ஆளி

0
1678

 

 

 

 

ஆங்கிலப் பெயர்: ‘ப்ளாக்ஸ்’ (Flax)
தாவரவியல் பெயர்: ‘லினம் உசிடாடிஸிமம்’ (Linum Usitatissimum)
தாவரவியல் குடும்பம்: ‘லினாசியே’ (Linaceae)

ஆளி, ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் செடி. மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்டது. 1 முதல் 2 மீட்டர் உயரம் வரை வளரும். மெல்லிய ஊசி வடிவில் நீலப் பச்சை நிற இலைகளும், நீல நிற இதழ்களுடன் கருஞ்சிவப்பு இழையோடும் மலரையும், உருண்டையான விதைகள் கொண்ட காயும் உடையது.

 இந்தச் செடி வளர குளிர்ந்த சூழல் தேவைப்படுகிறது. தண்டு மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகையில், நார்களுக்காகவும், நன்கு முற்றிக் காய்ந்த பின் விதைகளுக்காகவும் இவை அறுவடை செய்யப்படுகின்றன. காய்ந்த செடிகளை அடித்துக் காய்களை உதிர்த்து விதைகளைச் சேகரிக்கின்றனர்.
‘லினன்’ (Linen) துணிகள் நெய்வதற்கான தரமான நூலிழைகள் ஆளி செடியின் தண்டுகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

 பழங்காலப் பாய்மரக் கப்பல்களில் பயன்பட்ட துணிகள் இதைக் கொண்டே நெய்யப்பட்டன. எகிப்தியர்கள் லினன் துணிகளைப் பெரிதும் விரும்பி பயன்படுத்தியதற்கு சான்றுகள் உள்ளன. இயந்திரங்களால் அறுவடை செய்யப்படும் நார்களின் தரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் இவை கைகளால் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டே அறுவடை செய்யப்படுகிறது.


நார்களைப் பிரித்தெடுக்க இச்செடி ஓடும் ஆற்றிலும் ஓடைகளிலும் பல நாட்களுக்கு ஊற வைக்கப்படுகிறது. பின் உலர்த்தப்பட்டு நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. நார்களிலிருந்து மிக நுண்ணிய இழைகளாக உருவாக்கப்படும் லினன் உறுதியாகவும், நீடித்து உழைக்கும் தன்மையுடனும், நல்ல தரத்துடனும் இருப்பவை.

மனித இனம் உட்கொண்ட மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று ஆளி விதை. மருத்துவ குணங்கள் நிறைந்த ஆளி விதை தங்க மஞ்சள், காவி ஆகிய நிறங்களில் இருக்கும். லினன் விதைகள் அல்லது ஃப்ளாக்ஸ் விதைகள் எனப்படும் ஆளி விதை மற்றும் அதன் எண்ணெயில்தான் தாவர உணவுப்பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது.

ஆளிச் செடியின் பல்வேறு பகுதிகள், சாயம், மருந்துகள், மீன் வலை, சோப் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆளி விதை எண்ணெய் மரத்தை மெருகேற்றுவதற்கும் பயன்படுகிறது. அயர்லாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் ஆளி பரவலாகப் பயிரிடப்படுகிறது.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments