ஆளில்லா விமானமும் ஆட்லெறி எறிகணையும்
அங்குமிங்கும் உலவி வந்து உயிர்தனை உறிஞ்சிட
ஒரு கையில் உடைமையும் மறு கையில் உறவொன்றும்
தன்னுயிரை பிடிக்க கரமின்றி உடல் இளைக்க ஓடி
ஒய்யாரமாய் இருந்தோரும் ஓலை வீட்டிலிருந்தோரும்
ஒரு சேர இணைந்தார்கள் சாதி மத உறவின்றி
தட்டு வீட்டானும், தாழ் வீட்டானும் தகர
மாளிகையில் தயக்கமின்றி தஞ்சத்தில்
வெயில் வெக்கையிலும் மழை ஒழுகலிலும் அவர்
மாற்ற வாழ்க்கை வாழ்ந்து வர மகிழ்ச்சி ஒன்று குறை போல
தாங்கி தண்ணீர் உடல் தாகம் தீர்க்கும்
தன் உள்ளத்தாகம் எது வந்து தீர்க்கும்
வெண்ணிலவொளி பொன் மேனியில் பொட்டென விழ
யன்னல் என்று அமைந்ததோ தகர ஓட்டை
நீ முதல் அறியா முகங்களும் முடக்கி விட்ட ஏக்கப்
பார்வைகளும் நிதர்சனமாய் நின்று விட
தனித் தனி முகவரிகள் ஒரு முகவரியாய் மாறியதென்ன?
குழந்தையின் குதூகலிப்பும் கிழவனின் குக்கலும்
புதுராகம் என ஒலித்ததோ புதினமாய் இங்கு
அவல இழப்பும் அவலக் குரல்களும் தான்
இங்கு கண்ணெதிர்க் காட்சியோ அது காண
அனர்த்தங்களின் சீற்றத்திற்கும் அயல்
நாட்டின் பகைமை வெறிக்கும் எதிர் நீச்சலாய்
உன்னைக் காத்திட அன்பாய் அணைத்திடுதே
அகதி முகாம்………………..