ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02

0
546

அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன்

நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும் முன்னரே, விமான நிறுவனத்தில் பணிபுரியும், வட்ட முகமும் ,பெரிய கண்களையும் உடைய அழகான பெண் ஒருத்தி எங்களுக்கு மதிய உணவுக்கான சீட்டுக்களைத் தந்தாள். முகம் மட்டும் தெரியும் வகையில் உடையணிந்த இஸ்லாமியப் பெண் அவள்.

பஹ்ரைன் அகிலஉலக வானூர்தி நிலையத்தில் அமைதி அப்பிக் கிடந்தது. நாங்கள் மாலைவரை அங்கேயிருந்த நாற்காலிகளில் அமர்ந்தும் ,படுத்தும், துயின்றும் நேரத்தைக் கடத்தினோம். மாலையில் குவைத் செல்லும் விமானம் மேலும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. “தேநீர் தருகிறோம், வாருங்கள்”, என ஒலி பெருக்கி எங்களை அழைத்தது. ஒரு நாளில் பனிரெண்டு மணிநேரம் வானூர்தி நிலையத்தில் காத்திருப்பது பெரும் வதை.

 

 

 

 

 

 

கருக்கலில் அங்கிருந்து அடுத்த விமானம் வான்நோக்கி பறந்தது போலிருந்தது. விரைவிலேயே குவைத் வந்துவிட்டது . பஹ்ரைன்-குவைத் ஐம்பைத்தைந்து நிமிடப் பயணமே. விமானம் குவைத் வானுர்தி நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதும், விமான பணிப்பெண், ஆங்கிலத்திலும், அரபியிலும் ஊள்ளூர் நேரம், வெப்பநிலை ஆகியவற்றை அழகிய குரலில் சொன்னாள். அப்போது அங்கே இரவாகியிருந்தது. குடியுரிமை,சுங்க சோதனைகளை முடித்து வெளியே வரும்போது எங்கள் நிறுவனப் பெயர் பொறித்த தொப்பியணிந்த குமார் எனும் மலையாளி எங்களுக்காக வாயிலிலேயே காத்திருந்தார். “உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

நாங்கள் மொத்தம் இருபதுபேர். எங்கள் அனைவரையும் வாகன நிறுத்துமிடத்திற்கு அவர் அழைத்து சென்றார். குவைத்தின் செழிப்பை அங்கிருந்த உயர்தர வாகனங்களில் கண்டேன். பயண பைகளுடன் எங்களுக்கான சிற்றுந்தில் ஏறிகொண்டோம். இரண்டு மணி நேரப் பயணம் என நினைக்கிறேன். ஈராக் எல்லையில் உள்ள அப்தலி எனும் பாலைவனத்தில் எங்களைக் கொண்டு சேர்த்தனர். அங்கே துணியால் ஆன பெரிய கூடாரம் இருந்தது. அதுதான் எங்களுக்கான தங்கும் குடியிருப்பு என்றார் குமார்.

 

 

 

 

 

 

 

அங்கு நேபாள நாட்டைச் சார்ந்த இரு காவலர்கள் மட்டுமே அப்போது இருந்தனர் . வேறு முகாமிலிருந்து எங்கள் அனைவருக்கும் உணவு கொண்டு வந்திருந்தனர். கோழிக் குழம்பும்,வெள்ளை சாதமும், பச்சைக் காய்கறிகளும் இருந்தது. அனைவருக்கும் நல்ல பசி. வயிறு நிறைய உண்டபின், கூடாரத்தில் எங்களுக்காக மென்மெத்தை இருந்த படுக்கைகளில் துயிலச் சென்றோம். அறுபதுபேர் வரை தங்கும் வசதியுடைய பெரிய கூடராம் அது .

காலையில் விழித்து கூடாரத்திலிருந்து வெளியே வந்து பார்த்தால், அது பெரும் பாலை , கண்ணுக்கெட்டிய தூரம்வரை மணல், மணல்பரப்பு இளமஞ்சள் நிறத்தில் விரிந்துகிடந்தது. இரவில் வரும்போது வெட்ட வெளியில் பயணிப்பது போலிருந்தது. அங்கு பணியாளர்கள் தங்குவதற்கு இரண்டு சிறிய கூடாரங்களும், அடுமனைக்கு ஒரு பெரிய கூடாரமும் இருப்பது காலையில்தான் தெரிந்தது. குளிரூட்டி பொருத்தபட்டிருந்தது. ஆனால், அது இயங்கும் நிலையில் இல்லாமலிருந்தது அப்போது.

நெகிழியில் செய்த ஒரு கதவுடன் கூடிய மிகச்சிறிய அறை தான் கழிப்பறை. அதை எங்கும் நகர்த்தி செல்லலாம். உள்ளே, ரசாயன திரவம் இருக்கும் அதனால், அது துர்நாற்றம் எடுப்பதில்லை. தினமும் காலையில் ஒரு வண்டி வந்து கழிப்பறையின் கழிவுகளை உறிஞ்சி எடுத்துவிட்டு நன்னீரால் சுத்தம் செய்து புதிய ரசாயன திரவத்தை ஊற்றிச் செல்வர். நான் காலையில் முதல் அல்லது இரண்டாவதாக செல்வேன். அதனால், சுத்தமான கழிப்பறை எனக்கு தினமும் உறுதி .முதல் நாள் உள்ளே போய்விட்டேன். மலம் கழித்து முடிந்த பின்னர்தான் தெரிந்தது, அங்கே தண்ணீர் இல்லை என. துடைக்கும் மென்தாள்ச் சுருள்தான் தொங்கிக் கொண்டிருந்தது . முன்பு உல்லாசக் கப்பலில் வேலை செய்த நண்பன் காதர் சொன்னது நினைவுக்கு வந்தது. “லே நான் கக்கூசுக்கு போய்ட்டு நேர குளிக்க போயிருவேன், அவனுவோ பேண்டா கழுவ மட்டானுவோ, பேப்பர்ல துடக்க கேசு லே”. நானும் நேராக குளியலறைக்குச் சென்றேன்.கதிரவன் உச்சியில் இருக்கும் வேளையில் அதில் சிறுநீர் கழிக்கச் செல்வதே கடினம். “சூடு மண்டய பிளக்குது” என்பான் பீட்டர்.

 

 

 

 

 

 

ஒரு பிரபல சமையற்காரன் சுனில் வந்த பத்து நாட்களில் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அந்தப் பாலையில் நீண்ட தூரம் சென்று, வெட்ட வெளியில் காற்று வாங்கி, மலம் கழித்து வருவான். அந்தச் சிறிய நெகிழியறையில் சில நிமிடங்கள் இருப்பது சுனிலுக்கு ஒவ்வாமையை தந்திருக்கும் .

குளிப்பதற்கு, தற்காலிகமாக வடிவமைக்கப்பட்ட குளியலறைகள் எதிர் எதிர் வரிசையில் ஐந்து வீதம் இருந்தது. நல்ல வசதியானவை. கதவுதான் கிடையாது. ஒரு மெல்லிய நெகிழித் திரைச் சீலை மட்டுமே தொங்கும் . உள்ளே யார் குளிக்கிறார் என யூகித்து விடலாம்.

முகாம்கள் இருந்த இடம் குவைத்-ஈராக் எல்லைப் பகுதி. பெரும் பாலை அது. போர் துவங்கும் முன், அமெரிக்க விமானப் படை இங்குள்ள முகாம்களில் கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டுத்தான் போருக்கு ஈராக்கிற்குள் சென்றிருக்கிறார்கள். ஈராக்கை முழுமையாக தன்வசப்படுத்தியபின் அவர்கள் அமெரிக்க ராணுவத்தரைப்படையிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி நாட்டுக்கு செல்லும் போது, குவைத் வழியாக வந்து, மீண்டும் இங்கு கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு சென்றனர். அங்கே அவர்கள் தங்கியிருந்த நாட்களில் உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் நான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு வழங்கபட்டிருந்தது .எங்களது முகாம் போல, விமானப் படைக்கு உணவு தயாரித்து வழங்க மொத்தம் ஆறு முகாம்கள் இருந்தன. நாங்கள் சென்ற நான்கு நாட்கள் தினமும் எங்களுக்கான உணவு தாயரித்து சாப்பிடுவோம். வேறு பணிகள் எங்களுக்கு இல்லை .தினமும் இருபது பேர் வீதம், ஐந்து நாட்களில் நூறு பணியாட்கள் வந்து எங்களுடன் இணைந்துவிட்டனர். தங்கும் இரு கூடாரங்களும் நிரம்பியது .

அமரிக்காவை சார்ந்த அதிகாரி எரிக் ஐந்தாம் நாள் வந்து சேர்ந்தார் . ஆறு அடிக்கு மேல் உயரமும், நல்ல குண்டான உடலும் கொண்டவர். அவருடன் உணவு தயாரிப்பு மேலாளர் ஆண்டி என ஒரு இங்கிலாந்து நாட்டுக்கார இளைஞன் ஒருவனும் வந்தான். நூறு பேரையும் ஒன்றாக அடுமனைக்குள் நிறுத்தி நடுவில் நின்று யானையைப் போல் பிளிறினார், அமெரிக்க அதிகாரி எரிக். நாங்கள் செய்ய வேண்டியவை, கூடாதவைகளை விவரித்தார். அவர் உதட்டு நுனியில் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எதுவுமே எனக்குப் புரியவில்லை. நண்பன் வெங்கட்ராமன், நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்தவன். நன்றாக ஆங்கிலம் பேசுவான். அவன் அருகில் நின்று கொண்டு, விசயத்தை கேட்டுக்கொள்வேன்.

 

 

 

 

 

 

 

வயதான தலைமை சமையற்காரர்கள் இருவர் தலைமையில், காலை எட்டு முதல் இரவு எட்டு வரையும், இரவு எட்டு முதல் காலை எட்டுமணி வரையிலும் என இரு மாற்றுதல்களில் பணி. இரண்டு குழுவாக பணியாளர்கள் பிரிந்தோம். தலைமை சமயல்காராருக்கு ஐம்பத்தியைந்து வயது. அப்போது நினைத்தேன், இந்த வயதில் வேலை செய்யக்கூடாது, இது ஓய்வெடுக்க வேண்டிய வயது என.ஆறாம் நாளில் இருந்து பணி துவங்கியது. காலை ,மாலை ,இரவுக்கு இரண்டாயிரம் வீதம் ஆறாயிரம் பேருக்கான உணவு வகைகளை சமைக்கத்துவங்கினோம். அவையாவும் நான் அதுவரை பார்த்திராத அமெரிக்க உயர்தர உணவு வகைகள். ஹாட்டாக், ஹாம்பர்கர், பார்பிக்கியூ சிக்கன் விங்ஸ், மாஷ் பொட்டாட்டோ, இத்தாலியன் சாசேஜ், ஜாக்கெட் பொட்டாடோ, பீப் ஸ்டீவ், மக்ரோனி வித் மின்ஸ் பீப் , டி போன் ஸ்டேக், ஸ்பெகட்டி……………….. என நீண்டு செல்லும் உணவுகள் அவர்களுடையது. தயாரான உணவுகளை சூடு குறையாமல் இருக்கும் கலங்களில் அடைத்து வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ள உணவுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் குறித்த நேரத்தில், மிக சரியாக .

எனக்குப் பகல் பணி. உணவு கொடுத்தனுப்பும் பாத்திரங்கள் வந்து குவியும். அதைக் கழுவும் பணியில் அமர்த்தப்பட்டேன். ஒரு வாரத்திற்குப் பின் நன்றாக வேலை செய்கிறான் என தலைமை சமையற்காரர் என்னை துணை சமையல் காரனுக்கு உதவியாளாக இருக்கும்படி சொன்னார். பனிரெண்டு மணிநேரமும் அனைவரும் அடுமனையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டே இருப்போம். இவ்வாறாக அன்னிய மண்ணில் பாதம் பதித்து நான் பஸ் பாயாக மாறியிருந்தேன். மும்பையில் நேர் காணலில் அதற்குத்தான் நான் தேர்ச்சி பெற்றிருந்தேன்.

தொடரும்…

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைகள்வனின் காதலி இவள்
அடுத்த கட்டுரைதாயன்பு
நாஞ்சில் ஹமீது
பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி ,பாபூஜி மேல்நிலைப்பள்ளி ,மணவாளகுறிச்சி. பத்தாம் வகுப்பிற்குபின் ,மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி,பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/ ஷாகுல் ஹமீது , 14 june 2020
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments