சதாமின் கைது
முகாமில் ராணுவதிற்கான ஒரு விற்பனை மையம் இருந்தது. அங்கு ஆரம்ப நாட்களில் தொலைபேசி அட்டைகள், பற்பசை போன்றஅத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இருந்தன. ராணுவ வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் அங்கு பணியில் இருந்தார். ஆறுமாதங்களுக்குப்பின் அந்த விற்பனைமையம் விரிவு படுத்தப்பட்டு புகைப்படகருவிகள்(cameras), காலணிகள், தொப்பி, ஆடைகள்.தின்பண்டங்கள் என அமெரிக்கர்கள் விரும்பும் பொருட்கள் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்டு குவித்து வைக்கபட்டிருந்தது.விற்பனை பிரிவில் ஒரு ராணுவ அதிகாரியின் கீழ் சிவிலியன் நான்கைந்துபேர் பணியில் இருந்தனர். அங்கிருந்த பொருட்கள் பெரும்பாலானவை சீனத் தயாரிப்புகள். இப்போதும் சீனப்பொருட்கள் தான் அதிகமாக அமெரிக்காவின் வணிக வளாகங்களைநிறைத்திருக்கிறது. சீனாவிற்கு இன்று அமெரிக்கா ஒரு பெரிய சந்தை.
சில நேரங்களில் தள்ளுபடி விற்பனை நடக்கும். குறிப்பாக நன்றி தெரிவிக்கும் நாள் (thanks giving day) மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைநாட்களில் பொருட்கள் மிக மலிவாக கிடைக்கும் ஒருமுறை அப்படி பனியன்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனையானபோதுஎங்களில் பெரும்பாலானோர் குறைந்தது ஆளுக்கு பத்துக்குமேல் வாங்கிக் கொண்டனர். நண்பன் கார்த்திக் ஒருநாள் இரவு பணிமுடிந்து காலையில் காண்டீன் சென்றிருந்தான். சில மாதங்களுக்கு முன்பு அவன் எழுபைத்தைந்து டாலர் விலையில் பார்த்த ஒருஷு பின்பு முப்பதாக குறைந்து பின்பு பதினைந்தாகி இருந்தது. அது ஒரு பிரபல முன்னணி நிறுவன தயாரிப்பு ஆச்சரியமான மலிவுவிலை அது. அவன் எதுவும் யோசிக்காமல் எனக்கும் ,ஜெசிக்காவுக்கும் சேர்த்து மூன்று ஷுக்களை வாங்கி வந்துவிட்டான்.
“நான்யாரைக் கேட்டு வாங்கினாய் இதற்கு காசு நான் தர முடியாது” என பொய்க் கோபம் காட்டினேன். “உன்கிட்ட யாரு பணம் கேட்டாநண்பனுக்கு நான் வாங்கிதந்தது” என்றான்
அப்போது புதிதாய் வந்திருந்த ஒருவன் நானூறு டலாரில் ஒரு காமிராவை வாங்கியிருந்தான். வேறொருவன் நூறு டாலரில், முதுகில் தொங்கவிடும் பை ஒன்றை வாங்கியிருந்தான். வாரம்தோறும் நாற்பத்தைந்து டாலர்கள் அனைவருக்கும் கையில்கிடைப்பதால் சிலருக்கு அந்தப் பணத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை என்பான் முருகன். “பாய் இவிங்களுக்கு கையில்காச கண்டதும் எனத்த வாங்கதுனே தெரியாம மனம் போல செலவழிக்கானுவோ பாரு ,பைசாக்க அருமை தெரியலை” என்பான்அவன்.
முகாமில் பணி முடிந்து தினமும் இரவு டாலரில் சீட்டாடும் ஒரு கும்பல் இருந்தது. அதை ஒரு கடமையாகவேசெய்வார்கள். இந்திய மதிப்பில் பல ஆயிரங்களை இழந்தவர்களுடன் ஒப்பிடும்போது அதிகவிலைக்கு தேவையேஇல்லாத பொருட்களை வாங்கியவர்கள் பரவாயில்லை என்றே தோன்றியது. கல்கத்தாவின் அலெக்ஸ் எனும்சமையற்காரருக்கு இரண்டாயிரம் டாலர்கள் சீட்டாட்டத்தில் கிடைத்ததாக சொல்வார்கள். அப்படியெனில் மற்றவர்கள்இழந்தது அந்த இரண்டாயிரம் என நினைத்துக்கொண்டேன் .
பக்குபாவில் இருந்தபோது என் நெருங்கிய நண்பன் இருநூறு டாலர்களை சீட்டாடி இழந்திருந்தான். கையில் பணம் இல்லாமல் கடன்வாங்கி சீட்டாடியது. கடன் தந்தவன் ஊர் செல்லும்போது கொடுக்க பணம் இல்லை. இனிமேல் காசு வைத்து சீட்டாடமாட்டேன் எனசத்தியம் வாங்கிகொண்டு, வெங்கட்ராமன் எனும் நண்பனிடம் பணம் பெற்றுக் கொடுத்தோம்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் பலர் வார விடுமுறை நாட்களில் இதுபோல் பெரும்பணத்தை இழப்பதுண்டு. அது ஒரு போதைமுதலில் இழந்ததை மீட்கிறேன் என தொடர்ந்து ஆடி மொத்தமாக பெரும்தொகையை இழந்து டீ குடிக்க காசில்லாமல் ஆன பின் ஒருஉறுதி இனிமேல் ஆடமாட்டேன் என. அடுத்தவார விடுமுறை நாளில் உறுதி தளர்ந்து மீண்டும் பணத்தை இழப்பதும் , மீண்டும் உறுதிகொள்வதும் தொடர்கதைகள்.
ஒருநாள் அடுமனையில் இரவுணவுக்கான உணவுகள் தயாரித்து முடியும் வேளையில்உணவுக்கூடத்திற்கு சற்று முன்னதாக வந்த ராணுவ வீரன் ஜூன்,கார்த்திக்கிற்கு நல்ல நண்பன். கறுப்பினத்தை சேர்ந்தவன்.எப்போதும் சிரித்துபேசும் குணமுடையவன். நீங்களும் என்னைப் போல கறுப்பாகவே இருக்கிறீர்கள் என உரத்த குரலில்சொல்லிவிட்டு சப்தமாக சிரிப்பான். அதனால் தான் உங்களுடன் அன்பாக இருக்கிறேன் என சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு. முருகனின் கையை ,அவனது கையுடன் சேர்த்து வைத்து இரண்டும் ஒரே நிறம், நாம் சகோதரர்கள் என சொல்லிவிட்டு மீண்டும் சப்தமாகசிரிப்பான். அந்த ராணுவ வீரனை போல சப்தமாக சிரிப்பதற்கு பலரும் முயற்சிப்பார்கள். கலீல் பாய் ஒருநாள் சொன்னார். “தும்ஹாரமதராசி சப்லோக் பாகல் ஓஹையா. உன் ஊர்க்காரன் எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதா ஏன் இப்படி கூடி நின்னுசிரிக்கானுவோ” என்பார். அன்று ஜூன் எங்களிடம் சிரித்தது போதும் ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறேன் என்றார். எப்போதும் போல் மீண்டும்சிரிக்கப்போகிறார் என நினைத்த வேளையில். “கைய்ஸ் நாங்கள் சதாமை பிடித்து விட்டோம், ஒருமணிநேரத்திற்குமுன்பாக இங்கே அருகில் தான் பதுங்கி இருந்தான்” என சாதரணமாக சொன்னான். “இன்று செய்தி வராது லெப்டினன்ட்கமாண்டர் நாளைதான் இதை வெளியே சொல்வார்”. என்றார் .
1st INFNTARAY DIVISION லெப்டினன்ட் கமாண்டர் வில்லியம் என்பவரை ஒரு முறை பார்த்திருக்கிறேன் . எங்களுடன் பணிசெய்த ஒருவனுக்கு குண்டுவெடிப்பில் காலில் காயங்கள் அடைந்தபோது அவனை பாராட்டி ஒரு சிறு பதக்கம்(medal)கொடுத்தார்கள். அப்போது லெப்டினன்ட் எங்கள் முகாமுக்கு வந்திருந்தார். அவர் தான் பதக்கத்தை அவனுக்குஅளித்தார். அப்போது ஒரு குரல் கேட்டது. “மெடல் வாங்கணும்னா குண்டடி படனும்” என.
எங்கள் முகாமின் பின்னால் ஓடும் டைகிரிஸ் ஆற்றங்கரை ஓரமாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு பதுங்கு குழியில்சதாமை பிடித்ததாக சொன்னார்கள். ஆம், அது எங்களுக்கு மிக அருகில் தான். ஜூன் எங்களிடம் “அது சதாம் என எங்களுக்குத்தெரியாது, பார்த்தாலும் தெரியவில்லை. அழுக்கு படிந்த தடிமனான உடையில், நீண்ட தலைமுடி, தாடியுடன் காணப்பட்டார். எங்களுக்கு தகவல் சொன்னவன் சொன்னதால் நம்பினோம்” என்றான் . “ராணுவ உளவுத்துறை அளித்த தகவலின்படி பலநாட்களாகமிக ரகசியமாக கண்காணித்து சந்தேகத்தின் பேரில் ஒருவனை மடக்கி பிடித்து விசாரித்து உறுதிசெய்தபின், மிக எச்சரிக்கையுடன்அந்த பதுங்கு குழியை சுற்றிவளைத்து சதாமை பிடித்தோம்” என சொல்லி சிரித்தான். நாங்கள் பயந்ததுபோல் அந்த பதுங்குகுழியில்இருந்த அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை” என சொன்னார் அந்தக் கறுத்த சிரிக்கும் ராணுவ வீரன் .
நான் சதாமை தொலைக்காட்சியிலும், நாளிதழ்களில் வரும் புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய பெரிய நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்த காட்சிகள் அவை. எங்கள் முகாமில் உள்ள மனமகிழ்மன்ற கட்டிடத்தில் அந்தநாற்காலிகளை கண்டிருக்கிறேன். மனமகிழ் மன்றம், சதாமின் அரண்மனையல்லவா? ஒரு நாட்டின் சர்வாதிகாரியின் இறுதி நாட்கள்மிகக் கொடுமையாகிப் போனது. அரண்மனைகளில் சுகபோக வாழ்க்கையும், ஆட்சி , அதிகாரத்தை கையில்வைத்திருந்த அதிபர்சதாம் பதுங்கியிருந்த பதுங்குகுழி புழுதிநிறைந்த மணல் வெளியில் கற்களால் அடுக்கப்பட்டு, மின்சாரமோ, பிற அடிப்படைவசதிகளோ இன்றி இருந்திருக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக அதனுள் இருந்திருக்கவேண்டும். கோடையின் அனல் வீசும் கடும்வெப்பத்தையும், குளிர் காலத்தின் உடல் நடுங்கச் செய்யும் குளிரையும் எப்படி தாக்குப்பிடித்திருப்பார்களோ? உணவு மட்டும் தினமும்வெளியே இருந்து சென்றிருக்கிறது. உணவு கொண்டு சென்ற ஒருவனைத்தான் வேறொருவன் ராணுவத்திடம் காட்டிக்கொடுத்துள்ளான்.
மறுநாள் தொலைக்காட்சியில் செய்தி வந்தது.எங்களில் பலர் அதான் எங்களுக்கு நேற்றே தெரியுமே என்ற தொனியில்பார்த்துக்கொண்டிருந்தனர். முதலில் சதாமை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனைகள் நடந்த காட்சிகளை ஒளிபரப்பினர்.சாதமின் பல்,முடியை சோதனைக்கு அனுப்பி பிடிபட்டவர் சதாம் உசேன் தான் என பின்னர் உறுதி செய்யப்பட்டது. பல ஆண்டுகள்தான் அதிபராக இருந்த நாட்டில், தான் வைத்தது தான் சட்டம் என ஆட்சி புரிந்த சர்வாதிகாரி ஒருவர் உயிருக்கு பயந்து ஓராண்டுக்கும்மேலாக பதுங்கி இருந்தது, ஒரு சிறிய புதுங்கு குழியில் .
செய்தி வந்த அன்று எங்கள் முகாமில் பணிபுரிந்த உள்ளூர் ஈராக்கிகள் சதாம் கைது என உரக்க கூவி ஆடி,பாடி மகிழ்ந்தனர். ஈராக்கின் ஷியா மற்றும் குர்திஷ் இனத்தவர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பல ஆணடுகளுக்கு முன் லட்சகணக்கான குர்திஷ் இன மக்களைசதாம் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டும் இருந்தது. அதுவே சதாம் கைதின் போது அவர்களை கொண்டாட்ட மனநிலைக்குகொண்டு சென்றது.
பின்பு ஈராக் நீதிமன்றம் சதாமை விசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து .சதாமை இசுலாமியர்களின் பண்டிகை தினமானதியாக திருநாள் அன்று தூக்கிலிட்டு கொன்றனர் ஆனால் சதாம் ஒருமுறை நீதிமன்ற விசாரணையின்போது நான் வீரன் என்னைதூக்கிலிட கூடாது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என நெஞ்சு நிமிர்த்தி சொன்னார்.