அத்திக்காயா, மலரா?

1
819
fig fruit

 

 

 

 

உயிரினங்கள் ஒன்றையொன்று பல காரணங்களுக்காக பல விதமாய் சார்ந்திருக்கும்.  இரண்டு உயிரினங்களின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பது  பகிர்வாழ்வு (Mutualism) எனப்படும்.   அவ்வகையில் அத்திப் பழமும், (fig fruit) அத்திப்பழத்து வண்டும் (fig wasp) மிகக் குறிப்பிடத் தக்கது. 

அத்தி என்பது ( Ficus carica)  மோரேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. நாட்டு அத்தி,( COUNTRY FIG) வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (CLUSTER FIG) என பலவகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. காய்கள்  நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக்கொத்தாக சிறிது பச்சை நிறத்துடன்  காய்த்து, பழுத்து வெளிறி மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து  விடும்.  

இவை பெருமளவாக வெப்பவலயப் பகுதிகளிலும், சிறிய அளவில் மிக வெப்பமான பகுதியிலும் வளர்கிறது.

அத்திக்காய் என்பது பிற தாவரங்களைப்போல்    மலரிலிருந்து காயாக வளர்வதில்லை.  இதில் காய் என்பதே  உள்பக்கமாய்  வளர்ந்த பூக்களின் சதைப்பற்றான தொகுப்பு. ஆங்கிலத்தில் இதற்கு  syconium என்று பெயர். அதில் ஆண் பூக்களும்,  பெண்பூக்களும் உண்டு.  சைகோனியத்தில் இயற்கையாக இருக்கும் ஒரு துவாரம் வழியாக பெண் அத்திப்பூச்சி (fig wasp)   பூவுக்குள் நுழைந்து தன் முட்டைகளை இடும். முட்டையிடுகையில்  வேறு அத்திக்காயிலிருந்து எடுத்து வந்த மகரந்தத்தால், இந்தப் பூவில் மகரந்தச் சேர்க்கை நடத்தும்.

முட்டையிட்டு முடித்தபின் அந்தப் பூவிலேயே அத்திப்பூச்சி இறந்து விடும். முட்டைகள் பொரிந்து புழுக்களாய் மாறுகையில் அத்தி‌விதையைச் சுற்றி இருக்கும் சதைப்பற்றான பாகத்தை உண்டு வளரும். உள்ளிருக்கும் ஆண்பூச்சிகள் பெண்பூச்சிகளுடன் இணைந்து அவை கருவுற்றதும், ஆண்பூக்களிலிருந்து மகரந்தத்தைச் சேகரித்து வழியைக் குடைந்து  வெளிவரும். வெளிஉலகையே காணாத  ஆண் அத்திப்பூச்சிகள் சதைப்பற்றான காய்போன்ற அமைப்பினுள்ளேயே பிறந்து பெண்பூச்சிகளை கருவுறச்செய்தபின்னர் அங்கேயே மடிந்தும் விடுகின்றன. மகரந்தம் கொண்ட பெண்பூச்சிகள் வெளிவந்து  முட்டையிடும் பொருட்டு இன்னொரு அத்திக்காயைத் தேடிப் பறக்கும்‌.

அத்திப்பூச்சிகள் மிகமிகச் சிறியவை. வெளிவராமல் உள்ளேயே  இருந்துவிடும் பூச்சிகளை  அத்திக்காய்க்குள் சுரக்கும் ficini என்னும் நொதி   சிதைத்து  புரதமாக மாற்றிவிடும்.  

அத்திப்பழத்தில் புரோட்டீன், சர்க்கரைச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து  ஆகியவை மற்ற பழங்களைவிட  நாலு மடங்கு அதிகமாகவும்.  வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் உள்ளது.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நாஞ்சில் ஹமீது
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அத்தி பழம் பற்றி தெரியாத தகவல்கள் நிறைய இன்று தெரிந்து கொண்டேன் .நன்றி .