அலி

0
1362
என்றைக்குமில்லாமல் நீண்ட மௌனத்தில் இருந்தான் அலி.அவனை இப்படி இதற்கு முன்னால் கண்டிராத பானுவிற்கு அவனின் நடத்தை மெல்லிய நெருடலைத் தந்தது.
 
அறையில் மஞ்சள் நிறத்தில் இரண்டு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன.ஏசியின் குளிரில் அந்த இரவு மிக மந்தாரமாக இருந்தது.
 
உதடுகள் இலேசாக நடுங்கியது பானுவிற்கு.பானு தனக்குள் இந்த இரவு பற்றிய ஆயிரம் கற்பனையில் இருந்தாள்.அவள் பிடரிகள் வெப்பத்தில் துடித்துக் கொண்டிருந்தன.கழுத்து நரம்புகளில் விறுவிறுக்கும் உணர்வுகள் விரைவாக  எழுந்தன.கால்களில் தேசிக்காயும்,தேயிலைச் சாயமும் கலந்து பூசிய மருதாணி செக்கச் சிவந்திருந்தது.
 
“அலி”
 
அவள் பேடைப் பறவை போல அவனை அழைத்தாள்.
 
“அலி இங்க பாருங்க”
 
அவன் தான் எல்லாமுமாகியவன் என்ற மிதப்பில் அவள் இதயம் தாங்கிய நெஞ்சுக்கூடு  புடைத்திருந்ததால் கனத்திருந்த பெரிய கற்கள் பதித்த மாலை கொஞ்சம் மேலேறி இருந்தது.
 
“அலி என்ன அமைதியாரிக்கீங்க…ஏதாச்சும் செல்லுங்க”
 
அலி அவளை திரும்பிப்பார்க்காது ஜன்னலைத் திறந்து ஓய்ந்து போயிருக்கும் தெருக்களை நோட்டமிட்டான்.அவை மிக அழகான பாம்புகள் ஊர்வது போல இருந்தன.
 
பானுவிற்கு அலியின் அமைதி பிடிக்கவில்லை.முடிந்தவரை சத்தங்களை எழுப்பினாள்.வளையல்களை குலுக்கினாள்.கண்ணாடிக்கு முன் சென்று தன்னுடைய மணி பதித்த மாலையை சரி செய்தாள்.மல்லிகை வாசனை நிரம்பிய அத்தர்குப்பியை திறந்து உள்ளங்கையில் தடவி இரண்டு இடுப்புப்பகுதி ஆடைகளுக்கும் பூசினாள்.
பிறகு சாய்வு நாற்காலியில் போய் அமர்ந்தபடி கால்களை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தாள்.
 
அலி அவளிடம் வந்தான்.தரையில் அமர்ந்து அவளின் மடிமீது கைகளை ஊன்றி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
 
நீல நிறத்து உடல் அவளுக்கு.நீல நிறக் கண்கள் அவளுக்கு.அவள் நீலத்துக்குச் சொந்தமாளவள் போலவும்,இலேசாக பறப்பது போலவும் இருந்தாள்.அலியின் முகத்தருகே தன் முகத்தினைக் கொண்டு வந்தாள்.அவளின் நெற்றியில் அணிந்திருந்த நெற்றிக்கல் அவன் முன் முடிகளில் சிக்கியது.
 
“என்ன இவளவு அமைதியா இருக்கீங்க”
 
அவன் விரக்தியுடன் அவள் மடிமீது தலை சாய்த்தான்.அவன் உடல் கொதித்தது. குழந்தையைப் போல அவளின் தாவணியை வாயில் புதைத்தபடி விம்மினான்.
 
பானு உருகிப் போனாள்.அலியின் இந்த செயலால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள்.அவளை பார்க்க அவளுக்கே அருவருப்பாக தெரிந்தது.
 
“என்ன நடந்த என் அலி”
 
அவள் கரங்களால் அவன் தோள்பட்டையை நீவி விட்டாள்.ஆறுதல் படுத்தினாள்.
 
நள்ளிரவாகிக் கொண்டிருந்தது.அலியின் செய்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.அவன் ஏதோவொரு விடயத்தை பற்றி சிந்தனையில் இருக்கிறான்.பானு அதிருப்தி அடைந்தவளாய் அலியின் தோள்களில் இருந்து கைகளை விலக்கினாள்.நீண்ட பிரயாணத்தின் பின் அலியை இப்படிச் சந்திப்பேன் என அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
 
“இப்ப சொல்லப் போறியா இல்லையா”
 
அவள் கரகரப்பான குரலில் கேட்டாள்.அவன் தன்னை தயார்படுத்துவதாக அவளுக்குத் தெரிந்தது.அவள் தன் கைகளால் கவிழ்ந்திருக்கும் அலியின் முகத்தினை தூக்கிப் பார்த்தாள்.அவனின் எலும்புகள் சூடாகியிருந்தன.
 
“உம்மாக்குச் சுகமில்லையா”
 
“இல்ல அதெல்லாம் இல்ல”
 
“அப்ப என்ன பிரச்சின”
 
அவன்  பெரிய கதையைச் சொல்லப்போகிறவன் போல எழுந்து போய் கட்டிலில் அமர்ந்தான்.
 
“வாப்படம்மா மௌத்தாகிட்டாங்க”
 
பானுவிற்கு கலக்கம் தொற்றிக் கொண்டது.
 
ஆனாலும் அலி தன் தகப்பனின் தாயின் மரணத்தைப் பற்றி பெரிதாக கவலை கொள்வதாக தெரியவில்லை.அதையும் மீறிய ஏதோவொன்று அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது..
 
கட்டிலில் இருந்து எழுந்தான்.அவன் கால்கள் நாட்டியக்காரனின் ஆர்வத்தில் வேகமாக இருந்தன.
 
பானுவின் அலுமாரியைத் திறந்து மிக அழகான கைப்பைகள் இருந்த பெட்டியை வெறிகொண்ட புலியைப் போல கலைத்துப் போட்டான்.
 
“சிவப்பு வாப்படம்மாக்கு புடிக்காது” என்றபடி சிவப்பும் வெள்ளையும் கலந்திருந்த கைப்பையை வீசி எறிந்தான்.
 
பச்சையில் பளபளப்பான மணிகள் இல்லை,கறுப்பில் சொல்லமுடியாத ஏதோ குறைபாடு இருக்கிறது என்றபடி ஒவ்வொன்றாக விசிறி எறிந்தான்.
 
பானுவின் முகம் சிவந்தது.கூந்தல் காற்றில் அலை பாய்ந்தன.நிலத்தின் அத்தனை சத்துக்களையும் தன்னுள் உறிஞ்சியவள் போல எழுந்தாள்.
 
“உனக்கென்ன மண்ட குழம்பிட்டா”
 
என்றபடி கைப்பைகள் ஒவ்வொன்றையும் விறுவிறுவென்று அடுக்கினாள் பானு.
அலியின் கைகளில் நடுக்கம் தென்பட்டது. அலி தன்னை ஒரு வலிமையில்லாத ஆணாக காண்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
பானுவை இழுத்து அவள் காது மடல்களை கைகளால் வருடத்தொடங்கினான்.அவனின் விரல்களின் குளிர்ச்சியில் பானு உறைந்து போனாள்.கொதித்தாள்.
பிறகு அவளைத் தள்ளிவிட்டு விரைவாக வெளியே கிளம்பினான்.
 
“அலி”
 
அரைமயக்கத்தில் பானு கூப்பிட்டது அவனுக்கு வெகு நேரத்திற்கு பிறகு கேட்டது போல் இருந்தது.பிரதான வீதிக்கு வந்து நின்றான்.அநேகமாக எல்லா கடைகளும் மூடியிருந்தன.சில கடைகளின் கதவுகள் சாத்துவதற்கு தயாராக வெளியில் எடுத்து வைக்கப்பட்டிருந்தன.
 
அவனுக்கு அவசரமாக  சாம்பல் நிறத்து மணிப்பேர்ஸ் வாங்க வேண்டும்.வாப்படம்மா மௌத்தாகுவதற்கு முன் மிக ஆசையாக அவனிடம் கேட்டது அது மட்டும் தான்.இப்போதும் அவள் கேட்டுக்கொண்டே இருப்பதாகத்தான் அவன் எண்ணினான்.
திறந்திருக்கும் ஒவ்வொரு கடையாக நோட்டமிட்டான்.அநேகமாக உணவுச் சாலைகளாகவே அவை இருந்தன.
 
ஒரேயொரு கைப்பை விற்கும் கடை மட்டும் திறந்திருந்தது.கண்ணாடிக் கதவிற்குள் பளபளப்பான துணிகளால் அவை தைக்கப்பட்டிருப்பது விளங்கியது.கடையில் போடப்பட்டிருக்கும் வெளிச்ச விளக்கில் அவை மின்னிக் கொண்டிருந்தன.
 
திடுதிடுவென கடைக்குள் நுழைந்தான்.சாம்பல் நிற கைப்பை தான் வாப்படம்மாக்கு பிடிக்கும்.அப்படித்தான் ஒரு மெல்லிய குரல் அவனை நன்றாக குழப்பிக் கொண்டிருந்தது.தள்ளிப் போ என எச்சரிக்கை செய்வது அவனை மற்றவர் முன் பைத்தியக்காரனாக காண்பிக்கும் என்ற நினைப்பில் அந்த குரலை பொருட்படுத்தாமல் இருந்தான்.
 
வியர்வையும்,கறைகளும் படிந்த ஆடையுடன் அலியைக் கண்ட கடைக்காரனுக்கு மிக அருவருப்பான உணர்வு எழுந்திருக்க வேண்டும். உயர்ரக ஆடை அணிந்திருந்த பெண்ணுடன் மிக அழகாக பேசி வியாபாரம் செய்தவன் அலியை அசூசையுடன் பார்த்தான்.
 
“என்ன வேணும்”
 
“சாம்பல் பேர்ஸ்”
 
ஐநூறிற்கு சதம் குறையாது என்றான்.
அலி தன் சட்டைப்பையை பார்த்தான்.பணப்பையை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டான்.அலியின் கண்களுக்கு ஐநூறு பெரும் காசாக இல்லை.ஆனாலும் அவனுக்கு அந்த இடத்தை விட்டுச் செல்வது மிகச் சிரமமாக இருந்தது.அது வாப்படம்மாவிற்குச் செய்யும் துரோகம் என்றிருந்தது.
 
“காச நாளக்கி தரட்டா”
 
“அதானே பாத்தன்.கண்ட கண்ட நாய்க்கெல்லாம் இங்க சாமான் வாங்க ஆசயா” 
 
அலி சிறுபிள்ளை போல நடந்து கொண்டான்.கடைக்காரனின் கால்களை பிடித்தபடி கெஞ்சினான்,இரைஞ்சினான்.கோபமேறிய கடைக்காரன் தன் விலைகூடிய தோல் செருப்பணிந்த காலால் அவனை உதைத்தான்.இரண்டாம் அடியினால் அலியின் முகத்தின் இடது பக்க கன்னம் வீங்கியது.அலியை வெளியே தள்ளி கதவடைத்தான்.பின்னர் அலியை நோக்கி “களிசறை” என்றான். வசைகளை உதிர்த்தான்.பின்னர் கிளம்பிப்போனான்.
 
மழை இலேசாக தூற ஆரம்பித்திருந்தது.பகலின் அத்தனை வெயிலும் மெதுவாக சில்லிட ஆரம்பித்திருந்தது.தன்னுடைய இடது சட்டைப் பொக்கட்டினுள் கையை விட்டு துழாவினான் அலி.மடங்கிப்போன சிகரெட் ஒன்று மீதமாக இருந்தது.அதை கையிலெடுத்து இலேசாக நிமிர்த்தி வாயில் வைத்துக்கொண்டான்.லைட்டரை எடுத்து சிகரெட்டை பற்ற வைத்தபடி அவன் தன்னுடைய வாப்படம்மாவினை நினைத்து ஏதேதோ உளறத் தொடங்கினான்.
 
“ஒரு சாம்பல் நிறப் பையொன்றிருந்தது.
அது நட்சத்திரத்தை விட மிகத் தொலைவில் இருந்தது.
அதன் விலையை விட மனிதனின் கருணை எண்ணிக்கையில் மிகக் குறைவு தான்..”
 
பிறகு அந்த கைப்பை கடைக்கு எதிராக  அமர்ந்தான்.இரவு முழுக்க அந்த வீதியால் பஸ்கள்,கார்கள்,செல்வந்தர்கள், பெரிய மோட்டார் சைக்கிள்கள் என ஆயிரம் விடயங்கள் அவனைக் கடந்து சென்றன.எல்லோரிடமும் அவன்  கைப்பையின் விலைக்காக இரைஞ்சினான்.சிலர் அவனை  எரிச்சலுடன் கடந்தனர்.சிலர் அவன் தப்பான வேலைக்கான ஆள் என முகம் சுளித்தனர்.போடிநடையாக நடந்து போனவர்கள் அவனைக் கண்டதும் தெருவின் மாற்றுப் பாதையால் செல்லத்  தொடங்கினார்கள்.
 
நேரம் செல்லச்செல்ல அலிக்கு கண்ணாடியூடாக  தெரிந்த சாம்பல் கைப்பை வாப்படம்மாவைப் போல மாறத் தொடங்கியது.வாப்படம்மா எப்படி கடைசி நேரத்தில் மூச்சு இழுத்தாளோ அதேபோல அந்த சாம்பல் பையும் துடிக்க ஆரம்பித்தது.கடைக்கு அருகே ஓடிச்சென்றான்.பித்துப் பிடித்தவன் போல கடையின் கண்ணாடிக்கதவுகளை தடவிக் கொடுத்தபடி “கத்தாத வாப்படம்மா உசிர பூவப்போல வச்சிக்க. சரியாப்போகும்” என்றபடி இருந்தான்.அந்த நேரத்தில் உலகமே துயரத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டான்.
 
மேலுமொரு  ஈனமான அரை மணித்தியாலங்களை கடக்க வேண்டி இருந்தது.அந்த கதவின் படிக்கட்டில் அமர்ந்தான்.வாப்படம்மாவின் மரணத்தின் முன்னரான கடைசி விருப்பம் அவனை இத்தனை தூரம் பலவீனப்படுத்தி விட்டது.
 
விடிவதற்கு சிறிது நேரமிருக்கையில் அந்த இரவுக்கான கடைசிப்பேருந்து அவனை கடந்து சிறிய தூரத்தில் நிறுத்தப்பட்டது.அவன் மீண்டும் கைகளை சேர்த்தபடி அந்த தரிப்பிடம் நோக்கி நகர்ந்தான்.ஒருத்தி  இறங்கினாள்.அவனுக்கு தெரிந்தவள் தான்.ஏன் அவளை ஊருக்கே தெரியும் என்றிருந்தது.கணவனை இழந்தவள் பகலில் எங்கேயோ சென்று விடியற்காலையில் வருவது அவள் வழக்கம் என்பதால் மிக கேடுகெட்டவள் என்று அவள் அவனுக்கு பானுவால் அறிமுகப்படுத்தப்பட்டாள்.நண்பர்களால் அவளை இலகுவாக நெருங்கமுடியும் எனச் சொல்லப்பட்டாள்.
 
அவளை அடையாளம் கண்டு கொண்டதும் திரும்பி வந்துவிட்டான்.
 
“எஸ்க்கியூஸ்மி”
 
பூனை மெதுவாக கத்துவது போல் இருந்தது அவள் குரல்.கண்கள் அகன்று இருந்தன.சமூகத்தின் கட்டுப்பாட்டுக்கு உடன்படாத பெண் என்பதை அவள் முகம் உணர்த்தியது…
 
“உதவி செய்யனுமா”
 
“இழிந்த பிறவிகள்ட்ட நான் உதவி கேக்குறல்ல” என்றான்.அவள் பேசுவது கூட அவனுக்கு வெறுப்பாக அமைந்தது.
 
அவன் மீண்டும் கதவருகே வந்து உட்கார்ந்தான்.அவள் தன்னுடைய பைகளை எடுத்தபடி அவனுக்கு எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தாள்.பின் அவனைத்திரும்பி பார்த்துவிட்டு அவனருகே வந்தாள்.பக்கத்தில் ஐநூறு ரூபா நோட்டை வைத்துவிட்டு தன்பாட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள்.இரவில் அவள் இறங்கும் நேரமெல்லாம் யாரோ ஒருவருக்கு அப்படித்தான் செய்கிறாள்.
 
 ரூபா நோட்டை விடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் அலி.இதனை என்னவென்பது என்பதில் அவனுக்கு குழப்பமிருந்தது.கடைக்காரன் காலையில் திரும்பி கடை திறக்க வந்தான்.அலி தன் கையில் ஐநூறு ரூபா நோட்டோடு இருப்பதைக் கண்டதும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.கடையைத் திறக்க சென்றவன் அலியைக் கண்டதும் தடுமாற்றமடைந்தான்.அலி அவனை நோக்கி அந்த ஐநூறு ரூபாய் தாளினை வெகு மரியாதையாக காண்பித்து விட்டு தன்பாட்டில்
நடக்க ஆரம்பித்தான்.
 
பானு கோபத்துடன் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து இஞ்சித்தேநீர் குடித்துக் கொண்டிருந்தாள்.வீங்கிய முகத்துடன் வரும் அலியைப் பார்த்து  பதறிப்போய்  ஓடினாள்.இறுகப்பற்றிக்கொண்டு அவன் கன்னத்தை தன் கன்னத்தால் ஒத்தடம் செய்தாள்.
 
“மிக பரிசுத்தமான இதயத்தை கண்டிருக்கிறியா பானு”
 
பானு கண்களை குவித்தாள்.
 
“நான் கண்டனே”
 
“எப்ப”
 
“நேத்திரவு.அந்த இதயம் ஜூதாவோடது”
அது சாம்பலை விட துப்பரவு”
 
“ஜூதாவா”
 
பானு மௌனித்தாள்.
 
அலியின் ஆன்மா பரவசமடைந்திருந்தது.அவன் ஜூதாவை நினைத்தான்.அவன் கற்பனை பண்ணுவதை விட அவள் தூய்மையானவள். அலி கட்டிலில் சாய்ந்தான்.அப்படியே உறங்கிப்போனான்.கனவில் அவனுக்கு ஒரு ஒளி தோன்றியது.அதில் வாப்படம்மா இருந்தாள்.அந்தப் பெண் இருந்தாள். இத்தனைக்கும் அந்த கடைக்காரனும் இருந்தான்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயமும் இருந்தது.
 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments