செல்வி!

1
851
148373-9395945a

அந்த அரச மரத்திற்கு எப்போதும் பொழுது போகாமல் இருந்ததே இல்லை.  காரணம் அது, அவ்வப்போது விநோதமான விந்தை மனிதர்களைப் பார்த்து, தன் பொழுதைப் போக்கிக் கொள்ளும்!  ஊரின் நுழைவு வாயிலில் மிக கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது.  அதன் அடைக்கலத்தில் அங்கொரு டீக்கடையும் இருந்தது.  “முத்தையா டீக்கடை” மிகப் பிரபலம்!  உலகச் செய்திகள் முதல் ஊர்ச் செய்திகள் வரை அங்கேதான் காரசாரமான விமர்சனங்களும் விவாதங்களும் நடக்கும்.

ஊருக்கு வரும் பேருந்துகள் அங்கேதான் நிற்கும்.  காலை 9 மணி.  பட்டணத்தில் இருந்து ஒரு பிரைவேட் பேருந்து வந்து நின்றது.  வறுமை காரணமாக, பட்டியில் இருந்த இரண்டு வெள்ளாடுகளைப் பட்டணத்தில் விற்றுவிட்டு, எட்டாயிரத்து ஐந்நூறு ரூபாயை மஞ்சள் பையில் வைத்து, தன் கைகளில் இறுக்கமாகப் பிடித்தபடி, முருகேஷனும் அவன் மனைவி சரோஜாவும் இறங்கினர்.  அவர்களோடு சேர்ந்து அந்தப் பேருந்து நிறுத்துமிடத்தில் இன்னொரு புதிய வரவும் இறங்கியிருந்தது.

அந்த முகம் அங்கிருந்தவர்களுக்கு அறிமுகமில்லாமல் இருந்தது.  ஜீன்ஸ் பேண்ட், ரெட் கலர் டீ-சர்ட், தலைக்கு மேல் ஒரு கூலிங் கிளாஸ், ஆறடி உயரம், பளிச்சென்ற முகம்… இப்படி அவனுடைய தோற்றம் இருந்தது.  யாராக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள அந்த அரசமரமும் டீக்கடைத் தரப்பும் ஆவலோடு காத்திருந்தனர்.

“கேன் ஐ ஹவ் சம் வாட்டர்?” என்று கேட்டுக் கொண்டே முத்தையா டீக்கடையை நோக்கி அவன் கால்கள் நடந்தன.  அங்கிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மீண்டும் அதே கேள்வி அவன் நவீனத்துவமான குரலில் ஒலிக்கப்பட்டது.  பதிலேதும் டீக்கடைத் தரப்பில் இருந்து வரவில்லை… காரணம் அந்தக் கேள்வியும் கேட்கப்பட்ட மொழியும் அவர்களுக்குப் புரியவில்லை!

அந்த நேரத்தில் முருகேஷனின் மூத்த மகன் தமிழரசனும், இளைய மகள் கலைச்செல்வியும் பள்ளிச் சீருடையோடு, புத்தகப் பையை மாட்டிக் கொண்டு அங்கே வந்தனர்.  டீக்கடையைத் தாண்டியிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் அவர்கள் படிக்கின்றனர்.  ஏராளமான புத்தகங்கள் என்பதால் புத்தகப்பை போக, கூடுதலாக ஒரு கைப்பையிலும் சில புத்தகங்களை அவர்கள் வைத்திருந்தனர்.

ஏழ்மை அவர்களையும் விட்டுவைக்கவில்லை.  ஒட்டுப்போட்ட பள்ளிச் சீருடையும் தேய்ந்துப் போன அரசாங்கம் கொடுத்த காலணிகளும் புத்தகப்பையுடன் சேர்த்து சத்துணவு சாப்பிட ஒரு சாப்பாட்டுத் தட்டும்… பார்க்க பரிதாபமான நிலைதான்!  ஆனால் தமிழரசனின் கண்ணிலும் செல்வியின் கண்ணிலும் ஒரு பிரமாண்டமான பள்ளியில் மிக உயரிய படிப்பு படிப்பதைப் போன்ற ஒரு தேஜஸ் தெரிந்தது.

“அப்பா! நோட்டு வாங்கணும்னு சொன்னேன்ல… பணம் வாங்கிட்டு வந்தியா பா?” என்றாள் செல்வி.  “என் செல்விக்கண்ணு கேட்டு இல்லேன்னு சொல்லிருக்கேனா…!” என்று மஞ்சள் பையில் இருந்து நோட்டுக்கான பணத்தை எடுத்துக் கொடுத்து, மீதமான நோட்டுகளைப் பணப்பையிலே வைத்தார், முருகேசன்.  “காலேல அடுப்பாங்கர மேட்டுல நீத்தண்ணி வைச்சுருந்தேன்ல… ரெண்டு பேரும் சாப்டிங்களா?” என்றாள் சரோ.  “போ மா! கடிச்சுக்க உப்பு மொளகா கூட இல்ல! நானும் செல்வியும் சாப்டல!” என்றான் தமிழ்.

“கோவிச்சுகாத தமிழு! அப்பா இப்போதான காசு வாங்கி வந்துருக்கு? மதியத்துக்கு கறிகா வாங்கி, சோறு வடிச்சு வைக்குறேன்…” என்றாள் சரோ. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர் பெரிய வீட்டு முதலாளி “சோத்துக்கே சிங்கி அடிக்குதுங்க… இதுங்களுக்கு எதுக்கு படிப்பு? படிப்ப நிறுத்திட்டு நம்ம வயக்காட்டுக்கு அனுப்புனா நாலு காசு பணம் பாக்கலாம்” என்றார்.  இது அனுதாபத்தின் வெளிப்பாடு கிடையாது.  வெளியூர் ஆட்களை வேலைக்கு வைத்தால் கூலி அதிகமாகும்.  அதனைத் தவிர்க்க, இது போன்ற பெரிய இடத்து பிசாசுகள் தந்திரமாக யோசிக்கும் எண்ணத்தின் வெளிப்பாடே!

“படிக்க வைக்க சொல்லி மட்டும் ஒரு நாய்க்கும் வாய் வராது… எப்ப பாரு, படிப்ப நிறுத்த சொல்லி பேச மட்டும் வாய் கூசாது!” என்று சரோ சூடு கொடுத்தாள்.  அவள் அங்கே யாரையும் நம்பி பிழைப்பு நடத்தவில்லை.  தன் சொந்தக் குடும்பத்தின் வருமானத்தில், தன்மானத்தோடு வாழ்ந்து வருகிறாள்.  அவள் இப்படியான தரமான வார்த்தைகளை உதிர்க்க தகுதியானவள்!

அந்தச் சிவப்பு டீ-சர்ட் இன்னமும் தண்ணீர் கேட்டு நின்றுக் கொண்டிருந்தான்.  “வாட்ஸ் த ஹெல் கோயிங் ஆன் ஹியர்?  யூ, ஸ்டுபிட் பர்சன்ஸ், அன்எட்ஜுகேட்டட் மென்” என்று கத்தினான்.  அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அவன் பேசுவதை வினோதமாகவே பார்த்துக் கொண்டிருந்தனர்.

செல்விக்கு அந்த நபர் தன் கிராமத்து மக்களைத் திட்டி ஆங்கிலத்தில் பேசுவது புரிந்தது.  தன் பையிலிருந்த வாட்டர் பாட்டிலை அவனிடம் கொடுத்து, “டு யூ நோ தமிழ்?” என்றாள்.  “ஐ நோ லிட்டில் பிட் ஆஃப் தமிழ்” என்றான்.  “கேன் யூ அன்டர்ஸ்டண்ட் இஃப் ஐ டாக் இன் தமிழ்?” என்றாள்.  “ஓ ஐ கேன்!” என்றான்.

“முதலாவது கிராமத்து மக்களப் பத்தி தப்பா, மதிப்பு கொறைச்சலா யோசிக்குறத விடுங்க!  ஒரு மொழிய வைச்சு அல்லது ஒருத்தருடைய தோற்றத்த வைச்சு அவங்கள எப்படி எடை போட முடியும்?  சொல்லப் போனா உங்கள விட நாங்க அறிவாளியுங்கூட…  ஜெஸ்ட் மைன்ட் இட்!” என்று கூறி, அவள் அண்ணணோடு பள்ளி பக்கமாகத் தன் பாதங்களைத் திருப்பி, பயணத்தைத் தொடர்ந்தாள்.

செல்வியின் பேச்சுக்குப் பிறகே அங்கிருந்தவர்களுக்கு அவன் கூற வந்தது தெரிந்தது.  அத்தோடு ‘கல்வி’ என்ற மூன்றெழுத்து மந்திரம், செல்விக்கு வழங்கியிருந்த ‘அறிவு’ என்ற வரத்தையும் தெரிந்துக் கொண்டனர்.  பெரிய வீட்டு முதலாளி அவமானத்தால் அரைகுறையாக குடித்த டீ கிளாஸை, டேபிளில் வைத்து விட்டு அவசர அவசரமாக நடையைக் கட்டினார்.

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
MJ
MJ
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Wow super