அமலபர்ணி – Rheum Nobile

0
1042

 

 

 

 

உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை   3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும்  2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில்  மட்டும் உள்ள தாவரங்கள் 45,000 (7.8%).  இவற்றில் 33% தாவரங்கள் இந்தியாவில் பூர்வீகமாக உள்ளவை. இதில் 15,000 பூக்கும் தாவர இனங்களாகும். இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் அரிய தாவரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இமாலய பகுதி உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கச்செறிவு உள்ள பகுதிகள் உலகிலேயே மொத்தம் 34 தான் உள்ளது

உலகின் பூங்கா என்றழைக்கப்படும் இந்தியாவெங்கிலுமே மருத்துவத் தாவரங்கள்  செழித்துக்காணப்படுகின்றது. பல்வேறு நாட்டுப்புற மருந்துகளும்,பாரம்பரிய சிகிச்சை முறைகளும்  மிகப் பரவலாக புழக்கத்தில் உள்ள இந்தியாவில் மிகத்தொன்மையான காலந்தொட்டே அரிய மருத்துவக்குணங்கள் உள்ள தாவரங்கள் இமாலயத்தில் வளர்கின்றன.

 

 

 

 

 

பனிசூழ்ந்த என்று பொருள் கொண்ட ’’இமாச்சல’ பகுதி, உலகின் மொத்த தாவர இனங்களின் 10 சதவீதத்தையும் இந்தியாவின் 50 % தாவரங்களையும் கொண்டது. வடகிழக்கு இமாலய பகுதி தாவர சிற்றினங்களின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது.  இமயத்திலிருக்கும் அரிய தாவரங்களிலொன்றான அமலபர்ணி / ஏகாவீரா எனும் பெயரகளில் அழைக்கப்படும் Rheum nobile பனிமூடிய சிகரங்களின் உச்சியில் சுமார் 50,000அடி உயரத்தில் மிக அதிக புற ஊதாகக்திர்வீச்சும் பனிப்பொழிவுமாக இருக்கும் சூழலில் வளரும் ஒரு மருத்துவத்தாவரமாகும். பிரகாசமான தந்த நிறத்தில் கூம்புவடிவ கோபுரம்போல வளர்ந்திருக்கும் 2 லிருந்து 6 அடி வரை   வளரும் இத்தாவரம் பளபளப்பான இலைகளை கொண்டது.

 இமயமலையிலும், ஆஃப்கானிஸ்தான், திபெத், பூட்டான், பாகிஸ்தான், சிக்கிம் . சீனா மற்றும் மியான்மரில் உயரமான இடங்களில் மட்டும் இத்தாவரங்கள் காணப்படுகின்றன. சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் நகரத்தில் 14,000 அடி உயரத்தில் வளர்ந்திருந்த இத்தாவரத்தின் விசேஷமான வாழிடம், தோற்றம் மற்றும் பண்புகள் குறித்த  முதல் ஆய்வுக்கட்டுரை 1855ல் தாவரவியலாளர்கள் ஹூக்கர் மற்றூம் தாமஸ் ஆகியோரால் எழுதி வெளியிடபட்டது. 

சிவந்த இலைக்காம்பும் நரம்புகளும் கொண்ட, வட்ட வடிவில் அமைந்திருக்கும் இலைகளும் அவற்றின் மீது உயரமாக  கூம்பு வடிவில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியதுபோல தடிமனான  இலைச்செதில்களும் அமைந்திருக்கும் சிக்கிம் ருபர்ப் என அழைக்கப்படும் இந்த மருத்துவத்தாவரத்தின் நுனியில் மட்டும் இலைச்செதில்களின் விளிம்புகள் இளஞ்சிவப்பிலிருக்கும்.நுண்ணிய பசும்மலர்க்கொத்துக்கள் இலைச்செதில்களின் உள்ளிருக்கும்.

இச்செடி அசாதாரணசூழலில் வாழும் பொருட்டான பல தகவமைப்புக்களை கொண்டிருக்கிறது. வரிசையாக ஒன்றின் மீதொன்று படிந்திருக்கும் இலைச்செதில் (bracts) அமைப்புக்களினுள்ளே மலர்களையும் கனிகளையும் பொதிந்து வைத்து உறைபனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்,  Quercetin flavonoids என்னும் வேதிப்பொருளின் உதவியால் புறஊதாக்கதிர்களை வடிகட்டி, ஒளியை தனக்குள்ளே கடத்தும் அரிய தகவமைப்புக்கொண்ட இந்த தாவரம் இமயத்தின் பல அற்புதங்களில் ஒன்றாகும்.

 பாலிகோனேசியே குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரத்தின் வேர்கள் உட்பகுதி அடர் மஞ்சளாக, முழங்கை  தடிமனில் 7 அடிஆழம் வரை சென்றிருக்கும்.’’சுக்கா’’ என்றழைக்கப்படும் மெல்லிய அமிலச்சுவையுடன் இருக்கும் இதன் தண்டுகளை உள்ளூர் வாசிகள் உணவாக உட்கொள்ளுகின்றனர். மூங்கில்களைப்போல் உட்புறம் காலியாக இருக்கும் தண்டுகளுக்குள் துல்லிய இனிய சுவையான நீரிருக்கும்

ஜூன்-ஜூலை மதங்களில், மலர்கள் மலர்ந்த பிறகு  தனித்தனியே பிரிந்து ஆழ்ந்த சிவப்பு நிறமாகிவிடும் இலைச்செதில்கள், கனிகள் முதிர்ந்தபின்னர் உதிர்ந்துவிடும். அடர் காபிக்கொட்டை நிறத்தில் கொத்துக்கொத்தாக பழங்கள் இலைகளற்ற தண்டுகளில் அழகாக தொங்கிக்கொண்டிருக்கும்.  இவை ஒருமுறை பூத்துக்காய்த்த பின்னர் அழிந்துவிடும் monocarpic வகையை சேர்ந்தவை. பல மைல் தொலைவிலிருந்தும் இவை உயரத்தில் வளர்ந்திருக்கும் அழகை காணமுடியும்

ஒளியை வடிகட்டி தேவையான ஒளியை மட்டும் தனக்குள்ளே ஊடுருவிச்செல்ல அனுமதித்து இலைச்செதில்களின் உட்புறம் மிதமான வெப்பத்துடன் இருப்பதால், இத்தாவரம் ’’ glasshouse plant ’’ என்றும் அழைக்கப்படுகிறது .

 

 

 

 

 

இருபாலின மலர்களில் காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும்.  கனிகள் ஆகஸ்ட் செப்டம்பரில் முதிர்ந்து விடும்.  பனிப்பொழிவு மிகுந்த வாழிடமாதலால் மகரந்தசேர்க்கைக்கு தேவையான பூச்சிகளும் இங்கு மிகக்குறைவு அதற்கு தேவையான தகவமைப்பையும் கொண்டிருக்கும் இச்செடியின் 93 % மலர்களில் மகரந்ச்சேர்க்கை நடந்து விடுகின்றதென்பதும் அதிசயமே! Bradysia என்னும்  சிறிய பறக்கும் பூச்சி இனங்கள் இச்செடியின் இலைச்செதிலுக்குள்ளிருக்கும் வெப்பத்தில் தங்களது முட்டைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, இந்த உதவிக்கு மாற்றாக  இச்செடியின் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றது. இந்த  இரு உயிரினங்களும் பரஸ்பரம் உதவியாக இருந்து தொடர்ந்து இப்பகிர்வாழ்வில் இருந்து வருவதும் அதிசயமே. இப்பூசிகளை கவரும் வேதிப்பொருட்களை இச்செடி சுரந்து காற்றில் பரப்புகின்றது.

தாவரபாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் ஜீரணத்தை தூண்டவும் குடற்புழுக்களை நீக்கவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் சேர்ந்திருக்கும் அசுத்த நீரை வெளியேற்றவும் வீக்கங்களை வடியச்செய்து குணமாக்கவும் இவை அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதன் மருத்துவ குணங்களுக்கு இவற்றிலுள்ள Rutin, quercetin 3-O-rutinoside, Guaijaverin, quercetin 3-O-arabinoside, Hyperin, quercetin 3-O-galactoside, Isoquercitrin, quercetin 3-O-glucoside,, quercetin 7-O-glycoside, quercetin , kaempferol glycoside& feruloyl ester ஆகிய வேதிப்பொருட்களே  காரணமாக இருக்கின்றன. டாகா (‘taga’)என அழைக்கபடும் இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயத்தில், அந்தப்பகுதி மக்கள் கம்பளிகளுக்கு சாயமேற்றுகிறார்கள்.

இப்படியான அசாதாரண வாழிடங்களில், அத்தனை உயரத்தில் வளரும் பல தாவரங்கள் பாறைகளின் பின்னே மறைந்தும் தரையோடு தரையாக பரவி வளர்ந்தும், சிற்றிலைகளை மட்டும் உருவாக்கியும், அங்கிருக்கும் மிகக்குறைந்த வெப்பம், கடும் பனிப்பொழிவு மற்றும் அதிக புறஊதா கதிர்வீச்சு ஆகிவற்றிலிருந்து தப்பிக்கும் ஆனால் அமலபர்ணி அப்படியல்ல,  தௌந்த தகவமைப்புக்களுடன் நிமிர்ந்து பெரிய முறம்போன்ற இலைச்செதில்களுடன், சிறு கோபுரம்போல எழுந்து  6அடி வரை வளர்ந்து கம்பீரமாக மனிமலையின் உச்சியில்  நிற்கிறது.

இந்த தாவரத்தை பொது ஊடகங்களில் சிலர் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும்  அதிசய மகாமேரு என்று  உண்மைக்கு புறம்பான செய்தியை பலஆண்டுகளாக  புகைப்படத்துடன் பகிர்ந்தவாறே இருக்கிறார்கள். இது  அரியதுதான், இயற்கையின்  அதிசயங்களிலொன்றுதான் ஆனால் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் தாவரமல்ல, வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரம்தான். நூற்றுக்கணக்கான் வருடங்களுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரமேதும் இப்புவியில் இல்லை.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments