“மலடியின் தாலாட்டு”

0
1276

மகவே
என் கரு தரிக்கா
மடி தவழா
மனதில் மட்டும்
வளரும் மகவே
என் கர்ப்பப்பை உனக்கு
சௌகர்யம்தருவதில்லை என்பதாலா
என் உதிரம் உனக்கு
மாசுபடிந்ததாய் மாறி விட்டது

தினமும்
புடவை மடிப்புகளில்
மேடிடா வயிற்றை
ஆசை கொண்டு பலமுறை
அடிக்கடி தடவுகிறேன்
என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்
வேண்டியதை செய்யாமலே
போய்விடுமோ என்ற பயம்
நெஞ்சுக்கூட்டில் எனக்கு
நித்தம் கொல்கிறதே

போடும் ஒப்பனைகளை
முத்தங்களால்
அழித்திட நீ இல்லை
அடுக்கியிருக்கும் அறையை
அங்கும் இங்குமாய்
கலைத்திட நீ இல்லை
என் சாயலில் உன் மூக்கு
காது மட்டும் உன் தந்தை ஜாடை என
பேருக்கு ஒன்று சொல்லி
திருஷ்டி கழிக்க
கண்மை சுழிக்க நீ இல்லை

என் கனவுகளை சுமந்திட
தந்தை பாரம் தாங்கிட என
எதுவித எதிர்பார்ப்புமின்றி
அன்பு மட்டும் சுமந்து
என் கண்ணே
என் செல்லமே என்று கொஞ்சிட நீ இல்லை

எங்கும் நிறைந்திருக்கும்
என் இறைவனிடம்
இல்லறத்தின் பரிசாய்
இல்லாமல் நீ போனாலும்
பெண்மையின் பிச்சையாய்
நீ வந்து சேர்ந்திடவே
வேண்டாத நாளில்லை

மறுகி மறுகி
மனம்
இறுகிப் போய்விட்டது
தூளி தொட்டில் என நெஞ்சம் தவிக்கிறது
பட்டு நகை எல்லாம் தூரப்போய் விட்டது
தேங்கிய ஆசை எல்லாம்
உன் தேகம் தொடத் துடிக்கிறது
பொன்னே! அமுதே!
என் கண்கள் பணிக்கிறது
உன் பிஞ்சு விரல் கேட்டு என்
நெஞ்சம் நித்தம் கனக்கிறது

ஆசை எல்லாம் ஒன்றுதான்
என் ஏக்கங்கள்
கனவுகள்
கண்ணீர்
இளமை என
காதோரத்து நரைகள்
என் கருப்பை களவாடுமுன்னே
இந்தத் தரிசு வயிற்றில் ஒரு முறையேனும்
தரித்திட நீ வா என் செல்லமே

முந்தைய கட்டுரைபக்கரு
அடுத்த கட்டுரைஒரு துளி புன்னகை….!!
தாழினி
நான் ஒரு சாதாரணமாக கனவு காணக் கூடிய பெண். சில கனவுகளை வரி வடிவம் கொடுத்து எப்போதாவது கதைகளாகவும் கவிதைகளாகவும் செதுக்குவேன். கதை எழுதுவதில் அதிக விருப்பம். ஆனால் நேரம் ஒத்துழைக்காததால் சில வரிகளை கவிதை என்ற பெயரில் கிறுக்குவேன். அவ்வாறு என் படைப்புக்களை படைத்திட இப்போது நீர்மை வலைத்தளத்தில் இணைகிறேன். எப்போதும் வாசகர்களின் சாதக, பாதக கருத்துக்களை கேட்பதில் ஆர்வமாக உள்ளேன். அதுவே என் எழுத்துக்களை மேம்படுத்த என்னை மென்மேலும் எழுத தூண்டும் என நம்புகிறேன்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments