ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 10

0
492

சுக்கிரியாவை  தேடிய கமல்

திக்ரித் முகாம், நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன், வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு, போர்முனை ஊக்கத்தொகை வாரம்தோறும் நாற்பத்தியைந்து டாலர்கள் அனைவருக்கும் கையில் கிடைத்ததால் பெரும்பாலானோரின் கையில் விலையுயர்ந்த புகைப்படக்கருவி, இசை கேட்கும்கருவி, மடிக்கணினியை விட சற்றே சிறிய எல் சி டி கருவிகள் என அரண்மனை முகாமில் உற்சாமாக நாட்கள் நகரத்தொடங்கியிருந்தது.

மொத்தம் இருந்த நூறுபேரில், எழுபத்தியைந்து பேர் திருமணமாகதவர்கள். என்னை போல திருமண வயதை அடைந்தவர்கள்தான் அதிகம்பேர் அங்கிருந்தோம். இங்கு வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது. இரண்டாயிரத்தி ஒன்று செப்டம்பர் பதினொன்றில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தரைமட்டமானதில், உல்லாச கப்பலுக்கு தேர்வாகி இருந்தும் அமெரிக்க விசா கிடைக்காமல் இந்த வேலைக்கு வந்தவர்கள், நீண்ட நாட்கள் வேலை கிடைக்காதவர்கள், தான் விரும்பிய வேலைகிடைக்காததால் ஏஜென்ட் அனுப்பிவைத் தவர்கள் என.

அந்நியதேசத்தில். சாப்பிடும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் மொழி வாரியாக தான் குழுமி இருகின்றனர். பெங்காலிகள்ஒரு கூட்டம், ஹிந்தியும்,மாரத்தியும் பேசுபவர்கள் ஒன்றாக ஒரு கூட்டம் ,கோவா அன்பர்கள் தனிகூட்டம், கொஞ்சம் ஒத்துப்போகும் தமிழும் மலையாளமும் ஒரு கூட்டம். தென் மாநிலத்தவர்கள் தான் அதிகமாக வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர் எனத்தோன்றுகிறது. வடமேற்கு, வடகிழக்கு மாநிலத்தவர் எவரும் இல்லை. மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல்,நாகலாந்து போன்ற மாநிலத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.

 

 

 

 

எங்களுக்கு என, எழுபது அங்குல தொலைக்காட்சிப் பெட்டியுடன், தனி தொலைக்காட்சி அறை ஒன்று தந்தார்கள். தினமும் ஹிந்தி,ஆங்கிலப் படம் போடுவார்கள். அப்போது தமிழ் ,மலையாளிகள் ஒன்றிணைந்து தங்கள் மொழி படம் வேண்டும் எனவாதிட்டார்கள். பிரச்சனை பெரிதானபோது வாரத்தில் புதன், வியாழக்கிழமை இரண்டு நாட்கள் ,தமிழும் ,மலையாள படமும் எனமுடிவானது . கிருஷ்ணன் தான் அதற்கு பெரிய முயற்சி எடுத்துகொண்டார். புதன்,வியாழனில்”சேட்டா எதேங்கிலும் ஒரு படம் இடனும், இல்லங்கிஅவ மாரு வேற சினிமா இடும்” என்பார். நம்முடைய நாளை அவர்களுக்கு விட்டுகொடுக்ககூடாது என்பதால், கிருஷ்ணன் ஏதாவது ஒரு படத்தை போடுவார். அவரது சகாக்கள் ஐந்துபேர் எப்போதும் அவருடன் இருப்பர் .

ஆனால் நான் பார்த்தவரையில் பெரும்பாலனவர்கள் தமிழ்,மலையாள படங்களை அதன் கதைக்காக பார்க்கின்றனர். இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படம் கோவா அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

ஸ்டோர்ஸில், கமலஹாசன் மட்டும் இரவு பணியில் இருப்பார். நாங்கள் பத்து பேர் பகலில் அடுமனைக்கு தேவையான அனைத்துபொருட்களையும் கொடுத்துவிட்டு செல்வோம் .எனினும் தினமும் இரவில் சமையல்காரர்கள் ஏதாவது பொருட்கள் தேவையென ஆழ் துயிலில் இருக்கும் எங்களை எழுப்புவதால், விடுபட்ட பொருட்களை கொடுக்க கமலை இரவு பணியில் அமர்த்தினோம். இரவு ஒன்பது முதல் காலை ஒன்பது வரை கமல் பணியில் இருப்பார் .

 

 

 

 

நான் ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு கூடாரத்தை விட்டு வெளியே வந்தபோது கமல் ” இந்த சுக்கிரியா எங்கண்ணே இருக்கு எல்லா கண்டெய்னர்லயும் தேடிப் பாத்துட்டேன்” என்றான். “உனட்ட கேட்டது யாரு கமல்” என நான் கேட்டதற்கு, “அந்த பெங்காலிதான் கேட்டான்” என பதில் சொன்னான் .

இங்கு வேலை செய்த தமிழர்கள் பலருக்கும் ஹிந்தி தெரியாது. அதில் கமலும் ஒருவன். ஒருநாள் அவனைக் கலாய்க்க அவனிடம் சுக்கிரியாவை கேட்டுள்ளனர் ,பாவம் இரவு முழுவதும் தேடி இருக்கிறான். நாற்பது அடி நீளமுள்ள நாற்பது கண்டெய்னர்களில் சுக்கிரியா அவனுக்கு கிடைக்கவேயில்லை.கமலும், முருகனும் கேம்ப் பாயாக இருந்தவர்கள். அவர்களின் கடின உழைப்பை கண்ட எங்கள் முகாமின் தலைமை அதிகாரி டெர்ரிஆண்டெர்சன் அவர்கள் இருவருக்கும் பதவி உயர்வுகொடுத்து ஸ்டோர்ஸ்க்கு அனுப்பி வைத்தார் .

முருகன் இருபத்திநான்கு வயதை பூர்தியடையாதவன். தமிழை தவிர வேறு மொழி தெரியாது , ஆனால் திறமைசாலி. எளிதில் எதையும் புரிந்து கொள்வான். கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவன். எங்களுடன் இருந்த நீல் தான் அவர்கள் இருவருக்கும் ஒரு ஆசிரியராக இருந்து வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்தான்.

தான் சொந்தமாக வீடு கட்டி முடித்தவுடன் திருமணம் என்றான். அதுபோலவே இரு வருடத்திற்குள் புதிய வீட்டில் குடியேறும் நாளன்று அவனது திருமணம் நடந்தது. முதல் ஆண்டு அவன் தங்கைக்கு திருமணம் நடந்தபோது பெரும் பொருள் அவனேகொடுத்திருந்தான் . “பாய் இந்த வண்டிய மட்டும் நல்லா ஓட்ட கத்து கொடு. நான் ஊர்ல போய் ஒரு டெம்போ ஓட்டியாவது பொழச்சிக்குவேன்” என்பான் .

ஒருநாள் உணவு நேரத்தில் எதார்த்தமாக உணவு கூடத்தின் வெளியே சென்றேன். அது மதிய உணவு நேரம். வீரர்கள் சாப்பிட்டுவிட்டு தொட்டியில் போடும் தட்டுகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும். இல்லையெனில் உணவு நேரத்தின்போது அங்கிருக்கும் பத்து தொட்டிகளும் நிறைந்துவிடும். அவர்கள் எச்சில் தட்டுகளை போட இடம் இல்லாமலாகிவிடும். எனவேஉடனுக்குடன் அப்புறபடுத்த பணியாளர்கள் இருப்பர்.

நான் அன்று அங்கு சென்றபோது, நமது தமிழ் அன்பர்கள் தட்டுகளை போடும் வீரர்களிடம் “சார் ஒன் டாலர் ப்ளீஸ்” எனக்கேட்டனர். அதை கண்ட எனக்கு கடும் கோபம். “ஏம்பா இப்படி பிச்சை கேட்டு மானத்தை வாங்குறீங்க, இங்க தான் நல்ல சம்பளம்தாராங்களே?” என்றேன். “பாய் நாங்க குவைத்திலே இப்படி பத்தாயிரம் ரூபாய் சம்பாதிச்சோம்” என்றனர். இனிமேல் இப்படிபிச்சை எடுத்து மானத்தை வாங்காதீர்கள் என்றேன் .

 

 

 

 

எங்களது கழிப்பறைகளில் தண்ணீர் இருக்காது. குளியலறை அருகில் தான் இருந்தது. நம்மவர்களுக்கு தண்ணீர் வேண்டுமே, காலி பாட்டில்களில் குளியலறையிலிருந்து தண்ணீர் நிரப்பி செல்வோம். தண்ணீரை வீணாக்குவதை பார்த்தால் நான் கண்டிப்பேன்.குளியலறையில் முக சவரம் செய்பவர்கள் பலர், குழாயை திறந்தே வைத்திருப்பார்கள். எங்களில் சிலர் “குழாயை மூடசொல்லி, தண்ணீரை வீணாக்காதீர்கள்” எனக் கேட்டுக்கொள்வோம்..

ஒருநாள் போர்க் லிப்ட் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். கோபால் தண்ணீர் பாட்டிலுடன் சென்று கொண்டிருந்தான். அவன் கழிப்பறைசெல்கிறான் என யூகித்தேன் .

“கோபால் வா” என்றேன் .

“கொஞ்சம் தண்ணி தாப்பா” என கேட்டேன். கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை தந்தான். மூடியை திறந்தபோது குளிர்சாதனபெட்டியிலிருந்து அப்போது தான் எடுத்திருக்கிறான் என கைகளில் பட்ட குளிர்ச்சி உணர்த்தியது. புதிய பாட்டில் அது. நான், அதன்மூடியை உடைத்த வாறே “கோபால் எங்க போற?” எனக் கேட்டேன்.

“டாய்லேட் போறேன்”.

“அதுக்கு பிரிட்ஜ் ல இருந்து மினரல் வாட்டர் தான் வேணுமா உனக்கு கழுவ ,எவ்ளோ காலி பாட்டில் இருக்கு அதுல தண்ணிகொண்டு போலாம் இல்ல”

அவன் தஞ்சை மாவட்ட விவசாயி.”உங்கூர்லதானே தண்ணி இல்லாம விவசாயி தற்கொலை செய்து சாகிறார்கள்” எனக்கோபத்துடன் கேட்டேன் .”இங்க நூறு பேரு இருக்காங்க எல்லாரையும் உன்னால திருத்த முடியுமா எவ்ளோ பேரு மினரல் வாட்டர் தான் கொண்டு போறாங்கதெரியுமா ?பாய்”என பதிலுக்கு என்னிடம் சீறினான்.

“இங்க பாரு கோபாலு நீ என் பிரண்டு நீ முதல்ல திருந்து . மத்தவன் எல்லாம்தானா திருந்துவான்” என்றேன். முனுமுனுத்தவாறே காலி பாட்டிலை தேடிச்சென்றான். என்னிடம் முன்னரே சிலர் சொல்லி வருத்தப்பட்டிருந்தனர், கழிப்பறைக்கு சிலர் பாட்டிலில் அடைத்த தண்ணீரை உபயோகிப்பதாக .

இந்த முகாமில் எங்களுக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை. ஒரு டாங்கர் லாரியில் தண்ணீர் தீர ,தீர டைகிரிஸ் ஆற்றிலிருந்துகொண்டு வருவார் அதன் ஓட்டுனர். எகிப்து நாட்டை சேர்ந்தவர். அரண்மனை வளாகத்துக்குள் தான் தண்ணீர் நிரப்பும் இடமும்இருந்தது .காலை ஒன்பது மணிக்கு பகல் பணி துவங்கும். எட்டரைக்கு மணிக்கு போய் காலை உணவருந்திவிட்டு, ஒன்பது மணிக்குஎங்கள் ஸ்டோர்ஸ் மானேஜர் நடத்தும் பத்து நிமிட கூட்டத்திற்கு பின் தான் வேலை துவங்கும். அது ஒரு நல்ல உத்தி. வெப்பம்அதிகமான நாட்களில் தண்ணீர் அதிகம் குடியுங்கள் எனவும் ,குளிரான நாட்களில் அதற்குரிய ஆடை அணியவும் ,தேநீர் குடிக்கவும் ஆலோசனை சொல்வார். அன்று செய்ய போகும் வேலைகளை தெளிவாக காலையிலேயே விவாதிப்போம்.

கடின பணி என்றால் உதவி கேட்கலாம். முடியாததை சொல்லிவிட்டால், மாற்றுவழி குறித்தும் விவாதிப்போம் . வேலை சீக்கிரம்முடிந்துவிட்டால், உடன் பணி செய்பவருக்கு உதவி செய்வோம். அப்படியும் அன்றைய பணி சீக்கிரம் முடிந்துவிட்டால்,மானேஜரிடம் சொல்லிவிட்டு ஓய்வு எடுக்க சென்று விடலாம்.எனக்கு எப்போதும் சீக்கிரமாகவே வேலை முடிந்துவிடும். நண்பன் லோகேஷ் தான் எனக்கான உணவையும் கொண்டுவருவான். இரவுணவை உணவு கூடத்தில் நாங்கள் சாப்பிடுவதில்லை. நீராடி, ஆடை மாற்றி தங்கும் கூடாரத்தின் வெளியே ஒரு மேஜையைபோட்டு, அதன் நடுவில் சிறிய (flash light) விளக்கை வைப்போம் ,கேண்டில் லைட் டின்னர் போல. பின்னர் உணவை பிரித்து, தட்டுகளில்வைத்து பேசிக்கொண்டே நிதானமாக சாப்பிடுவோம். கார்த்திக்கிற்கு இரவு பணி ஆதலால் சில நேரம் வந்துவிட்டு சீக்கிரமே சென்றுவிடுவான்.தங்கும் கூடாரத்தின் வெளியே நாங்கள் சாப்பிடும்போதுவேறு யாரையும் சேர்ப்பதில்லை . யாரும் எங்களுடன் வர விரும்பவும் இல்லை.

லோகேஷ் கடமை தவறாதவன். எப்போதும் தான் செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பான். எவ்வளவு கடினமானபணி என்றாலும், நண்பர்கள் நாங்கள் கடமையை சரியாக செய்யாதபோது திட்டுவான். லோகேஷுக்கு திருச்சி பாலகரையில் வீடு.ஒருவருட சமையல்கலையில் பட்டய படிப்பு படித்தவன். உல்லாச கப்பல் பணிக்கு தேர்வாகி இருமுறை அமெரிக்க துணை தூதரகம்சென்று விசா கிடைக்காததால் இந்த பணிக்கு வந்திருந்தான்.

தொடரும்….

குறிப்பு : இத் தொடர் கதையில் பிரசுரிக்கப்படும் படங்கள் அனைத்துமே அந்தந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நிஜப்புகைப்படங்களாகும். கதையோடு ஒன்றிக்கும் வாசகர்களுக்கு மேலும் சுவாரஷ்யத்தை கூட்ட இங்கு பதிவிடுகின்றோம்.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments