அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 10
தன் சுடிதார் டாப்பை மேலே உயர்த்தி அடிபட்டு கன்றி போயிருந்த தன் இடைக்கு ஜெல்லை தடவிக் கொண்டிருந்தாள் ஆத்யா.டாக்டர் கொடுத்த மருந்துகளையும் அந்தக் களிம்பையும் பூசிக் கொண்டவளுக்கு இருந்ததை விட வலி சற்று மட்டுபட்டிருந்தது.அதில் நிம்மதியாய் மூச்சை விட்டவளின் மனதில் மின்னல் மின்னி மறைவது போல் ஹரி பிரணவின் நினைவும் பளிச்சிட்டது.
" அந்த ப்ளேஸ் கொஞ்சம் கூட டேமேஜ் ஆகுறதுல எனக்கு இஷ்டமில்ல.."
நேற்று அவன் அவளின் காதில் கரகரப்பான குரலில் முணுமுணுத்தது நினைவு வந்ததில் அதில் அவளின் இடையில் களிம்பைப் பூசிக் கொண்டிருந்த கை சட்டென்று ஸ்ட்ரக் ஆகி நிற்க, இப்போதும் அவனின் மீசை அவள் காதில் உரசுவதுப் போல் இருந்தது. அதில் அவனின் செவ்விதழ்களும் " பொறுக்கி " என முணுமுணுத்த நேரம்,
" ஹேய் ஆது..நா வந்துட்டேன்.. " என கூக்குரலிட்டப்படி வந்தாள் ரியா. ஆத்யாவின் உடல்நிலை காரணமாக ஆபீசுக்கு செல்லாமல் லீவு எடுக்கப் போன ரியாவை அவள் தான் அதட்டி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். அரை மனதாய் சென்ற ரியாவும் ஆபிஸ் விடும் நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு வந்திருந்தாள். திடீரென கேட்ட தோழியின் குரலில் பதறியடித்துக் கொண்டு உயர்த்தி இருந்த தன் சுடிதார் டாப்பை கீழ் இறக்கிய மற்றவள் தோழியை முறைத்தப்படி,
" லூசு.. கதவ தட்டிட்டு வரமாட்டியா " என கடிய ரியாவோ,
" ஆமா இவ பெரிய இஞ்சி இடுப்பழகி.. இவ தம்மா துண்டு இடுப்ப பார்த்து நாம கண்ணு வச்சுருவோமாம் போவியா.." என சிலுப்பியபடி கூறினாள். அதில் ' நங் 'என்று அவளின் தலையில் கொட்டிய ஆத்யா,
" இரு காபி எடுத்துட்டு வரேன். ". என மெது மெதுவாய் சென்று ஆவி பறக்கும் காபியை எடுத்து வந்து அவளிடம் நீட்ட தோழி தந்த காபி கோப்பையை எடுத்தவள் ஒரு சிப் பருகியபடி அவளை கீழிருந்து மேலாக ஸ்கேன் செய்ததில் விழித்த ஆத்யா,
" என்ன டி பொண்ணு பாக்க வந்த பையன் மாறியே பாத்து வெக்கிற.." என கேலி செய்தாள்.
" அதெல்லாம் ஒன்னுமில்ல.. உன் கூட கொஞ்சம் பேசணுமே "
" ஓ பேசலாமே.. " என கேஷுவலாய் கூறியபடி கட்டிலில் ரியாவின் அருகே சமணமிட்டு அமர்ந்தவள் தலையணை ஒன்றை தன் மடியில் வைத்து அதில் கைகளை ஊண்டியவாறு தன் தோழியின் முகத்தை பார்த்தாள்.
" நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன் நீயும் ஹரி அண்ணாவும் எப்போதிலிருந்து லவ் பண்றீங்க " என ரியா ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்க,
அவள் அவ்வாறு கேட்டதும் புரியாது முழித்தவள், " என்ன டி சொல்ற..நா லவ் பண்றேனா…முதல்ல யாரு அந்த ஹரி " என புரியாமல் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும் தலையை சொரிந்த ரியா,
" அப்போ நீ லவ் பண்ணலயா.. ஆனா நேத்து நீங்க ரெண்டு பேரும் ஏதோ லவ் பண்ணி சண்ட போட்ட மாதிரியே பிஹேவ் பண்ணிங்களே " என புரியாத குரலில் கேட்க, அப்போது தான் ஆத்யாவுக்கு புரிந்தது தன் தோழி தன் பின்னே சுற்றி வரும் கிரேக் ஸ்டேட்ச்சுவை சொல்கிறாள் என. அதில் சுறு சுறு வென ஏறிய கோபத்துடன் அவளைப் பார்த்து,
" நா சொன்னேனா..நா சொன்னேனா அவனும் நானும் லவ் பண்றோம்ன்னு..அவன் தான் என் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றான். " என ஆரம்பத்தில் அவனை சந்தித்ததில் இருந்து நேற்று வரை நடந்த நிகழ்வுகளை ஒப்பித்தாள் ஆத்யா. அதில் வாயை பிளந்த மற்றவளோ,
" அடிப்பாவி… இவ்வளவு நடந்து இருக்கு ஒரு வார்த்த என்கிட்ட சொன்னியா நீ… அதுவும் இந்த பொம்மை ஏதுன்னு நான் கேட்டதுக்கு ஏதேதோ கத சொன்னியே டி " என நெஞ்சில் கை வைத்து ரியா சொல்ல, அதில் கசங்கிய முகத்துடன் தன் தோழியை பார்த்தவள்,
" சாரி ரியா..உன் கிட்ட மறைக்கணும்னு நா நினைக்கல டி..இத பத்தி யோசிச்சாலே ஒரு மாதிரி டென்ஷன் ஆகுது….அதான் இத பத்தி பேசவோ இல்ல யார்கிட்டயும் ஷேர் பண்ணவோ தோணல..எனக்கு புரியுது நீ ஹர்ட் ஆகிட்டேன்னு..ஐயம் ரியலி சாரி ரியா.." என கண் கலங்க, ரியாவோ அவளை மேலும் கீழுமாய் பார்த்து,
" இப்போ எதுக்கு சும்மா வாட்டர் பால்ஸ திறந்து விடற..நா சொன்னேனா ஹர்ட் ஆகிட்டேன்னு..எனக்கு தெரியும் டி நீ சொல்லாததுக்கு ஏதாச்சும் ரீசன் இருக்கும்னு " என அவளின் கண்ணீரை துடைத்து விட அதில் மெலிதாய் புன்னகைத்தாள் ஆத்யா.
" ஏன் ஆது..உனக்கு அப்போ ஹரி அண்ணாவ பிடிக்கலையா " என தயங்கி தயங்கி கேட்க , ரியாவின் முகத்தையே உத்துப் பார்த்தவள்
" அது இருக்கட்டும்..அவனோட நேம் ஹரின்னு உனக்கெப்டி தெரியும்.." எனக் கேட்க,
" நேத்து அண்ணாவோட நா ஃப்ரெண்ட் ஆயிட்டேனா அப்போ அவரு தான் சொன்னாரு..அதுவும் அவரோட ஃபுல் நேம் ஹரி பிரணவ்வாம்.. ரொம்ப அழகா இருக்குல.. " என வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்று கூப்பாடு போட்டவளை மேலும் கீழுமாய் பார்த்து,
" இல்ல நல்லாவே இல்ல..அவனும் அவன் பெயரும்..எனக்கு அவனையும் சுத்தமா பிடிக்கல.." என உதட்டை சுழித்து கூற, அதில் திகைத்த ரியா,
" ஏன் ஆது பிடிக்கலன்னு சொல்ற..அண்ணா ரொம்ப நல்ல டைப் தான..நேத்து உனக்கு அடிப்பட்டதும் அவர பாக்கணுமே.. துடிச்சி போயிட்டாரு.."
" அதான் எனக்கு புரியல..எனக்கு ஒன்னுனா அவன் ஏன் துடிக்கனும்..அவன் யாரு எனக்கு.." என வினவியவளை பார்த்த ரியா,
" ஆது நீ புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா..ஒரு பையன் நமக்காக வேண்டி துடிக்கிறான்னா அது லவ்வா தான இருக்க முடியும் " என மெதுவாக கூறி விட்டு 'ஐயையோ கடிச்சிருவாளோ ' என பயந்தபடி ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க,அவளோ கத்தி சிரிக்க ஆரம்பித்தாள். அவளின் சிரிப்பில் புரியாமல் ரியா அவளைப் பார்க்க,
" லவ்வா..இன்னுமா நீ அதெல்லாம் நம்பிட்டு இருக்க..காதலெல்லாம் வெறும் நாடகம் ரியா..எல்லாம் சலிச்சு போற வரைக்கும் தான்..ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கவன் அவள விட இன்னொருத்தி பெட்டரா கிடைச்சா யோசிக்காம விட்டுடு போயிருவான்..லவ்லாம் உண்மைன்னு நம்பினா கடைசில நாம தான் ஹார்ட் ப்ரேக்குள்ள போவோம்.." என இகழ்ச்சியாய் இதழ் வளைத்து சொன்னாள். அந்நேரம் அவளின் மனசாட்சி ' அப்படியா..அப்போ அவனையும் நீ அப்டி தான் நெனச்சிட்டிருக்கியா ' என்று கேட்டதில் உள்ளுக்குள்ளேயே பதில் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றாள் அவள். தன் தோழி சொன்னதில் புரியாது அவளைப் பார்த்த ரியாவுக்கு காதல் மீதான அவளின் எண்ணம் கவலையை கொடுத்தது.
" நீ சொல்றது எனக்கு புரியுது ஆது.. இங்கு சில பேர் லவ் என்று பேர்ல ஒருத்தருக்கு ஒருத்தர் ஏமாத்திட்டு தான் இருக்காங்க. அதுக்குன்னு நீ சொல்ற மாதிரி எல்லாருமே அப்படி இல்ல.. உனக்கு ஏன் லவ் மேல இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னும் எனக்கு தெரியல.. ஆனா கொஞ்சம் யோசிச்சு பாரு.நீ இப்படியே தனியா இருக்க போறதில்ல டி. பியூச்சர்ல நீ ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க தான் போற.. " என மேலும் பேச போனவளை சட்டென்று கை நீட்டி தடுத்தவள்,
" நான் சொன்னேனா கல்யாணம் பண்ணிப்பேன்னு..கல்யாண வாழ்க்கைலாம் எனக்கு சரிபட்டு வராது…ப்ளீஸ் ரியா இத பத்தி பேசாத.. எனக்கு தலை வலிக்குது.. " என கலங்கி சிவந்த முகத்துடன் தன் நெற்றி பொட்டை அழுத்தி தேய்த்துக் கொண்டவளை ரியா விக்கித்துப் பார்த்தாள்.
தன் தோழி காதலை வெறுப்பவள் தான். ஆனால் அந்த காதல் மீதான வெறுப்பு கல்யாணத்தையே வெறுக்கும் அளவிற்கு வரும் என்று அவள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை. அதிலும் அதைப்பற்றி பேசும் போது அவள் முகத்தில் வந்து போன பய ரேகைகளை பார்த்தவளுக்கு அவள் எதையோ மனதில் வைத்துக் கொண்டு மருகுகிறாள் என மட்டும் புரிந்தது. அந்நேரம் ஹரி பிரணவின் கண்களில் தெரிந்த தன் தோழியின் மீதான நேசமும் ஞாபகத்திற்கு வர தீர்க்கமாய் அவளின் முகத்தைப் பார்த்தவள்,
" கல்யாணம் பண்ணிக்காம என்ன பண்ணப்போற..எல்லாருக்கும் கண்டிப்பா ஒரு வாழ்க்கை துணை வேணும் ஆது "
" எனக்கு வேணாம் ரியா.." என பட்டென்று வந்த பதிலில் ரியா அவளை இயலாமையாய் பார்த்தாள்.
