ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14

0
434

 


 

மீண்டும் ஈராக்கை நோக்கி

ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும் உள்ளது. அக்கபா எனும் துறைமுகமும் ஜோர்டானிலிருக்கிறது. பைபிளில் வரும் ஜோர்டான் ஆறு பலருக்கும் நினைவுக்கு வரலாம்.

காலை ஏழு மணிவரை விடுதியறையில் தூங்கியிருப்பேன். ஜனவரி மாத குளிர்,பயணக் களைப்பு, தாய்நாடுசெல்லும் உற்சாக மனநிலை நல்ல நித்திரைக்கு காரணமாக இருக்கலாம்.

காலையில் சுடுநீரில் நீராடி விடுதியின் வரவேற்பறைக்கு வந்தேன். உரையாடல்கள் மலையாளத்தில் என் காதில் விழுந்தது.வரவேற்பறையின் விருந்தினர் அமரும் நாற்காலிகளில் இரு அழகிய இளம் மங்கைகள் குளிருக்கான ஆடைகளை அணிந்து உடலைஇறுக்கி அமர்ந்து எங்களுடன் வந்த ஒருவனுடன் உரையாடி கொண்டிருந்தார்கள். இரண்டும் இளம் இந்திய முகங்கள். மலையாளிப்பெண்கள், நர்ஸாக இங்கு வேலை செய்கிறார்களாம். வேறு முகாமிலிருந்து எங்களுடன் வந்திருந்த ஆண் நர்ஸ் ஒருவனின்கல்லூரித் தோழிகள். அவனை பார்ப்பதற்காக வந்திருந்தனர். புன்னகைத்து அறிமுகத்துடன் அவர்களின் உரையாடலுக்கு இடையூறுசெய்யாமல் விலகிச் சென்றேன். .உலகெங்கும் மலையாள பெண்கள் செவிலியராக பணிபுரிகின்றனர்.

காலை உணவுக்குப் பின் அம்மான் நகரின் வணிக வளாகங்களில் சுற்றி வந்தோம். எல்லோரும் கொஞ்சம் ஷாப்பிங் செய்தார்கள். நான்பெரிதாக எதையும் வாங்கவில்லை . அம்மானிலிருந்து ஜெருசலம் மிக அருகில் தான் என்பதை மிக தாமதமாகத்தெரிந்துகொண்டோம்.மற்ற நண்பர்கள் இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருநாளில் இயேசு மகான் பிறந்த ஜெருசலத்திற்கு போய்வந்ததை சொன்னார்கள். அரிய வாய்ப்பு நூலிழையில் நழுவிப்போய்விட்டது.

சாக்கடல்(Dead sea ) இங்கு தான் இருக்கிறது. கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இயல்பாக மிதக்க முடியும்.இந்த நீரில்உயிரினங்கள் வாழ இயலாது. அதையும் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் இங்கு இருப்பது முன்பே தெரியாமல் போய்விட்டது. மதியம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூக்கம். இருள்வதற்கு முன் எங்கள் முகவர் வந்து எங்களுடையகடவுச்சீட்டையும் ,விமானச் சீட்டையும் தந்தார். எனக்கு மும்பை வரை தான் விமானச்சீட்டு கிடைத்தது .

“நான் செல்லவேண்டியது திருவனந்தபுரத்திற்கு” என்றேன் .

“எனக்கு டிக்கெட் இப்படி தான் கிடைத்தது” என்றார் முகவர்.

 

 

 

 

அனைவருக்கும் மும்பை வரையே விமானச்சீட்டு கிடைத்தது. “நாளை காலை அனைவரும் தயாராக இருங்கள். உங்களைஅழைத்துச் செல்ல வண்டியுடன் நான் வருகிறேன்” என சொல்லிச் சென்றார். பயணம் உறுதியானபின் இரு இரவுகள் நட்சத்திரவிடுதியில் தங்குவது கடினமாக இருந்தது. இரவு உணவுக்குப் பின் குளிரில் மீண்டும் நல்ல தூக்கம் .

இருபத்தைந்தாம் தேதி காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு அம்மான் பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தோம். மதியத்திற்குப் பின் தான் அம்மானிலிருந்து புறப்பட்டோம். ராயல் ஜோர்டான் விமானத்தில் அபுதாபி வரை. அபுதாபியில் மீண்டும் நீண்ட காத்திருப்பு. என் இளைய சகோதரன் கைக்கடிகாரம் ஒன்று கேட்டிருந்தான். அதை வாங்கிக்கொண்டேன். விமான நிலையகடைகளில் உள்ளவை அனைத்தும் விலை உயர்ந்த பொருட்களாக இருந்தன. நண்பன் லோகேஷ், பிரான்சிஸ் மற்றும் சிலரும் அம்மானிலிருந்து மஸ்கட் சென்று பின்னர் அபுதாபி வந்து எங்களுடன் இணைந்துகொண்டனர்.

இங்கு நிறைய இந்திய முகங்கள். குறிப்பாக புடவையில். நமது தமிழ் அல்லது மலையாள சகோதரிகள். புடவை கட்டிய பெண்களை கண்டபோது மனம் அடையும் உற்சாகம், சொந்த ஊருக்கு அருகில் வந்து விட்டோம் எனும் உணர்வு . பத்து மாதங்களுக்குப்பின் புடவையில் பெண்களை பார்ப்பதால் ஏற்படும் ஒரு உளகிளர்ச்சி. பிரான்சிஸ் என்னிடம் சொன்னான் “தேக்கோ தும்காரா தீதி ஜாரிகே”என.கொஞ்சம் பரபரப்பாக இயங்கும் ஒரு பன்னாட்டு விமானநிலையத்தைப் பார்க்கும் ஆர்வம். கல்கத்தாவின் பிரான்சிஸ் நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அபுதாபியின் காத்திருப்பு சலிப்பில்லாமல் கடந்தது .

அதிகாலை மும்பை செல்லும் கல்ப் ஏர் விமானத்தில் அமர்ந்தோம். எங்களுடன் வந்த இருவரை விமானம் புறப்படுவதற்கு சிலநிமிடங்களுக்கு முன் நீங்கள் அடுத்த விமானத்தில் செல்வீர்கள் என அழைத்துச் சென்றனர். பின்பு வேறு இருவரை அந்தஇருக்கையில் அமரச் செய்தனர். என்ன காரணமோ ?

சுமார் மூன்றரை மணிநேர பயணத்திற்குப் பின் குடியரசு தினமான இருபத்தி ஆறாம் தேதியன்று மும்பை சத்ரபதி சிவாஜிவிமானநிலையத்தில் இறங்கினோம். குடியுரிமை சோதனைகளை முடித்து வெளியேறுகையில் கொல்கொத்தாவின் சக்ரபோர்த்தியை குடியுரிமை அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்காததால் என்னை அழைத்தான். நாங்கள் ஈராக் சென்றதையும் கடவுச்சீட்டு மற்றும் உடைமைகள் அனைத்தும் தீ விபத்தில் சாம்பலானதையும், பாக்தாத் இந்திய தூதரகத்தால் எங்களுக்குகடவுச்சீட்டு வழங்கப்பட்ட விபரங்களை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் விளக்கி சொல்லி சக்ரபோர்த்தியை வெளியே அழைத்துவந்தோம்.

பயண பைகளுக்காக காத்திருந்தோம். நீண்ட நேரம் காத்திருந்தபின், எனது பயணப்பை மட்டும் வரவில்லை. “மோசமான வானிலைகாரணமாக அதிக எரிபொருள் நிரப்பியதால் உங்கள் பைகளை ஏற்ற முடியவில்லை. மாலையில் வரும் விமானத்தில் வருகிறது.மாலை வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றனர். பயணப்பை வராத அனைவருக்கும் அருகில் உள்ள லீலா நட்சத்திர விடுதியில் அறைதருவதாக சொன்னார்கள். நான் இரண்டு நாட்களாக விடுதியின் சுவற்றை பார்த்து அலுத்து போய்விட்டது என்றேன். “நீங்கள் சென்றுவிட்டு மாலையில் வாருங்கள். அதற்கான டாக்ஸி கட்டணத்தை நாங்களே தருகிறோம்” என்றனர் விமான நிறுவன ஊழியர்கள் .

சுங்க அதிகாரி என்னிடம் இருந்த புகைப்பட கருவியை பார்த்துவிட்டு (உபயோகித்ததுதான்) இதற்கு ஐம்பது டாலர் தரவேண்டும்என்றார். நீண்ட நேரம் அவருடன் விவாதம் செய்தபின் பணம் தரமாட்டேன் என்றேன். வேறு வழியேயின்றி இறுதியாக இருபதுடாலர்களுக்கு ஒத்துக்கொண்டார். வயித்தெரிச்சலுடன் கொடுத்துவிட்டு வந்தேன், எந்த பொருட்களும் என்னிடம் இல்லாமலே. சுங்கஅதிகாரி பணத்தை கையில் வாங்காமல், அங்கிருந்த காவலரை அழைத்து என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ள சொன்னார். அவர் என்னைக் கழிப்பறைக்கு வருமாறு சைகையாலேயே சொல்லி சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்று இருபது டாலர்களைக் கொடுத்தேன்.

விமான நிலையத்திலேயே மும்பை-திருவனந்தபுரம் ரயிலுக்கு முன் பதிவு செய்துவிட்டு மாட்டுங்கா லேபர் கேம்பில் உள்ள அறைக்குச் சென்றேன். நண்பர் சிம்சன் “லே மூவாயிரம் ரூவால பிளேன்ல போலாமே. நீ டிக்கெட்ட கேன்சல் பண்ணு நான் வாங்கித்தாறேன்” என்றார். மறுநாள் காலை ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு எனது பயணசீட்டை உறுதிசெய்தார்.

 

 

 

மாலையில் அவருடன் சென்று சாந்தாகுருஸில் எனது விமான ச்சீட்டை பெற்றுக்கொண்டு, விமான நிலையம் சென்று காலையில்வராத எனது பையையும் பெற்றுக்கொண்டு வந்தோம். இருபத்தேழாம் தேதி காலை எட்டு மணிக்கு பயணம். காலை ஐந்தரை மணிக்குபுறப்பட்டு பன்னாட்டு முனையம் சென்றோம். அது திருவனந்தபுரம்-கோழிகோடு வழியாக துபை செல்லும் விமானம் .

விமானம் புறப்பட்டதும் இட்லியும் ,வடையும் தந்தார்கள் .நீண்ட நாட்களுக்குப் பிறகு இட்லியை பார்த்தேன். சாப்பிட்டதும் பசிஅதிகமாயிற்று. விமான பயணங்களில் அவர்கள் தரும் உணவு பசி தீராது. நண்பன் ஒருவன் சொன்னான் “லே மக்கா என்னத்தசாப்பாடு தாரானுவோ பிளேன்ல வெத்தல, பாக்கு போல இருக்கு” என.

பத்து மணிக்கெல்லாம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறங்கியது விமானம். ஜன்னலோர இருக்கையில் இருந்ததால் அடர்பச்சையில் தென்னை மரங்களும், சிவந்த கடற்கரையும், கலங்கிய கடலும் விமானம் தாழ்வாக பறக்கையில் ரம்மியமாக இருந்தது. முதல்முறையாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியபோது கண்ட காட்சிகள் மனதிலிருந்து அகல மறுக்கிறது. அதனால்இப்போதும் உள்ளூர் பயணங்களில் குறிப்பாக திருவனந்தபுரம் செல்லும்போது, அந்த பசுமையான காட்சியை காண்பதற்காக ஜன்னலோர இருக்கையை வாங்கிக் கொள்வேன்.

இருபத்திரெண்டாம் தேதி தொடங்கிய பயணம் இருபத்தேழாம் தேதிதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். மூன்று வார விடுமுறை. நான் எனது சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் வேலையாக அலைந்தேன். ஒருமாதத்தில் மீண்டும் ராயல் கன்சல்டன்சியிலிருந்துஅழைப்பு வந்தது. என் உம்மா எனக்காக தீவிராமாக பெண் பார்த்தார்கள். “இப்பமே பாத்து அச்சாரம் வெச்சிட்டா அடுத்த ட்ரிப்புவரும்போது கல்யாணம் வெச்சிடலாம்ன்னு”. ஒன்னும் அமையாததில் எனக்கு மகிழ்ச்சி .

மீண்டும் மும்பை வந்தேன். லோகேசுக்கும், எனக்கும் ஒரே தேதியில் பயணம் உறுதியாயிற்று. மார்ச் ஆறாம் தேதி எனநினைக்கிறேன். மீண்டும் பஹ்ரைன் வழியாக. இந்தமுறை ஜோர்டனின் அம்மான் நகருக்கு பயணம். இம்முறையும் முன்புபோல் பஹ்ரைன் விமான நிலையத்தில் பதினோரு மணிநேர காத்திருப்பு. இருப்பதிலேயே கடினமானது விமான பயணம் தான். வெளிநாட்டுபயணம் என்றால் மூன்று மணிநேரம் முன்னதாகவே செல்லவேண்டும். பாதுகாப்பு சோதனைகள், குடியுரிமை சோதனைக்கு நீண்டவரிசையில் காத்திருப்பு, விமானம் தாமதமாகும் போது மீண்டும் காத்திருப்பு. நீண்ட பயணங்களில், சரியான உணவும் ,குடிநீரும்,தூக்கமும் இன்றி பயணம் முடியும் போது சோர்ந்து போய் கைப்பையை கூட தூக்க உடலில் வலு இருக்காது. பெற்றோரும்,நண்பர்களும் பெருமையாக சொல்லிகொள்ளலாம் “அவன் வாறது அமெரிக்காலே இருந்தாக்கும்” என .

உள்ளூர் விமான பயணமும் குறைந்தது ஒன்றரை மணிநேரம் முன்பே சென்றே ஆகவேண்டும். ரயில் பயணம் தான் வசதியானது. அடுத்த விமானம் ஏறி , இரவில் அம்மான் நகரை அடைந்தோம். அதே நட்சத்திர விடுதி. குளித்து , உணவுக்குப் பின் எங்களது ஒப்பந்தபடிவங்கள் சரிபார்க்கப்பட்டு கையொப்பமிட்டு வாங்கிகொண்டனர். இம்முறை ஒருவருட பணி ஒப்பந்தம் தந்தார்கள். அனைவருக்கும் மூன்று நிமிட தொலைபேசியும் தந்தனர் . உம்மாவிற்கு அழைத்து பேசினேன் .

காலை ஏழு மணிக்குத் தயாராய் இருக்கும்படி சொன்னார்கள். எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் உடன் வந்தனர். இரவில் பாக்தாத்-ஐ அடைந்தோம். ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்றதொரு பயணம் செய்திருந்தமையால் இப்போது அதிக கடினம் இல்லை. பாக்தாத்திலும், இரவு தங்குவதற்கு அதே விடுதி. பயணக் களைப்பில் தூங்கிவிட்டோம். மிக அருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தது .

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments