ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33

0
486

தாயகம் திரும்பினேன்

டிசம்பர் எட்டாம் தேதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். அதிகாலை நல்ல குளிர் இருந்தது. சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கு முன்பே விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன். பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது. பாக்தாத்தில் விமானம் பிடித்து அம்மான் வழியாக மும்பைக்குச் செல்ல,  எனக்கு மதியம் மூன்று மணிக்கு விமானம்.  விமானச் சீட்டும் , கடவுச்சீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்துச் சென்றனர்.

என்னுடன் செல்வராஜ், இரு வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் ஊருக்குச் செல்லத் தயாரானோம். எங்களை பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்செல்ல பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் வந்திருந்தனர்.  மூன்று கார்களில் இருவர் வீதம் ஏறிக்கொண்டோம். பாதுகாப்புவீரர்களும், வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து, அரபிகளை போன்ற உடையணிந்து மாறு வேஷத்தில் இருந்தனர். பாதுகாப்புக்காக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது.

 

 

 

 

 

காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர். முன்பு நான் திக்ரித்-பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே, பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி, காரில் இருந்து கீழே இறங்கக் கூடாது.  அவ்வாறு இறங்கவேண்டிய சூழ்நிலையில் கீழே இறங்கிவிட்டால் எக்காரணத்தைக்கொண்டும் ஓடக்கூடாது. இங்கிருந்து 20-30 நிமிட பயணதூரம் மட்டுமே என்றனர். பயணப்பைகளை காரில் ஏற்றினோம் . நாங்கள் ஆறுபேரும், உடன் பாதுகாப்பு வீரர்களும் மூன்று கார்களில் ஏறிக்கொண்டோம். முப்பது நிமிடத்திற்குள் பாக்தாத் விமான நிலையம் வந்தடைந்தோம். பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் என்ற பதாகை எங்களை வரவேற்றது.  ஊர்செல்வது உறுதியாகிவிட்ட உற்சாகம் தொற்றிக்கொண்டது .

பாக்தாத் விமான நிலையம் உலகின் நவீன வசதிகளுடன், உயர்தரத்தில் இயங்கிய பன்னாட்டு விமான நிலையமாக  இருந்திருக்க வேண்டும். விமான நிலைய உள் கட்டமைப்புகள் அதை உறுதி செய்தது. விமான நிலைய வாயிலில் இறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் எங்களை விரைவில் விமான நிலையத்திற்குள் கொண்டு விட்டனர். பயணப்பைகளை அவர்களே கொண்டு வந்து தந்தனர். எங்களிடம் கைகுலுக்கி “ஹாவ் எ ஸேப் ஜெர்னி” என விடைபெற்றனர்.

 ஈராக் போர் தொடங்கியதிலிருந்து பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் செயல்படாமல் முடங்கிப்போய் இருந்தது. இப்போது ஒரு தனியார் நிறுவனம் அதை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஜோர்டானின்  அம்மான் நகருக்கு , தினமும் ஒரு விமானத்தை இயக்குகிறது. பயணப்பைகளை அளித்துவிட்டு, குடியுரிமை பரிசோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தோம். உண்மையாகவே இப்போதுதான் பயணம் உறுதியாயிற்று என்றே சொல்லலாம்.

 

 

 

 

 

அனைத்து சோதனைகளும் முடிந்தபின் பயணம் செய்யவேண்டிய விமானம் வரை நடந்தே சென்றோம். விமானத்தின் அருகில் சென்றதும் எங்கள் பயணப்பைகள் இருக்கிறதா என  பார்க்கச் சொன்னார்கள். விமான நிலைய ஊழியர்கள்  பைகளை பார்த்து உறுதிசெய்ததும,  விமானத்தில் ஏறிக்கொண்டோம்.  அது ஒரு சிறிய விமானம்.  முப்பதுபேர் மட்டுமே பயணம் செய்யக்கூடியது. ஒரே ஒரு விமான பணிப்பெண் ஒரு சாக்லேட் மட்டும் புன்னகையுடன் தந்தாள். ஜோர்டானின் அம்மான் நகருக்கு, நாற்பது நிமிட பயணம்.  அங்கிருந்து ராயல் ஜோர்டன் விமானத்தில் அபுதாபிக்கு பயணித்தோம்.

கடந்தமுறை விடுமுறையில் சென்றபோதும் அபுதாபி வழியாக சென்றதால் அபுதாபி விமான நிலையம் இப்போது நல்ல பரிச்சயமாகியிருந்தது. அங்கே காத்திருந்த நேரம் எளிதாக கடந்துசென்றது. அபுதாபியில் ஆறு மணிநேர காத்திருப்புக்குப் பின் கல்ப் ஏர் விமானத்தில் மும்பைக்கு காலையில் வந்துசேர்ந்தோம். இப்போதும் செல்வராஜின் பயணப்பைகள் வரவில்லை. இந்தியாவிலிருந்து சென்றபோதும் அவனது பைகள் கிடைக்காததாலேயே செல்வராஜ் ஈராக் சென்ற இருபது நாட்களுக்குள்ளாக திரும்பி வருகிறான். பாக்தாத் விடுதியறையில் இருந்த அவனின் கதையைக் கேட்டு இந்தியர்கள் சிலர் கொடுத்த பொருட்களும், பையும் இந்த முறையும் கிடைக்கவில்லை .

ஒன்பதாம் தேதி காலை பத்தரைமணிக்கு ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் மும்பை-திருவனந்தபுரம் பயணித்து மதிய வேளையில் சென்று இறங்கினேன். விமான நிலையத்தில் எனது தந்தையும், இளைய சகோதரனும், மணப்பெண்ணின் சகோதரி, தாய், தந்தை  வந்திருந்தனர். பெண்வீட்டார் என்னையும் நான் அவர்களையும் இப்போதுதான் முதல்முறையாக  பார்த்துக்கொள்கிறோம்.

 ஒன்பதாம் தேதி தான் முன்பு திருமணநாளாக குறித்து பெண்வீட்டார் மண்டபமும் முன்பதிவு செய்துவைத்திருந்தனர்.  பின்பு அதே டிசம்பரில் பதினாறாம் தேதி என வேறு நாள் குறிக்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடந்தது.

முற்றும்.

கடந்த எட்டு மாதங்களாக நான் எழுதிவந்த ஈராக் போர்முனை அனுபவங்கள் இந்த பதிவுடன் முடிவடைந்தது. இதுவரை தொடர்ந்து வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மீண்டும் வேறு ஒரு தொடரில் சந்திப்போம்.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments