ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29

0
519

காத்திருந்த நாட்கள்

என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்குத்தான் பணிக்கு செல்ல வேண்டும். வழக்கமாக ரமலானில் அதிகாலை தொழுகைக்குப் பின் தூங்கச் செல்வேன். அன்று தூக்கமே வரவில்லை.

காலையில் என்னுடன் ஊர் செல்லவிருந்தவர்களிடம் விபரம் சொன்னேன். மானேஜர் ஆலன் குக்கிடம் நாங்கள் ஆறு பேரும் சென்று எங்கள் பயணம் ரத்தானது குறித்து கேட்டோம். அவர் “எனக்கு எதுவும் தெரியாது. மின்னஞ்சல்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார். பின்பு எங்களைச் சந்தித்து “ஈராக்கிய கிளர்ச்சியாளர்கள் , இன்று ஒரு போராட்ட அழைப்பு விடுத்துள்ளனர். அதனால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தபட்டுள்ளது. உங்களை அழைத்துச் செல்லும் காவலர்கள் அடுத்த சில நாட்களில் வருவார்கள். தேதி இன்னும் உறுதிசெய்யவில்லை. விரைவில் தகவல் வரும். நான் அவர்களுடன் தொடர்பில் உள்ளேன். உங்களை விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாட்டை நான் செய்வேன்” என்றார்.

 

 

 

 

அன்று காலை அனைவருக்கும் பெரிய ஏமாற்றமாக இருந்தது. சில தினங்களுக்குப் பிறகு ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நாங்களும் இயல்பாக எங்கள் பணிகளில் ஒன்றிவிட்டோம். அடுத்த சில நாட்களுக்கு பிறகு மானேஜர் ஆலன் குக்கை மட்டும் அழைத்துச் செல்ல ஒரு காரும், பாதுகாப்பு வீரர்களின் ஒரு காரும் வந்தது. ஈகிள் நெஸ்ட் எனும் வேறு முகாமிலிருந்து ஒரு அலுவலர் வந்த அதே காரில் ஆலன் குக் ஏறி சென்றார்.

நான் ஆலன் குக்கை சந்தித்து கேட்டேன். “நாங்கள் செல்வது எப்போது?” என. அவர் “நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். விரைவில் நீங்கள் செல்வீர்கள்” என சொல்லிவிட்டு காரிலிருந்தவாறு எங்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, தனது விடுமுறையை கழிக்கச் சென்றார். எப்போதும் கண்களைப் பார்த்து பேசும் இயல்புகொண்ட அவர், அன்று காரிலிருந்து கையசைக்கையில் யாருடைய விழியையும் சந்திக்காமல் தலை கவிழ்ந்தே இருந்தது. அவர் செல்வது அவரது தாய்நாடான இங்கிலாந்துக்கு. பிரான்சிஸ் திட்டிக்கொண்டே இருந்தான். “வெள்ளக்காரனுக்கு மட்டும் வண்டி சரியான தேதில வருது. நமக்கு மட்டும் வண்டி ஏன் அனுப்பல” என ஏமாற்றத்துடன் புலம்பினான்.

பின்பு சில நாட்கள் எந்தத் தகவல்களும் இல்லாமலாயிற்று. நானும் பிரான்சிஸும் தினமும் சந்திக்கும்போது “செய்தி ஏதாவது இருக்கா” என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வோம். பிரான்சிஸ் ஊகித்து ஒரு தேதியில் நாம் செல்வோம் என சொல்வான். என் குடும்பத்தாரிடம் சொல்லியிருந்தேன், “நான் ஊர் வந்த பின் தான் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும்” என. இருந்தாலும் நான் அக்டோபரில் ஊர் செல்வது உறுதியாகியிருந்ததால், டிசம்பர் ஒன்பதாம் தேதி திருமண நாள் குறிக்கப்பட்டு, பெண்வீட்டார் மண்டபம் முன்பதிவு செய்திருந்தனர். முகாமில் உள்ள மற்றவர்கள் ஊர் செல்லவேண்டிய எங்களைப் பார்த்து ஏளனத்துடன் சிரிப்பதும் , நாளை நீங்கள் செல்லும் வண்டி வரும் எனக் கிண்டலாக பேசுவதும் எங்களுக்குப் பழகிப்போயிருந்தது. விஜயகுமார் என்னைப் பார்க்கும்போது “எனக்கு கல்யாணம் , எனக்கு கல்யாணம்” என சொல்லிக் கிண்டலடிப்பான் .

“அடுத்த இரண்டுநாட்களில் நீங்கள் செல்கிறீர்கள்” என தகவல் வந்துள்ளதாக சொல்வார்கள். செல்வதற்கு முந்தைய நாள் ரத்தாகிவிட்டது என செய்திவரும். முன்பெப்போதும் இப்படி ஆனதே இல்லை. குறிப்பிட்ட நாளில் சரியான நேரத்தில் வண்டியும், பாதுகாப்பு வீரர்களும் வருவர். விடுமுறைக்கு செல்பவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வர். ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை எங்கள் பயணம் உறுதிசெய்யப்பட்டு பின்பு ரத்தானது. விடுமுறைக்கு சென்ற ஆலன் குக் அவரின் மூன்று வார விடுமுறை முடிந்து முகாமுக்கு திரும்பி வந்தார்.

 

 

 

 

 

 

அவர் எங்களிடம் “இப்போது சாலை போக்குவரத்து மிக ஆபத்தாக உள்ளதாகவும் சாலையில் பாக்தாத் வரை பயணிப்பது மிகக் கடினம்” என்றார். ஆனால் உயரதிகாரிகள் மட்டும் விடுமுறைக்கு போவதும் வருவதுமாக இருந்தனர். அப்போது குளிர்காலம் துவங்கியிருந்தது. ஒரு குளிர்நாள் இரவில், மனமகிழ் மன்றம் சென்றிருந்தோம். அங்கே ஆலன் குக், அமெரிக்க அலுவலர் வில்லியம்சுடன் வந்திருந்தார். வில்லியம்ஸ் என்னைப் பார்த்துவிட்டு “ஷாகுலின் முகத்தைப் பார். மிகக் கவலையில் இருக்கிறான்” என ஆலன் குக்கிடம் சொன்னார். ஆலன் குக் “நான் ஊருக்குச் செல்லும்போது இவர்கள் செல்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாக செய்துவிட்டு சென்றிருந்தேன். ஆனால் நான் திரும்பி வந்தபிறகும் இவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். எனக்குத் தெரியும் ஷாகுலின் திருமனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவனது பெற்றோர் அவனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்” என அவரிடம் சொல்லிவிட்டு, “விரைவில் உன்னை மட்டுமாவது அனுப்ப நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.

ஊர் செல்லவிருந்த நாங்கள் ஆறுபேரும் பிரான்சிஸின் தலைமையில் கூடிப் பேசி வேலைக்கு செல்வதில்லை என முடிவு செய்தோம். நான் ஆலன் குக்கை அவரது அலுவலத்தில் சந்தித்து “நாங்கள் இன்று முதல் வேலைக்கு வரமாட்டோம்” என்றேன். “உங்கள் விருப்பம். என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். “வாகனமும் , பாதுகாப்பு வீரர்களும் எனது கட்டுப்பாட்டில் இல்லை” என்றார். நாங்கள் ஆறுபேரும் பணிக்கு செல்லவில்லை. சாப்பிட மட்டும் உணவுக்கூடம் செல்வேன். இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் நண்பர்கள் பணி முடிந்து வருவர். பத்து மணிவரையில் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். இரவு பணிக்கு செல்பவர்களை மாலையில் சந்தித்து சிறிதுநேரம் உரையாடலாம். பகலில் கொஞ்சம் தூங்கியும், தொலைக்காட்சி பார்ப்பதுமாக இரு நாட்கள் கடந்தன .

இருந்தாலும் ஒரு முழு பகல் வேளையை என்னால் சும்மா இருந்து கழிக்க இயலவில்லை. எந்த வேலையும் இன்றி அடுத்து எத்தனை நாட்கள் இப்படியே இருக்கவேண்டிவரும் என நினைத்தபோது, அது ஒரு பெரும் அவஸ்தையாக தோன்றியது. இரவில் படுத்திருப்பேன். உடல் களைப்பில்லாததால் தூக்கமின்றியும், அதை தொடர்ந்து வரும் எதிர்மறை எண்ணங்களும் என்னை நிம்மதியிழக்க செய்தன. என் இயல்புக்கு சமந்தமில்லாத எண்ணங்களால் மனம் அமைதியின்றி , கொந்தளிப்பாக இருநாட்கள் கடந்தன.

எண்ணங்கள் இப்படித்தான் துவங்கும். ஆலன் குக்கின் அலுவலகத்தின் மீது கல்வீசித் தாக்குவது அல்லது உணவுக்கூடத்தின் வாயில் கதவின் கண்ணாடியை உடைப்பது, இப்படி கட்டுப்படுத்த முடியாத தொடரும் எண்ணங்கள் என்னை வதைத்தது. இவை செயலாகும் போது அதன் விளைவுகளை எதிர் கொள்ள என்னால் இயலாது என என் மனதுக்குத் தெளிவாக தெரிந்தது. அதைக் கடந்து செல்ல என்ன வழி என மனம் போராடியது. இரண்டாம் நாள் இரவு தூக்கமேயின்றி படுத்திருந்தேன். நெடுநேரத்திரற்க்குப் பின் மனம் உறுதியாக ஆணையிட்டது, “வேலைக்கு செல், வேலைக்கு செல்” என. அது ஒன்றே வழி இந்த சூழ்நிலையை கடந்து செல்ல முடியும் என .

 

 

 

 

 

யாரிடமும் கலந்தாலோசிக்காமல் காலையில் குளித்துவிட்டு எட்டுமணிக்கெல்லாம் ஆலன் குக்கை பார்த்து “இன்று முதல் நான் பணிக்கு வருகிறேன். என்னால் அறையில் சும்மா இருக்க முடியவில்லை” என முறையிட்டு எனக்கு வரும் கெட்ட எண்ணங்களை அவரிடம் சொன்னேன். “ஆம், அதை நானறிவேன் வேலையின்றி சும்மா இருப்பது பெரும் தண்டனையாக இருக்கும்” என்று ஆமோதித்தார். இப்போதும் அதே பதிலை சொன்னார் “உன் விருப்பம் நீ தாரளமாக பணிக்கு வரலாம்”. “மிக்க நன்றி” என சொல்லிவிட்டு உடனே பணிக்கு சென்றுவிட்டேன்.

உண்ணி மறுநாள் பணிக்கு வந்தான். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களும் பணிக்கு வந்துவிட்டனர். பிரான்சிஸ் மட்டும் உறுதியாக பணிக்கு வர மறுத்துவிட்டான் .

எந்த உறுதியும் இல்லாமல் ஊர் செல்லும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தோம். காத்திருந்த நாட்கள் பெரும் அவஸ்தை.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments