வைனின் அட்டூழியங்கள்
அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை.
எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச் செல்பவர்கள்.அப்போதுதான் தெரிந்தது பக்குபாவில் இரட்டை சம்பளம் கொடுக்கிறார்கள் என. பக்குபா குண்டுவெடிப்புக்கு பிறகு சிலநாட்கள் தற்காலிகமாக மூடியிருந்தஉணவுக்கூடம் பின்னர் திறக்கும்போதுமுதல் மாதம் இரட்டை சம்பளம் தருவதாகசொல்லி பணியாளர்களை கொண்டுவந்து உணவுக்கூடத்தை தொடங்கியுள்ளனர். ஆனாலும் அங்குதொடர்ந்து குண்டு வெடித்துகொண்டுதான் இருந்திருக்கிறது. இரண்டாம் மாதம் துவங்கும்போது கேம்ப்பாஸ் எனும் பதவியில் இருந்த ராணா அனைவரையும் ஒன்றிணைத்து தொடர்ந்து இரட்டை சம்பளம் தரவேண்டுமென வேலை நிறுத்தம் செய்துள்ளார். வேறு வழியின்றி நிர்வாகம் தொடர்ந்து அங்கு வேலைசெய்த அனைவருக்கும் இரட்டை சம்பளம் வழங்கியுள்ளது. பக்குபாவை உருவாக்கியதில் பணியாற்றிய எவரும் நான் உட்பட அதில் பயனடையவில்லை. லக்ஷ்மன்,முனாவர்,குண்டுவெடிப்பு எனபக்குபா நினைவுகள் மனதில் எழுந்து மறைந்தது.
நானும் லோகேசும் காலை எழு மணிக்கு முன்பாகவே தயாராக இருந்தோம். பாக்தாத்தின் விடுதியிலிருந்து சிறிய வாகனங்களில் எங்களை மாற்றினர். துப்பாக்கி ஏந்திய இரு காவலர்கள் எங்களுடன் வந்தனர். மதியத்திற்கு மேல்மீண்டும் திக்ரித் வந்தடைந்தோம். இப்போது எங்கள் முகாமில் குடியிருப்பு கூடாரங்கள் மாற்றப்பட்டு தற்காலிக அறைகள் அமைக்கபட்டிருந்தது. கூடாரம்வெயில் காலங்களில் அதிகவெப்பமாகவும் ,குளிரில் அதிக குளிராகவும் இருக்கும். குளிர் காலத்தில்இரு கம்பளிகளுடன் கஷ்டப்பட்டு தான்குளிரை சமாளித்தோம். கூடாரம் காக்கிநிறத் தடிமனான துணியால் ஆனது. வெயில் ,மழையிலிருந்து பாதுகாக்க , அதுஒரு ரசாயனத்தால் துவைக்கபட்டது.
புதிய தங்கும் அறைகள் தட்பவெப்பநிலையை தாங்கும் நவீனதொழில்நுட்பத்தில் செய்தது. குவைத்தில் தாயரிக்கப்பட்டு, இங்கு கொண்டுவந்திருந்தனர். ஒரு அடி உயரத்தில் நான்குகற்களை வைத்து அதன்மேல் கிரேன்உதவியுடன் தூக்கி வைக்கப்பட்டதுதங்கும் அறைகள். அதிகாரிகளுக்கு உரியதங்கும் நவீன அறைகளில்குளியலறையும்,கழிப்பறையும்இணைந்து இருந்தது. எங்களுக்கான புதிய தங்கும் அறைகளில் எட்டு கட்டில்களில் பதினாறுபேர் தங்கும்வசதியுடையது. இரவுபணியாளர்களுக்கும்,பகல்பணியாளர்களுக்கும் தனித்தனிஅறைகள். ஸ்டோர்ஸில் வேலை செய்யும்அனைவரும் (மொத்தம் பத்துபேர் ) ஒரேஅறையில் தங்குவோம் என்றான்ஜோக்கிம் .என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒரே அறைக்கு சென்றனர். நான் இரண்டாக பிரிக்கப்பட்ட மூன்று கட்டில்கள் மட்டுமே உள்ள ஒரு சிறியஅறையில் நண்பர்கள் லோகேஷ் , அமர்,சங்கர் உடன் பகிர்ந்து கொண்டேன். பின்பு,கலீல் பாயும் ,விஜயனும் மீதமிருந்தஇன்னொரு கட்டிலை எடுத்துக்கொண்டனர்.
குளிரில், விஜயன் குளிர்சாதனப்பெட்டியின் வெப்பக்காற்றைதிருகி வைப்பார். கலீல் பாய்க்குவெப்பக்காற்று பிடிக்காது. அவர்ஹிந்தியில் அவனைத் திட்டிக்கொண்டேஇருப்பார். “வெப்பக்காற்று உடம்புக்குநல்லது இல்ல இந்தப் பைத்தியத்துக்கு சொன்னா மண்டைலே ஏறாது” என்பார். விஜயன் தூங்கியதும் அவர் அதைஅணைத்து விடுவார் .
குளிரில் காலையில் குளியலறையில்கூட்டமே இருக்காது. நான் உட்படநான்கைந்துபேர் தான் இருப்போம். பெரும்பான்மையானவர்கள் இரவுமட்டுமே நீராடுவர் .இரவில் சுடுநீருக்காகஒரு போட்டியே நடக்கும். ஒன்பது மணிக்குபணி முடிந்து வருபவர்கள்அனைவருக்கும் ஒரே நேரத்தில் சுடுநீர்கிடைக்காது. முன்னூறு லிட்டர்கொள்ளளவு உள்ள சுடுநீர் கலனில் பத்துபேர் குளித்தால் நீர் தீர்ந்துவிடும். மற்றவர்கள் காத்திருக்க வேண்டும் . சிலர்பத்து நிமிடம் முன்னால் வந்து வாளியில்சுடுநீர் நிறைத்து வைத்துவிட்டு செல்வர்.சில தினங்களுக்கு பின் அதையும் சிலர்சமார்த்தியமாக திருடிவிடுவர். “நான்இங்க தண்ணி வெச்சிருந்தேன் காணல”என தண்ணீர் பிடித்து வைத்திருந்தவன்தேடுவதும், திருடியவன் சப்தமேஇல்லாமல் குளித்துவிட்டு வெளியேசெல்லுவதும் வாடிக்கையாகிவிட்டது.ஸ்டோர்ஸில் இருந்த பீட்டர், எப்போதுமேஅதிக குளிராடைகளை அணிந்திருப்பான். அவன், நெடு நாட்களாக குளிக்கவேஇல்லை. மும்பை சென்றபின் குளிப்பதாகசொல்வான்.
முகாமில் ஆரம்பத்தில் பலரும்மொட்டைத்தலையுடன் அலைந்தனர். முடிவெட்டத் தெரியாததால், சிலர் ஜடைமுடியுடன் அலைந்தனர். தமாதமாகத்தான்தெரிந்தது எங்களுடன் பணிபுரிந்தஒரிசாவை சேர்ந்தவன் ஒருவனுக்கு முடிவெட்டத் தெரியும் என. அவன் மட்டும் தான்ஒரிசாவை சார்ந்தவன். அவன் இரவுபணியில் இருப்பவன். காலை பணிமுடித்து வந்து ஒரு நாளைக்கு மூன்று பேருக்குதான் முடி வெட்டிக்கொடுப்பான். ஒருநாள் முன்னதாகவே சொன்னால்தான்மறுநாள் முடி வெட்டிகொள்ளமுடியும். எங்களது மேலாளர், முடிவெட்டிகொள்பவர்கள் அவனுக்கு இரண்டுடாலர்கள் ஊக்கத்தொகையாக கொடுக்கச் சொன்னார். பணத்தை விட மிக பெரியசேவை அவனுடையது .
துவைப்பதற்கு எந்தப் பிரச்னையும்இல்லை. ஆரம்ப நாட்களில்இராணுவத்தால் உள்ளூர்பணியாளர்களை கொண்டு இயக்கப்பட்டசலவை மையத்தில் கொடுப்போம். அங்குபணிபுரிந்த உள்ளூர் பெண்கள், அழகிகள். பாக்தாத் பேரழகிகள் எனபடித்திருக்கிறேன். நேரில் கண்டபோதுஉறுதியாயிற்று .
பின்னர் எங்கள் முகாமிலேயே சலவைமையம் துவங்கப்பட்டது. ஆந்திராவின்ரோஷன், அதன் பொறுப்பாளராகநியமிக்கபட்டான். ஒவ்வொருவருக்கும்ஒரு சலவை பை இருந்தது. அதில்துணிகளை போட்டு சலவை மையத்தில்வைத்து விட்டால் போதும். சலவைஇயந்திரத்தில் துவைத்து, தானியங்கிஉலர்த்தும் இயந்திரத்தில் உலர்த்தி, மடித்து பையில் வைத்துவிடுவான். நமதுபையை பார்த்து எடுத்துக்கொள்ளலாம்.
பொழுதுபோக்கு அம்சங்கள் மெதுவாகவிரிவடைந்தன. முதலில் தொலைக்காட்சிபெட்டி, பின்னர் பன்னாட்டு சேனல்கள், மேசை பந்து விளையாட்டு, வாரவிடுமுறை நாளன்று கிரிக்கெட் என. அதற்காக மேலாளர்கள் மிகுந்தவிருப்பத்துடன் அவர்களாகவேவேண்டியதை செய்து தந்தார்கள். .மேசைபந்து விளையாடுவதற்கான மேஜைகள்எங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்ததால், பணி முடிந்து இரவு பத்துமணிக்குமேல்வரை சிலர் மகிழ்ச்சியாகவிளையாடிகொண்டிருப்பர்.
எங்களது முகாமில் பராமரிப்பு பிரிவில் பணியாற்றி வந்தவர் தென்னாப்ரிக்காவின் வைன்.வெள்ளைக்காரன், ஐந்தடி உயரமேயுள்ளகுள்ளமான உருவம். ஆனால் தினமும்உடற்பயிற்சி செய்து உடலைகட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.
எங்கள் முகாமுக்கு வந்த புதிதில், வைன், எங்களுடன் பணி புரியும் விஜயனுடன்வாய் தகராறு ஏற்பட்டபோது விஜயனைசண்டைக்கு அழைத்தான் வா மோதிபார்க்கலாம் என . சில நாட்கள் கழிந்துவேறு ஒருவனுடன் பிரச்னை. குறிப்பாகஇந்தியர்களுடன் ஏதாவதுபிரச்சனைகளில் அலைந்துகொண்டிருந்தான். முதல் முறைவிஜயன் மேலாளரிடம் புகார் செய்தபோதுஅவர் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை .
கொஞ்ச நாட்களுக்கு பிறகு வைன் ஒருநாள் உணவு கூடத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மறதியாகஅவனது மார்கர் பேனாவை வேலைசெய்த இடத்தில் வைத்து விட்டானாம். காணவில்லை என தேடியலைந்தான்.
“உங்கள் இந்தியர்களில் ஒருவன் தான்திருடிவிட்டதாக” சொன்னான். “நாளைக்குள் எனக்கு கிடைக்கவில்லைஎன்றால் நான் வேறு ஏதாவது செய்யவேண்டியிருக்கும்” என எச்சரிக்கைசெய்தான்.
ஒரு நாள் எங்களது சில உடற்பயிற்சிகருவிகளை எடுத்து சென்றான். உடற்பயிற்சி செய்பவர்கள் அவன்அருகில் இல்லாதபோது அவனைதிட்டியும் ,வீர வசனம் பேசியும் திரிந்தனர்.வைனிடம் சென்று நேரில் கேட்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. முருகன்தான் என்னிடம் சொன்னான் “பாய்எல்லாம் வெட்டி பசங்க. எக்ஸசைஸ் செய்து உடம்ப தான் வெச்சிருக்கனுவோ . இங்க நம்மட்ட தான் இவனுவளுக்கவீராப்பு , ஒரு மசிர கூட இவனுகளால புடுங்க முடியாது . இங்கிட்டு நின்னுகத்துறதுக்கு வைன்ட்ட போய் கேட்குறது” .
இன்னொரு நாள் காலையில் வந்த வைன்தொலைக்காட்சி அறையிலிருந்த,பன்னாட்டு சானல்கள் வரும் பெட்டியைதூக்கி சென்றான். நெடு நாட்களாகஅதற்குரிய கட்டணஅட்டைக்கான பணம்செலுத்தப்படாமல் புதுபிக்கப்படவில்லை . அனைவரும் டி.வி.டி பிளேயரில் தான் படம்பார்த்து கொண்டிருந்தனர். அதனால்யாரும் அதைபற்றி கவலைப்படவில்லை .
இதுசமயம் அனகம்பேர் மேஜை பந்துவிளையாட ஆரம்பித்திருந்தனர். விளையாடும் அனைவரும் உற்சாகமாகஇருப்பதை காண முடிந்தது. பனிரெண்டுமணிநேர வேலை முடிந்த பின் உடல்சோர்வையும் பொருட்படுத்தாது அந்தக்குளிரில், விளையாடி மகிழ்வர். “இரவில்பத்தரைக்கு மணிக்கு மேல்விளையாடுபவர்கள் அதிக சப்தமின்றி, தூங்குகிறவர்களுக்கு தொந்தரவுஇல்லாமல் விளையாடுமாறு” மேலாளர்கேட்டுகொண்டார். அப்படி நாங்கள்விளையாட ஆரம்பபித்திருந்த நாட்களில் ஒரு நாள், காலை பத்து மணிகெல்லாம்குடியிருப்பு பகுதிக்கு வந்த வைன், மேஜைபந்து விளையாடும் மேஜையை பிரிக்க ஆரம்பித்தான். அதைக் கண்ட ஜோக்கிம், வைனிடம் “.இதை ஏன் எடுக்கிறாய்?” எனக் கேட்டான். “எனது மார்கர் இதுவரை கிடைக்கவில்லை, கிடைக்கும் வரைவிடமாட்டேன்” என்றான் வைன். “இந்தமேஜைகளை நீ தொடக்கூடாது. இது,நாங்கள் இங்கு விடையாட மேனேஜர்ஆலன் குக் போட்டு தந்தது” என்றான்ஜோக்கிம். அதற்கு திமிர் பிடித்த வைன்ஜோக்கிம்மின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் .
எதிர்பாராமல் முகத்தில் பலத்த அடிவிழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தஜோக்கிம், வாயிலும் ,மூக்கிலும் ரத்தம்சொட்ட ,சொட்ட அடுமனையை நோக்கிஓடி வந்தான். அவன் எதுவும் பேசவில்லை. சைகையால் கையசைத்தான். தூரத்தில் வைன் நின்று கொண்டிருந்தான. ஜோக்கிமிடம் யாரும் எதையும்கேட்டகவில்லை. வைனின் அட்டுழியங்கள் அனைவரும் அறிந்ததே. அடுமனையிலிருந்தும் ,வெளியிலிருந்தும் வேலை செய்துகொண்டிருந்த பெருங்கூட்டம் ஒன்று வேகமாக ஓடியது வைனை நோக்கி.
Very nice story