உலகம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் உணவுத்தானியம் மக்காச்சோளம். (Corn) இதன் தாவரவியல்பெயர் Zea mays, இது போயேசியே (Poaceae) குடும்பத்தைச்சேர்ந்தது. அண்டார்டிக்காவை தவிர பிற கண்டங்கள் அனைத்திலுமே மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றது. ஒருவித்திலைத் தாவரமாகிய இதில் (Monocots), கதிர்மணிகளின் வரிசை எப்போதும் இரட்டைப்படை (even numbers) எண்ணிக்கையிலேயே இருக்கும். ஒரு சோளத்தில் சுமார் 800 மணிகள் இருக்கும். ஒரு மணிக்கு ஒரு இழை வீதம் மென்மையான பளபளக்கும் பட்டு நூலைபோன்ற இழைகளும் இருக்கும் இதை அனைத்து மண் வகைகளிலும் ,அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்
இனிப்பு மக்காச்சோளம் (Sweet corn)- Zea saccharata என்பது மக்காச்சோளத்தில் இயற்கையாக நடைபெற்ற சடுதிமாற்றத்தால் (Mutation) உண்டாகியது. இச்சோளத்தை தாவரவியாளர்கள் 1779ல் கண்டறிந்தார்கள். அதன்பின்னர் கலப்பினம் மற்றும் மரபணு மாற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட, தரமும், சுவையும், நிறமும், மணிகளின் அளவும் மேம்படுத்தப்பட்ட பல வகை இனிப்புச்சோளங்கள் தற்போது சந்தையில் உள்ளன.
இனிப்பு மக்காச்சோளவகைகள் பிறமக்காச் சோளவகைகளைக் காட்டிலும் குட்டையானவை 2.5 லிருந்து 4 மீட்டர் உயரம் வரையே வளரக்கூடியவை. இவற்றின் கதிர்கள் பச்சையாக உண்ணுவதற்கேற்ற வகையில், பால் பிடித்திருக்கும் பருவத்திலேயே முற்றுவதற்கு முன்பாக அறுவடை செய்யப்படுகின்றன
“எஸ்யு . எஸ் ஹெச் மற்றும் எஸ் இ (Su , Sh2, Se genes) மரபணுக்கள் இனிப்பு மக்காச்சோளத்தின் சர்க்கரைச்சத்து மாவுச்சத்தாக மாறுவதைத்தடுப்பதால் சோளக்கதிர் மணிகளில் சர்க்கரையின் அளவு 5-11% அதிகரிக்கின்றது x. புற்றுநோயைத்தடுக்கும் ஃபெருலிக் அமிலம் நிறைந்திருக்கிறது இதில்.
விதைத்த 60 லிருந்து 90 நாட்களில் இவை அறுவடை செய்யப்படும். இனிப்புச்சோளம் வெள்ளை, மஞ்சள், ஊதா, நீலம், இருநிற மணிகளைக்கொண்டவை, பலநிற மணிகளைக்கொண்டவை என்று பல வகைகளில் உலகெங்கிலும் கிடைக்கின்றது.
பச்சையான இனிப்புச்சோளத்தில் ஏராளமாக வைட்டமின்களும் பொட்டாஷியம் நார்ச்சத்து, தையமின், இயற்கையான சர்க்கரைசத்து ஆகியவையும் உள்ளன. மேலும் இது கொழுப்பற்றது . கண் பார்வை மற்றும் இதயக்கோளாறுகளை குணமாக்கும், சமைத்த சோளம் புற்றுநோயைத் தடுக்கும். இனிப்புச்சோளத்தின சர்க்கரைச்சத்து அறுவடைக்குப்பின்னர் மாவுச்சத்தாக மாறுமென்பதால் சேமித்து வைக்காமல் புதியதாய் இருக்கையிலேயே இவை உண்ணப்படவேண்டும்.
இனிப்புச்சோள உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தாய்லாந்து நாட்டைத்தொடர்ந்து, ஈரான், சீனா, ஹங்கேரி, ஸ்விட்சர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
மக்காச்சோள மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து காற்றடைத்து உருவாவது சோளப்பொரி. (பாப்கார்ன்) மக்காச்சோளத்தின் மணிகள் அடர்ந்த மாவுப்பொருளையும் உறுதியான புறப்பகுதியையும் கொண்டுள்ளதால் இவற்றைச் சுடும்போது உள்ளே அழுத்தம் வளர்ந்து பட்டென்ற ஒலியுடன் வெடிக்கின்றன. சோளப்பொரி செய்வதற்காகவே பயிரிடபப்டும் வகை Zea Mays everta.