ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27

0
487

தொடர் போரினால் நலிந்த ஈராக்

திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம்.  அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த  சில வினாடியில்  வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது.  அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல்.
 
 அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று  நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே  அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு.

 

 

 

 


    ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ  அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது.  ஆனால் விழுந்த  அனைத்து குண்டுகளும்  குடியிருப்புக்கும், உணவுக்கூடத்திற்கும் சில மீட்டர்கள் தள்ளியே விழுந்ததால் யாரும் காயமின்றி தப்பினோம். மருத்துவக்குழு  கமலை அழைத்து காதை பரிசோதித்து  சில மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றது. மறுநாள் ஒருவன் இயல்புநிலைக்கு திரும்பியதும் “குறி தப்பிடிச்சி மச்சான்”என்றான்.


 
என் மனதில் எப்போதும் இருந்த விடை கிடைக்காத கேள்வி, ஈராக்கின் அனைத்து எல்லைகளும் (குவைத், சவூதி அரேபியா, ஈரான், சிரியா, ஜோர்டான், துருக்கி) கடல்மார்க்க வழியனைத்தும் (உம்காசர், பஸ்ரா, அபு ப்ளூஸ் ஆகிய துறைமுகம்) அமெரிக்காவின் கட்டுபாட்டுக்குள் இருந்தது. எல்லை தாண்டி நுழையும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பின்பே ஈராக்கில் நுழைய அனுமதிக்கப்பட்டது. இருந்தும் பெரும் தாக்குதல் நடத்த ஈராக்கிகளுக்கு எப்படி அதிநவீன ஆயுதங்களும் ,வெடிகுண்டுகளும் கிடைக்கிறது என ?.
 
 நண்பர்கள் சிலர் பேசிக்கொள்வதுண்டு இங்கு  பிரச்னை இல்லை என்றால் அமெரிக்காவுக்கு,ஈராக்கில் வேலையில்லை அதனால் அவர்களே குண்டுகளை கொடுத்து வெடிக்கச் செய்யலாம் என. தாக்குதலுக்கான ஆயுதங்களையும் அவர்களே கொடுக்கலாம் எனவும், ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள எண்ணைக் கிணறுகளிலிருந்து பெருமளவில் எண்ணையை கப்பல்கள் மூலம் அமெரிக்கா கொண்டு செல்வதாகவும் சொல்லிக்கொள்வர். ஈராக்கின் பல எண்ணைக் கிணறுகளில் எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, ஈராக்கிற்கு வழங்கியிருந்தது. பதிலாக எண்ணையை எடுத்துக்கொடுக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா பெற்றிருந்தது. பின்னர் புதிய எண்ணை எடுக்கும் ஒப்பந்தத்தை சதாம் ரஷ்ய நிறுவனத்திற்கு அளித்ததும் அமெரிக்காவை சதாம் மீது முன்பே கோபம் கொள்ளச் செய்திருந்தது பல ஆண்டுகளுக்கு முன்.
 
 இரண்டாயிரத்தி இரண்டாம் ஆண்டு முன்னணி நாளிதழில் வந்த  ஒரு தலையங்கம் இப்படி எழுதியிருந்தது. எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் தனது தயாரிப்பை பற்றிய ஒரு செயல் முறை விளக்கம் அளிக்கும். ஒரு மோட்டார் கார் தயாரிக்கும் நிறுவனம் தனது காரின் சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளருக்கு விளக்கி காண்பித்ததும் அவர் அதில் ஒரு டெஸ்ட் டிரைவ் போய் வரலாம் அதன் சிறப்பம்சங்களை விளங்கிகொள்ள. அதிகளவில் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் தயாரித்து விற்பனைசெய்யும் நாடுகள்  அந்த ஆயுதங்களின் சிறப்பை விளக்கி காண்பிக்க பயன்படுத்திய களம்தான் ஈராக் என்றது அந்த முன்னணி நாளிதழ் .

 

 

 

 


 
அதைப் படித்தபோது எனக்கும் அப்படிதான் தோன்றியது. அப்போது ஈராக்கின் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குவதற்கு சொன்ன காரணம் சதாம் ரசாயன ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ளார் என. ஆனால் ஐக்கியநாட்டு சபையின்  குழு ஈராக்கில் சோதனை நடத்த முதலில் சதாம் ஒப்புக்கொள்ளவில்லை. அதுவே ஈராக்கில் ரசாயன ஆயுதம் இருக்கலாம் என உலக நாடுகளை சந்தேகம் கொள்ள செய்தது. பின்பு ஈராக்கில் சோதனை நடத்திய ஐக்கியநாட்டு சபையின் குழு அங்கு ரசாயன ஆயுதம் ஏதும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. அதன் பின்பும் தனது சட்டாம்பிள்ளைத்  தனத்தை காண்பிக்க அமெரிக்காவின் கூட்டுப்படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தி சின்னாபின்னமாக்கியது.
 
 உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் இருந்திருக்க வேண்டிய ஒரு நாடு ஈராக்.பல அரபு நாடுகளில் எண்ணைவளம் மட்டுமே இருக்கிறது. தண்ணீருக்கு கஷ்டம்தான்.பெட்ரோலை விட தண்ணீர் போத்தலின் விலை அங்கு அதிகம்.  நல்ல எண்ணை வளமும், தைகிரீஸ், யூப்ரடீஸ் என வற்றாத இரு ஜீவநதிகள் ஓடும்  நாடு ஈராக். திக்ரித்தை ஒட்டிய ஈராக்கின் வடபகுதி பசுமையானது.  பண்டைய மொஸபட்டோமிய தான் இப்போதைய ஈராக். ஜோதிட சாஸ்திரத்தை உலகக்கு அளித்தவர்கள் பாபிலோனியர்கள் என்றும் சொல்லபடுகிறது. பல ஆண்டுகள் தொடர்ந்து நட்சத்திரங்களை கவனித்து எழுதினார்களாம்.
  
 சதாம் அண்டைநாடான ஈரானுடன் பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடத்தினார். ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்று ஒன்றில்  குவைத் எனது நாட்டின் ஒரு மாநிலம் எனக் கூறி சதாம் நள்ளிரவில் தனது படைகளை அனுப்பி குவைத்தை கைப்பற்ற அப்போது அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி குவைத்தை மீட்டுக் கொடுத்தது. அதன் பின் குவைத்தில் நிரந்தரமாய் ஒரு ராணுவ முகாமையும் அமைத்துக்கொண்டது அமெரிக்கா.
 
இப்போது இந்த போர். எல்லாம் சதாமின் தவறான காய் நகர்த்தல்கள் என சொல்லுவார்கள். இப்போது ஈராக் மிக வறுமையில் இருக்கிறது. தவறான  தலைமை, ஆட்சியாளரின் கையில் கிடைத்ததால் அங்குள்ள குடிமக்கள் வறுமையும், அமைதியின்மையும் என நிம்மதியற்ற வாழ்க்கையை வாழும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். தொடர் போரினால் எந்த தொழிலும் ,உற்பத்தியும் செய்யமுடியாமல் வசதியானவர்கள் கூட நடுத்தெருவுக்கு வரவேண்டியதாயிற்று உள்நாட்டில். ஆனால் சிலர்  இந்த போரினால் ஆதாயமடைந்து கோடீஸ்வரர் ஆனவர்களும் இருந்தனர். நண்பர் கலீல் பாய் சொல்வார் “ஒரு போர் நடந்தால் பெரும்பான்மையானவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வரும், சிலர் கோடிஸ்வரர் ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு” என.  அண்டைநாடுகளான குவைத் மற்றும் துருக்கியின் உணவுப் பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்கள், லாரிகள் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் இன்னபிற நிறுவனங்கள் அப்படி கோடிஸ்வரர் ஆகியிருந்தது.அமெரிக்கா தினமும் ஒரு ட்ரில்லியன் டாலர் செலவு செய்கிறது என முன்பு ஒருமுறை எனது தோழி பாயல் சொல்லிக்கொண்டிருந்தாள். போர்களினால் இழப்பும், இறப்புமே அதிகம்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments