ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17

0
594

 

 

 

 

 

மேலை நாட்டவர் மெச்சும் நமது கலாசாரம்

அமெரிக்கர்களின் நாகரிகம் மெச்சும் படியாக இருக்கும். அமெரிக்க ராணுவத்தினர் அதில் ஒருபடி மேலே எனலாம். யாருக்கும் எந்தஇடையூறும் தராதவர்கள். தூரத்தில் வரும் வண்டியை பார்த்து சாலையை கடக்க பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றால்,அருகில் வந்து வாகனத்தை நிறுத்தி “போ” என கையசைத்து பாதசாரிகளை போகசொல்வார்கள். எது தன்னுடையது இல்லையோ அதை தொடவே மாட்டார்கள். பொது இடங்களான உணவுக்கூடம், நூலகம், உடற்பயிற்சி நிலையம், தொலைபேசி நிலையம் போன்ற இடங்களில் லாஸ்ட் அண்ட் பௌன்ட் (lost and found) என ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். அங்கு வருபவர்கள் மறந்துவிட்டு போகும் பேனா ,குடை, கைப்பை, பர்ஸ் போன்றவற்றை கண்டெடுப்பவர்கள் அந்த பெட்டியில் போட்டுவிடுவர். உரியவர் மறுநாள் சென்று தவறவிட்ட பொருளை அந்த பெட்டியில் இருந்து எடுத்துகொள்ளலாம்.

நடந்து செல்கையில் முன்னால் வரும் யாரை பார்த்தும் தலை குனிந்து செல்லமாட்டார்கள். யாரை கண்டாலும் புன்னகையுடன் கண்களை பார்த்து குறைந்தது ஒரு வணக்கம்(what’s up ,how are you doing) அல்லது எப்படி இருக்கிறாய் என கேட்காமல் செல்வதே இல்லை. எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வதும் , சிறுபிழைக்கும் மன்னிப்பு கேட்பதும் அவர்களது சிறப்பு குணங்கள்.

மும்பை வாசிகளின் உதட்டில் (ஐந்து வயது குழந்தை முதல் எம்பது வயது கிழம் வரை) மாதர் சோத் என எப்போதும் இருப்பது போல் இவர்களுக்கு திட்டுவதும் , பாராட்டுவதும் எல்லாம் மதர் பக்கர் என்று தான் .
அவர்களுக்கு ஒரே அதிசயம் எப்படி இந்தியர்கள் ஒரே வீட்டிற்குள் பல பேர் ஒன்றாய் வாழ்கிறீர்கள் என்பதும், எப்படி ஒரே மனைவியுடன் ஒன்றாக பல ஆண்டுகள் வாழ்வதும் தான். எங்கள் உணவுக்கூடத்தில் தினமும் ராணுவ வீராங்கனைகளும், ராணுவ வீரர்களும் பணியில் இருப்பர். அன்று புதிதாக வந்தபெண்ணை பார்த்து கமல் அதிர்ச்சியடைந்து விட்டான். முதல் பார்வையில் அசப்பில் தனது மனைவியின் சாயல் என்றான். மஞ்சள்கலந்த இந்திய வெள்ளை நிறமும், அழகான உடற்கட்டும் மலர்ந்த முகமும் கொண்டிருந்தாள். சில மாதங்களுக்கு பின் அவளைகாணவில்லை. கமல்தான் விசாரித்தான். அப்போது அவள் கர்ப்பமடைந்து விட்டதால் விடுமுறையில் அமெரிக்கா சென்றுவிட்டதாக சொன்னார்கள். அவர்களுக்கு இது சாதரணமான விசயம் .ஏனனெனில் ஈராக் போர்முனைக்கு வந்த வீராங்கனைகள் பலரும் கர்ப்பமானது போலவே, மனைவியை ஊரில் விட்டுவிட்டு பணிக்கு வந்த வீரர்களின் மனைவிமார்கள் அங்கு நிறையபேர் கர்ப்பமடைந்து விட்டதாக செய்திகள் வந்தது.

 

 

 

 



எங்கள் நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. அதனால் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் பணிகள் நடந்தது. எங்கள் உணவுக்கூடத்தில் சன்னி, ஜெசிக்கா என இரு பெண்கள் உட்பட அமெரிக்கநிறுவனம் சார்பாக பலர் பணியில் இருந்தனர். சன்னி நூறு கிலோ எடையுள்ள நல்ல உயரமான, குண்டான பெண். ஜெசிக்கா ஒல்லியான, குள்ளமான உடல்வாகு கொண்டவள். இருவரும் கறுப்பிகள்.இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு. ஜெசிக்காவிற்கு, மார்கல், மல்லிக் என இரு மகன்கள். திருமணத்தில் விருப்பமில்லை. குழந்தைதேவைப்பட்டது, பெற்றுகொண்டோம் என்றார்கள்.

ஜெசிக்கா எங்கள் குழுவினர் அனைவரும் விரும்பும் பெண்மணி . அன்பானவள், மலர்ந்த முகத்துடன் எங்கள் குழுவின் சமையல்பணியில் எப்போதும் உதவி செய்பவள் . கார்த்திதான் அவளுக்கு தமிழ் கற்றுகொடுத்தான். காலையில் கண்டால் தமிழ் பேசும்நண்பர்களிடம் ஹாய் தம்பி வணக்கம் என்று தான் பெரும்பாலும் சொல்வாள்.நான் முதல் முறை விடுமுறையில் ஊருக்கு சென்று வந்தபின்தான் எனக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. உணவுக்கூடத்தில் சன்னியும் , வேறு சில அமெரிக்கரும் கேட்டனர்.

“திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் உன் காதலியா? முன்பே அவளிடம் பழகியிருக்கிறாயா?” வகையறா கேள்விகள். நான்”இல்லை”என்றேன். “தெரியாத பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்” என வியப்புடன் கேட்டனர்.அப்போது ஜெசிக்கா விடுமுறையில் சென்றிருந்தாள். திரும்பிவந்தவள் விஷயம் அறிந்து என்னிடம் கேட்டாள், “ஷாகுல் நீ திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா?”. “ஆம்” என்றேன். மீண்டும் அதே கேள்விகள் “அவள் உன் காதலியா, முன்பே அவளை தெரியுமா,பழக்கம் உண்டா” என.

அடுத்து “ஷாகுல் நீங்கள் எல்லாம் திருமணதிற்கு முன் சேர்ந்து வாழ்வதோ,உறவு வைத்து கொள்வதோ இல்லையா?” என. அப்போது நமது மதுரை வீரன் அமர் சொன்னான்,”இப்பதான் எங்கூர்ல திருமணத்திற்கு முன் பொண்ண பார்க்கவே முடியுது என் அப்பாகாலத்துல முதலிரவுக்கு தான் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்ப்பாங்களாம். பொண்ணுகள கண்ணுலேயே காட்டமாட்டாய்ங்க”என்றான் .

நீங்க திருமணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் முடிச்சிட்டு, அப்புறம் திருமணம் ஆன உடன் டமால்னு விவாகரத்து. நாங்க கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதலிக்கவே ஆரம்பிப்போம். அதுதான் எங்க திருமணங்கள் உடையாம இருக்கு” என்றான். அமர் இங்கிலாந்தில் ஹோட்டலில் மேலாளர் பணி கிடைத்தும் இருமுறை விசா மறுக்கபட்டதால் இந்த வேலைக்கு வந்தவன்.
ஈகிள் நெஸ்ட் எனும் முகாமுக்கு செல்லும் குழுவில் அவனும் இருந்தான். பயணத்தின் நடுவில் இரவு தங்குவதற்காக திக்ரித் வந்தபோது நான் அமரை பார்த்தேன். மும்பையில் ஒன்றாக சில பணிகளுக்கு சென்றிருக்கிறோம். நல்ல பழக்கம் இருந்தது .நான்”அமரிடம் லோகேஷ் இந்குதானிருக்கிறான். தமிழ்பேசும் நண்பர்கள் மேலும் சிலர் உள்ளனர்” என கார்த்திக், கமல், முருகன்,விஜயகுமாரை அறிமுகபடுத்தினேன். தமிழர்களின் குழுவை கண்டு அவன் இங்கு வேலைசெய்ய விருப்பபட்டு எங்கள் மேனேஜரிடம்”நான் திக்ரித் முகாமில் வேலைசெய்ய விரும்புகிறேன்” என்றான். “உன் பணிக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண் தருவாய்” என அவர்கேட்டார் .அமர் “ஏழு” என்றான். அவர் ஒத்துக் கொண்டு இங்கு இருக்க சம்மதித்தார் அமர் சமையல் கலையில் மூன்று வருட பட்டபடிப்பும் நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்த அனுபவமும் பெற்றிருந்தான்.

எங்களின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் நியூசிலாந்தை சேர்ந்த நைஜிலிடம் ஒருவன் கேட்டான், “சார் உங்களுக்குதிருமணமாகிவிட்டதா” என . “ஆம் பலமுறை” என பதிலளித்தார். “நான்கு முறை திருமணம் ஆனது . இப்போதும் தனியாக தான்வாழ்கிறேன்” என்றார். அடுத்த திருமணத்திற்கு தயாராக இருக்கிறார் போல .ஆலன் குக் இங்கிலாந்தை சேர்ந்தவர். அவருக்கு இருபத்தி ஒன்பது வயதில் மகன் இருப்பதாக சொன்னார். ஒருமுறை விடுமுறைக்கு தாய்லாந்து சென்று வந்தவர் அங்கு பதினெட்டு வயது இளம்பெண்ணை மணந்துவிட்டு புது மாப்பிளையாக வந்தார்.

 

 

 

 



எங்களிடம் உணவு எடுக்கவரும் ராணுவ வீரர் அல்லாத ஒரு அமெரிக்கர் கொஞ்சம் வயதானவர் , எப்போதும் இந்திய கலாச்சாரத்தை மெச்சுவார். இந்தியாவைப்போலவே தாய்லாந்திலும் திருமணதிற்கு பின் சேர்ந்தே வாழ்வார்கள். அதனால், அவர் தாய்லாந்துபெண்ணை மணந்துகொண்டு இருபது வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வதாக பெருமையுடன் சொல்வார். அதுபோல் அமெரிக்க நிறுவனத்தின் வெள்ளைகாரப் பெண் ஒருத்தி ஐம்பது வயதை நெருங்கியவள். மகளுக்குத் திருமணமாகி பேரப்பிள்ளைகளும் இருப்பதாக சொல்லுவாள். ஆனால் நல்ல அழகு அந்த வயதிலும். அங்கு சாப்பிட வரும் ஒருவருடன் நல்லபழக்கம். முதலில் சகோதரன் என சொல்வாள். கொஞ்ச நாட்களில் உணவுக்கூடத்திற்கு வெளியே பொது இடத்தில் அவர்கள் ஓருடலாய் நிற்பதும் , முத்தம் கொடுப்பதையும் யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

விடுமுறையில் இருவரும் ஒன்றாக அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி வந்தபோது திருமணம் செய்து கொண்டதாக மோதிரத்தை காண்பித்தாள். அவர்களுக்கு அந்த வயதிலும் ஒரு திருமணம் தேவை படலாம். அதற்காகவே உடலையும் , அழகையும் பேணிகாப்பார்கள் போல. லிசா, ஜெசிக்காவை போல் அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்பவள். இரவு பணியிலிருக்கும் பெண். நல்ல கறுப்பான,குட்டையான, குண்டு பெண்மணி .யாருக்கும் அவளை பிடிக்காது. எங்களில் பலரை விரல் அசைத்து அழைப்பதும், கத்துவதும்,அவளது மொழியும் காரணம் . அவளுக்கும், ராணுவ வீரன் ஒருவன் இங்கே காதலன். இரவு பணியில் இருப்பதால், கமல்சொல்லித்தான் எங்களுக்கும் தெரியும். சில நேரங்களில் கமல் போர்க் லிப்ட் வாகனத்தை ஓட்டி வரும் போது அடுமனை அருகில் ஒரு திருப்பம் அங்கே இருந்து கமல் என கத்துவாளாம். கமல் உடனே வாகனத்தின் விளக்குகளை அனைத்துவிடுவான். லிசாவின் காதலன் வராத இரவுகளில் இருட்டில் வாகனம் ஓட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கில்லை.

நான் அங்கிருந்து வந்தபின் எங்களுடன் இருந்த ஒரு இளம் இந்தியனை லிசா திருமணம் செய்துகொண்டு மும்பை வந்ததாகஅறிந்தேன். அவன் அமெரிக்க செல்ல வேண்டுமென கனவுடன் இருந்தவன்.

இருந்தாலும் ஒழுக்கமானவர்கள் தான் நிறையபேர் இருந்தார்கள் ஒடிஸ் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..
அடுத்த கட்டுரைமழைவான்
நாஞ்சில் ஹமீது
பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி ,பாபூஜி மேல்நிலைப்பள்ளி ,மணவாளகுறிச்சி. பத்தாம் வகுப்பிற்குபின் ,மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி,பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/ ஷாகுல் ஹமீது , 14 june 2020
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments