இவர்களில் கூச்சலில் அங்கு ஒரு கூட்டமே கூடி விட்டது.
” ஏய் பொண்ணு..அந்த பையன் கரெக்ட்டா தான் வந்தான்..நீ திடுதிப்புன்னு ரோட்ட க்ராஸ் பண்ணிட்டு அந்த பையன திட்டிட்டு இருக்க..” என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வர, அதை தொடர்ந்து” அது மேல தப்ப வெச்சுகிட்டு… ரோட்ல பஜாரிமாய் கத்துது.. ச்சே..” என இன்னுமொன்று வந்து விழுந்தது. ஆளாளுக்கு அவளை திட்ட ஆரம்பிக்க,அதில் அவளுக்கு கோபமும் அவமானமும் போட்டி போட அவனை தீயென முறைக்க ஆரம்பித்தாள். அவனோ யாரும் பார்க்காத வகையில் நாக்கை துருத்தி அழகு காட்டினான்.
பின் கூட்டத்தைப் பார்த்து,”தெரியாம பண்ணிட்டாங்க…பாவம் பிழைச்சி போகட்டும் விட்ருங்க..” என பெருந்தன்மையாக கூறுவதைப் போல் கேலி நகையுடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூற, அவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
கூட்டமும் கலைந்து சென்று விட, ரியாவின் பார்வை மீண்டும் பஸ் ஸ்டாப்பை தழுவியது.அங்கு பேருந்தோ அவளுக்கு ‘பாய் பாய் ‘ சொல்லிவிட்டு சென்றுவிட்டிருந்ததில் சோகத்துடன் உதட்டை பிதுக்கினாள்.
அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவன், ” நா ட்ராப் பண்ணட்டுமா ” என குறும்பு விழிகளுடன் கேட்க,டென்ஷனில் ஏதோ சொல்ல வாய் திறந்தவள் ஆத்யாவிடமிருந்து,’ எங்க இருக்க ‘ என்ற குறுஞ்செய்தி வரவும் அப்போது தான் ஷாப்பிங் நியாபகம் வந்தவளாய் தலையில் அடித்துக் கொண்டாள்.
அவனை பார்த்து கண்களால் பஸ்பமாக்கியப்படி ,” எப்பயாச்சு ஒரு நாள் என்கிட்ட வசமா சிக்குவ.. அப்ப பார்த்துக்கிறேன்டா உன்ன ” என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்ப, அவளின் கோப விழிகளையே ரசனையாக பார்த்தவன், ” ஈகர்லி வெயிட்டிங் ” என்றான் கண்கள் சிரிக்க.
தொடரும்….
This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing





