ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19

0
486

 

 

 

தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

எங்களது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும்வரை முகாமிலேயே தான் நிற்கும். அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸிலிருந்து ஒருவர் ஓட்டுனருடன் சென்றால் தான் டீசல் நிரப்ப முடியும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் மற்ற சிலரும் பதினாறு மீட்டர் நீளமுள்ள சரக்குப்பெட்டக வண்டிகளை ஓட்டப் பழகிக்கொண்டோம்.

டீசல் நிரப்பச் செல்லும்போது சரக்குப்பெட்டக வண்டியின் ஓட்டுனருக்கு ஏதாவது உணவுப்பொருட்கள் கொடுத்து நானே அந்தவண்டியை ஓட்டிச்செல்வேன். அதிக நீளம் காரணமாக முன்னால் ஓட்டும்போது திருப்பங்களில் முடிந்தவரை முன்னால் சென்று திருப்பவேண்டும். பெரிய கடினம் இல்லை . பின்னால் (ரிவேர்ஸ்) எடுப்பதற்கு மட்டும், சின்ன நுட்பம் தேவை. சில இந்தியஓட்டுனர்கள் தைரியம் தந்து எனக்குப் பயிற்சி தந்தனர். இரண்டு பக்கமும் உள்ள கண்ணாடிகளை பார்த்துக்கொண்டு வண்டியை வலப்பக்கம் திருப்பவேண்டும் எனில் ஸ்டியரிங்கை இடமாகவும், .இடப்பக்கம் திருப்ப வேண்டுமெனில் ஸ்டியரிங்கை வலமாகவும்திருப்பும் முறையை கற்று விட்டால் மிக எளிது. அந்த பதினாறு மீட்டர் நீளமுள்ள வண்டிகளை ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி நாடு விட்டு நாடு என ஒரே ஓட்டுனர் தான் ஓட்டி வருவார். முகாமில் உள்ள அழகான இளம் வீராங்கனைகள் அனாயசமாகஅதுபோலிருக்கும் ராணுவ வண்டிகளை ஓட்டுவதை வாய் பிளந்து பார்த்து நின்றவர்களும் உண்டு. எங்களூரில் ஆட்டோக்கே கிளிவைத்து ஓட்டுவதை பார்த்திருக்கிறேன். அதே இந்திய ஓட்டுனர்கள் தான் இங்கே திறமையாக தனியாக அந்த வானகங்களை பலஆயிரம் மைல்கள் ஓட்டுகிறார்கள்.

குவைத்திலிருந்து, போர்முனைக்கு உணவுப்பொருட்களை ஏற்றிவரும் சரக்குப்பெட்டக ஓட்டுனர்களுக்கு மிக அதிக சம்பளம் தருவார்கள். எனவே கார் ஓட்டிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் சரக்குப்பெட்டக ஓட்டுனர்களாக இங்குவரை வந்து விடுவர். இதில்அரைகுறை ஓட்டுனர்கள் ரிவர்ஸில் எடுக்கத் தெரியாமல் திண்டாடுவார்கள். சில கண்டெய்னர் ஓட்டுனர்கள் அவர்களின் வண்டியிலிருந்து சரக்குகளை உடனடியாக இறக்க வேண்டாம் எனக் கெஞ்சுவார்கள். குவைத்துக்குச் சென்றால் மீண்டும் சரக்கு ஏற்றி ஈராக்குக்கு அனுப்பிவிடுவார் லாரியின் உரிமையாளர் . வண்டி அதிகம் ஓடினால்தானே அதிக பணம் உரிமையாளருக்கு கிடைக்கும். ஓட்டுனரின் உயிருக்கு தானே ஆபத்து. அந்த வண்டி ஒருமுறை குவைத்திலிருந்த புறப்பட்டுவிட்டால் தின வாடகையாக அறுநூறு அமெரிக்க டாலர்கள் என அப்போது இருந்தது. அதனால் எங்கள் மேலதிகாரிகளும் சரக்குகளை இறக்கிவிட்டு விரைவாக அந்த வண்டிகளை திரும்ப அனுப்பும் முனைப்பில் இருப்பார்கள்.

எங்களால் இயன்ற உதவி, நாங்கள் சரக்கு வைக்கும் எங்கள் சரக்குப் பெட்டகங்களில் இடமில்லை எனில் சில வண்டிகளை நிறுத்திவைப்போம். குறிப்பாக சில இந்திய ஓட்டுனர்கள் வரும் லாரிகள் சில நாட்கள் நிற்கும். சரக்குப்பெட்டக வண்டிகளில் அனைத்துவசதிகளும் இருக்கும். மடக்கி கட்டி வைத்திருக்கும் படுக்கையை விரித்து உள்ளே சுகமாக படுத்துக் கொள்ளலாம். வெயிலையும்,குளிரையும் சமாளிக்க ஏர் கண்டிஷனர், தட்பவெப்ப நிலைகேற்ற உடைகள் (கையுறை , காலுறை, தொப்பி போன்றவை) என அனைத்துவசதிகளும் இருக்கும்.

 

 

 

 

 



சரக்குப்பெட்டகவண்டிகள் வெகு தூரம் நாடு விட்டு நாடு செல்வதால் ஒரு சிறிய அடுமனையும், குறைந்தது ஏழு நாட்களுக்கான உணவுப்பொருட்களும் வைத்திருப்பார்கள். மலையாளி ஓட்டுனர்கள் சிலர் சுவையாக சமைப்பதில் கில்லாடிகள். இங்கு வந்தபின்நன்றாக சமைப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டால் அந்த ஓட்டுனரை சில நாட்கள் நிறுத்திவைக்கும் பொருட்டு அவரதுவண்டியில் இருந்து பொருட்களை கடைசியாக இறக்குவோம். அதில் அவருக்கும் மகிழ்ச்சி. பேராபத்து மிகுந்த சாலையில்செல்வதைவிட முகாம்களில் இருப்பது அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி.

அப்பளம், புளி, சாம்பார் பொடி, தேங்காய், தேங்காய் பால், கறி வேப்பிலை, மிளகாய் வத்தல் போன்றவை அவர்களிடம் இருக்கும்.எங்களிடம் உள்ள மீன், அரிசி, வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தேவையான பொருட்களை அவர்களுக்கு கொடுத்தால் அன்போடு சமைப்பார்கள். குறைந்தது பதினைந்து பேருக்காவது சமைத்து விடுவார்கள். தென்னிந்திய உணவான, ரசம், மோர், அவியல், அப்பளம் என சில நாட்கள் விருந்தே நடக்கும். ஆலிவ்ஸ் மரங்களுக்கு நடுவே பதினைந்து பேருக்கான பந்தி நடக்கும்.

எங்கள் அடுமனையில் அமெரிக்க உணவுதான் சமைப்பார்கள். நேரமின்மை காரணமாக எங்களுக்கு என அரிசி சாதமும் ,கோழிக்கறி அல்லது ஆட்டிறைச்சி கறி தான் செய்வார்கள். சில நாட்களில் அதுவும் இருக்காது. அமெரிக்கர்களின் உணவைத்தான் நாங்களும் சாப்பிடுவோம். அடுமனையில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் அனைத்தும் உயர்தர பொருட்கள்தான். இருந்தாலும் சாம்பார்,ரசம், அவியல், அப்பளம் எல்லாம் நாங்கள் நினைத்தே பார்க்க முடியாதது. அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சுவையாக சாப்பிட்ட நாட்கள் பல. இஸ்லாமிய அன்பர் ஒருவர் ரமலானில் நோன்பு இருந்தவர்களுக்கு தேங்காய் பால் சேர்த்து சமைத்த நோன்புகஞ்சியின் சுவை இன்னமும் நாவில் ஒட்டியிருக்கிறது .

 

 

 

 



திக்ரித் அரண்மனை முகாமை நோக்கிய கடும் தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஸ்டோர்ஸில் வேலை பார்த்த அனைவரும் வெளியில் வேலை செய்யும்போதும், வாகனம் ஓட்டும்போதும் கண்டிப்பாக குண்டு துளைக்காத தலை கவசமும், கவச உடையும்அணிந்திருப்பது கட்டயாமாக்கப்பட்டது. அதுபோல் ஈராக் முழுமையும் ராணுவ முகாம்கள், ராணுவ வாகனங்கள் மீது கடும்தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வந்துகொண்டே இருந்தது .

வாரத்தில் இருமுறை உணவுக்கூடத்திற்கு தேவையான குடிநீர் பாட்டில்களை தூரத்தில் இருக்கும் இராணுவ கான்டீன் சென்றுதான்எடுத்து வரவேண்டும். எங்கள் குழுவில் இருந்த வாகனம் ஓட்ட தெரிந்த மூவர் வாகனங்களை ஓட்ட மறுத்துவிட்டனர். முப்பதுபவுண்டு எடையுள்ள கவச உடையும், குண்டு துளைக்காத தொப்பியையும் அணிந்து, ஒன்றரை லிட்டர் அளவுள்ள பாட்டில்களைபனிரெண்டு வீதமாக அடைக்கப்பட்ட, அறுபது அட்டை பெட்டிகளை கொண்ட இரு அடுக்குகள், ஆயிரத்திநானூற்றி நாற்பதுபாட்டில்கள் , நான் பலமுறை போர்க் லிப்ட்டில் போய் கொண்டுவருவேன்.

தினமும் காலை, மாலை, மதியம், நடு இரவு என பத்தாயிரம் உணவுகள் நாங்கள் வழங்கிக்கொண்டிருந்தோம். ஞாயிறுகளில் காலைஉணவு கிடையாது. ஏழு மணிக்கு பதிலாக ஒன்பது மணிக்கு உணவுக்கூடம் துவங்கும். லஞ்சுக்கு பதிலாக ப்ரெஞ்ச் எனக் கொடுப்போம். ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணிவரை காலை உணவுவகைகளும், மதிய உணவு வகைகளும் சேர்த்துகொடுப்போம். அமெரிக்கர்கள் வித விதமாக சாப்பிட விரும்புவதால் உணவு வகைகளின் எண்ணிக்கையும் அதிகமிருக்கும் .ஈராக்கின் சாலைகளில் எப்போதுமே தாக்குதல் நடந்து கொண்டுதான் இருந்தது. சில நேரங்களில் காண்வாயில் பாதுகாப்புப்படையுடன் செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் .

இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சாலைகளில் தாக்குதல் மிக அதிகமாகி விட்டது. எங்களுக்குஉணவுப்பொருட்கள் ஏற்றி வரும் வண்டிகள் குறிப்பட்ட நேரத்தில் வந்து சேர முடியவில்லை. சில நாட்கள் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக சரியாக உணவுகள் கொடுக்க இயலவில்லை. கோழிக்கறி, ஆட்டிறைச்சி போன்ற பதப்படுத்தபட்டஇறைச்சி வகைகள் மைனஸ் பதினெட்டு டிகிரியில் இருக்க வேண்டும். அவைகளை ஏற்றி வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் சிலநேரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் குளிர்சாதனப்பெட்டி வேலைசெய்யாமல் எங்கள் முகாமுக்கு வந்து சேரும். அப்படிவரும் வண்டிகளை உடனே திறந்து அதிலுள்ள மாமிச வகைகளின் வெப்பநிலையை சோதிப்பார்கள். இருபத்திரண்டு பாகைக்கு மேல்வெப்பம் அதிகமாக இருக்கும் போது அதிலுள்ள லட்சம் டாலர் மதிப்புள்ள உணவு வகைகள் அனைத்தும் குப்பையில் கொட்டப்படும்.

 

 

 

 

 


உணவுப்பொருட்கள் குறைவாக இருப்பதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் எங்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும்.“கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல பாய்” என்பான் முருகன். மிகுந்த சிரமத்தில் பல தாக்குதல்களில் தப்பி வந்தாலும், அந்தஉணவுப்பொருட்கள் உபயோகமற்றுப் போவது அதிக மனச்சோர்வை தந்தது எங்களுக்கு .
தொடர்ந்து வந்த நாட்களில் நாங்கள் உணவில்லாமல் சிரமப்பட போகிறோம் என யாருக்கும் தெரியவில்லை. சாலைகளில் தொடர்ந்து பல பாதுகாப்பு மிகுந்த காண்வாய்கள் தாக்கப்பட்டதால், சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது .

உணவுக்கூடத்திற்கான உணவுப்பொருட்கள் ஒரு வாரத்திற்கு மேல் வரவில்லை என்றாலே சமாளிப்பது கடினம். அப்போது ஒருவாரத்திற்கு மேலாகியும் வாகனங்கள் வரவில்லை. போக்குவரத்து எப்போது சீராகும் என யாராலும் கணிக்க இயலவில்லை . காலை,மாலை ,இரவில் வழங்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை முதலில் குறைக்கப்பட்டது பணியாளர்களுக்கு இப்போது தான் மூச்சுவிடவும், நண்பனிடம் நலம் விசாரிக்கவும், கல்லூரி நாட்களின் காதல் கதைகளை பேசவும் முடிந்தது. தினமும் பன்னிரெண்டு மணிநேரம் ஒரே அடுமனையில் வேலை செய்தாலும் எவரும் ஒருவர் முகம் பார்த்து பேச இயலாது வேலை விசயங்களை தவிர.

சில நாட்களுக்குப் பின் காலை உணவு, முற்றிலும் நிறுத்தப்பட்டது. காலை உணவாக நாங்கள் வழங்கும் உணவுவகைகள் மிகநீண்டது. எங்களுடன் பணிபுரிந்த ஒருவன், ஒரு ராணுவ வீரனுக்கு காலையில் அவனது தட்டில் பனிரெண்டு அவித்த முட்டைகளைவழங்கியதை நினைவு கொண்டு, மும்பை தமிழரான ஜோஷி, “நித்தம் ப்ரேக் பாஸ்ட் கூட ஒரு டசன் அவிச்ச முட்டைய தின்னவ பாடு பெருங் கஷ்டமில்லா இப்போ” எனச் சொல்லி சிரித்தான் .

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments