சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 02

0
1773

அபாயக்குரல்

தொண்டைமானாற்று முகத்துவாரத்தில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி, சவுக்கு மரங்கள் நிறைந்திருந்த பகுதிகளினூடாக ஊடறுத்து மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்த அந்த புரவியின் பேரில் ஆரோகணித்திருந்த அந்த வாலிப வீரன், தன் இடையில் தொங்கிக்கொண்டிருந்த நீண்ட நெடிய வாளின் பிடியை ஒரு கையினாலும், புரவியின் கடிவாளத்தை மறுகையினாலும் பிடித்த வண்ணம் கம்பீரமாய் அமர்ந்த படி தன் கூரிய பார்வையை இரு மருங்கும் சுழலவிட்டு அந்த பிரதேசத்தை தன் கண்களால் அளவெடுத்து ஏதேதோ மனக்கணக்குகளை போட்டுக்கொண்டிருந்தானானாலும், இடையிடையே புரவியின் கழுத்தை பரிவுடன் தடவிக்கொடுத்துக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தான்.

புரவியானது ஊர்வது போல் ஆமை வேகத்திலேயே நகர்ந்து கொண்டிருந்தாலும், புரவியை விரைவாக செலுத்த வேண்டி விரட்ட விரும்பாத அந்த வாலிபன், அதன் வேகத்திற்கே நடக்கவிட்டு மிக மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தான். சுமார் அரைகாத தூரம் வரை இப்படியே நகர்ந்து வந்திருந்த அந்த வாலிப வீரனின் காதில் திடீரென ஒலித்த “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்ற அந்த அவலக்குரல் அவனை ஒரு கணம் திடுக்குற செய்தாலும் மறுகணம் தன்னை சுதாகரித்துக்கொண்டு அரவம் வந்த திசையை நோக்கி தன் கூரிய வேல் பார்வையை செலுத்தினான்.

நம்முடைய வாலிபவீரனின் புரவி நின்ற இடத்தில் இருந்து சில அடிகள் தொலைவில் ஒரு முரடன் இளம் பெண் ஒருத்தியின் சேலையின் தலைப்பை பிடித்து இழுத்த வண்ணம் பனங்கள்ளு அளித்த போதையின் விபரீதத்தில் தள்ளாடிக்கொண்டே ஏதேதோ அர்த்தம் புரியாத வார்த்தைகளை நாக்குழறி உளறியபடியே நின்று கொண்டிருந்தானானாலும், அவனின் உடலமைப்பும் அதில் அவன் தரித்திருந்த கவச ஆபரணங்களும் இடையில் தொங்கிய வாளும் அந்த முரடன் ஏதோ அரச படையில் முக்கிய பணியாற்றுபவனாக தான் இருக்க வேண்டும் என்று எண்ண வைத்துக்கொண்டிருந்தது. அந்த முரடனின் கையில் சிக்கியிருந்த அந்த இளம் பெண் தன் மானத்தை காக்க வேண்டி தன் கையால் சேலையை இறுக இழுத்து மார்புடன் சேர்த்து அணைத்த படி, அவனின் பிடியில் இருந்து தப்பி விட முயற்சித்துக் கொண்டிருந்தாளானாலும், “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று பலமாக கூச்சலிட்டு யாரையாவது உதவிக்கும் எதிர் பார்த்து கூவிக்கொண்டிருந்தாள்.

இவற்றையெல்லாம் கணப்பொழுதில் அவதானித்து உள்வாங்கி விட்டிருந்த அந்த வாலிபன் ஒருகணம் திக் பிரமையுற்று நின்றிருந்தானானாலும், மறுகணமே தான் செய்ய வேண்டிய காரியத்தை உணர்ந்து கொண்டவனாய் தன் புரவியில் இருந்து சடுதியாக குதித்து இறங்கினான். அவ்வாறு அந்த வாலிப வீரன் குதித்து இறங்கிய மறுகணமே ஏதோ மந்திரசக்தியால் உண்டானது போல அவனது இடையில் தொங்கிய அந்த நீண்ட உடைவாள் அவனின் கைகளில் அலங்கரித்து நின்றது.

நீண்ட அந்த நெடுவாளை இலாவகமாய் சுழற்றிய அந்த வாலிபன், வம்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த முரடனை நோக்கி நெருங்கி வந்தான். போதை செய்த மாயத்தில் தளம்பிக்கொண்டிருந்த அந்த முரடன் நம் வாலிபவீரனை நோக்கி வாய்குழறி ஏதேதோ உளறினானாதலால், போதையினால் சித்தம் தவறி நிலையறியாது நிற்பவன் அதுவும் கையில் ஆயுதம் ஏதும் இல்லாத ஒருவன் பேரில் ஆயுதத்தை பிரயோகிப்பது ஆண்மைக்கும் அது கற்பிக்கும் வீரத்துக்கும் பெரும் இழுக்கு அல்லவா? என்று ஒரு கணம் சிந்தித்த அந்த வாலிப வீரன் தன் வாளை மீண்டும் உறையினுள் செலுத்தி விட்டு, தன் வலது கை விரல்களை மடக்கி அந்த முரடனின் கை மூட்டில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். ஒரு கணம் நிலை தடுமாறிப்போன அந்த முரடன் தன் கையில் சிக்குண்டிருந்த சேலை தலைப்பை நழுவ விட்டதும் உடனடியாக சுதாகரித்துக்கொண்ட அந்த இளம் பெண் தன் சேலையை சரி செய்து கொண்டு அந்த வாலிப வீரனின் பின்னால் போய் நின்று கொண்டாள்.

தன் மீது விழுந்திருந்த அந்த பயங்கர குத்தின் வேகத்தில் சில அடிகள் வரை தள்ளிப்போய் விழுந்திருந்த அந்த முரடன் தன்னை சுதாகரித்துக்கொண்டு மீண்டும் எழுந்து ஒரு துவந்தயுத்தத்தை நிகழ்த்த முடிவெடுத்திருந்தாலும், அதை அத்தனை நேரம் நீடிக்க விரும்பாத அந்த வாலிபன் குறுவாளுடன் தன் மீது பாய்ந்த அந்த முரடனின் இரண்டு கண்களுக்கும் இடைப்பட்ட மத்திய பகுதியில் தன் முஷ்டியால் பலமாக ஒரு குத்து விட்டான். அந்த குத்தின் வீரியத்தால் சற்று நேரத்திற்கெல்லாம் அந்த முரடன் மூர்ச்சையடைந்து சரிந்தும் விட்டிருந்தான்.

இத்தனை சம்பவங்களும் கணப்பொழுதில் கனவு போல் நிகழ்ந்தேறியிருக்க அவற்றை வைத்த கண் வாங்காமல் திக்பிரமையுற்றவள் போல் பிரமிப்புடன் நோக்கிக்கொண்டிருந்த அந்த இளநங்கை மீது அதுவரை கவனத்தை செலுத்தியிராத அந்த வாலிபன் அப்பொழுது தான் அந்த பெண்ணின் அழகிய வதனத்தை நிமிர்ந்து ஏறெடுத்து நோக்கினான்.

கார்மேகம் திரண்டது ஒத்த கேசமும், வளைந்த வில்லை ஒத்த அடர்ந்த கரும் புருவங்களும், பிறையென வளைந்த நெற்றியும், செவ்விதழ் உதடுகளும் என உலகின் அத்தனை அழகையும் தன்னகத்தே வைத்திருந்த அந்த முழுநிலவு போன்ற பிரகாசம் நிறைந்த வதனத்தின் மீது சற்றே சுருண்டு நெற்றி வழியாக வழிந்திருந்த அந்த கேசங்கள் அந்த முகத்திற்கும் மேலும் அழகை சேர்த்ததானாலும் அந்த பேரழகு தான் இன்று அவளுக்கு பெரும் அபாயத்தையும் விளைவிக்க காரணமாய் அமைந்திருக்க வேண்டும் எனவும் மனதிலும் எண்ணிக்கொண்டான் அந்த வாலிப வீரன்.

அவளின் முகத்தில் இருந்த அந்த பேரொளியிலும் அவளின் இணையற்ற அழகிலும் வெகுவாக கவரப்பட்டுவிட்ட அந்த வாலிபன் அவள் முகத்தையே நீண்ட நேரமாக வைத்த கண் வாங்காமல் நோக்கிக்கொண்டும் நின்றிருந்தான். இத்தனை நேரமாக ஒரு வாலிபன் தன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த அந்த இளநங்கையின் கன்னத்தில் வெட்கத்தின் விளைவாய் உண்டான செந்நிறம் அவள் வதனத்திற்கு மென்மேலும் பொலிவையே வழங்கியதென்பதை அந்த வாலிபன் அவதானித்தானென்றாலும், தான் இப்படி வெட்கமே இல்லாமல் ஒரு பெண்ணின் முகத்தை வைத்த கண்வாங்காமல் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருப்பதை நினைத்து மனதிற்குள் தன்னை தானே கடிந்தும் கொண்டான்.

அந்த வாலிபனும் அந்த இளம்பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று கொண்டிருந்தார்களானாலும், இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை ஏதும் நிகழாததன் விளைவாய் அங்கு நிலவிய அசாத்திய பேரமைதியை கலைக்க வேண்டும் என்பதற்காகவும், தான் அவளை இத்தனை நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்ததால் அவள் அடைந்த அசௌகரிய நிலையை போக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த வாலிபன் ஏதோ கடமைக்கு பேசுபவன் போல முதலில் மெதுவாக பேச்சை ஆரம்பித்து மெல்லிய குரலில்,

“தாங்கள் யார்” என்றான்.

“ஒரு பெண், என் பெயர் தேன்மொழி” என்று சற்று துடுக்காகவே பதிலளித்தாள் அந்த நங்கை

“தங்களுக்கும் அந்த முரடனுக்கும்” என்று ஆரம்பித்த அந்த வாலிபன் கேள்வியை முற்றுப்பெறாமலேயே நிறுத்தினான்.

“எந்த சம்பந்தமுமில்லை, அவன் ஒரு துட்டன் இத்தனை நாளும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினான் இன்று” என்று இழுத்தாள் தேன்மொழி.

“இன்று பலாத்காரமாகவே தங்களை தூக்கிசென்று விட பார்த்தான்” என்று வசனத்தை முடித்தான் அந்த வாலிபவீரன்,

“ஆம் நல்ல வேளையாக தாங்கள் சமய சஞ்சீவியாக இங்கு வந்தீர்கள்” என்றாள் தேன்மொழி.

“நானில்லாவிடில் வேறு யாரும் வந்திருப்பார்கள்” என்று கூறிய அந்த வாலிபனின் உதட்டின் இளநகை பூத்தது,

“மாட்டார்கள், இவன் பெயர் ராஜசிங்க, இந்த இராசதானியின் சாபக்கேடு, தற்சமயம் இவன் தான் படைதளபதி, படைதளபதியை யார் தான் துணிந்து எதிர்ப்பார்கள்,” என்று சீற்றத்துடன் எழுந்தது தேன்மொழியின் குரல்,

“ஓஹோ” என்று கூறி மெல்ல தலை அசைத்த அந்த வாலிபன் தன் புரவியை நோக்கி மெல்ல நகர்ந்தான்.

“தாங்கள் இத்தேசத்திற்கு புதியவர் போலிருக்கிறதே” என்றாள் அவனை தொடர்ந்து வந்த அந்த இளம் நங்கை, சற்றே சந்தேகமான குரலில்.

அவளை நோக்கி திரும்பிய அந்த வாலிபன் “ஆம்” என்று உறுதியான குரலில் கூறினான்,

“என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்” என்று கேட்ட தேன்மொழி அந்த வாலிபனின் கண்களை ஏறெடுத்து நோக்கினாள்,

“நான் தற்சமயம் ஒரு விரதம் பூண்டிருக்கிறேன்” என்று கூறிய அந்த வாலிபன் புரவியை ஒரு கையில் பிடித்தபடி மெல்ல நடக்க ஆரம்பித்தான்,

அவனை தொடர்ந்து வந்த இளநங்கை “அதற்கு” என்று கேட்ட குரலில் சந்தேகமும் வியப்பும் கலந்து தொனித்தது,

“அதாவது தாங்கள் கேட்ட இந்த கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் சொல்வதில்லை என்கின்ற விரதம்”

“ஓ அப்படியா” என்று கூறி விட்டு சற்று பெரிதாகவே நகைத்தாள் தேன்மொழி.

அடுத்த சில கணங்கள் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த இருவரில் அந்த வாலிபனே மீண்டும் அங்கு நிலவிய அமைதியை கலைத்து,

“எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?” என்றான் மெல்லிய குரலில்

“முடிந்தால் செய்கிறேன்”

“இங்கு அருகில் சத்திரம் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அது எங்கிருக்கிறது? அதற்கு வழி சொல்வீர்களா? இன்று இரவு தங்கிவிட்டு செல்லலாம் என்று பார்க்கின்றேன்” என்றான் அந்த வாலிப வீரன்,

“ஒரு காலத்தில் இந்த சிங்கைநகரெங்கும் சத்திரங்களுக்கு பஞ்சமில்லாமல் பரந்திருந்தன, இப்பொழுது பெரிதாக எதுவும் இல்லை,” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள் தேன்மொழி,

“ஏன்” ஒற்றை சொல்லில் வியப்புடன் வெளிப்பட்டது அந்த வாலிபனின் கேள்வி,

“கனகசூரியசிங்கையாரிய சக்கரவர்த்தியின் காலத்தில் தென்தேசத்தில் இருந்து செண்பகபெருமாள் என்பவன் படையெடுத்து வந்தான், வந்தவன் சிங்கை நகரில் பெரும் அழிவுகளை செய்து விட்டு, தான் செய்த நாசங்களுக்கு பரிகாரம் செய்வது போல சிங்கை நல்லூர் கோவிலை மட்டும் புனருத்தானம் செய்து விட்டு பின், விசயபாகு என்பவனை மன்னனாக்கி விட்டு தெற்கு கோட்டைக்கு சென்று விட்டான், அவன் செய்த அழிவுகளின் பயன், இன்று சத்திரங்கள் எல்லாம் வெறும் தூண்களாய் தான் நிற்கின்றன, பல கோவில்கள் இருந்த இடத்தையே காணோம்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறி முடித்த தேன்மொழி, பின் சிறிது நேரம் தாமதித்து விட்டு “இங்கிருந்து பத்து காதம் தொலைவில் ஒரு சத்திரம் உண்டு, ஆனால் இப்பொழுதே இருட்டி விட்டது, உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இன்றிரவு என்னுடைய குடிலிலேயே தங்கிவிட்டு காலையில் புறப்படலாம்” என்றாள் சர்வசாதாரணமாக.

“இந்த விடயத்தில் ஆட்சேபிக்க வேண்டியது நானல்ல, தாங்கள் தான்” என்று கூறி நகைத்தான் அந்த வாலிபன்,

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஏனெனில், எனக்கு தங்கள் மேல் பரிபூரண நம்பிக்கை உண்டு, அதற்கு தகுந்த காரணமும் உண்டு” என்று கூறிய தேன்மொழி தன் கைகளில் மறைத்து வைத்திருந்த அந்த ஓலையை எடுத்து காட்டினாள்,

“இது எப்படி” என்று மிதமிஞ்சிய பிரமிப்புடன் ஏதோ கேட்க தொடங்கி முற்று பெறாமல் நிறுத்தினான் அந்த வாலிபன்,

அந்த ஓலையை சுட்டிக்காட்டிய தேன்மொழி “ஆனால் இது சாத்தியமில்லை” என்றாள் திடமான குரலில்.

“எது! எது சாத்தியமில்லை!” என்று கேட்ட அந்த வாலிபனின் குரல், அவன் பிரமிப்பின் உச்சத்தையே அடைந்திருந்ததை வெளிப்படையாக காட்டி நின்றது,

“எது என்றால், இதில் குறிப்பிட்டுள்ள விடயம் தான்” என்று சர்வசாதாரணமாக கூறினாள் தேன்மொழி.

சிங்கை நகரத்து சிம்மாசனம் மூன்றாம் அத்தியாயம் தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments