சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18

0
1229
PicsArt_10-20-04.57.17

நிதானம் அது பிரதானம்

வேல் முனைகளை வீரர்கள் தன்னை நோக்கி குறிவைத்திருந்தாலும், தன் முன்னால் தளபதி ராஜசிங்கவே அமர்ந்திருந்தாலும், அதைவிட சிங்கள வீரர்கள் சிலர் கையில் ஆயுதங்களை தாங்கியபடி காவல்புரிந்துகொண்டுமிருந்தாலும் அது குறித்து எவ்விதமான அச்சத்தையோ பதட்டத்தையோ தன் முகத்தில் கடுகளவும் காட்டாமல் வெள்ளையங்கிரி மிக நிதானமாகவே அமர்ந்து பரிகாசம் பேசிக்கொண்டிருந்தாராகையால், இயலவே பெரும் சினத்தையும் பிரமிப்பையும் அடைந்துவிட்டிருந்த ராஜசிங்கவை மேலும் பிரமிப்படைய வைப்பதற்கென்றே அங்கே இல்லத்தின் இன்னொரு மூலையில் இருந்து எழுந்த அந்த குரல் கணீரென்றும் மிக உறுதியுடனுமே வெளிப்பட்ட அதே வேளை தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்ட அந்த உருவமும் மிக அமைதியாக தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியும் தூணில் சாய்ந்தும் நின்றமையானது ராஜசிங்கவுக்கும் மற்றைய வீரர்களுக்கும் உண்மையிலேயே பெரும் வியப்பையே அளித்துவிட்டிருந்ததாகையால் ஒரு கணம் அங்கு எவரும் எவ்வித ஓசையுமே எழுப்பாமல் நின்றுவிட்டதன் பயனாக அந்த இல்லமெங்கும் பேரமைதியே குடி கொண்டிருந்தது.

தூணிலே சாய்ந்துகொண்டு நின்ற அந்த உருவம் மெல்ல நிமிர்ந்து தன் முகத்தில் சுற்றியிருந்த அந்த துணியை நன்கு இழுத்து முதுகுப்புறமாக சொருகிவிட்டு ராஜசிங்கவை நோக்கி “தளபதியாரே, ஏன் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறினேன் தெரியுமா?” என்றது மிக நிதானமாக.
“கவுத ஒயே? யார் நீ?” என்று சிங்களத்திலும் தமிழிலும் ஒரே வினாவையே கடும் சினத்துடனேயே தொடுத்தான் ராஜசிங்க.
“இது நான் கேட்ட வினாவிற்கான பதில் இல்லையே” என்றது அந்த உருவம் மிக நிதானமாக.
அந்த உருவத்தின் எகத்தாளமான பேச்சை கேட்ட ராஜசிங்க மிகுதியான சினத்தை கண்களிலேயும் கொடும் நெருப்பை போலவே கக்கிய வண்ணம் தன் வீரர்களை நோக்கி
“என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள், அவனை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசுங்கள்” என்று பயங்கரமாக முழங்கவும் செய்தானாகையால், மறு நொடியே தம் வாள்களை உருவிக்கொண்டும் வேல்களையும் நீட்டிக்கொண்டும் நாற்புறமும் இருந்து வீரர்கள் அந்த உருவத்தை நெருங்கவும் செய்தார்கள்.

அவ்வாறு அந்த உருவத்தை நோக்கி வீரர்கள் நெருங்கவும் ஏதோ மந்திர வித்தையில் நிகழ்வது போலவே கணப்பொழுதில் அந்த உருவத்தின் இடையில் இருந்து கையிற்கு இடம் மாறிய அந்த நீண்ட நெடுவாள் மிக வேகமாக சுழன்று, முன்னே பாய்ந்த இரண்டு வீரர்களின் வாள்களை ஏககாலத்தில் தட்டி பறக்க விட்டதுடன், சரேலென அவர்களை கணப்பொழுதில் வெட்டி வீழ்த்தவும் செய்தது. அடுத்ததாக முன்னேறிப்பாய்ந்த வீரர்களின் வாள்களை மறித்தும் தட்டியும் மிக வேகமாக போரிட்ட அந்த உருவம் கணப்பொழுதில் முன்னேறி மேலும் சில வீரர்களை வீழ்த்தவும், அங்கே இருந்த அத்தனை வீரர்களும் அந்த உருவத்தை நோக்கி முன்னேறியதில் தமது கட்டுப்பாட்டில் இருந்த வெள்ளையங்கிரியை அந்நேரம் மறந்தே போயிருந்தனர். மேற்கூறிய போரை அவதானித்துக்கொண்டிருந்த ராஜசிங்கவும் கூட மிகுந்த சினத்துடன் தன் வாளை உருவிக்கொண்டு அந்த உருவத்தையே நோக்கி முன்னேறவும் செய்தான். அந்நேரத்தில் அங்கே ஒரு விசித்திரமான சம்பவமும் நடந்தேறியது.

படார் என்ற சப்தத்துடன் கணப்பொழுதில் அந்த இல்லத்தின் கதவுகள் திறந்ததுடன் “புத்தம் சரணம் கச்சாமி” என்கின்ற கோசமும் மிகவும் கம்பீரமான குரலில் ஒலிக்கவே பார்த்தீபனை நோக்கி ஓடிய வீரர்கள் அத்தனை பேரும் ஒரு கணம் ஸ்தம்பித்து பின்னால் திரும்பி நோக்கவும், காவிவஸ்த்திரம் தரித்துக்கொண்டும் இடதுகையால் வஸ்திரத்தின் முனையால் தன் முகத்தை மூடிக்கொண்டும் வலது கையில் கயிற்றினாலான உறிபோன்ற அமைப்பில் வைக்கப்பெற்றிருந்த மட்பாண்டம் ஒன்றை காவிக்கொண்டும், ஓர் இளம் பிக்கு உள்ளே நுழைந்தார். அவரது கையிலிருந்த அந்த மட்பாண்டத்தில் செந்நிறமாய் மினுங்கிக்கொண்டிருந்த தணல் நெருப்பிலிருந்து பிறந்த அந்த புகை மெல்ல அந்த இல்லத்தினுள் பரவ ஆரம்பிக்கவும் தன் இடது காலால் இல்லத்தின் கதவை மூடிய அந்த பிக்கு அந்த கதவிலேயே சாய்ந்து நிற்கவும் செய்தார்.

அங்கே என்ன நிகழ்கிறது என்பதை ராஜசிங்க சுதாகரித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்குள்ளாகவே ராஜசிங்கவின் கண்கள் மெல்ல இருட்டவும் ஆரம்பித்தன, கணப்பொழுதில் சுயநினைவை இழந்துவிட்ட ராஜசிங்க தடால் என்று தரையிலே விழுந்தான். அடுத்த சில கணங்களில் அங்கே வேலும் வாளும் தரையிலே விழுவது போன்ற சப்தங்களும் ராஜசிங்கவின் காதில் விழுந்ததுடன், தன்னை யாரோ பிடித்து தூக்கி செல்வது போலவும், எங்கேயோ அமரவைத்து கயிற்றினால் பிணைப்பது போலவும் உணர்வுகள் தோன்றின. அவையெல்லாம் அங்கு உண்மையிலேயே நிகழ்கின்றனவா இல்லை மயக்கநிலையில் தனக்கு தோன்றுகின்ற தோற்றமயக்கங்களா என்கின்ற விடயம் ராஜசிங்கவால் முடிவுசெய்ய முடியாததாகவே இருந்தது.

அங்கே ஆசனத்தில் மயக்கமுற்றுக்கிடந்த வெள்ளையங்கிரியை கட்டிப்போடப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்த இளம்பிக்கு அந்த பாழும் மண்டபத்திற்கு தூக்கி சென்று அவரை தண்ணீர் தெளித்து மயக்கமும் தெளிவித்தானாகையால் மயக்கம் கலைந்து எழுந்த அந்த முதியவர் மெல்ல தன் கண்களை தேய்த்து முழுமையாக சுயநினைவை பெற்றுவிட்டதும் கண்களை சுருக்கி தன் எதிரில் இருந்த பிக்குவை கூர்ந்து நோக்கி
“நீங்கள் யார்? என்னை எதற்கு” என்று ஏதோ கேட்க ஆரம்பிக்கவும் அச்சமயத்தில் கறுப்புத்துணியை முகத்திலே போர்த்தியிருந்த அந்த உருவமும் அங்கே வந்து சேரவும், அவனையும் பார்த்த அந்த முதியவர் தளம்பிய குரலில் தனக்கு ஏற்பட்ட திக்பிரேமையில் இருந்து இன்னமும் வெளியே வராதவர் போலவே “இந்த மனிதர்” என்று ஏதோ உளறவும் செய்தாராகையால் அவரை நோக்கி அந்த பிக்கு
“ஏன் ஐயா தங்களுக்கு இருப்பது கண் தானே” என்று கூறி பலமாக நகைக்கவும் செய்தானாகையால், முகத்தில் தெளிவுக்குறியை காட்டிய அந்த முதியவர் “ஆலிங்கா நீ தானா? இது என்ன வேடம்? அரச கேசரி ஏதும் தகவல் அனுப்பினானா?” என்றார் மிகவும் தெளிவான குரலில்.
“ஆலிங்கா அனைவரும் உன் சிரிப்பை தான் உன் அடையாளமாக்கி விட்டார்கள்” என்றது அந்த உருவம் தன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிக்கொண்டே.
“இவன் யாரப்பா?” என்றார் அந்த முதியவர் வியப்பு குரலிலும் தொனிக்க.
“இவன் பார்த்தீபன் தங்களுக்கு இளவரசர் பரராசசேகரரிடமிருந்து ஓலை கொண்டு வந்திருக்கிறான்” என்றான் ஆலிங்கன்.
“ஓஹோ நீ தானா அது, நல்ல திறமை சாலி தான்” என்றார் வெள்ளையங்கிரி.
“ஆம் திறமைசாலி தான் ஆனால் முரட்டுத்தனமும் முன் கோபமும் அதிகம், இன்று தங்கள் இல்லத்தில் அத்தனை நிதானமாக இவன் செயற்பட்டது எனக்கே பெருவியப்பாகி விட்டது” என்றான் ஆலிங்கன் உறுதியான குரலில்.
“எல்லாம் சவகாசம் தான்” என்றான் பார்த்தீபன் மிக அமைதியாக.
“இவனையா சொல்கிறாய்?” என்றார் வெள்ளையங்கிரி ஆலிங்கனை சுட்டிக்காட்டியபடியே.
“ஆம் ஐயா, இவரையே தான் சொல்கிறேன், எத்தனை ஞானமான பேச்சு, இனிமேல் நானும் முரட்டுத்தனத்தை குறைத்துக்கொண்டு நிதானமாக தான் செயற்படப்போகிறேன்.” என்றான் பார்த்தீபன் தெளிவான குரலில்.
“நல்லது அப்பனே, நல்ல முடிவு செய்தாய்” என்றான் ஆலிங்கன்.
“ஆம் அப்பனே நிதானம் மிக அவசியம் நீங்கள் இப்பொழுது செய்ததை விட மிகவும் கடினமான பணி ஒன்றையும் அடுத்து நிறைவேற்றியாக வேண்டும்” என்றார் வெள்ளையங்கிரி தீர்க்கமான பார்வையை இருவர் மீதும் வீசியபடி.
“என்ன பணி?” என்றான் பார்த்தீபன் மிகவியப்புடன்.
வெள்ளையங்கிரி மெல்ல அந்த பணியை விபரிக்க ஆரம்பிக்கவும் பார்த்தீபனின் மனதில் கூட இந்த பணி அவ்வளவு எளிதானதல்ல என்ற எண்ணமே உருப்பெறவும் ஆரம்பித்தது.

பத்தொன்பதாவது அத்தியாயம் தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments