கற்றுக் கொள்ளுங்கள்
அவளால் முடியுமென..
வாய்ப்பளியுங்கள்
அவளுக்கும் திறமைகள் உண்டென..
என்ன தான் சந்தோசம் கிடைக்கிறது அவர்களுக்கு –
அவளை அணு அணுவாய் மென்று விழுங்குகையில்
இடுக்கிய கைக் குழந்தையோடும்
பாதிக் கையினால் பாத்திரங்களோடும்
சமையலறையில் வித்தைகள்
செய்கிறாள் – அவள்
பிறர் உளவிருட்டில் குடி புகுந்து இன்சொல் கொண்டு சோதி ஒன்றை உதிக்கச் செய்ய அவளால் தானே முடியும்
அவளின் தியாகங்களை பாராட்டா விட்டாலும் பரவாயில்லை – சற்று காயப்படுத்தாமலாவது இருங்களேன்..
அவளைக் கொஞ்சம் சுதந்திரமாய் தான் இருக்க விடுங்களேன்
சுதந்திரக் காற்றை அவள் மெல்ல சுவாசித்து இலேசாக சுவை பார்க்கட்டும்..
படிக்கப்படாத பக்கங்களின் பரிதவிப்புக்கள் அவள் மனம்..
அன்பிற்கே இலக்கணமான அற்புதப் படைப்பு அவள்..
தூசு தட்டி தீட்டப்பட வேண்டிய மங்கை அவள்
வாழ்கை எனும் பயணத்தில் பல படித்தரத்தை பெற்றாலும் ஈற்றில்
– *அவள் பெண்ணாகிறாள்*
றிப்கா அப்துல் றஸ்ஸாக்