ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21

3
486

 

 

 

பாயல்

முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள்  இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்க ராணுவ உடையில் வந்த ஒரு இந்தியப் பெண் ஒருத்தி “சப்பாத்தியா?  நான் கொஞ்சம்சாப்பிடலாமா?” எனக் கேட்டு விட்டு பதில் கிடைக்கும் முன் உரிமையுடன் தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து சாப்பிட்டுவிட்டு“நன்றி” என்றாள். அதற்குமுன் அவளை நாங்கள் யாரும் உணவுக்கூடத்தில் பார்த்ததேயில்லை. ஐந்தடியுள்ள, கொஞ்சம் குள்ளமான,வடஇந்திய முக சாயலில் வட்ட முகமும் கொண்டிருந்தாள்.

அமெரிக்கப்படையில் நிறைய இந்திய வம்சாவளியினர் இருந்தனர். . சிலருக்கு இந்திய மொழிகளும் தெரிந்திருந்தது. திக்ரித் முகாமுக்கு  நாங்கள் சென்று இரு மாதங்களுக்குப் பின் சந்தித்து தோழியான பெண் பாயல். பாயல்தான் எங்களில் ஒருவனிடமிருந்து சப்பாத்தியைப் பிய்த்து சாப்பிட்டது. அன்று தான் முதல் சந்திப்பு. எதுவும்பேசிக்கொள்ளவில்லை.  “நன்றி” என சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாள்.

மெக்ஸிகோவில் பிறந்த வீரர்கள் சிலர் தென்னிந்தியர்களை போல கொஞ்சம் காரம் சாப்பிடுபவர்கள். மெக்ஸிகோவின் தட்பவெப்பநிலை தமிழ்நாட்டைப் போலவே இருக்கும். அதனால் சிலர் எங்களிடம் நட்பாகி பணியாளர்களுக்கு என சமைக்கப்படும் கொஞ்சம் காரமான கறியை வாங்கிச் செல்வார்கள். எங்கள் சமையல்காரர்களும் இன்முகத்துடன்  அவர்களுக்கான குழம்பை ஒரு சிறுகுவளையில் தனியாக எடுத்து வைத்து அவர்கள் வரும் வேளையில் கொடுப்பார்கள். சில ராணுவ வீரர்கள்  தமிழில் “கோளி கொலம்பு நல்லா இர்க்கு நன்டி” எனச் சொல்லி செல்வர்.

சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் உணவுக்கூடத்தில் பாயல் என்னைப் பார்த்தாள்.

  “ஹாய்” என்றாள்.

  “இன்று சப்பாத்தி இல்லையா” எனக் கேட்டாள்,

 “இல்லை”  என்றேன்.

 

 

 

 

சிரித்துக்கொண்டே தன்னை அறிமுகம் செய்துகொண்டு “இங்கு இவ்வளவு இந்தியர்களை பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி, எனது தாய்,தந்தையர் முன்பே அமெரிக்காவில் குடியேறி, நானும் அமெரிக்காவில் பிறந்ததால் இந்தியக் கலாச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். எனவே பழக ஆர்வமாயிருக்கிறேன். எனக்கு இந்திய மொழி எதுவும் பேசத் தெரியாது” என்றாள். ஆங்கிலத்தில் ”வெல்கம்” என வரவேற்றோம். “ஈராக் போர்முனைக்கு வரும் முன் நான் இங்கு இந்தியர்களை சந்திப்பேன் என நினைக்கவேயில்லை” என்றாள்.

அடுத்த சில தினங்களில்  நாங்கள் இரவுணவு சாப்பிடும்போது எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதும், ஒவ்வொருவருடைய ஊர்,  இந்தியாவில் அது எங்கிருக்கிறது என்பன போன்ற நிறைய கேள்விளைக்  கேட்டுக்கொண்டே இருந்தாள் பாயல். நிறைய விசயங்களை அறிந்து கொள்ளும்ஆர்வக்கோளாறுதான் என நினைத்துக்கொண்டோம். இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் பெருமையுடன் பேசிக்கொண்டிருப்பாள்.  ஒருநாள் உணவை எடுத்துக் கொண்டு சாப்பிடும் மேஜையில் அமர்ந்துகொண்டு நண்பன் லோகேசின் வருகைக்காக  காத்திருந்தோம்.அப்போது பாயல் “நண்பன் வரும் வரை உணவுண்ணத் தொடங்காமல் காத்திருக்கும் பண்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது” என்றாள்.பாயல், பணியில் இருந்தது முக்கிய அரண்மனையில். ராணுவ கமாண்டோ அங்கு தான் இருந்தார். அது பாதுகாப்பு மிகுந்த இடமாதலால்.  நாங்கள்அங்கு செல்ல அனுமதியில்லை.

 பாயலுக்கு இருபத்தி நான்கு மணிநேர தொடர் பணியும், அதற்குப்பின் இரண்டு நாட்களுக்கு முழு ஓய்வும் இருக்கும். பணியில்இருக்கும் நாளில் அவள் சாப்பிட வருவதில்லை. அவள் தங்கியிருக்கும் அறையில் மேலும் ஐந்து ஆண்கள் தங்கி இருப்பதாகவும்,குளியலறை, கழிப்பறையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருப்பதாகவும் சொல்வாள்.ஒரு மாததிற்குள்ளாக பாயல் என்னுடனும், கார்த்திக்குடனும் மிக நெருங்கிய நட்பாகி விட்டாள்.  தினமும் எங்களைச் சந்தித்து உரையாட தவறுவதில்லை. கார்த்திக்கிற்கு இரவு பணியாதலால்  இரவு ஒன்பது மணிக்குத்தான் பணிக்குச் செல்லவேண்டும். இரவில் எட்டுமணிக்கு முன்பே பாயல் வந்து விட்டால், எங்களின் தங்கும்  கூடாரத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள். சீக்கிரம்பணி முடியும் நாட்களில் நானும் இணைந்து கொள்வேன்.

 உடன் பணிபுரிந்த சிலர்  பாயலின்  ரைபிளை கையில் வாங்கி, அவளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவளது தாய்மொழி குஜராத்தி. அவளுக்கு தெரிந்த  ஒரு சில குஜராத்தி  வார்த்தைகளில் குஜராத்தியர்களுடன் பேசி  சிரிப்பாள். பெங்காளி ஒருவனிடம்“எனக்கு பெங்காளியில் ஒரே ஒரு வார்த்தை தெரியும்” என்றாள்.  “அமி துமாக்கோ பாலோ பாஷி”  (ஐ லவ் யூ ). தன்னுடைய தோழியின் காதலன் பெங்காளி என்பதால் அந்த ஒரு வார்த்தை மட்டும் தனக்குத் தெரியும் என சொல்வாள். இப்படி வயிறு வலிக்க  சிரித்த நாட்கள்பல .பாயல் கூடாரத்தில் அமர்ந்து பேசிகொண்டிருக்கும் போது,  இரவு ஒன்பது  மணிக்கு பகல் பணி முடிந்து நண்பர்கள் வந்து ஆடைமாற்றி உள்ளாடையுடன் கூடாரத்தினுள் உலாவிக் கொண்டுதான் குளியலறைக்கு செல்வார்கள். அதனால் ஒன்பது மணிநெருங்குவதற்கு முன்பே “அக்கா பசங்க வர நேரமாகிவிட்டது கிளம்பு” என கார்த்திக் அவனது மொழியில் விரட்டுவான். “பொறு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது. இரவு பணியாளர் செல்லும் போது செல்கிறேன்” என்பாள். வலுக்கட்டயமாக கூடாரத்திலிருந்து பாயலை வெளியேற்றுவோம். சில நாட்களில் ஒன்பது  மணிக்குப் பிறகும் கூடாரத்திற்கு வெளியே உள்ளே விளக்குத்தூணின் கீழேநின்று பத்துமணி வரை உரையாடிவிட்டு செல்வாள்.

 

 

 

 

 

 “தன்னுடைய பணியிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய பாஸ் மிக நல்லவர் (மூத்த அதிகாரி). தங்குமிடத்தில் சில டார்ச்சர்கள் இருக்கிறது. என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் என்னைவிட கொஞ்சம் உயர் பதவியில் இருப்பவர்கள். எனவே நான்உங்களுடன் இருக்கும் நேரங்களில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதிகமாக உங்களுடன் தான் பேசுகிறேன்,  ஷாகுல்”என்பாள். அவளுக்குத் திருமணம் ஆகியிருந்தது. கணவனைப் பற்றி எங்களிடமும், ஈராக்கில் இந்தியர்களுடன் கிடைத்த நட்பைப் பற்றி கணவனிடமும் சொல்லி இருக்கிறேன் என்பாள். தீபாவளியன்று எங்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, “கார்த்திக்,தீபாவளி சுவீட் எங்கே?”  எனக் கேட்டாள். அவன் பதிலுக்கு சிரித்தான். “சிரித்தால் போதாது,  காரட் அல்வா எனக்கு வேண்டும். செய்துதா” என்றாள். கார்த்திக்கிற்கு அதை செய்யத் தெரியாது. இருந்தாலும் சமாளித்தான்.

பாயல் விடவில்லை “காரட்டை சிறியதாக சீவ வேண்டும், நெய்யும், பாலும் வேண்டும் அவ்ளோதான். இதெல்லாம் இங்கே எளிதாககிடைக்கிறதே. நான் நாளை சாப்பிட வருவேன்” என்று சொல்லி சென்றாள். அன்றிரவே கார்த்திக் ஏலக்காய், நெய் மணம் வீசிய  நல்லசுவையான காரட் அல்வா செய்து யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தான். மறுநாள் பாயல் வந்தபோது அதை கொண்டு வந்துதந்தான். தனக்குப் பிடித்த இனிப்பு காரட் அல்வா, தீபாவளி தினத்தில்  கிடைத்ததில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவள் ,கார்த்திக்கின் இருகைகளையும் பற்றிக் குலுக்கி நன்றி கூறினாள்.

 

 

 

 

 

 ஒருநாள் வந்து கவலையுடன் அமர்ந்திருந்தாள். எப்போதும் பெரிய வெண்பற்கள் தெரிய சிரிப்பவள், சோகமாக இருந்ததைப் பார்த்து கார்த்திக் “என்ன ஆச்சு” எனக் கேட்டான். “இரண்டு நாட்கள் முகாமைவிட்டு வெளியே பயிற்சிக்காக செல்ல வேண்டியுள்ளது .முகாமில் இருப்பது தான் பாதுகாப்பு. வெளியே செல்லும்போது தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக  ராணுவவாகனங்களை குறி வைத்து தாக்குவார்கள்” என சொன்னாள். “அடுத்த சில தினங்களுக்கு நாம் சந்திக்க இயலாது. போய் வருகிறேன். மகிழ்ச்சியுடன் இருங்கள்,   பை” என சொல்லிவிட்டு சென்றாள்.

 பாயல் எங்களுடன் மிக நெருக்கமான நட்பு வைத்திருந்தாள். அவள் உணவுக்கூடத்திற்கு வரமுடியாத நாட்களில் பகல் பொழுதில்நாங்கள்  பணியில் இருக்கும்போது வந்து ஒரு ஹாய் மட்டும் சொல்லி முகம் மலர சிரித்துவிட்டு செல்வாள். குளிர் காலம்தொடங்கியிருந்த சமயம். அப்போது ஒருநாள் காலை உணவுக்கு வந்தவள் என்னை சந்தித்து, “ஷாகுல் குளிருக்கான வெப்பஆடைகளை அணிந்து வந்துவிட்டேன் .இப்போது ரொம்ப சூடாக இருக்கிறது. எனக்கு ஆடை மாற்ற வேண்டும் என்னை உங்கள் தங்கும் கூடாரத்தினுள் அழைத்துச்செல்” என்றாள். 

 “நீங்களே போகலாமே என் படுக்கை அருகில் மறைவான இடம் இருக்கிறது போய் வாருங்கள்” என்றேன். “வேண்டாம் நான் தனியாகபோவது சரியில்லை, நீ என்னுடன் வா . இரவு பணி முடிந்த உன்  நண்பர்கள் அனைவரும்  உள்ளே இருப்பார்கள். நான் மட்டும்தனியாக செல்வது ………..வேண்டாம்” என்றாள்.

நான் உள்ளே அழைத்துச் சென்று குளிரூட்டியின் அருகில் உள்ள மறைவான இடத்தைக் காண்பித்துவிட்டு சற்று விலகிவந்து  நின்றுகொண்டேன். ஆடை மாற்றியபின் ராணுவ சீருடையின் மேல் சட்டைக்கு உள்ளே அணியும் வெப்ப ஆடையை என்னிடம் தந்து “இங்கே வைத்துக்கொள் இரவில் சந்திக்கும்போது வாங்கிகொள்கிறேன்.  மிக்க நன்றி” என கூறி சென்றாள்.

 

 

 

 

 

4.5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
3 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Moni Aash
Moni Aash
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very friendly character is Paayal.

Gobikrishna D
Reply to  Moni Aash
4 years ago

Yes bro.

Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

(y)