அந்த ஏழு நாட்கள்!!

0
1043
British doctor taking senior man's blood pressure in surgery room having a check up

“அய்யோ வயிறு நோகுதே… தல சுத்துது… 5 நாளா டொய்லெட் போகல்ல… மூச்செடுக்க ஏலாம இருக்கு… என்னய அட்மிட் பண்ணுங்க.. அட்மிட் பண்ணுங்க”..
இப்பிடி கத்திய நிலையில் தான் அவரை முதல் தடவை பார்த்தேன்!
அப்போது காலை 10மணி இருக்கும்!

வழமையா கடுமையான வலியோட வரும் நோயாளிகள், ஏதாவது மருந்து தருமாறு கத்துவார்களே ஒழிய, அட்மிட் பண்ணுமாறு கூறமாட்டார்கள்! அப்பவே ஆறுமுகம் அலார்ட் ஆயிருந்தான்னா, இந்த சம்பவமே நடந்திருக்காது!

அவரை பரிசோதனை செய்தோம்!
எல்லாம் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன.. வலது புறம் வயிறு நோகுது என்றவர், இடது புறம் வயிற்றை அழுத்தும்போது கத்தினார்!
காய்ச்சல் என்றார், டெம்பரேச்சர் நோர்மலாக இருந்தது!! இப்பிடி பல…
எல்லாம் முடிந்து அட்மிட் பண்ணினோம்!

அதன் பின் அவர் நன்றாக தான் இருந்தார்! டொக்டர்ஸ் கிட்டப் போகும்போது மட்டும் அவருக்கு கடுமையான வயிற்று வலி வந்து விடும்!
யாருடனும் பேச மாட்டார், யாரும் அவரைப் பார்க்க வருவதுமில்லை!

ஒருநாள் பக்கத்து கட்டிலில் இருந்த ஒரு நோயாளியை பார்க்க வந்திருந்த சிறு குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். பார்க்க பாவமாக இருக்கவே, அருகில் சென்று சும்மா பேச்சுக் கொடுத்தேன்!
அவர் தற்போது ஒரு வயோதிபர் மடத்தில் இருக்கிறார் என்றும், மனைவி இறந்துவிட்டார், பிள்ளைகள் கவனிப்பதில்லை என்றும் கூறினார்!
அப்போது இரவு நேரம்! நாங்கள் காலையில் ஃபோர்மல் உடையிலும், இரவில் casual உடையிலும் போவது வழக்கம்!

என்னைப் பார்த்து, ” டொக்டர், நீங்க தமிழா” என்று கேட்டார்.நானும் ஓம் என்றேன். ” உங்கள போலயே ஒரு சிங்கள டொக்டர் காலையில சேர்ட், டை எல்லாம் கட்டி வருவார்.. உங்கட சொந்தமா” என்று கேட்டாரே… அதுவரைக்கும் முதல் வசனம் பேசிய உடனேயே பேஷண்ட்ஸ் நான் தமிழ் என்று கண்டுபிடித்து விடுவார்கள், முதன்முதலாய் ஒருவர் நமது “சிங்களப் புலமையை” ஒத்துக்கொண்டிருக்கிறாரே என்ற மகிழ்ச்சியுடன், ” அதுவும் நாந்தான் ” என்று புளகாங்கிதத்துடன் கூறினேன்!
அன்றிலிருந்து அவர் என் நண்பராகிப் போனார்!
எனினும் அவரது முறைப்பாடுகள் தான் முடியவில்லை!

அவர் வந்ததிலிருந்து ஏழாவது நாள்!
அவரது எல்லா முறைப்பாடுகளும் முற்றுப்பெற்றன!
எல்லா வலிகளும் அடங்கி விட்டன!!
காய்ச்சல் இல்லை.. தலையிடி இல்லை.. வயிற்று வலி இல்லை..!!

ஆம்..!! அவர் இறந்து விட்டார்….

அப்பிடியெண்டு முடிப்பன் எண்டு நினைச்சீங்களா.. ஏமாந்துட்டீங்களே!!
அவர் 200% உயிரோட தான் இருந்தார்!
உண்மையிலேயே அவரது எல்லா வலிகளும் நின்று விட்டன!

அதன் பின் டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பும் போது ” எப்பிடி திடீரெண்டு சுகமாகுன நீங்க” என்று கேட்டேன்!
கிழவர் பலே ஆசாமி! யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்டு விட்டு,
” டொக்டர் நான் முதியோருக்கான உதவிப்பணம் எடுக்கிற நான்.., ஏழு நாள் ஆஸ்பத்திரில இருந்தா மேலதிக பணம் கிடைக்கும்! இப்பிடி நாலைஞ்சி தரம் வேற வேற ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி காசு எடுத்திருக்கன். இங்க இதான் முதல் தரம்” என்று ஒரு வில்லச் சிரிப்பு சிரித்து விட்டு சென்றார்!!

இப்பிடிக் கூட நம்மள யூஸ் பண்றாய்ங்களே என்று கடுப்பாவதா, இல்லை ஒரு 80 வயது முதியவரை நோயாளியாக்கி, பணம் பெறவைத்த சமூகத்தை எண்ணி வேதனைப்படுவதா என்று தெரியாமல் அடுத்த பேஷண்டைப் பார்க்கச் சென்றேன்!
வேறென்ன செய்ய!..!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments