பரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்

0
1708

அது ஒரு வளமான நாடு!
சிறந்த அரசன்!
மக்கள் தன்னிறைவுடன் வாழ்ந்து வந்தனர்.
திடீரென எங்கிருந்தோ அடையாளம் தெரியாத அந்நியரின் படையெடுப்பு நிகழ்ந்தது!
கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர்.
இவர்களும் தங்களிடமிருந்த அம்பு, வேல், ஈட்டிகளை ஏவினர், படையெடுப்பை வென்றனர்.

வென்ற மதப்பில், அதன் பின் வந்த மிகவும் பலவீனமான, சாதாரண கத்திகளைக் கொண்டு எதிர்கொள்ளக்கூடிய எதிரிகளை நோக்கியும் இவர்கள் அம்புகளைப் பிரயோகித்தனர்.
அதனால் அம்புத் தொழிநுட்பம் இலகுவாக எதிரிகளின் கையில் சிக்கியது.
புதிய வகையான எதிரிகள் அம்புகளுக்கெதிரான கவசங்களுடன் மீண்டும் படையெடுத்தனர்.
அம்புகள் வேலை செய்யவில்லை.
இழப்பு கொஞ்சம் பலமாக இருந்தது.
.
இவர்களும் கொஞ்சம் நவீனமடைந்து துப்பாக்கிகளை கண்டுபிடித்திருந்ததால், அந்நியப் படையெடுப்பு தோல்வியுற்றது.
ஆனால் முதல் போலவே துப்பாக்கியையும் தேவையற்ற முறையில் பாவித்து, துப்பாக்கி தொழிநுட்பத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்தனர்.

இப்படியாக ஒவ்வொரு முறை அந்நியப்படையெடுப்பு நிகழ்வதும், அவர்கள் அதற்கு முதல் பாவிக்கப்பட்ட ஆயுதங்களுக்கெதிரான தடுப்புக்கவசங்களுடன் வருவதும், இவர்களோ புதிய புதிய ஆயுதங்களுடன் அவற்றை எதிர்கொள்வதும், அவ்வாயுதங்களை வகைதொகையின்றிப் பயன்படுத்தி அவற்றின் தொழிநுட்பங்களைப் பறிகொடுப்பதும் தொடர்ந்தன.

இறுதியாக நடைபெற்ற படையெடுப்பின் போதுதான் அவர்களின் அதியுச்ச ஆயுதமான அணுகுண்டைப் பிரயோகித்திருந்தார்கள்.
அடுத்த படையெடுப்பு நிகழப்போகிறது, அந்நியர்கள் அணுகுண்டுக்குமெதிரான கவசத்துடன் வரப்போகிறார்கள்.
இவர்களிடம் இதற்கு மேல் புது ஆயுதம் தயாரிப்பதற்கான தொழிநுட்பம் இல்லை..

அப்படியானால்..?

இது தான் இறுதிப்படையெடுப்பா?

இத்துடன் அந்த நாடே அழிய வேண்டியது தானா?
கைவசம் எல்லா ஆயுதமும் இருந்தும் அவர்கள் நிராயுதபாணிகளா?

ஆம்!
அவர்கள் பரிதாபத்துக்குரிய நிராயுதபாணிகள்..!
அழிவு வெகுதூரத்தில் இல்லை..!
இதோ..
அந்நியப் படையெடுப்பின் முதல் சங்கொலி கேட்கிறது..
கேட்கிறதா…!

நிற்க!
இது ஒரு கற்பனைக் கதை தான்..!
ஆனால் இன்னும் சில பல வருடங்களில் உண்மையாகப்போகும் கதை!
மனிதனுக்கெதிரான நுண்ணுயிர்க் கிருமிகளின் படையெடுப்பின் கதை!

*******
மனிதனுக்கும் நோய்க்கிருமிகளுக்குமான தொடர்பு மிக நெடியது.
பக்டீரியாக்கள், வைரசுகள், பங்கஸ்கள் என இவற்றின் பட்டியல் நீளும்.
இவற்றிற்கெதிராக மனிதனும் பல்வேறு வைத்தியமுறைகளால் போராடிக்கொண்டு தான் இருக்கிறான்.

சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர், அலோபதி என்று வைத்திய முறைகள் பல இருக்கின்றன.
இவை ஒன்றோடொன்று ஒப்பிட்டு எது சிறந்ததென சொல்லமுடியாதன.
எனினும் இவற்றில் கடைக்குட்டியான ஆங்கில மருத்துவம், தன் அண்ணன்மார்களை விட சில மருத்துவ முறைகளில் சிறந்து விளங்குவதை மறுக்கமுடியாது.
அவற்றிலொன்று நுண்ணங்கிகளுக்கெதிரான மருந்துகளின் ( அன்டிபயோடிக்ஸ் – Antibiotics) உருவாக்கம்!

கொத்துக்கொத்தாக உயிர்பறித்துக் கொண்டிருந்த கொள்ளை நோய்கள் பல, இந்த நுண்ணுயிர்கொல்லிகளின் உருவாக்கத்தோடு, இல்லாதொழிந்து போயின.
ஆங்கில மருத்துவத்தின் வெற்றியில் மிகப்பிரதான பங்குவகிக்கும் இந்த நுண்ணுயிர்கொல்லிகளின் வகிபாகமே இப்போது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது!

😈😈அதுதான் Antibiotic Resistance எனப்படும் “நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுகெதிரான நுண்ணுயிர்களின் இயைபாக்கம்”😈😈

நுண்ணங்கிகளின் மனிதனுடனான தொடர்பானது மனித இனம் தோன்றிய நாள்தொட்டு இருந்து வருவது.

எல்லா நுண்ணங்கிகளுமே தீங்கு விளைவிப்பனவல்ல. எமது உடலின் வெளிக்குத் திறந்துள்ள பகுதிகளில் ( தோல், உணவுக்கால்வாய், சுவாசப் பாதை, சிறுநீர்ப்பாதை) பெருமளவான நுண்ணங்கிகள் பிறந்து, வளர்ந்து, குடித்தனம் நடத்தி நம்மோடு சேர்ந்தே வாழ்கின்றன.
இவை பெரும்பாலும் தீங்கற்றவை.
சிலநேரங்களில் நன்மையும் புரிகின்றன. உணவின் சில கூறுகளின் சமிபாட்டில் உதவுகின்றன, உடலினுள் வெளியிலிருந்து புகும் தீங்கான நோயாக்கிகளுடன் சண்டையிட்டு அவற்றை அழிக்கின்றன-

🤔🤔 நுண்ணங்கிகளால் எப்போது நோய் ஏற்படுகின்றது?
1- வெளியிலிருந்து நோயாக்கி நுண்ணங்கிகள் எமது உடலினுள் ஏதேனுமொரு வழியாக ( தோலிலேற்படும் காயம் மூலம், சுவாசம் மூலம், உணவின் மூலம், உடலுறவின் மூலம், சிறுநீர்ப்பாதை மூலம்) உட்புகும்போது.
2- உடலில் சாதாரணமாக இருக்கும் தீங்கற்ற நுண்ணங்கிகள், நமது உடலில் தமது வழமையான இடத்தை விட்டு இன்னோரிடத்துக்கு செல்லுகையில் ( உ+ம் – தோலில் சாதாரணமாக இருக்கும் பாக்டீரியா ஒரு காயத்தினூடாக இரத்தத்தில் கலத்தல், சிறுநீர்ப்பாதையில் இருக்கக் கூடிய நுண்ணங்கிகள் உணவுக்கால்வாய்க்குள் நுழைதல்….)

இதன்போது எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது இவற்றை பெரும்பாலும் அழித்துவிடும்.
எனினும் எமது நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக இருக்கையிலோ, அல்லது வரும் நுண்ணங்கி வீரியமானதாக இருக்கையிலோ நமக்கு நோய் ஏற்படுகிறது.
இவ்வாறு நுண்ணங்கிகளால் ஏற்படும் நோய்களை ” கிருமித் தொற்று- Infection” என்பார்கள்.
இது பெரும்பாலும் ” காய்ச்சல்” என்னும் அறிகுறியுடன் வெளிப்படும்.
அதாவது உங்களுக்கு காய்ச்சல் ஏற்படுமாக இருந்தால், ஏதோவொரு நோய்க்கிருமி உங்கள் உடலில் புகுந்துள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறு ஏற்படும் கிருமித்தொற்றை அழிப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளே அன்டிபயாடிக் ( Antibiotic) எனப்படும்.
Antibiotic யுகம் இரண்டாம் உலகபோர் சமயத்தில், அலக்சாண்டர் பிளேமிங் என்பவரால் பெனிசிலின் என்னும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஆரம்பமானது.
அதன்பின் பல்வேறு நோயாக்கிகளுக்கெதிராக பலப்பல புதிய புதிய antibiotics அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிலுள்ளன.

இந்த நுண்ணங்கிகளுக்கெதிரான யுத்தத்தில் நாம் எதிர்கொண்டுள்ள பாரிய ஆபத்து தான் மேற்கூறிய ” antibiotic resistance” ஆகும்.

🤔🤔 Antibiotic மருந்துகள் எவ்வாறு தொழிற்படுகின்றன?
ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு விதத்தில் நோய்க்கிருமிகளை அழிக்கும். ஒரு நோயாக்கிக்கான மருந்து இன்னொன்றுக்கு வேலை செய்யாது. உதாரணத்து பக்டீரியாவால் ஏற்படும் சளிக்காய்ச்சலை சுகப்படுத்தும் அமொக்சிசிலின் மருந்தானது, வைரசால் ஏற்படும் சளிக்காய்ச்சலுக்கு வேலை செய்யாது- ஏனெனில் அதனால் வைரசை அழிக்க முடியாது.
ஒரு மருந்து நுண்ணங்கியின் பிரியும் ஆற்றலை தடுக்கும், மற்றையது நுண்ணங்கிக் கலத்தின் கலச்சுவரை அழிக்கும், அடுத்ததோ புரதத் தொகுப்பை நிறுத்தும்..
இவ்வாறு பல உதாரணங்கள் இருக்கின்றன.

🤔🤔 Antibiotic Resistance எவ்வாறு உருவாகின்றது?
நுண்ணங்கிகளை நாம் அன்டிபயோட்டிக் கொடுத்து அழிக்கையில், அத் தாக்குதலில் தப்பும் நுண்ணங்கிகள் மருந்துக்கு இயைபாக்கம் அடைகின்றன. அவற்றின் ஜீன் அமைப்பில் மாற்றமேற்பட்டு, குறித்த அண்டிபயோட்டிக்குக்கான எதிர்ப்பு நிலை உருவாகி, அதன் பின் உருவாகும் குறித்த நோய்க்கிருமிகளின் சந்ததிகளை அக்குறித்த அண்டிபயோட்டிக்கால் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அதன் பின் வேறொரு அண்டிபயோட்டிக்கை தேடவேண்டிய நிலை உருவாகின்றது.
இப்போது இயைபாக்கமடைந்த அந்த நுண்ணங்கி உங்கள் சூழலில் பல்கிப் பெருகும். இப்போது உங்களுக்கு மட்டுமன்றி, உங்கள் பிரதேசத்தில் யாருக்கு அக்குறித்த நுண்ணங்கியால் நோயேற்படினும், அதற்கெதிரான ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட மருந்து வேலை செய்யாது. இனி புது மருந்தொன்றைத் தான் தேடவேண்டும்.

நுண்ணங்கிகளின் பெருக்கவீதம் உங்களுக்கு தெரிந்திருக்கும்- ஒரு நுண்ணங்கியால், நமக்கு நோயேற்படுத்தும் அளவு நோயாக்கிகளை உருவாக்க சில நாட்களோ, சில மணித்தியாலங்களோ போதுமானது.
ஆனால் ஒரு புதிய அண்டிபயோட்டிக்கை கண்டுபிடித்து, பரிசோதித்து, பாவனைக்கு விட குறைந்தது 20-25 வருடங்களாவது தேவைப்படும்.
நிலைமையின் தீவிரம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

🤔🤔 இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

1- முதலில் வைத்தியர்கள் இதில் மனந்திருந்த வேண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சலுடன் வரும் பிள்ளைக்கு வீரியமிக்க அன்டிபயோடிக் மருந்துகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். இன்று நாம் பணத்துக்காக செய்யும் இச்செயல் நாளை நம் பிள்ளைகளையும் தான் பாதிக்கும் என்பதையாவது மனதில் கொண்டு செயற்பட வேண்டும். இதை வாசிக்கும் மருத்துவ மாணவர்களே, உங்கள் மனதில் இப்போதிருந்தே இந்த எண்ணத்தைப் பதித்துக் கொள்ளுங்கள்.

2- உங்களது நோய்க்கு வைத்தியரால் தரப்படும் மருந்தை சொல்லப்பட்ட காலம் வரை முழுமையாக பாவியுங்கள். 7 நாள் பாவிக்க வேண்டிய மருந்தை 2-3 நாட்கள் பாவிக்கும் போதே உங்கள் காய்ச்சல் குறைந்து, நோய்க்குணங்குறிகள் மாறிவிடும், ஆனால் கிருமி இன்னும் உடலினுள் இருக்கும். காய்ச்சல் விட்டவுடன் நீங்களும் மருந்தை இடையில் விட்டால், எஞ்சியிருக்கும் கிருமி மீண்டும் பெருகும். பெருகுகையில் குறித்த மருந்துக்கான எதிர்ப்பாற்றலை விருத்தி செய்தவாறே பெருகும். இது antibiotic resistanceக்கான ஒரு பிரதான காரணமாகும்.

3- வைத்தியரின் ஆலோசனையின்றி நீங்களாக மருந்துகளை வாங்கி பாவிப்பதை தவிருங்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு வந்த காய்ச்சலும், உங்கள் குழந்தைக்கு வரும் காய்ச்சலும் ஒரே நோயின் விளைவாக இருக்க வேண்டுமென்பதில்லை.
எளிதாக சொன்னால், ஒரு வைரஸ் காய்ச்சலுக்கு antibiotic எதுவும் பொதுவாக தேவையில்லை. ஆனால் நீங்கள் கடையில் augmentin அல்லது Erythromycin குளிசையை வாங்கிப் போடுகிறீர்கள். வைரசுக்கு இவற்றால் ஒரு பாதிப்பும் ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், erythromycin ஆல் உண்மையாக கொல்லப்படக்கூடிய பக்டீரியா உஷாராகி, தன் அடுத்தடுத்த சந்ததியை erythromycin க்கு எதிர்ப்பாற்றல் உள்ளதாக மாற்றிவிடும்.
இப்போது உங்களுக்கு மட்டுமன்றி, உங்கள் ஊரில் வாழும் யாருக்காவது அந்த பக்டீரியாத் தொற்று வந்தால், அவர்கள் யாருக்கும் erythromycin வேலை செய்யாது.
நீங்கள் செய்த வேலையால் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஊரிலுள்ள எல்லோருக்கும்…
விளங்குகிறதா..?

இத்துடன் முடித்து விடலாம்.
இந்தப் பதிவின் மூலம் உங்கள் மனதில் பதியவேண்டியவை:-

1- antibiotic resistance என்னும் நிலை எமது பிள்ளைகளுக்கு எம்மால் ஏற்படுத்தப்படும் மிகப் பெரிய அபாயமாகும்.
2- இதைத்தடுக்க தேவையற்ற antibiotic பாவனையை தடுக்கவேண்டும்.
காய்ச்சலுக்கு வைத்திய ஆலோசனையின்றி எந்த antibiotic மருந்தையும் பாவிக்க வேண்டாம்.
வைத்தியரால் தரப்படும் மருந்துகளை சொல்லப்பட்ட கால அளவு வரை முழுமையாக பாவியுங்கள்.

சிறிய விடயங்கள் தான்- செய்யாவிட்டால் மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லன.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்..!

( கீழுள்ள படம்:- எல்லா அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் இயைபாக்கமடைந்த ஒரு பக்டீரியாவின் பரிணாமத்தை காட்டுகிறது)

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments