நடுநிசி வேட்டை – அத்தியாயம் 05

0
505

பத்ரி உள்ளே வரும் போது சத்யாவின் முன்னால் இருந்த மேஜையில் அந்த ஒரு பக்கம் கடித்த ஆப்பிள் வெண்ணிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.  சத்யா தன்னுடைய லேப்டாப்பில் எதையோ துலாவிக் கொண்டிருந்தான். பத்ரி தான் கையில் கொண்டு வந்த கார் சாவியை கொக்கியில் மாட்டிவிட்டு சத்யாவை நோக்கி,

“என்ன சத்யா போன காரியம் என்னாச்சு?” என்றான்.

“சக்ஸஸ் பாஸ். புல் டீடெயில்ஸ் கறந்திட்டேன். மிஸ்டர்.கே.கே காலைல ஒன்பது மணிக்குலாம் டான்னு கடைக்கு வந்திடுவாரு. நைட்டு ஏழரை மணிக்குலாம் கடையை சாத்தீட்டுக் கிளம்பீடுவாரு. சைட்ல வேற பிஸினஸ் இருக்குங்கிற மாதிரிப் பேசிக்கிறாங்க சரியாத் தெரியல. குடிப்பழக்கம் லேசா உண்டு. சிகரெட் அடிக்கடி ஊதுவாரு. பொம்பளை சமாச்சாரம் இதுவரை சிக்கினதில்லை. ஆனா வேலை பார்க்கிற பொண்ணுங்கக் கூட கொஞ்சம் வழிஞ்சு வழிஞ்சு பேசுவாரு. கடவுள் பக்தி அதிகம். வருஷத்தில ஒரு தடவை எதாவது ஒரு கோவிலுக்குத் தலயாத்திரை போய்ட்டு வர்ரதுண்டு.”

“எப்படிடா யாரைப் புடிச்சு இவ்வளவு மேட்டர் கறந்த?”

“என்னோட பிரண்டு ஒருத்தி சுவர்ணானு அந்த கடையில ஒர்க் பண்றா பாஸ்”

“முன்னாடியே தெரிஞ்சு தான் போனியா?”

“இல்ல பாஸ் உள்ள போனதும் கண்ணில பட்டா, லேசா கொக்கியைப் போட்டேன். அவ அந்த கோ.கியை மேல கீழ ரைட்ல லெப்ட்லனு மொத்தமா பிரிச்சுப் பார்ட் பார்ட்டா கழட்டி ஆராய்ச்சிக்கட்டுரையா ரெடி பண்ணிக் குடுத்திட்டா”

“வெல் டன் சத்யா எதாவது நமக்கு பயன்படுற மாதிரி மேட்டர் கிடைச்சுதா”

 

 

 

 

“நாம எதிர்பாக்கிற மாதிரி ஏதும் கிடைக்கல பாஸ். ஆனா ஆளு அந்த விசயத்தில கொஞ்சம் வீக்னு தான் தோணுது.”

“எதை வைச்சு சொல்ற?”

“நான் சுவர்ணாக்கிட்ட பேசீட்டு உள்ள வந்தப்போ அந்த ஆளூ பாத்ரூம் போயிட்டாரு. லேசா உள்ள எட்டி பார்த்தப்போ..”

“ஏது பாத்ரூம்லயா?”

“இல்ல பாஸ் அவரோட ரூம்ல.”

“சரி சொல்லு”

“மேசைல கிடந்த பேப்பர், நடுப்பக்கம் சினிமா நியூஸ்ல கிளாமரான நடிகை போட்டோ மட்டும் மேல தெரியற மாதிரி மடிச்சு வைச்சிருந்தீச்சு.”

“ஆனா அதை வைச்சு மட்டும் கன்பார்ம் பண்ண முடியாதே.”

“நாளையில இருந்து ஒரு இஞ்ச் கூட இடைவெளி விடாம சதாசர்வகாலமும் அந்தாளை பாலோ பண்ணினோம்னா, உண்மையிலேயே அந்த கே.கே அப்பிடி இப்பிடினா கண்டிப்பா சிக்குவான்.”

“காலைல எத்தனை மணிக்குக் கடைக்கு வருவார்னு சொன்ன?”

“ஒன்பது மணிக்கு பாஸ்”

“அவங்க வீட்டில இருந்து கடைக்கு வர எத்தனை மணிநேரம் ஆகும்?.”

“ஒரு அரை மணிநேரம் போதும் பாஸ்”

 

 

 

 

இரவு நேரம் அந்தத் தனியான ஆளரவமற்ற பாதையில் மிதமான வேகத்தில் மிதந்து வந்து கொண்டிருந்த அந்த காரின் முன் பக்கக் கண்ணாடியில் டாக்டர் என்று எழுதிய புள்ளடி குறி பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. காரின் உள்ளே இளையராஜா பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த டாக்டர் தவமணிதாசனுக்கு வயது நாற்பது இருக்கலாம். தலை இலேசாக வெள்ளை கண்டிருந்தது. இசையின் சந்தத்திற்கு ஏற்ற வகையில் தலையை அசைத்த படி வாட்ஸ் ஆப்பில் மெசேஜ்களை கவனித்துக்கொண்டே மொபைலில் ஆழ்ந்திருந்தார். அவர் எதிர்பாரா வேளையில் திடீரென அந்த நிகழ்வு நடந்தேறியது. கையில் வைத்திருந்த மொபைல் கையில் இருந்து விலகி முன்சீட்டுக்குத் தாவியது. அதே வேகத்தில் காருடன் மொத்தமாக ஒரு பக்கமாக சரிவது போன்ற உணர்வு. சரிந்து கீழே விழுவதற்குள் கார் நிமிர்ந்தது. அடுத்த செக்கனே பயங்கரமான உதறல் ஒன்று உண்டாக டாக்டர் தவமணிதாசனின் தலை பின்னால் சென்று அதே வேகத்தில் முன்னால் வந்து படார் என்று. டிரைவர் சீட்டின் முதுகுப்பகுதியில் மோதியது.

கார் ஒரு தடவை இலேசாக சரிந்து நிமிர்ந்து சில அடிகள் தேய்த்து சென்று வீதி ஓரத்தில் நின்ற மின்கம்பத்தில் மோதி நின்றிருந்தது. தலையை உதறி கண்களை விரித்து கலங்கிய கண்களைத் தெளிவாக்கி தன் நெற்றியை கையினால் தேய்த்து தடவியபடியே முன் சீட்டில் கிடந்த டிரைவரைப் பார்த்தார். டிரைவர் இயலவே மூர்ச்சையாகி இருந்தான். தோள்பட்டையை உலுக்கிப்பார்த்தார் பூரணமயக்கம் தலையில் இரத்தகசிவு. எழுவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. சீட்டின் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த சீட் பெல்டையும் பார்த்தார். வழக்கம் போல் அவன் அன்றும் சீட் பெல்ட் போட மறந்திருந்தான். மனதிற்குள் டிரைவரை கரித்துக்கொட்டியபடியே யாரிடமாவது உதவி கேட்க எண்ணிக்கொண்டு வெளியில் வந்தார் டாக்டர் தவமணிதாசன்.

 

 

 

 

கீழே இறங்கி ஏதோ கண்காட்சி பொருளை சுற்றிப் பார்ப்பது போல் அடிபட்டு நின்ற தனது காரை ஒரு முறை சுற்றி வந்து, தன் பெரிய உடலின் இலவச இணைப்பான தொப்பையுடன் குனிய முடியாமல் காலை விரித்து குனிந்து குனிந்து ஆராய்ந்தார். வலது முன் பக்கத்து டயர் பரிபூரணமாய் தன் ஜீவனை இழந்து நசுங்கிக் கிடந்தது. அது வரை பல்லை காட்டிக்கொண்டிருந்த அந்த ஹெட்லைட்டின் முன்பற்கள் மின்கம்பத்தால் மோதப்பட்டு சிதறவிடப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து இடுப்பில் கைவைத்து பெருமூச்செறிந்தார். காரின் பின்புறம் வந்து ரோட்டில் ஏறினார். அப்பொழுது தான் அந்த பொருள் அவரின் கண்களில் பட்டது. நீளமான முட்களுடன் கூடிய ஒரு முட்கம்பி வீதியில் உல்லாசமாய் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தது. டாக்டரின் முகத்தில் ஏகப்பட்ட எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“எந்தப் பரதேசி இதை இங்க கொண்டுவந்து போட்டது” என்று திட்டியபடியே அதை காலினால் கரைக்குத் தட்டினார். அதேநேரம் கரகரப்பான பயங்கரமான குரலில்

“நான் தான் கொண்டு வந்து வைச்சேன் மிஸ்டர்.. ஸாரி டாக்டர் தவமணிதாசன்.” என்றபடி முழுவதுமாய் தன்னை மூடி மறைக்கும்படி ரெயின்கோட் அணிந்திருந்த அந்த மனிதன் ஒரு மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தான். டாக்டரின் முகத்தில் திகில். அவருடைய இதயத்துடிப்பின் சத்தம் ஸ்டெத்தஸ்கோப் இல்லாமலே அவரின் காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. கண்களை அகல விரித்தார்.

“நீ.. நீ..”

“ஆமா நானே தான் டாக்டர். நானே தான்.” முன்னால் நகர்ந்து டாக்டரை அணுகினான்.

“ஆ…” டாக்டரின் தலையில் ஒரு கட்டை பலமாக தாக்கியது. மயங்கி சரிந்த டாக்டரை தாங்கி பிடித்த அந்த மனிதன் அவரை தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். அரைமயக்கத்தில் கிடந்த அவரின் காதுகளில் அவனின் குரல் இலேசாக விழுந்தது.

“எல்லாமே முடிஞ்சு போச்சுனு நினைச்சீங்களா? எதுவுமே முடியல. உங்க எல்லாரையுமே கொல்லாம நான் விடப்போறதில்ல.” அடுத்து பயங்கரமாக ஒரு சிரிப்பு சப்தம் அது அடங்கியதும், அதே குரல் மிக மெல்லியதாக அவரின் காதுக்கு மிக அருகில் மூச்சுக்காற்று புறச்செவியை தீண்ட முணுமுணுப்பது போல் ஒலித்தது.

“இதோட முடியப்போறதில்ல!!”

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments