பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளே
என்ன பெத்தவளே உன் பெருமையின்னும்
ஒத்தவரி எழுதலையே
…………………
பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்
எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்
இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோ
என்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது
……………………..
சாவி-வயதான இருபத்தொன்னில் என்னைப் பெத்து
உன் சாவு வரும்வரை எனைத்தாங்கி முடித்தவளே
ஒம் பேரு மீனாவ என் பொண்ணுக்கும் வச்சவுடன்
ஏண்டா கிறுக்கா இதையெல்லாம் செஞ்சுப்புட்ட
……………………
அவ இங்கிலிசு பேசப்போறா – என் பேரு சரிவருமா
என்று நீ சொன்னபோது நானுந்தான் நடுங்கிப்போனேன்
…………………
ஆனாலும் உன்பேத்தி- எங்கெங்கும் இந்நாளில்
சைவத் தமிழ்பத்தி தைரியமா இங்கிலிசில்
தரணியெங்கும் பேசும்போது
முறத்தால் புலிவெரட்டும் உன் குலப்பெருமை தெரிக்கின்றது.
………………………
பன்னெண்டு முடிந்தெனக்கு பதின்மூணு தொடங்கும் அன்று
அத்தனை பெண்களையும் இனி அம்மானு அழைடா என்று
என் அரும்பு மீசை குறும்புக்கு ஒரு ஆப்பு அடித்தவளே
……………………
அந்த ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தி ரெண்டாம் ஆண்டு
அம்மாக்கள் ஆயிரங்கள் ஆயிரம் பல்லாயிரங்கள்
அடுக்கடுக்காய் பிறந்தார்கள் , அன்பினைப் பொழிந்தார்கள்.
………….
(இன்றெனக்கு )
பெத்தவளும் அம்மாதான் , எனக்குப் பொறந்தவளும் அம்மாதான்
அக்காவும் அம்மாதான் , அத்தையும் அம்மாதான்
மாமியும் அம்மாதான் , என் மருமகளும் அம்மாதான்
………………….
எஜமானியும் அம்மாதான் – எடுபிடியும் அம்மாதான்
சிநேகிதியும் அம்மாதான் , மாணவியும் அம்மாதான்
என் பாட்டிகளும் அம்மாதான் பேத்திகளும் அம்மாதான்
தங்கச்சியும் அம்மாதான் – தாரம் அவளும் அம்மாதான்