" காதல், கல்யாணம் இப்டி எல்லாத்தையும் ஹேட் பண்ற அளவுக்கு அப்டி என்ன நடந்துச்சு டி " என உள்ளிறங்கிய குரலில் ரியா கேட்ட கேள்விக்கு மௌனத்தையே பதிலாய் வழங்கினாள் அவள்.
சில நொடிகள் தோழியின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்த ரியா அவள் கயல்விழிகளில் திரண்டு நின்ற கண்ணீரை துடைத்து விட்டாள். அதில் சட்டென்று அவளை அணைத்துக் கொண்ட ஆத்யா சிறுபிள்ளைப் போல் தேம்ப, ரியாவுக்கும் கண் கலங்கியது.
" எதையும் மனசுல வெச்சு கஷ்டப்படுறத விட வெளிய சொல்றது பெட்டர்டி..அதுக்குன்னு உன்ன வற்புறுத்தமாட்டேன்..உனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லு.." என தோழியின் முதுகை ஆறுதலாய் தடவிக் கொடுத்தவள் பெரு மூச்சொன்றை விட்டு,
"நீ லவ் பிடிக்காதுன்னு சொன்னப்போ ஏதோ விளையாட்டுத் தனமா சொல்றேன்னு நினைச்சிட்டேன்.. ஆனா இதுல நீ இவ்ளோ சீரியஸா இருப்பேன்னு நினைக்கல டி.. " என சொல்ல அதற்கு விரக்தியான சிரிப்பையே வழங்கினாள் மற்றவள்.
அவளின் கன்னத்தை தட்டி," நீ ரெஸ்ட் எடு..நா ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.." என எழுந்து சென்றவளின் கையைப் பிடித்தவள், " சாரி எகைன் டி " என குற்ற உணர்ச்சியுடன் சொல்ல அவள் தலையில் தட்டியவள் " போடி லூசு " என சிரித்தபடி சென்றாள்.
அவள் சென்றதும் தலையணையில் தலையை சாய்த்து கண்களை மூடியவளுக்கு," ஃபுல் நேம் ஹரி பிரணவ்வாம்..பெயர் ரொம்ப அழகா இருக்குல.. " என ரியா கூறியது நினைவு வர,
" ஹ..ரி..பிர..ண..வ் " என அவளின் இதழ்கள் முணுமுணுத்து. அவன் நேற்று தனக்காய் துடித்ததும், அவன் அவளை அரவணைத்துக் கொள்ளும் போது அவள் உணர்ந்த பாதுகாப்பும் இறுகி இருந்த அவளின் மனதை இளகச் செய்ய, அந்நேரம் அவளின் அடிமனதில் ஆழமாய் பதிந்திருந்த நினைவுகள் பூதாகரமாய் கிளம்பி அவளை பயமுறுத்தியதில் சட்டென்று கண்களை திறந்தவளின் உடல் நடுங்கியது.
" நோ.. நோ.. ஆது…ஸ்டாப் இட்..இது வேணாம் உனக்கு " என அவனை நினைக்கும் போது எழும் உணர்வுகளை வழமைப் போலவே அவள் கடினப்பட்டு அடக்கிட, 'எவ்வளவு நாளைக்கு தான் நீயும் என அடக்கிட்டே இருப்ப..ஒரு
நாள் நா வெளிய வரத்தான் போறேன்..' என அவ்வுணர்வுகளும் அவளைக் கேலி செய்து சிரித்தது.
தொடரும்…
This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing






