சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03

0
1927

ஜகதலப்ரதாபன்

மேல்வானில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த பொற்கதிரவன் தன் கதிர் கரங்களை மெல்ல அடக்கி அஸ்தமித்து விட்டிருந்தானாதலால், இருளாகிய கருநிறத்து அழகி தன்னையே போர்வையென இவ்வையமெங்கும் போர்த்திவிட்டிருந்த அந்த முன்னிரவு பொழுதில் ஒரு கையில் தன் புரவியை பிடித்துக்கொண்டும் தன் அருகில் வந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுடன் சம்பாஷித்துக்கொண்டும் நடந்த அந்த வாலிப வீரன் அந்த இளம்பெண் திடீரென தன் கைகளில் மறைத்து வைத்திருந்த அந்த ஓலையை எடுத்து நீட்டியதும் தன் இடை கச்சையை தடவி பரிசோதித்து விட்டு அந்த ஓலை தான் கொண்டுவந்திருந்த அதே ஓலை தான் என்பதை உணர்ந்தானாதலால் ஒரு கணம் திக்பிரமையுற்றவன் போல் அவ்விடத்திலேயே அசைவற்று நின்றவன் பின் அவளை நோக்கி “இது எப்படி” என்று ஏதோ கேட்க தொடங்கி முழுமையாக வினவாமல் இடை நிறுத்தி தடுமாறி நிற்கவும் அடுத்ததாக அவள் அந்த ஓலையை சுட்டிக்காட்டி “இது சாத்தியமில்லை” என்று திடமாகவே கூறியதால் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டிருந்த அந்த வாலிபன் அவளிடம் “எது சாத்தியமில்லை” என்று சற்று இரைந்து வினவவும் செய்தான். அதற்கு அவள் மீண்டும் சர்வசாதாரணமாய் “இந்த ஓலையில் உள்ள விடயம் தான்” என்று கூறியதும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து அடுத்து எந்த கேள்வியும் கேட்க நாவெழாமல் நின்ற அந்த வாலிபனின் உள்ளக்குறிப்பை உணர்ந்துவிட்டவள் போல அந்த இளம்பெண்ணே மெல்ல பதிலளிக்கவும் தொடங்கினாள்,

“இந்த ஓலையை நான் பிரித்து படிக்கவில்லை, ஆனால் இதன் மீது பொறிக்கப்பட்டுள்ள இந்த சேதுநந்தி முத்திரையின் அர்த்தம் என்ன என்பது எனக்கு நன்கு புரியும். இது சிங்கையாரிய சக்கரவர்த்திகளின் ராஜமுத்திரை ஆகவே நீங்கள் இளவரசர் சிங்கை பராராசசேகரரின் தூதுவனாக அல்லது ஒற்றனாக தான் இருக்க இயலும். அதனால் தான் நான் தங்களை பரிபூரணமாக நம்புகின்றேன். சிங்கை மன்னர்கள் மட்டுமல்ல அவர்களின் பணியாட்களும் கண்ணியமானவர்கள் தான் அந்த வகையில் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான தாங்கள் எவ்வகையில் கண்ணியமற்றவராக இருக்க இயலும்” என்று உறுதியான குரலில் கூறிய தேன்மொழி “இப்பொழுதாவது தாங்கள் யாரென கூற இயலுமா?” என்றாள் மிக மெல்லிய குரலில்.

அவளின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களை எல்லாம் முழுவதுமாய் விழுங்குவது போல் நோக்கிக்கொண்டிருந்த அந்த வாலிபன் இளவரசர் சிங்கை பரராசசேகரரின் பெயர் தற்சமயம் இந்த சிங்கைநகரின் பட்டி தொட்டி எங்கும் பரவியிருப்பதை இயலவே அறிந்திருந்ததமையால் அது குறித்து எவ்வித வியப்பையும் வெளிக்கு காட்டாமல்

“இளவரசர் சிங்கை பரராசசேகரின் உற்ற நண்பர், என் பெயர் பார்த்தீபன், தற்சமயம் இத்தனை தகவல்களை மட்டுமே என்னால் வெளியிட இயலும்” என்று கம்பீரமாய் கூறிமுடித்ததல்லாமல், அவள் அந்த ஓலையை குறித்து சாத்தியமில்லை என்று ஏன் கூறினாள் என்பதை அவன் இயலவே உணர்ந்து விட்டிருந்தானானாலும், அவளின் வாயினாலேயே அதை கேட்டறிய விரும்புபவன் போல் “ஆனால் ஏன் ‘இது சாத்தியமில்லை’ என்று கூறினீர்கள்” என்று சற்றே மெல்லிய ஆனால் உறுதியான குரலில் வினவினான்.

“இந்த ஓலையின் முன்புறத்தில் குறிக்கப்பெற்றுள்ள விலாசம், ‘வல்லிபுரம் வெள்ளையங்கிரியிற்கு’ என்று இருக்கின்றது”

“ஆம்” திட்டமாகவே வெளிவந்தது பார்த்தீபனின் குரல்.

“அப்படி என்றால் இந்த ஓலையை தாங்கள் சேர்ப்பிக்க இருப்பது வல்லிபுரம் வெள்ளையங்கிரி என்கின்ற நபரிடமாக தான் இருக்க வேண்டும்” என்று கூறி அவ்விடத்தில் சற்று நிறுத்தினாள் தேன்மொழி.

“அதற்கு” என்று சற்று இரைந்தே கேட்டான் பார்த்தீபன்.

“மன்னர் கனகசூரிய சிங்கையாரிய சக்கரவர்த்தியின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, நந்தி கொடி இறக்கப்பட்டு, சிங்கக்கொடி பறக்க ஆரம்பித்து பதினேழு ஆண்டுகள் கடந்து விட்டன, ஆனால் மன்னரின் புதல்வர்களான சிங்கை பரராசசேகரரும் சிங்கை செகராசசேகரரும் தற்சமயம் காளை பருவமெய்தி தம் ராசதானியை மீட்க பெரும் சைனியத்தை பாரததேசத்தில் அதுவும் மதுரையில் திரட்டிக் கொண்டிருப்பதாக, நாடெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது,” என்று சற்று இழுத்தாள் தேன்மொழி.

“ம் மேலே சொல்லுங்கள்” என்று சீறினான் பார்த்தீபன்.

“அதை விட தற்சமயம் வழக்கத்திற்கு அதிகமாகவே சிங்கைநகர் நெடுகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த தொண்டைமானாற்று முகத்திடல் தன் பழைய புகழை இழந்து விட்டிருந்தாலும் இவ்வழியாகவும் தனக்கான ஆபத்து வரலாம் என்றறிந்த விசயபாகு கடற்கரையில் காவலிட்டால் ஒருவேளை வருகின்ற ஆபத்து கடலுடன் திரும்பி விடவும், காவலர்களை கண்டு வழிமாற்றி நுழைந்துவிடவும் வழி இருப்பதால், தனக்கு வரும் ஆபத்தை உயிருடன் விடக்கூடாது என்கிற விசித்திர எண்ணத்தில் அந்த ஆபத்து உள்ளே நுழைந்ததும் அழித்து விடுவதற்கென துறையில் பாதுகாப்பில்லாதது போல வெளிப்படுத்தி காட்டி இங்கிருந்து நகருக்குள் நுழையும் அத்தனை வழிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதுடன் முகத்துவாரத்தில் ஒற்றர்களையும் நிறுத்தி வைத்திருக்கின்றான். தற்சமயம் புதியவர் ஒருவர் நகருக்குள் புகுந்து விட்ட சேதி விசயபாகுவின் காதுகளை எட்டியிருக்கும். அத்துடன்” என்று கூறி நிறுத்திய தேன்மொழியின் கண்களை மிகுந்த சிரத்தையுடன் நோக்கிக்கொண்டிருந்த பார்த்தீபன் “என்ன அத்துடன்” என்று சற்று வியப்பு கலந்த சந்தேக குரலிலேயே வினவினான்.

“அத்துடன் சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் அவர்களை விசாரணையின்றி சிறையில் தள்ளிவிடவும் தற்பொழுதுள்ள மன்னர் இயலவே உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். அதை விட இந்த மனிதர் சற்று விசித்திரமான பல சட்டங்களையும் இயற்றி விட்டிருக்கின்றார்” என்றாள் தேன் மொழி.

“என்ன விசித்திர சட்டம்” என்றான் பார்த்தீபன் சற்றே வியப்புடன்.

“சிங்கை நகரிலுள்ள தமிழர்கள் எவரும் தம் கலாசாரவிழுமியங்களை பின்பற்ற இயலாதாம், அத்துடன் சிங்களர்கள் போலவே உடுத்தவும் உண்ணவும் வேண்டுமாம்” என்று கூறிய தேன் மொழி பெருமூச்செறிந்தாள்.

“ஓகோ, அப்படியும் நடக்கிறதோ?” என்று கேட்டு பார்த்தீபனும் பெருமூச்சு விட்டதல்லாமல் “அதற்கும் இதிலுள்ள விடயம் சாத்தியமில்லை என்று தாங்கள் கூறியதற்கும்” என்றும் இழுத்தான்.

“சம்பந்தமிருக்கிறது, வல்லிபுரம் இங்கிருந்து முப்பத்திரெண்டு காதம் தொலைவிலுள்ளது” என்று கூறி சற்று நிறுத்திய தேன்மொழி அருகிலிருந்த மரத்தின் பேரில் சற்று சாய்ந்து நின்று பின் பார்த்தீபனின் கண்களை உற்று நோக்கி அவனின் கூரிய வேல் பார்வையுடன் தன் காந்த கண்களையும் கலந்தாள்.

“ஆம், அதற்கு” என்ற பார்த்தீபனின் குரல் உறுதியாகவே ஒலித்தது,

“அந்த முப்பத்திரெண்டு காததூர இடைவெளிக்குள்ளாகவே இருபது சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, தங்களை பார்க்கும் போதே வெளியூரை சேர்ந்தவர் என்பதும், அதுவும் தமிழன் என்பதும் நன்கு புலப்படுகிறது. தாங்கள் இந்த சோதனை சாவடிகளை தாண்டி வல்லிபுரத்தை அடைவதே குதிரைகொம்பாக உள்ள போது, இந்த ஓலையை வழங்குவதும் செயற்படுத்துவதும் மட்டும் எப்படி சாத்தியமாகும்?” என்றாள் தேன்மொழி சற்று வேதனை கலந்த சந்தேகக்குரலில்,

அவள் பேசிமுடிக்கும் வரை அவள் பேரிலிருந்து பார்வையை விலக்காமல் அவள் கூறிய ஒவ்வொரு விடயத்தையும் நன்கு உள்வாங்கிய பார்த்தீபன், தன் புரவியை விட்டு விலகி மெல்ல அவளை நெருங்கி வந்தான், அருகில் வந்து விட்ட அந்த வாலிபனின் கண்களில் பளிச்சிட்ட அந்த ஒளியை கண்ட தேன்மொழி “இவரை சாதாரணமாக எடை போட்டுவிட கூடாது, எக்காரியத்தையும் சாதிக்க கூடிய சக்தி இவரிடம் உள்ளது, அதற்கு இவரின் கண்களே சாட்சி” என மனதிற்குள் எண்ணினாளானாலும் அடுத்து அந்த வாலிபனின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் அவளின் அந்த எண்ணத்தையே மெய்ப்பூட்டி நின்றன. அந்த இளம்பெண்ணின் அருகில் வந்த பார்த்தீபன் “தாங்கள் கூறிய அத்தனையும் உண்மையே, தங்களை சந்தித்திராவிடில் நான் இந்த ஆபத்துகளை எதிர்கொள்ள வேறு வழிவகைகளை தேடி இருக்க வேண்டும்” என்று கூறிய பார்த்தீபன் அவள் கண்களில் தன் பார்வையை நிலை நிறுத்தி விட்டு தன் இடையில் இருந்த அந்த பொருளை எடுத்துக்காட்டி “ஆனால் இப்பொழுது இது எனக்கு உதவும்” என்றான் சர்வசாதாரணமாக. அந்த பொருளை கண்ட தேன்மொழி அமிதமான அதிர்ச்சியில் அசைவற்றுப்போய் கல்லென சமைந்தாளானாலும், “இவர் சாதாரணமானவரல்லர் ஜகதலப்ரதாபர் தான்” என்று மனதிற்குள் எண்ணியும் கொண்டாள். அதே கணத்தில் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பார்த்தீபனின் புரவி தன் முன்னங்கால்களை தூக்கி சற்று பலமாகவே கனைத்ததாகையால், அந்த கனைப்பினால் உண்டான சத்தத்தின் விளைவாய் அதிர்ச்சியில் நின்று நீங்கிய தேன்மொழி, “இது எப்படி தங்களிடம்” என்று ஏதோ கேட்க ஆரம்பித்து அதற்கு மேல் ஏதும் கேட்க நாவெழாமல் நிற்கவும் அவளின் உள்ளக்குறிப்பை உணர்ந்து பார்த்தீபனே மெல்ல பதிலளிக்கவும் தொடங்கினான். அவனின் பதில் அவளுக்கு பெரும் வியப்பை அளித்ததது மட்டுமல்லாமல், இதுவும் சாத்தியமாகுமா என்கின்ற ஐயத்தையும் தோற்றுவித்து நின்றது.

சிங்கை நகரத்து சிம்மாசனம் நான்காவது அத்தியாயம் தொடரும். 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments