ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

0
478

 

 

 

திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும் கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்து தொங்கிகொண்டிருக்கும்.

இங்கு குளிர் காலத்தில் மைனஸ் இரண்டு டிகிரி வரையும், கோடையில் அதிகபட்ச வெப்பம் நாற்பத்தியாறு டிகிரிக்கும் சென்றுவிடும். இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையில் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்னாலும், கோடையில் மீண்டும் ஒருமணிநேரம் முன்னேயும் நகர்த்திவிடுவர். கோடையில் ஐந்துமணிக்கெல்லாம் சூரிய உதயமும், இரவில் ஒன்பது மணிக்கு மேல் அஸ்தமனமும் இருக்கும். மாலைநேர மகரிப் தொழுகை ஒன்பது மணிக்கு பிறகே. குளிர் காலத்தை குளிராடைகளை அணிந்து சமாளித்து விடலாம், கோடை தான் கடினம். அதிகமாக தண்ணீர் குடிப்பதனால் பசியிருக்காது. அதனால் தேவையான உணவுசாப்பிடாமல் உடலில் போதிய சக்தியும் இருக்காது.

குவைத்,ஈரான்,சவூதி அரேபியா,துருக்கி,சிரியா,ஜோர்டான் என ஈராக்கை சுற்றி ஆறு நாடுகளும், உம்காசர்,பஸ்ரா போன்ற துறைமுகங்களும் உள்ளன. இது இந்த நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம் என்பேன். யூப்ரடிஸ் , டைகிரிஸ் என வற்றாத இரண்டுநதிகளும், எண்ணெய் வளங்களும் மிகுந்த நாடு ஈராக்.

அது செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி. இரண்டாண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வானுயர்ந்த இரட்டைக்கோபுரம் தரைமட்டமான காட்சிகளை அமெரிக்கர்களுடன் நாங்களும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம். அனைவரது முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது. இரவில் துயிலில், விமானங்கள் மோதி இரட்டைகோபுரங்கள் சிதைந்த காட்சிகள் கண்களிலிருந்து அகல மறுத்தது.

 

 

 

 

இரு தினங்களுக்குப்பின் பதிமூன்றாம் தேதி காலையில், அடுமனைக்கு இரவுணவுக்கு தேவையான பொருட்களை கொடுத்துகொண்டிருந்தோம். எப்போதும் காலைவேளை எங்களுக்கு பரபரப்பாக இருக்கும். காலை ஒன்பதரை மணியளவில் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தோம். நாங்கள் தங்கும் கூடாரம் தீப்பற்றி எரியத் தொடங்கியிருந்தது. அனைவரும் அதை நோக்கியே ஓடினர் .

நான் வேகமாக அடுமனைக்குள் சென்று, அங்கிருந்த தீ அணைப்பானை எடுத்து வந்தேன். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரியதொடங்கியிருந்தது. கடும் வெப்பம் அருகில் நெருங்கவே முடியவில்லை. என் கையில் இருந்த தீ அணைப்பனால் எதுவும் செய்ய இயலவில்லை. இரவு பணி முடித்தவர்கள் உள்ளே தூங்கிகொண்டிருந்தனர். என் நண்பன் கார்த்திக்கும் அதில் ஒருவன் .

தீ எரியும் போது ஷேவிங் கீரீம் மற்றும் டப்பாவில் அடைத்த வாசனை திரவியங்கள் அச்சமூட்டும் பெரும்சப்தத்துடன் வெடித்தது. முதல் கூடாரம் முழுமைகயாக எரிந்து முடிந்து , அதையொட்டியிருந்த இரண்டாவது கூடாரமும் தீ பற்றி எரியத் தொடங்கியது. அருகிலேயே பார்த்துக்கொண்டு இருந்த எங்களால் எதுவும் செய்யமுடியாத நிலை. என் மனம் கூடாரத்தினுள்ளே தகரஅலமாரியில் இருக்கும் எனது சான்றிதழ்கள் எதுவும் ஆகக் கூடாது என தவித்துக்கொண்டிருந்தது.

