அண்ணை

0
637

“அம்மா அம்மா,

செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”.

படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி,

“அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”

“அக்கா பின்னுக்கு நிக்கிறா போல, நான் கூட்டியாறன்”. செழியன் ஓடினான்.

சமையலுக்கு அடுப்பெரிக்க சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்த தமக்கையை பாத்த உடன கத்தினான்,

“அக்கா, ஓடியா, வீடு வீடா ஆமி செக்பண்ணிக்கொண்டு வாறாங்களாம், அம்மா உன்னை உள்ளுக்க வரட்டாம், எல்லாரும் ஒண்டா நிப்பமாம்”.

“என்னது, செக்கிங்ஓ? ஐயையோ, நாங்கள் துலையப்போறம்”, என்று சொல்லிக்கொண்டு முன்னுக்கு ஓடினாள் வான்மதி, செழியனும் பின்னாலையே ஓடினான்.

பன்னிரண்டு வயதே ஆனா செழியனுக்கு ஆமி வாறதும் செக்கிங் எண்டதும் ஒரு குதூகலத்தையும் சந்தோஷத்தையும் மட்டுமே தோற்றுவித்திருந்தது. துவக்குகள், ஆயுதங்களோடு ஆமி வீடு வீடா வாறதும், இளம் பெடியள் பெட்டையளை வரிசையா கூட்டி போறதும், ஆமட்கார்ல முகமூடி வாறதும், புதினம் பாக்கிற சந்தோசம் மட்டுமே அவனுக்கு.

ஓடிப்போன வான்மதி வெளி விறாந்தையில இருந்த சின்ன அலுமாரியை திறந்து உள்ளுக்க இருந்த காட்போர்ட் பெட்டி, உரப்பை எல்லாத்தையும் வெளியில இழுத்து போட்டாள். சத்தம் கேட்டு வெளியில வந்த தாய்,

“என்ன மேனை செய்யிறாய், ஆமி வாறாங்களாம், இந்த நேரத்தில உதுக்கை என்ன தேடுற”.

“என்னம்மா, உங்களுக்கு நினைவில்லையே, அந்த அண்ணை இதுக்கை தானே ஏதோ சாமான் வச்சு வச்சு எடுக்கிறவர், இப்ப இவங்கள் வந்து அதுகளை பாத்தா எங்களை தானே பிடிச்சு கொண்டு போவாங்கள்”.

“அதுக்கு நீ இப்ப என்ன செய்ய போறாய் மேனை, அந்த பிள்ளை என்னத்தை வச்சிருக்கோ தெரியேல்லை”

“முதல்ல என்ன இருக்கெண்டு பாப்பம்”

“சரி, சரி, கெதியா பார்”

செழியனும் உதவி செய்ய, வான்மதி என்ன என்ன சாமான் இருக்கெண்டு பாத்தாள், திலீபன் அண்ணாண்ட பொக்கட்கலண்டர் அளவு படங்களும், வீரச்சாவடைஞ்ச இயக்க பெடியலின்ர நினைவாஞ்சலி நோட்டீஸுகளும் கட்டுக்கட்டா கிடந்திது.

“பிள்ளை உவங்கள் சிங்கள ஆமிக்காரருக்கு உதுகள் வாசிச்சு விளங்காது தானே, பேசாம காட்போர்ட் பெட்டி, உரப்பை எல்லாத்தையும் மூடி, கட்டி உள்ளுக்கு வச்சிவிடுவம்.”

“என்னம்மா நீங்கள் கதைக்கிறீங்க, அவங்களுக்கு பாத்த உடனே விளங்கீடும், இதெல்லாம் என்ன எண்டு, யார் வச்சிருப்பாங்க இங்க எண்டு,”

“சரி, இப்ப என்ன செய்யிறது, அவங்கள் வந்திட போறாங்கள்”

“தம்பி, எல்லாத்தையும் தூக்கு, காணிக்க குப்பையலோட போட்டு எரிச்சு விடுவம், அவங்கள் வாறதுக்கு முன்னம் செய்வம்”

என்று சொல்லிக்கொண்டு தம்பியையும் துணைக்கு கூப்பிட்டபடி வான்மதி காட்போர்ட் பெட்டியை தூக்கிக்கொண்டு விறுவிறு என்று பின்புறமாக காணியை நோக்கி நடந்தாள், செழியனும் இருந்த உரப்பையலை குப்பை போடுற இடத்துக்கு ஒவ்வொண்டா, தூக்கேலாம தூக்கிக்கொண்டு போனான்.

“கவனம் பிள்ளையள், நான் முன்னுக்கு பாத்து கொள்ளிறன், கெதியா எரிச்சிட்டு வாங்கோ”, தாய் படலையை பாத்தபடி நிண்டா.

செழியனும் வான்மதியும் எல்லாத்தையும் குப்பையலோடு போட்டு அவசர அவசரமா எரிச்சார்கள்.

எரியுங்கோ எண்டு சொல்லி பிள்ளையளை அனுப்பினாலும் தாய்க்கு படபடப்பு நிக்கேல்லை. படலைக்கும் வீட்டுக்குமா நெஞ்சிடிக்க நடந்து கொண்டிருந்தா,

“ஆமி வந்திடுவாங்களோ, பிள்ளையள் கெதியா எரிச்சி போட்டு வந்திடோணும்” எண்டு கடவுளை வேண்டினபடி.

வான்மதி தடியாலை கிண்டி கிண்டி ஒரு படம், நோடீஸ் மிச்சமில்லாம எல்லாத்தையும் எரிச்சு போட்டு தம்பியையும் கூட்டிக்கொண்டு கைகால் கழுவிப்போட்டு முன்னுக்கு வந்தாள்.

பிள்ளையளை கண்ட பிறகு தான் தாய்க்கு கொஞ்சம் பதட்டம் குறைஞ்ச மாதிரி இருந்திது.

“பிள்ளையள், ஒருத்தரோடையும் ஒண்டும் கதைச்சு போடாதேங்கோ, சரியே”.

“ஓம் அம்மா, ஒருத்தருக்கும் ஒண்டும் சொல்லமாட்டம், நான் படலையடியிலை போய் பாக்கவே, ஒழுங்கையில சனம் போனா “ஆமி இப்ப எங்க வருது” எண்டு கேக்கலாம்”, செழியன் தாயை கேட்டான்.

“கவனம், ஒருத்தரும் இல்லாட்டி ஓடியந்திடு, தனியா நிக்க கூடாது, என்ன?”.

“சரி அம்மா” என்று சொன்னபடி பெரிய வீரனை போல நெஞ்சை நிமித்திக்கொண்டு படலையடியில போய் மெல்ல எட்டிப்பார்த்தான். ஒழுங்கையில ஓரிரெண்டு பேர் வந்து போய் கொண்டிருந்தார்கள்.

ஒழுங்கை தொங்கல்ல இருக்கிற ராசையா அண்ணை சையிக்கிள்லை வந்துகொண்டிருந்தார், செழியன் மெதுவா படலையை திறந்து அவரை பாத்து,

“மாமா, ஆமி எவடத்திலை வாறாங்கள், ஏதாவது கேள்விப்பட்டனியலே?”

அதை கேட்ட உடனே ராசையா சத்தமா சிரிச்சு கொண்டு,

“டேய் செழியா, அவங்கள் கொட்டியாவை தான் தேடுறாங்கள், குட்டியாவை இல்லை, உன்னை கொண்டு போகமாட்டாங்கள், நீ பயப்பிடாதை” என்றார்.

“பகிடிபண்ணாம சொல்லுங்கோ மாமா, அம்மா தான் கேட்டுக்கொண்டு வர சொன்னவ, எனக்கொண்டும் ஆமிக்கு பயமில்லை” எண்டு கொஞ்சம் கோவத்துடனேயே செழியன் சொன்னான்.

“இல்லையடா, அவங்கள் வேற எங்கையோ மூவ் பண்ணிறாங்களாம், செக்கிங் இல்லையாம்.”

“சரி மாமா” செழியன் உள்ளே ஓடினான், தாயிடமும் தமக்கையிடமும் சொல்ல.

“அம்மா, இண்டைக்கு செக்கிங் இல்லையாம், அவர்கள் வேற எங்கையோ மூவ் பண்ணிறாங்களாம்”

அதை கேட்ட உடன தாயின்ர முகத்தில செக்கிங் இல்லை என்ற நிம்மதிக்கு மேலாலை கொஞ்சம் கவலை தெரிஞ்சிது, ஒரு சின்ன பெருமூச்சு விட்டபடி,

“பாவம், அந்த தம்பியின்ர நோட்டீஸ் எல்லாத்தையும் எரிச்சு போட்டம்” கவலையோடு கூறினா.

“அதுக்கு என்னம்மா செய்யிறது, அந்த அண்ணை வரட்டும், சொல்லி விளங்கப்படுத்துவம்”, வான்மதி சொல்லிக்கொண்டே குசினியை நோக்கி போனாள்.

செழியனும் பட்டம் கட்ட மூங்கிலை சீவ தொடங்கினான்.

ரெண்டு நாட்களுக்கு பிறகு படலையை திறக்கிற சத்தம் கேட்டு செழியன் எட்டிப்பாத்தான், அந்த அண்ணன் வந்து கொண்டிருந்தார்.

உடனே ஓடிப்போய், “அண்ணா, ஆமி வாறாங்கள் எண்டு உங்கட நோடீஸ் எல்லாத்தையும் எரிச்சு போட்டம்”

“என்ன தம்பி சொல்லிறியள், ஏன் எரிச்சனீங்கள், எங்கையாவது ஒளிச்சு வச்சிருக்கலாமே” என்று சொன்னபடி பதட்டத்துடன் அலுமாரியை திறந்தார்.

வெறுமையாக இருந்த அலுமாரியை பாத்ததும் அவரது முகம் முழுவதுமாக வெளிறிப்போனது.

ஒன்றும் பேசாமல் மெதுவாக எழும்பி படலையை நோக்கி நடந்தார், இதற்கிடையில் வான்மதி தாயிடம் விஷயத்தை கூறி, இருவருமாக வெளியே வந்திருந்தார்கள்,

“தம்பி, குறை நினைச்சுப்போடாத, கொஞ்சம் பயந்திட்டம், அது தான்…” என இழுத்தார்.

“அப்பிடி ஒண்டும் இல்லையம்மா, கஷ்டப்பட்டு அச்சடிச்ச நோட்டீஸுகள், உடன திருப்ப அடிக்கவும் ஏலா, என்ர பொறுப்பில தந்திருந்தவை, பொறுப்பாளர் பேசப்போறார்.”

“பொறுப்பாளரோட நான் வந்து கதைக்கவே தம்பி”

“வேண்டாம் அம்மா, நான் பாத்து கொல்லிறன்”

“தம்பி, இதுக்காக வராம விட்டிடாதை, வழமை போல வந்து போ, சாமான் வச்சு எடுக்கிறேண்டாலும் வச்சு எடு, என்ன?”

“நன்றி அம்மா, நான் வாறன்” தலையை குனிந்த படி படலையை நோக்கி நடந்தார்.

செழியனின் தாய் ஏதோ நினைவு வர,

“தம்பி, உம்மட பேர் என்ன, கேக்க மறந்திட்டன்?”

“நான் கரிகாலன் அம்மா”.

நாட்களும் ஓடிச்சு, ரெண்டு மூண்டு நாள் கழிஞ்சு பின்னேர நேரம் குண்டு சத்தங்களும், துவக்கு சூட்டு சத்தங்களும் கொஞ்ச நேரம் கேட்டுது.

“ஓராங்கட்டை சந்தியில ஆமியை மறிச்சு பெடியள் அடிச்சவங்களாம், ஆமிக்கு கன சேதமாம், பெடியள்ளையும் ஒரு வீரச்சாவாம்”

றோட்டில கதைச்சவை எண்டு பக்கத்து வீட்டு புவனம் மாமி அம்மாட்ட சொல்லிக்கொண்டிருந்தா.

அண்டைக்கு சனிக்கிழமை, பின்னேரம் செழியன் வகுப்பால வந்து கொண்டிருந்தான், வீட்டு படலையடியில ஒரு அண்ண நிண்டு கொண்டிருந்தார்,

சாரம் கட்டிக்கொண்டு அவர் நிண்ட விதத்திலையே செழியனுக்கு விளங்கீட்டுது, அவர் ஆரா இருக்கும் எண்டு.

துள்ளி துள்ளி ஓடி படலையை துறந்து,

“உள்ள வாங்கோ அண்ணா” எண்டு சொல்லிக்கொண்டு வீட்டுக்குள்ளை ஓடினான்,

“அம்மா, அண்ணா ஒராள் வந்திருக்கிறார்”, குசினிக்குள்ள நிண்ட தாயிடம் மெதுவாக சொன்னான்.

வெளியே வந்த தாய்,

“வாரும் தம்பி, என்ன விஷயம்?”

“இல்லையம்மா, சாமான் கொஞ்சம் வச்சு எடுக்கோணும், அதுதான் வந்தனான்”

“சரி தம்பி, முந்தி வேற தம்பி எல்லோ வாறவர் “,

திரும்பி கதவருகில் நின்ற வான்மதியை பார்த்து,

“பிள்ளை, என்ன பேர் அந்த தம்பிக்கு, நினைவு வருதில்லை”

“அவர் கரிகாலன் அண்ணா”, செழியன் முந்தியடிச்சு சொன்னான்.

“ஓம் ஓம், கரிகாலன், அந்த தம்பி வரேல்லையோ?”

” இல்லையம்மா, அவர் …” இழுத்தான்.

“ஏன், வேற இடத்துக்கு மாத்தீட்டினமே?”

“இல்லையம்மா, அண்டைக்கு ஓராங்கட்டையில நடந்த அடிபாட்டில அவர் வீரச்சாவு அடைஞ்சிட்டார்”

“ஐயோ” என கத்தியபடி தாய் இடிந்து போய் சுவரோடு சரிந்து தொப் என நிலத்தில இருந்தா, ஓடிவந்து தாயை தாங்கிய வான்மதியிண்ட கண்கள் குளமாகி அழுகையை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டாள்.

பாய்ந்து ஓடிவந்த செழியன் தாயை அணைத்தபடி கேவிக் கேவி அழத்தொடங்கினான்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments