தமிழன் பார்வையில் சிவ’சக்தி’
சைவ சித்தாந்தம் என்பது ஆதி தமிழர்களின் இறை கொள்கையை விவரிக்கிறது. சிவனே ‘முழு முதற் கடவுள்’ என்றும், இறை வணக்கத்தின் மூலம் மட்டுமே உண்மை பொருளை கண்டறிய முடியும் என்பதையும் சைவ சித்தாந்தம் எடுத்துக் கூறுகிறது.
சிவனைப் பற்றி “ஆண், பெண் அல்லது இவை இரண்டும் இல்லாத பாலினம் என்ற எந்த ஒரு பால்வகைக்கும் உட்படாத சிவமாக இருந்த கடவுள்” என திருமூலர் தன் திருமந்திரத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட இறைவன் பொது நிலைக்கு வரும்போது “சிவன்” ஆகின்றான் என்றும், இறைவனிடமிருந்து வெளிப்படும் இறை ஆற்றலே “சக்தி” என்றும் திருமூலர் அதே பாடலில் “ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்“, என்று கூறியுள்ளார்.
இதே பொருளானது, தன்னை வேண்டுவோர்க்கு ஞானமும், பாதுகாப்பும் கொடுப்பதிலும், தவறு செய்யும்போது கண்டிப்பதிலும் அவன் ஒரு தகப்பனை போல இருப்பதால், இறைவனை ‘சிவன்’ என்ற ‘பரமபிதா’ என்பதாகும். அதே நேரம், பாடுகளினால் சோர்ந்து போகும் மக்களை, அவன் ஒரு தாய் தேற்றுவது போல் தேற்றுவதால் இறைவனுக்குள் தாய் போன்ற இரக்க குணம் கொண்ட ‘சக்தி’ இருக்கிறாள் என்றும் ஆதி தமிழர்களால் கருதப்பட்டது.
பரம்பொருளாகிய இறைவனிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் ‘பராசத்தி’ என்றும் அழைத்தார்கள். அந்த சக்தியானது, எழில் மிகுந்த மற்றும் ஆற்றல் வாய்ந்ததாக இருப்பதனால் அதனை ‘வனப்பாற்றல்’ என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல், அதன் பசியாற்றும் தாயினும் மேலான பரிவுடன் அந்த இறை சக்தி இருப்பதனால், அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். கருணை இயல்பும், பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று என்பதால் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் கற்பனை பெயர் கொடுத்தனர் நம்முன்னோர்கள். ஆனால், சக்தி என்றால் ஆற்றல் (energy) மட்டுமே. உண்மையில் அது பெண்ணும் அல்ல, பெண்ணின் பெயரும் அல்ல.
ஒருவனாய் இருக்கும் இறைவனுக்குள் இருக்கும் இரு வேறு செயல்களை வைத்து, தமிழகத்திற்குள் சங்க கால கடைசியில் ஊடுருவிய சிலர், கட்டுக்கதைகளை சேர்த்து சிவனின் மனைவி சக்தியாகிய பார்வதி என்று தவறான செய்திகளை விதைத்து விட்டனர். இறைவனின் திருவருள் தாய்மை இயல்பு கொண்டதாகவும், அதே சமயம் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பாகவும் இருப்பதால் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாக, சக்தியாகிய பெண் இருக்கிறாள் என்று அதற்கு வடிவத்தினை கொடுத்து இறை வழிபாட்டினை திசை திருப்பினர். இது இறைவனை கொச்சைபடுத்துவதற்கு சமமானது மற்றும் இறைவன் விரும்பாத செயலாகும். மனிதனுக்கு உடலையும், அதற்குள் உயிரையும் கொடுத்தான் இறைவன். அந்த இறைவனுக்கு மனிதன் கற்பனை உருவம் கொடுப்பது தவறான செயலாகும்.