‘அம்மா….
உன் கருவறை இளவரசி
உன்னுடன்
ஒரு சில நேரம்
உரை பேச
ஆவல் கொண்டிருக்கிறேன்…
உணர்ந்தேன் அம்மா…
உன் கர்ப்பப்பை
வாசம் அத்தனையும்
பாசம் என்று…
என் தவம் செய்தேன்…?
உன் அறை
நான் வசிக்க….
ஈரைந்து மாதம்
எனை சுமக்க
ஒருகாலும்
சுளிக்கவில்லையே
உன் முகம்…
மயக்கம் மறந்து
வாந்தி வாடையுடன்
எனக்காய்
மட்டும்
பாடுபடுபவளே…
எனை
பெற்றெடுக்கும் போரை
எளிதாய் ஏற்ற
வீரமகளே….
சுமையெல்லாம்
அடக்கி
சுகத்தை மட்டும்
வெளித் தெறித்து,
நான் வரும் நாள்
உனக்கு வலியாய்
இருப்பினும்
வசந்தமாய் ஏற்க
காத்திருப்பவளே…
தாய்மை அத்தனை
வலிமையா?
உன் தியாகம்
அறிந்தும்
உதைப்பவள்
நான்…
அதை ஆனந்தமாய்
ஏற்பவள் நீ…
மூடிய என் விழியும்
திரவத்தினுள்
என் உடலும்
என்றொரு நாள்
வெளிவரும்…
உலகத்துக்காயல்ல
உனக்காய் மட்டும்…
உன் சுமை
சுமக்காவிடினும்
உன்னை எச்சுமையும்
சுமக்க விடாமல்
பார்த்து கொள்ள…
எனக்காய் வாழும்
உனக்காய்
நான் வாழ…
காத்திரு அம்மா!
நான் வருகிறேன்
உனக்காய் மட்டும்’
….
விழித்தெழுந்தேன்
கண்ணீருடன்
காதோரம் தென்றலொடு
கரையோதிங்கிய
என் கருவொலி கேட்டு…
கனவா? கற்பனையா?
அரை மனதுடன்
ஆயத்தமானேன்
மறுபடியும் தூங்க…
அந்தவொலி கேட்க…