காதல் கொண்டான்! களம் கண்டான்!

0
1469

கொல்லன் தெரு நெடுகிலும் இருந்த கொல்லுப்பட்டறைகளில், உலைக்களங்களில் கனல்விட்டு எரிந்து கொண்டிருந்த பெருநெருப்பில் இரும்பு கம்பிகளை வைத்து பலமாக அடித்து கத்தி வாள் கோடரி முதலான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் விளைவாக “டங் டங்” என்று பேரொலி அந்த வீதி எங்கும் சப்தித்துக்கொண்டிருந்தது. வயதான அனுபவமிக்க கொல்லர்கள் பலர் உலைக்களத்தில் ஆயுதங்களை செப்பனிட்டுக்கொண்டிருக்க இளம் சிறுவர்கள் துருத்தி ஊதிக்கொண்டுமிருந்தனர். வீதி நெடுகிலும் “டக் டக்” என்ற குதிரைகளின் குழம்பொலி சப்தமானது சந்தத்துடன் இசைத்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே இருந்த கொல்லுப்பட்டறைகளில் இடைவிடாது பல இளைஞர்கள் நுழைந்து அங்கிருந்த வாள்கள் முதலான ஆயுதங்களை பார்வையிட்டு தமக்கு வேண்டிய ஆயுதங்களை வாங்கிக்கொண்டு அவற்றிற்கு ஈடாக சில வெள்ளி நாணயங்களையும் திணித்து விட்டு நகர்ந்து கொண்டுமிருந்தனர். பெரும் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த அந்த கொல்லன் வீதியில் இவற்றையெல்லாம் நோட்டம் விட்டபடியே ஒரு வாலிபன் மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்தான். நல்ல உயரமும் அளவான பருமனும் திடகாத்தரமான உடற்கட்டுடனும் இருந்த அந்த வாலிப வீரன், கொல்லன் தெருவில் ஏழாவதாய் இருந்த பட்டறையினுள் நுழைந்தான். அங்கே கொல்லன் ஒருவன் வாள் ஒன்றை செப்பனிட்டுக் கொண்டிருந்தான். அந்த கொல்லனின் அருகில் இருந்த சிறுவன் துருத்தி ஊதிக்கொண்டுமிருந்தான். உள்ளே நுழைந்த அந்த வாலிபனை கண்களை உயர்த்தி நோக்கிய அந்த கொல்லன், “அதோ அந்த மூலையில் உன் ஈட்டியும் வாளும் தயாராக இருக்கிறது பார்!” என்று கூறிவிட்டு மீண்டும் தன் வேலையில் கவனத்தை செலுத்தத்தொடங்கினான். அந்த மூலையில் கொல்லன் சுட்டிக்காட்டிய அந்த ஆயுதங்களை எடுத்த அந்த வாலிபன் தன் இடைக்கச்சையில் இருந்து சில வெள்ளி நாணயங்களை எடுத்து அந்த கொல்லனின் கையில் திணித்து விட்டு வெளியேற முற்பட்டவும்,

“ஏனப்பா போர் நிச்சயம் தானா?”
என்றான் அந்த கொல்லன்.
“ஆம் நிச்சயம் தான், நம் மகாராஜாவின் கீழ் சிற்றரசனாய் திறை செலுத்தி ஆள வேண்டிய சோழநாடு இன்று திறை செலுத்த மறுக்கிறது, மன்னர் எத்தனையோ முறை தூதனுப்பியும் எவ்வித பயனும் இல்லை” என்றான் அந்த வீரன் கடும் சினத்துடன்.
“ஏனப்பா யார் அது இத்தேசத்தில், புலிகேசியை வென்று வாதாபியை எரித்த நரசிம்ம பல்லவரையே எதிர்க்குமளவு துணிவு கொள்வது”

“யாரோ பார்த்தீபசோழராம், சிற்றரசாய் இருக்க முடியாது போர் செய்தே தீருவேன் என்கிறார். எம்மன்னரும் மரியாதைக்காய் எத்தனையோ முறை தூதனுப்பிப்பார்த்து விட்டார், எந்த பலனும் இல்லை”

“ஏதோ ஆண்டவன் சித்தம்” சலித்துக்கொண்டார் அந்த கொல்லர்.

“ஏனையா இந்த சலிப்பு, எனக்கு இப்போரை நினைக்கையில் எத்தனை உவகையாய் இருக்கிறது தெரியுமா?”

“போரொன்று வந்தால் தானப்பா கொல்லன் எனக்கும் சோறு, ஆனாலும் எத்தனை உயிர்ப்பலி”

“மன்னரும் அதை தவிர்க்கத்தான் எண்ணுகிறார். விதி யாரை விட்டது, நீரும் நானும் பேசி என்ன ஆகப்போகிறது”

“அதுவும் சரிதான்”

மேற்படி பேச்சை அத்துடன் முடித்துக்கொண்டு அந்த வாலிபன் தன் ஆயுதங்களுடன் கொல்லன் பட்டறையை விட்டு விரைவாக வெளியேறினான். அங்கிருந்து தென்மேற்கு திசையாக சிலகாததூரம் சென்று தன் குடிலை அடைந்தான். அங்கே தன் ஆயுதங்களை மிக அவதானமாய் வைத்து விட்டு, அருகிலிருந்த நந்தவனத்தை நோக்கி நடந்தான். பல வண்ண பூக்களும், நீர் தடாகங்களும், பல்வகை பட்சிகளும் என ரம்மியமாய் இருந்த அந்த அழகிய நந்தவனத்தின் மையப்பகுதியில் இருந்த நீர்த்தடாகத்தின் கரையில் அழகே உருவமாய் அமர்ந்திருந்த கன்னியின் பின்புறம் சென்று அமைதியாக நின்றான். தெளிந்த அந்நீரில் தன் முகமருகில் ஆடவனொருவனின் முகம் கண்டு சற்றே தடுமாறிய அக்கன்னி வந்திருப்பவன் தன் காதலன் இளமாறன் தான் என்பதை இனங்கண்டு கொண்டதும், வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் என்றாலும், அதை வெளிக்குக்காட்டாமல் தலைகுனிந்து மறைக்கவும் செய்தாள். அவளருகில் சென்ற இளமாறன் நெருக்கமாய் அமர்ந்து, அவளிடையை தன் வலக்கரம் கொண்டு பற்றி இறுக அணைத்து, “மேனகா அதிக நேரம் காக்க வைத்து விட்டேனா?” என்றான் மிக மெல்லிய குரலில்.
“போதும் உங்கள் அக்கறை, உங்களுக்கு என் மேல் அக்கறையே இல்லை, நாட்டையும் மன்னரையும் கட்டிக்கொண்டு அழுங்கள்” என்றாள் மேனகை பொய்க்கோவமதை வதனத்திற்காட்டி.
“இங்கே பாரடி என்னை பற்றி என்னவென்றாலும் கூறு மன்னரையும் நாட்டையும் இழுக்காதே” என்றான் இளமாறன் சற்றே கம்பீரமாக.
“இதற்கொன்றும் குறைச்சலில்லை” என்று சலித்தாள் அவள்.
“கோபம் கொள்ளாதே மேனகா, உன் பொன்முகத்திற்கு கோபம் பொருந்தவில்லை” என்றான் அவன் துடுக்காக.
“கோபத்தில் குரங்கு போலிருக்கிறேன் என்று சொல்கிறீர்களோ?” என்றாள் மேனகை சினத்துடன்.
“இல்லை இல்லை நான் எதுவும் சொல்லவில்லை ஆளை விடு” என்றான் அவன்.
“இங்கே பாருங்கள்”
“என்ன?”
“போர் நிச்சயம் தானா” என்றாள் மேனகா ஆர்வம் பொங்கும் குரலில்.
“போரும் நிச்சயம், வெற்றியும் நிச்சயம், என்னுயிர் கொடுத்தாவது இப்போரில் சிம்மக்கொடி பறக்கசெய்வேன், வாதாபி வென்ற மாமல்லருக்கு இச்சோழ தேசம் வெறும் துருப்பல்லவோ?” என்று ஆவேசத்துடன் பேசினான் அவன்.
“என்ன சொன்னீர்கள், உயிரை ஈவதா? போர்க்களம் புகுமுன் இப்படி ஒரு வார்த்தையை ஏன் சொன்னீர்கள், அதற்கு என்னை கொன்று விடுங்கள்” என்று கூறிய மேனகையின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.
“நீங்கள் அப்படி கூறியிருக்கக்கூடாது” என்றாள் அவள் விம்மியபடியே.
“நான் கூறினால் நடந்து விடுமா? தயவு செய்து அழாதே, இது மறப்பெண்ணுக்கு அழகல்ல, ஆண்மகனுக்கு போரில் இறப்பதை காட்டிலும் வேறு பெருமை உண்டா?” என்றான் அவன் சற்றே வீரம் பொதிந்த குரலில்
“நீங்கள் பெருமை அடையுங்கள், பேதைப்பெண் நானும் தங்கள் பின்னாலேயே வந்துவிடுகிறேன்.” என்றாள் அவள் வருத்தம் தோய்ந்த குரலில்.
“அப்படி ஏதும் கூறாதே, எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்று அவன் ஒப்புக்கு சமாதானம் கூறினான் என்றாலும் அவன் உள்ளமானது வீரமரணம் எனும் கனியை சுவைக்கவே விரும்பிக்கொண்டிருந்தது.
காலங்கள் ஓடின போர்க்களம் மூண்டது, இருநாட்டுப்படைகளும் தம் பலங்கொண்ட மட்டும் மோதின. வாளும் வேலும் உரசும் சத்தமும் வீரர்களின் அணிவகுப்பும், குதிரைகளின் குழம்பொலியும் யானைகளின் பிளிறல்களும், வீரர்களின் அலறல்களும் இணைந்து பயங்கரமாய் அடித்துக்கொண்டிருந்தது அக்களத்தை.

குடிசையின் திண்ணையில் வழிமேல் விழிவைத்து எரியும் தீபத்தின் ஒளி அணையாமல் வைத்து, காத்திருந்தாள் அப்பேதைப்பெண் தன் காதலன் வரவுக்காய், போர்க்களம் புக அவன் ஆயுதம் தரித்து வெளிவந்த போது ஆராத்தி எடுத்தவள் கைதவறி தட்டு கீழே உருண்டோட குங்குமம் சிதறி நிலத்தில் சிந்தியது, அச்சம்பவம் அவள் நெஞ்சில் தோன்றி அவள் உள்ளத்தை பாகாய் உருக்கிக்கொண்டிருந்தது. தன் காதலன் ஒப்புயர்வற்ற வீரன் போர்க்களம் புகும் முன் தன்னால் இப்படி ஒரு அபசகுணம் நேர்ந்து விட்டதே என்ற எண்ணம், அவள் நெஞ்சை கீறிக்கிழித்து வதைத்துக்கொண்டிருந்தது. கடைசியாய் போர்க்களம் புகும் அந்த நாளின் முதன்நாளன்று, அவன் பேசிய ஆசை வார்த்தைகளும், அவனளித்த காதல் போதையும் பேதையவள் மனதை கசக்கிப்பிழிந்துகொண்டிருந்தது. இரண்டு நாளாகியும் போனவனை வரக்காணவில்லையே பசியை மறந்தாள், தூக்கத்தை மறந்தாள், யாவும் மறந்தே திண்ணையில் அமர்ந்தாள். காதலின் வேதனை அவளை வாட்ட, போனவன் வருவான் என்றே அவள் இதயம் துடித்ததென்றாலும், மனமது தன் போக்கில் பல கற்பனைகளை அவள் பால் கட்டியுரைத்துக்கொண்டிருக்க. கணத்துக்கொரு பாவம் அவள் முகமதில் தோன்றி மறைந்தது.

ஏதோ தொலைவில் வீரர்களின் ஆரவாரம் கேட்டே நிமிர்ந்தாள். சிம்மக்கொடி பறக்க வீரர்கள் கொண்டாட பெரும்படை உள்ளே நுழைந்தது, தன் காதலனும் வருவான், வாகை சூடியே சிம்மக்கொடி தாங்கி வருவான், தன் வீரம் களத்தில் காட்டி வெற்றி பெற்றே அவன் வருவான் என்ற ஆர்வம் பொங்கி உற்சாகம் எழவே, திண்ணை விட்டு எழுந்து முன் சென்றால் எல்லோரும் போயினர். அவனை மட்டும் காணவில்லை, கண்ணீர் பொங்கியது. தலை சுற்றியது. முகம் சிவத்தது, “என்னாவாயிற்று எங்கே என் காதல் கணவன்” அவள் மனம் பலவாறாய் துடித்தது.

பார்த்தீபசோழனின் படைகள் துவம்சம் ஆயின, சிறுபடை என்றாலும் வீறுகொண்டு போரிட்டான் சோழமன்னன், பார்த்தீபரும் வீரசுவர்க்கமடைந்துவிட்டார், பல்லவக்கொடியே எழுந்தது. சிம்மமே வென்றது. என்ற பலவாறான பேச்சுகள் அவள் காதில் விழுந்தது. தூரமாய் தனியாய் ஒருவன் மெதுநடை புரிந்தே வந்து கொண்டிருந்தான். அவனை கண்ட மேனகை அவனை நோக்கி ஓடினாள் “அண்ணா, அவர் எங்கே?” என்றபடி.
“அம்மா என்னை மன்னித்து விடு இளமாறன் வீரசுவர்க்கம் எய்திவிட்டான், என்னை மன்னித்துவிடு”
“ஆ..” என்ற கீச்சொலி மட்டும் அவன் செவிகளில் விழுந்தது. மேனகையின் கண்கள் இருண்டது, கால்கள் தடுமாறியது, உடல் நடுங்கியது, கண்கள் சிவத்தது, வியர்வை ஆறாய் பெருகியது. அசைவற்றே அவள் நின்றாள், சில கணங்களில் சிலையென நின்றவள், “ஆ..” என்றே கீச்சிட்டு உயிரற்று சரிந்தாள் வெற்றுடலாய் புவியதன் மடியில், காதலன் பிரிந்த வேதனை மாளாமல்.

முற்றும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments