ஓடிஸ்
ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு இருபது பேரை கொண்டகுழுவில் ஒருவர். தினமும் மாலையில் மட்டும் அவர்கள் குழுவுக்கு உணவு எடுத்துச் செல்ல வருவார். ஓடிஸை போலவே, பலரும்இதுபோல் தூரத்திலிருக்கும் குழுவுக்கு உணவு எடுத்துச் செல்வர் . உணவுகளை அடுமனையில் வாங்கிகொள்வார்கள். ஸ்டோர்ஸில் உள்ள எங்களிடம் வருவது, அவர்களுக்கு வேண்டிய கோக் அல்லது பெப்சியை வாங்கிச் செல்ல .
ஓடிஸ் தினமும் வருவதால் எங்களுடன் நன்கு பழகியிருந்தார். எங்களுடன் இருந்த திருச்சி அரியலூர் விஜயகுமாருக்கும்,ஓடிஸுக்கும் ஒரு ஒப்பந்தம். தினமும் விஜயகுமார், ஓடிஸுக்கு தமிழில் சில வார்த்தைகள் சொல்லிக்கொடுப்பதும், ஓடிஸ் விஜயகுமாருக்கு ஸ்பானிஸ் சொல்லிகொடுக்க வேண்டும் என்பதே. எங்களுடன் பணிபுரிந்த பலர் நான்கு மொழி பேசுவார்கள்.மங்களூரைச் சார்ந்த ஓரன்ஸ் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மாராத்தி, கொங்கனி ஆகிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலமும் என ஏழு மொழிகள் பேசுவதை ஆச்சரியமாக பார்ப்பேன். மும்பையில் அறையில் இருக்கும்போது நண்பன் ஷாஜி சொல்வான் “லே ஒனக்கு ஒரு மொழி கூட தெரிஞ்சா ஒரு ஆளு ஒனக்க கூட இருக்கது போலயாக்கும்”. ஓரன்ஸ் ஒரு ஆளல்ல எழுவர் என எண்ணிக்கொண்டேன் .
முகாமில் தொலைபேசி நிலையத்துக்கு அருகில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சனிக்கிழமைகளில் நடக்கும் சல்சா டான்சில் ஆண்களும், பெண்களும் ஜோடியாக ஆடுவார்கள். யாரும் யாருடனும் ஜோடி சேர்ந்து ஆடலாம். சிலர் சில சமயங்களில் ஜோடிகிடைக்காமல் தனியாக ஆட்டத்தை தொடங்குவர். பெரும்பாலும் ஆடத் தொடங்கிய சில நிமிடங்களில் ஜோடி சேர்ந்துவிடும்.
எங்களுடன் வேலைசெய்தவர்களில் ஏழெட்டுப்பேர் இரவு ஒன்பது மணிக்கு பின் பணி முடித்தபின் மூன்று கிலோமீட்டர் தூரத்தில்இருக்கும் மனமகிழ் மன்றத்திற்கு வண்டியில் செல்வர். அதில் விஜயகுமாரும் ஒருவன். எங்கள் நண்பர்கள் ஆடுவதில்லை. பார்வையாளர்கள் மட்டுமே அங்கு .
ஒரு சனிக்கிழமையில் சல்சா ஆட்டம் பார்க்கப்போய்விட்டு வந்த மறுநாள் மாலையில் ஒடிஸ் வந்தபோது, விஜயகுமார் ஒடிஸிடம்“நீ நேற்று ஆடிக்கொண்டிருந்ததை பார்த்தோம். ஏன் தனியாக ஆடினாய்? அவளுடன் சேர்ந்து ஆட வேண்டியதுதானே?” என அங்கேஆடின ஒரு அழகான ஒருத்தியை குறித்து கேட்டான். “அவளுடன் ஜோடி சேர பலர் கனவுகளுடன் இருக்கிறார்கள்” என்றான்.
விஜயகுமார் சொன்ன அந்த வீராங்கனை பேரழகி. அவளின் பெயர் பலரின் நினைவிலிருந்து அகலவேயில்லை. குறிப்பிட்ட அந்தஅழகிய பெண் மாலையில் உணவுக்கூடத்திற்கு வரும்போது அவளை பார்ப்பதற்காகவே இளைஞர் கூட்டம் ஒன்று உணவு கூடத்தின்வெளியே காத்து கிடப்பார்கள். புகைத்துக் கொண்டும் , கைக்கடிகாரத்தில் மணியை பார்த்துக்கொண்டும் சுத்தி சுத்தி வருவர்.
அவள் ஐந்தடிக்கு மேல் உயரம். நல்ல நிறமும், கொஞ்சம் தென்னிந்திய முகச்சாயலும் கொண்ட அழகுடையவள். இயல்பான புன்னகை எப்போதும் இதழ்களில் இருக்கும். இருபது அல்லது இருபத்திரண்டு வயதை கொண்ட அழகு மங்கை .
ஓடிஸ், விஜயகுமாரிடம் சொன்னான் “ஐ யாம் எ பாமிலி மேன்” என. “எனக்கு குடும்பம் இருக்கிறது. நான் மற்ற பெண்களுடன் இடுப்பில் அணைத்து ஒட்டி, உரசி ஆட என்னால் முடியாது” என்றான். நாங்களெல்லாம் வாயடைத்து நின்றோம். பெரும்பான்மையானவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டிருப்பதை நாங்களே கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும்போது, கொஞ்சமும் சுய ஒழுக்கம் தவறாத ஒருவனும் இருக்கிறான் என்பதே எங்களனைவருக்கும் ஆச்சர்யம் .அடுத்த சில நாட்களில் ஓடிஸ் “விடுமுறையில் ஊருக்குச் செல்கிறேன். ஒரு மாத விடுமுறை. பின்னர் நாம் சந்திப்போம். நான் இங்குவரும்போது என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். என் குழந்தையை முதன்முதலாக பார்க்கப் போகிறேன்” எனமகிழ்ச்சியுடன் எங்களிடம் விடைபெற்றான் .
உடன் வந்த வேறு ஒருவரை காட்டி, “இவன் தான் நாளை முதல் உணவு எடுத்துச்செல்ல வருவான். எங்கள் குழுவில்இருக்கிறார். என்னை நடத்தியது போலவே இவரையும் சிறப்பாக நடத்துங்கள்” என வேண்டினான் ஓடிஸ். அவன் அழைத்து வந்திருந்த ராணுவ வீரனிடம், “இவர்கள் அனைவரும் இந்தியர்கள், கண்ணியமானவர்கள் உனக்கு ஒரு குறையும் இருக்காது” எனசொன்னான். நான்,
முருகன், விஜயகுமார் ஓடிஸை மனதார வாழ்த்தி வழியனுப்பி வைத்தோம். ஓடிஸ் சென்ற பின் விஜயகுமார்சிலரிடம் ‘அமிகோ’, ‘கெப்பாச’ என சில நாட்கள் சொல்லிக்கொண்டிருந்தான். அதற்குப்பிறகு யாரும் அவனுக்கு ஸ்பானிஷ்சொல்லிதரவில்லை.
ஆனால் அவனிடம் தமிழ் கற்றுககொண்ட சிலர் , ‘வணக்கம்’, ‘கோழிக்குழம்பு நல்லாயிருக்கு’ என சொல்லதொடங்கியிருந்தனர்.
ஊருக்குச் சென்ற ஒருமாதத்தில் ஓடிஸ் திரும்பி வந்தான். விடுமுறை முடிந்ததும் சரியாக போர்க்களத்திற்குஅனுப்பிவைத்துவிடுவார்கள் போல. அன்று மாலை ஓடிஸ் மிக உற்சாகமாகத்தான் இருந்தான். விஜயகுமாரை கண்டதும்கட்டியணைத்துக்கொண்டான். சரக்குப் பெட்டகம் அருகில் அடுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளில் அமர்ந்துகொண்டு ஸ்பானிஷில் இருவரும் உரையாடத் தொடங்கினர் .முருகன் “பாய் ஒரு மாசம் இவிங்க தொந்தரவு இல்லாம இருந்தது தொடங்கிட்டாய்ங்க இப்ப” என சொல்லி சிரித்தான்.
ஓடிஸ் எங்கள் அனைவரிடமும் புன்னகையுடன் கைகுலுக்கி நலம் விசாரித்தான். விஜயகுமார் “இப்போது நீ சொல் நண்பா, நீ எப்படிஇருக்கிறாய்? விடுமுறை உற்சாகமானதாக கழிந்ததா? “ என கேட்டான் .
ஓடிஸ் “ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ். முதலில் நான் நல்ல செய்தியை சொல்கிறேன். எட்டு மாதங்களுக்குப் பின் என்குழந்தையை நான் பார்த்தேன் சந்தோஷமான நாள் அது” . குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பும், தந்தையை அடையாளம் கண்டுகொண்டு கைகளை உயர்த்தி தூக்க சொன்னதையும் , குழந்தையுடன் குழந்தையாகவே மாறி அவன் விளையாடி மகிழ்ந்ததையும்,குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சொல்லி சிரித்தான் .
குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்ததை அவன் சொல்லும்போது அவனது உடலமொழியும், முக பாவனையும் அவன்அனுபவித்ததை எங்கள் கண்முன்னே காட்சியாக்கியது.
“அடுத்து பேட் நியூஸ்” என்றான். “என் மனைவி இப்போது என்னுடன் இல்லை. நான் செல்லும்போது அவள் அவளுடைய புதுக்காதலுடன் வீட்டின் உள் அறையில் இருந்தாள்” என்றான் .
அதைக் கேட்ட எங்களுக்கு நம்பவே இயவில்லை. முருகன் “என்ன பாய், இது கூறு கெட்ட கலாச்சாராமா இருக்கு. இவன்அநியாத்துக்கு நல்லவனா இருக்கான். எங்கூர்லனா அப்பவே வெட்டி போட்டுருவாய்ங்க” எனக் கொதித்தான் . “முருகா, அவங்களுக்குஇது சாதாரணம்” என்றேன் நான்.
“ஆமா இங்க உள்ளதுல, இனி அந்த செண்டு கிழவி மட்டும் தான் கல்யாணம் செய்ய பாக்கி” என சொல்லி சிரித்தான். தினமும்உணவுக்கூடத்தில் பணியிலிருக்கும் ஒரு வயதான தோற்றமுடைய பெண்மணி, தூரத்தில் வரும் போதே முருகன் சொல்வான், “செண்டு கிழவி வருகிறாள்” என. அவ்வளவு உயர்ந்த வாசனை திரவியத்தை எப்போதும் உபயோக்கிப்பாள்.எங்களால் ஓடிஸுக்கு ஆறுதலாக எதுவும் சொல்ல முடியவில்லை. மௌனனாமாக கடந்தது சில நிமிடங்கள். அடுத்து வந்தநாட்களில் ஓடிஸ் இயல்பாக இருந்தான். விஜயகுமாருடன் ஸ்பானிஷ் பேசி, தமிழ் கற்றுக்கொண்டிருந்தான் .