இரண்டாம் கூடாரத்தில் தான் எங்கள் முகாமின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கணிணி மற்றும் முக்கிய பொருட்கள்அங்கிருந்தது. தீ எரிந்து கொண்டிருக்கும்போதே இங்கிலாந்தை சேர்ந்த டெர்ரி ஆண்டர்சன், எனது ப்ராஜெக்ட் மானேஜர் கணினிமற்றும் பொருட்களை வெளியே கொண்டுவர கூடாரத்திற்குள் சென்று விட்டார். நல்ல வேளையையாக ஆஸ்திரேலியாவின் டாமியன் அவரை தடுத்து வெளியேற்றினார். இராண்டாவது கூடாரமும் முழுவதுமாக எரிந்து முடிந்தது. கூடாரம் அமைக்க பயன்படுத்தும் துணி சில ரசாயனங்களால் சலவைசெய்யப்பட்டது, தரைப்பகுதி எடைகுறைந்த இலகுவான மரப்பலகையால் ஆனது. ஆகையால் தீ பற்றியதும் வேகமாக பரவிவிட்டது .

கண்முன்னே, என்னுடைய அனைத்து பள்ளி, ஐடிஐ, தொழில் பழகுநர் சான்றிதழ்கள், முன்பு வேலைபார்த்த நிறுவனங்களின்அனுபவ கடிதங்கள், இன்னும் சில நினைவுபொருட்கள், அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம், கடவுச்சீட்டு,கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் சில நிமிடங்களில் சாம்பலாகிவிட்டது. சற்று முன்பு வரை நிறைய உடமைகளுடன் இருந்த நான், உடுத்திருந்த துணியும், கால்சட்டை பையில் இருந்த கைக்கடிகாராமும்தவிர வேறொன்றும் இல்லாமலாகிவிட்டேன் .

 

 

 

 

 

என்னைப் போல் அறுபது பேரின் கடவுச்சீட்டுகளும், உடமைகளும் தீக்கிரையாகிவிட்டது. இருந்தாலும் என்னைப்போல் யாருக்கும் பெருத்த இழப்பு இல்லை. அனைத்து சான்றிதழ்களும் காலி. கூடாரம் இருந்த இடம் வெட்டவெளியாக கரியும் சாம்பலுமாக,புகைந்துகொண்டிருந்தது. முழுமையாக தீ அணைந்தபின் கூடாரத்தினுள் சென்று எனது படுக்கையை அடையாளம் கண்டு அதனருகிலிருந்த தகர அலமாரியில் அப்போதும் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என தேடினேன்.

இரும்புக்கட்டில்களும், தகர அலமாரியும் எலும்புக்கூடாக காட்சியளித்தது. அதன் முன்பு தரையில் அமர்ந்து இரண்டு மணிநேரம் அழுதிருப்பேன். அதுபோல் என் வாழ்வில் எப்போதுமே நான் அழுததில்லை. பலரும் என்னை சமாதனாபடுத்தினர். ஒரு ராணுவ வீரன்நான் அழுவதை பார்த்து , டாலர்களை கையில் தந்தான். பணம் எனக்கு வேண்டாம் என்றேன். அதை நான் சம்பாதிக்க முடியும். என்கவலையெல்லாம் நான் இழந்த சான்றிதழ்கள் மட்டுமே. பலரும் அலமாரியில் இருந்த குவைத்திய தினார் மற்றும் அமெரிக்க டாலர்எரிந்ததற்குத்தான் கவலைப்பட்டனர்.

நண்பன் கார்த்திக் மற்றும் இரவு பணி முடிந்து உள்ளே தூங்கிகொண்டிருந்தவர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியேவந்து விட்டதால் யாருக்கும் சிறு காயம் கூட இல்லை. அதுதான் ஆறுதல். கார்த்திக்கு கையில் கிடைத்தது முக சவரம் செய்யும்பொருட்கள் அடங்கிய ஒரு பை. முருகன் மட்டும் அதிர்டசாலி. தீ பிடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் தற்செயலாக கூடாத்தினுள் சென்றவன் தன்னுடைய அனைத்து உடமைகளையும் வெளியே கொண்டுவந்து விட்டான்.

பின்பு அங்குள்ள பள்ளிவாசலின் முன் புறத்தில் அமர்ந்திருந்தேன். அங்கு தொழுகை நடத்தும், என்னையறிந்த ஒரு மூத்த ராணுவஅதிகாரி “ஷாகுல், ஆர் யூ ஒகே” என கேட்டார் .”நோ” என்றேன் . “எல்லாம் சரியாகிவிடும். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்”என்றார். அப்போது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனும் கீதையின் வரிகளை என்னால் ஏற்றுகொள்ள இயலாத நிலை அது.

ஆனால் நான் பிரார்த்தனை செய்தேன். நிலநடுக்கம்,பெருவெள்ளம்,பெரும் தீயில் குடிசைகள் சாம்பலாகி ,புயல்,சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் சில நிமிடங்களில் அனைத்தையும் இழந்து, அனாதைகளாக மனிதன் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறான். அந்தநிலைமை இந்த உலகில் எந்த உயிருக்கும் வரகூடாது என்றே பிரார்த்தனை செய்தேன்.

அடுத்த அரைமணிநேரத்தில் மேற்பார்வையாளர் ஒறேன்ஸ் வந்தார். தலைமை சமையற்காரர் பணிக்கு சென்றுவிட்டார். மதியஉணவு கொடுக்கவில்லை. இரவு உணவு கொடுத்தே ஆக வேண்டும் என அழைத்தார். நிறையப்பேர் நாங்கள் இனி பணிக்குவரமாட்டோம் என்றார்கள். மானேஜர் டெர்ரி ஆண்டெர்சன் வந்து அனைவரிடமும் பேசி பணிக்கு வரும்படி கெஞ்சினார். சிலர்பிடிவாதமாக வரமுடியாது என்றனர் .

 

 

 

 

நானும் மற்ற சிலரும் அடுமனைக்குள் வேலைக்கு சென்றோம். அன்று மட்டும் மையோனஸ் தடவிய ஹாட் டாக்கும், எண்ணையில்பொரித்த பிரெஞ்ச் பிரைஸ் என குறைவான உணவை சீக்கிரமாகவே தயாரித்து கொடுத்துவிட்டோம். அருகிலிருந்த முகாமிலிருந்துவந்திருந்த நியூசிலாந்து அதிகாரி, இரவு தூங்குவதற்கு தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியை துவக்கியிருந்தார். நானும்அவர்களுடன் இணைந்துகொண்டேன் . மாலையில் குளித்தபின், எனக்கு கிடைத்தது ஒரு போர்வை. அதை இரண்டாக கிழித்து நானும் லோகேசும் உடுத்திக் கொண்டோம். அப்போதே ராணுவ வீரர்கள் பலரும் தங்களிடமிருந்த உடைகளை கொண்டுவந்துஉதவினர். வெற்றுடலாய் இருந்த எனக்கும் ஒரு மேலாடை கிடைத்தது.

அன்றிரவு, நாங்கள் நூறுபேர் படுப்பதற்கான கட்டில்களை ராணுவ கமாண்டோ தந்து உதவினார். அது ராணுவ வீரர்களுக்கானது.அதை சிறிதாக மடக்கி எங்கும் எளிதில் எடுத்துசெல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது . இரவில் இந்திய தாய் தந்தைக்குமகளான அமெரிக்க ராணுவ வீராங்கனை மராத்தியை தாய்மொழியாக பேசும் ஆர்த்தி கதம் எங்களை தேடிவந்து ஆறுதல்சொன்னாள். எனக்கும் , கார்த்திக்கிற்கும் நல்ல தோழி அவள். அன்றிரவு, இரவு பணியாளர்களிலும் சிலர் பணிக்குச் செல்லவில்லை. உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அனைவரும்தற்காலிக கூடாரத்தில் கிடைத்த உடைகளுடன் துயில சென்றோம். கண்களை மூடினால், கூடாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது காட்சியானது .

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments