மக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா?

0
1451

அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது.

துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு ‘குசு தாக்குதல்’ (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது.

சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?

அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார்.

இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.

உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது.

அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது.

நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் ‘ஏப்பம்’ என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் ‘குசு’ என்றும் அழைக்கிறோம்.

உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்:

  • கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது.
  • சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு.

  • கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன.

எப்போது வயிற்று வலி ஏற்படும்?

பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும்.

இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா?

சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்?

பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம்.

நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது.

பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.

இது கவலைக்குரியதா?

நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம்.

இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும்.

பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, ‘ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.’

பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார்.

ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது.

வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி?

உணவு முறையில் மாற்றம்

மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும்.

உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும்.

உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.

நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள்

  • சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும்.
  • உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
  • சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம்.
  • நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன.
  • புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.

மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது.

ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது.

எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்:

  • வலி
  • தலைசுற்றல்
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு

மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம்.

ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே…

மூலம் (Source) : BBC News தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments