ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24

0
445

 

 

 

 

 

உண்ணி கிருஷ்ணன்

முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது. பாலை மணலின்அதே நிறம், வெளிர்மஞ்சள் என சொல்லலாம். இவர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசுவதே இல்லையோ? என எனக்குள் எப்போதும்கேள்வி எழும். குவைத், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகளில் கட்டிடங்கள் இப்படித்தான் இருக்கிறது.

மனமகிழ் மன்றக் கட்டிடம் கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்தது. வாகனங்கள், கட்டிடத்தின் வலப்பக்க நுழைவுவாயிலில் நுழைந்து படிக்கட்டு வரை சென்று ஆட்களை இறக்கிவிட்டு இடப்பக்கமாக வெளியில் வர முடியும். ஒரே நேரத்தில் இரு பெரியவாகனங்களை நிறுத்தி வைக்கும் வசதி அந்தக் கட்டிட முகப்பில் இருந்தது. முகப்பில் இருக்கும் மரக்கதவின் மேற்பகுதி அரை வட்டவடிவிலும், அழகிய வேலைப்பாடுகளுடனும் இருந்தது. கட்டிட வாயிலில் இருக்கும் ஆறேழு படிகளில் ஏறி உள்ளே சென்றால், இருபது அடிக்கு மேல் உயரமுள்ள மிகப்பெரிய கூடம். கூடத்தின் மத்தியில் ஒரு உயர்தர அலங்கார விளக்கு. அதிலுள்ளவெண்கற்கள் வைரமென விழிமயங்கும். இடப்பக்கம் ஒரு பெரிய அறை. அது அப்போது உடற்பயிற்சி மையமாகஇயங்கிக்கொண்டிருந்தது. அதையொட்டி ஐந்தடி அகலமுள்ள வளைந்து மேலேறி செல்லும் படிக்கட்டுகள் மாடிக்கு செல்பவை.மாடியில் வட்டவடிவிலுள்ள மரத்தாலான தடுப்பு சுவரின் அருகில் நின்று கீழே கூடத்தை நோக்குகையில் நவீன அரண்மனையில் இருக்கிறோம் என உணரச்செய்யும். மாடியிலும், நான்கைந்து பெரிய அறைகள் இருந்தன. மாடியறை ஒன்றில் இருபது கணினிகள் இணைய வசதியுடன் இருந்தது. ஓய்வு நேரத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் அதிகபட்சம் அரை மணி நேரம் இணைய உலகில்மேய்ந்துவிட்டு வரலாம். கணினி மையம் நிரம்பி இருக்கும்போது பதிவு செய்துவிட்டு தன் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும்.ஓய்வு நேரத்தில் நானும் நண்பர்கள் சிலரும் அதை பயன்படுத்தினோம். வெங்கி அண்ணா, நண்பன் ஹபீப்புக்கு மின்னஞ்சல்கள்செய்திருக்கிறேன்.

வெளியே, பேரீச்சம்பழங்கள் காய்த்து தொங்கும் குட்டையான பேரீச்சம் மரங்கள். ஒரு சிறு புல் வெளி கூட இருந்ததாகநினைவு. மஞ்சள் நிறத்திலிருக்கும் பாதி பழுத்த பழங்களை பறித்து சில நாட்கள் வைத்திருந்தால் நன்கு பழுத்துவிடும். நல்ல சுவையுடனும், தேன் போல இனிப்பும் உள்ளது. அதுபோல் வேறெப்போதும் நான் பேரீச்சம்பழம் சுவைத்ததேஇல்லை.

திக்ரித் ஈராக்கின் வடபகுதி எல்லை தாண்டினால் துருக்கியும், துருக்கியை மிக ஒட்டியே ஐரோப்பாவும் இருப்பதால்இப்பகுதி கொஞ்சம் பசுமையாக இருக்கும். குவைத், சவுதியை ஒட்டிய தென்பகுதி அடர் பாலையும் ,வறண்டும்காணப்படும்.
மதிய உணவுக்குப் பின் உள்ள இடைவேளையில் தொலைபேசி அழைப்புக்கு போய்விட்டு வருவோம். இருபதுபேர் அமர்ந்துசெல்லும் அந்த சிற்றுந்து எப்போதும் நிரம்பித்தான் செல்லும். பெரும்பாலும் நான் தான் ஓட்டி செல்வேன். அப்போது யாரிடமும்கைபேசியோ, இணையமோ இல்லை. வீட்டிற்கும், வேண்டியவர்களுடனும் (நிறையபேருக்கு ஊரில் முன்னாள், இந்நாள் காதலிகள்உண்டு ) பேச அந்த தொலைபேசி ஒன்றே வசதி. வரிசையாக எதிரெதில் பதினைந்துக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் இருக்கும். ராணுவ வீரர்களும் அங்கு தான் பேசவேண்டும்.அவர்களெல்லாம் மிக மெதுவாக சப்தமில்லாமல் பேசுவார்கள். சில பெண்கள் தொலைபேசியிலோ, கைபெசியிலோ பேசும்போதுசப்தமே இல்லாமல் பேசுவதை கவனித்திருக்கிறேன்.

 

 

 

 



நான் தொலைபேசியில் மட்டுமல்ல சாதாரணமாகவே கொஞ்சம் சப்தமாகவே பேசக்கூடியவன். பேசிக்கொண்டிருக்கும்போது தானாகவே சப்தம் கூடிவிடும். ஒருமுறை தொலைபேசியில் பேசிகொண்டிருக்கும் பொழுது, ராணுவ வீரன் ஒருவன் பின்னாலிருந்து என் தோளை தட்டி “கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்” எனக் கெஞ்சும் பார்வையில் சொன்னான். பதினைந்து டாலர்களுக்கு கிடைக்கும் தொலைபேசி அட்டையில் நாற்பத்தியைந்து நிமிடங்கள் இந்தியாவுக்கு பேசமுடியும். பலர் மாதக் கணக்கில் யாருக்கும் அழைப்பதே இல்லை. எப்படித்தான் நண்பர்களுடனும் ,உறவினர்களுடனும் பேசாமல் இருக்கிறார்களோ என நினைப்பேன்.

நான் ஒருநாள் எனது பீர்முகமது மாமாவை அழைத்தபோது அவர் உடைந்த குரலில் “போதும் நீ அங்கிருந்தது. வந்துவிடு!தொலைக்காட்சி செய்திகளை கேட்டுவிட்டு என்னால் இங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவுகள் மிக நீண்டவையாகிவிட்டன” என்றார்.

அப்போது தாக்குதல்கள் இன்னும் கடுமையாகி இருந்தது. அதற்கடுத்த வாரம் உம்மாவுக்கு அழைத்தபோது. “மோனே நீ வந்துரு. அங்கவேலை செய்தது போதும். தள்ளைக்கு புள்ளையா சீக்கிரம் ஊரு வந்து சேருப்பா நான் டி வி ல பார்த்தேன் பனிரெண்டுபேரை கழுத்தைஅறுத்துக் கொல்வதை காட்டுகிறார்கள்” என. “லீவு லெட்டர் எழுதி கொடுத்திருக்கேன். உம்மா சீக்கிரம் வாறன்” என்றேன் .

அப்போது எங்கள் நிறுவனம் நேபாளிலிருந்து பணிக்கு ஆட்களை எடுத்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு பனிரெண்டுபேரை பிடித்து தீவிரவாதிகள் கொன்றதை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளி பரப்பியதாக அறிந்தோம். ஈராக் முழுமையும் கடும் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதை முகாமுக்குள் பணிக்கு வரும் உள்ளூர் ஈராக்கியர்கள் சொல்வார்கள்.

கேரளாவின் திருச்சூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன் உண்ணி கிருஷ்ணன். அன்று எங்களுடன் தொலைபேசிமையத்துக்கு வந்திருந்தான். உண்ணி கிருஷ்ணன் அமைதியானவன். தானுண்டு தன் பணி உண்டு என இருப்பான். மலையாளிகளுடன்ஒன்றாக அமர்ந்து படம் பார்ப்பான். ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொல்வான். இயல்பாகவே அவன் யாரிடமும் அதிகம்பேசமாட்டான். நான் அவனை பார்க்கும்போதெல்லாம் “எந்தா உண்ணி சொகமாணோ கிருஷ்ணன் எவடயா” என கேட்பேன். ஒருபுன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செல்வான்.

 

 

 

 

 



உண்ணி ஒருமுறை தொலைபேசியில் பேசிவிட்டு வெளியே வந்து அந்த புழுதி நிறைந்த தரையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தான்அவனது தாயின் மரண செய்திதான் அவனது கதறலுக்கு காரணம். கருவில் சுமந்தவளுக்கு , இறுதி சடங்குகள் உடனிருந்து செய்யஇயலாமலும், பாலூட்டி வளர்த்தவள் முகத்தை இனி எப்போதும் காணேவே முடியாது என்பதாலும். அன்று அவன் ஊருக்குபேசும்போது தாய் இறந்து சடங்குகள் எல்லாம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. தாமாதமாக செய்தி அறிந்தது அவனைமேலும் வேதனையடைய வைத்தது. இதுபோல் பலருக்கும் ஊரில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள் தாமதமாகவே தெரிய வந்தது.உண்ணியை தேற்றி வண்டியில் அமர வைத்து எங்கள் குடியிருப்புக்கு வந்தோம். அன்றும் மறுநாளும் அவன் பணிக்கு வரவில்லை.முதல் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான். மூன்றாம் நாள் பணிக்கு வந்தபின்பும் அன்னையை இழந்த துயர் அவனதுமுகத்திலிருந்தது.

என் அறை நண்பன் கடலை மிட்டாய்க்கு புகழ்பெற்ற ஊரைச் சார்ந்த சங்கர். விடுமுறைக்கு ஊர் சென்றிருந்தபோது தாய் நோய் வாய்ப்பட்டிருந்தாள். பின்பு சிகிட்சை பலனில்லாமல் இறந்தபோது இறுதி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு திரும்பிவந்தான். “ஓராண்டு சம்பாதிச்ச எல்லா காசையும் செலவழிச்சேன். ஆத்தாவை காப்பாத்த முடியல. சொன்னாய்ங்க பெரியஆசுபத்திரிக்கு கொண்டு போகாதே, வேண்டாம்னு ஆத்தா பிழச்சிக்குவான்னு நினச்சேன் .நேரம் வந்திடிச்சி நமக்குகுடுப்பினை இல்லை” என்றான் சங்கர். தாயின் இறப்பு பேரிழப்பு என்பான்.

பெற்ற அன்னைக்கு ஈடு என எது இவ்வுலகில் எதுவுமே இல்லை.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments