நாம் யாரும்
மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது
கிடையாது…
இலகுவில் ஏறி மிதித்து
தகர்த்து விட்டுச்சென்றிருப்போம்
எனினும்,
எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம்
அவ்வளவு சிறியதாய்
தோன்றியது கிடையாது
மண் துணிக்கை கொண்டு
அமைத்த புற்றாயினும்
எறும்புகளின் கண்களுக்கு
என்றுமே மாளிகைதான்…
அவற்றின் உள்ளங்களில்
யாராலும் அசைத்திட முடியாத
கரும் பாறைகளாலான குகையாக
இருந்திருக்கும்
இருந்தாலும்
எமது கண்களுக்கு
காற்றுக்கு எழுந்து
பறக்கும் புழுதி மாத்திரம்தான்…
அதை நொடியில் உடைத்துவிட்டு
சென்றிருந்தாலும்
எவரும் எறும்பிடம் மன்னிப்பு
கேட்டது கிடையாது
எமது கண்களுக்கு
எவ்வாறு தோன்றுகிறதோ
அதன் அளவு
அவ்வளவுதான்…
இங்கு அடுத்தவரின் நிலையை
கருத்திற் கொண்டு
வாழ்ந்தவர் யாருமில்லை!