ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32

0
592

பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள்

எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும்  நிறுவனத்திற்காக மும்பை முகவர்  மூலம் வந்திருந்தார்கள். இந்திய அரசு ஈராக் செல்லத் தடை விதித்திருந்தபோதும் துபாய் வழியாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.  துபாய் விமான நிலையத்தின் சரக்குகளை கையாளும்(cargo terminal) முனையத்திலிருந்து வேறு விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டுவந்ததாக  சொன்னார்கள் .

போர்முனையில் பதினெட்டு மாதம் பணிபுரிந்து, பல இழப்புகள், சாவின் விளிம்பை பலமுறை சந்தித்துவிட்டு பல இன்னல்களுக்குப் பின் ஊர் செல்வதற்காக காத்திருக்கிறேன். அவர்கள் இப்போது தான் இங்கு ஒரு அபாயகரமான வாழ்வை துவக்கப் போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சூழ்நிலை. ஒவ்வொரு ஆணுக்கும் படித்து முடித்து வேலை கிடைப்பது வரை உள்ள காலம் மிக மிகக் கஷ்டமானது. சிலருக்கு படித்த வேலை கிடைப்பதில்லை, சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்காது. சிலர் தற்காலிகமாக மனமில்லாமல் ஒரு வேலையில் சேர்வார்கள், சேரும்போது தனக்குரிய வேலைகிடைத்ததும் மாறிவிடலாம் என்ற எண்ணத்தோடு. ஆனால் பலருக்கு அது சாத்தியமே இல்லாமலாகிவிடும். சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு. தந்தையோ, சொந்தக்காரர்களோ வைத்திருக்கும் நிறுவனத்தில் வேலை அல்லது கல்லூரி இறுதியாண்டில் பணிதரும் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அவர்கள் இது போன்ற எந்தக் கஷ்டத்தையும் அறியாதவர்கள் .

 

 

 

 

 நான் இங்கே பார்த்த அநேகம் பேர் கொஞ்ச நாள் அனுபவத்துக்காகவும், தற்போதைய பணத்தேவைக்காகவும் வந்ததாக சொன்னார்கள். தற்போது அமெரிக்க ராணுவம் புதிதாக ஈராக்கிய ராணுவத்தை உருவாக்கும் பொருட்டு இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறது. அந்த பயிற்சி முகாமிலுள்ள ஈராக்கிய வீரர்களுக்கான உணவுக்கூடத்தில் பணி செய்ய வந்துள்ளாக புதிதாக வந்த இளைஞர்கள் சொன்னார்கள். தமிழ் இளைஞர்கள் நிறையப்பேர் இருந்தனர்.

என்னிடம் தொடர்ந்து அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தனர். எனது அனுபவங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் தூங்கும் நேரம் தவிர என் அறையிலேயே இருந்தனர். நான் அவர்களிடம் பக்குபா தீ விபத்தில், அனைத்து சான்றிதழ்களை  இழந்ததையும் சொன்னேன். யாரும் உங்களுடைய அசல் சான்றிதழ்களை கொண்டு செல்லாதீர்கள் என்று உறுதியாக அவர்களிடம் சொன்னேன். அதில் மது என்னும் சென்னையைச்  சார்ந்த சமையல் கலைஞன் மட்டும் தன்னுடைய சான்றிதழ்களை என்னிடம் தந்து சென்னையிலுள்ள தனது  வீட்டு முகவரியில் அனுப்பிவைக்கும்படி தந்தான்.

 பெரும்பாலானவர்களிடம் கடவுச்சீட்டை தவிர பிற முக்கிய சான்றிதழ்கள்  எதுவும் இல்லை. எப்போதும் கடவுச்சீட்டை தங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்றபோது, பாக்தாத்திலுள்ள இந்திய தூதரகத்தால் எனக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டை வாங்கிப்பார்த்தபின் ஏன் சொல்கிறேன் என்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். அவர்களை மும்பையில் தேர்ந்தெடுக்கும்போதே நேர்முகத்தேர்வில் இங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை தெளிவாகச் சொல்லியுள்ளனர். அதனால் பலரும் முக்கிய ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை எனவும் எதையும் சந்திக்கும் மனநிலையுடனே வந்துள்ளதாகவும்  தெரிவித்தனர்.

விடுதியறையில் செல்வராஜ் என்றொருவனை சந்தித்தேன்.  மும்பையிலிருந்து இங்கு பணிக்கு வந்த பதினைந்து நாட்களுக்குள்ளாக இந்தியா திரும்பி செல்வதாக சொன்னான். மும்பையிலிருந்து விமானத்தில் ஈராக் வந்திறங்கியபோது அவனது பயணப் பைகள் வந்து சேரவில்லை. அவன் உடுத்திருந்த ஆடையைத் தவிர மாற்று ஆடையும்  இல்லாமல், ஒரு வாரம் அனகோண்டா என்னும் முகாமில் பணிசெய்திருக்கிறான். இருந்தாலும் அவனுக்கு மனம் ஒன்றவில்லை. பணியில் தன்னுடைய பொருட்களை இழந்த கவலை, இங்குள்ள அசாதாரண சூழல் காரணமாக தாயகம்  திரும்பி செல்வதாக சொன்னான். அவனது கதையை கேட்டபின் சிலர் தங்களிடம் இருந்த உடைகள், சோப்பு, இன்னபிற பொருட்கள் என கொடுத்ததில் ஒரு பைக்கான பொருட்கள் சேர்ந்துவிட்டன. அதனால் ஒருவன் ஒரு பையையும் கொடுத்து அவற்றை எடுத்து செல்லுமாறு சொன்னான்.

முன்பு பக்குபா தொடர் குண்டுவெடிப்பில் என் கண்முன்னே சில நாட்களில் மனம் பிறழ்ந்த லக்ஷ்மணனை பற்றி,  ஐந்தாம் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மீண்டும் ஈராக்கிற்கு பணிக்கு வரும் பொருட்டு மும்பை அலுவலகத்தில் லக்ஷ்மணனை  பார்த்ததாக ஒருவர் சொன்னார். அதைக் கேட்டபோது அதிர்ச்சியும் , ஆச்சரியமுமாக இருந்தது. குணமடைந்தவர் மீண்டும் ஏன் இங்கே வரவேண்டும் ? முன்பு உண்மையாக அவர் மனப்பிறழ்வு அடைந்தாரா அல்லது அவர் அப்படி நடித்தாரா ? என விடைகிடைக்காத கேள்விகள் பல எழுந்தது. லஷ்மண் மட்டுமே அதற்கு விடை சொல்ல முடியும். அப்போதே ஐம்பது வயதை கடந்திருந்தார். இப்போது பதிநான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. அவரை சந்தித்து மனதிலுள்ள கேள்விகளுக்கு விடைகாண விளைகிறேன். அதுபோல் என்னுடன் இருந்த ஜோக்கிம் விடுமுறையில் சென்று திருமணம் செய்துவிட்டு இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு வந்தவன், திக்ரித் குண்டுவெடிப்பில் இனி இங்கு பணிசெய்ய இயலாது என இந்தியாவிற்கு சென்றான். மீண்டும் இரண்டு மாதத்திற்கு பின் வேறு முகாமிற்கு வந்ததாக அறிந்தேன்.

 

 

 

 

 

மனிதமனம் உறுதியில்லாதது என நினைத்துக்கொண்டேன்.  பாக்தாத் விடுதியில் வந்த மூன்றாவது நாள் தான் எனது கடவுச்சீட்டை வாங்க என் நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்ததாக சொன்னார்கள்.   கடவுச்சீட்டுடன்  விடுதியின் வரவேற்பறைக்கு சென்றபோது, பக்குபாவில் என்னுடன் பணிபுரிந்த முனாவர் நின்றுகொண்டிருந்தான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். பக்குபா குண்டுவெடிப்பில் ஒரு காலை இழந்தவன்.  எங்கள் நிறுவனம் ஜெர்மனியில் உயர்தர மருத்துவ சிகிச்சையளித்து,  மனிதவளத்துறையில்  உயர்பதவியும் கொடுத்து பணிக்கு வைத்துக் கொண்டது.

செயற்கை கால்களுடன் நடந்தே வந்தான். அவனால் பாக்தாத் நகர வீதிகளில் அச்சமின்றி நடமாடவும் முடிந்ததை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  முனாவர் என்னிடம்  “விமான சீட்டு உறுதியானதும் உங்கள் பயணத்தேதிகளை சொல்கிறேன்” என்றான். “எப்போது?” எனக் கேட்டேன். “எனது திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது நான் விரைவில் ஊர் செல்ல வேண்டும்” என்றேன். “ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே பாக்தாத்–அம்மானுக்கு (ஜோர்டன் ) விமானத்தை இயக்குகிறது. நமது நிறுவனத்திற்கு வாரத்தில் முப்பதுபேர் மட்டுமே அதில் பயணிக்க அனுமதி” என்றான் முனாவர்.

 “உனது திருமண விஷயம் எனக்கு முன்பே தெரியும். நீ திக்ரித்திலிருந்து புறப்பட்ட அன்றே எங்களுக்கு செய்தி வந்தது. உன்னை விரைவில் இந்தியா அனுப்பி வைக்குமாறு மேலதிகாரிகள் என்னிடம் சொல்லியுள்ளனர். ஆனால் பாக்தாத்–அம்மான் செல்லும் விமானத்தில் இன்னும் இடம் உறுதியாகவில்லை. முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்” என சொல்லிவிட்டு எங்களில் நான்கு பேரின் கடவுச்சீட்டுகளை வாங்கிச்சென்றான்.

பாக்தாத் விடுதிக்கு வந்த ஏழாம் நாள் எனக்கு தகவல் வந்தது.  மறுநாள் எட்டாம் தியதி காலை பயணம் என. காலை ஏழு மணிக்கு தயாராக இருக்கும்படி சொன்னார்கள்.  அன்று மாலையில் திக்ரித் முகாமில் என்னுடன் பணி செய்த உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், அயுப், தென்னாப்ரிக்காவின் மேலாளர் ஜாக் உட்பட ஆறு பேர் பாக்தாத் விடுதிக்கு வந்துசேர்ந்தனர். ஊர் செல்லும் உற்சாகத்தில் வந்திறங்கிய அவர்கள்  என்னைப் பார்த்ததும் “நீ இன்னும் போகவில்லையா?” என்ன காரணம் என வினவினர். அவர்கள் வந்த பேருந்தின் இருக்கைகள் அனைத்தும் கழற்றப்பட்டு குண்டு துளைக்காத இரும்பு பிளேட் வைத்து வெல்டிங் செய்யபட்டிருந்தது.  அனைவரும் இருக்கை இல்லாமல் பேருந்தின் தரையில் அமர்ந்துதான் பயணித்ததாக சொன்னார்கள்.

நான் ஊருக்கு செல்லாமல் இன்னும் இங்கிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இங்கு வந்து ஒரு வாரத்திற்குப் பின் தான் விமானசீட்டு ஏற்பாடு செய்ய முடிகிறது என்றேன். “நாங்களும் இங்கு ஒரு வாரம் இருக்க வேண்டுமா?” எனக் கேட்டனர்.  என்னுடன் பத்து நாட்களுக்கும் மேலாக சிலர் காத்திருப்பதை  சொன்னேன்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments