ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 08

0
927

திக்ரித்தை நோக்கிப் புறப்பட்டேன்

பக்குபாவில் உணவுக்கூடம் துவங்கிய அன்றே,   எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது.   சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவி தரப்பட்டது.  கடும்காயங்களுடன் உயிர்தப்பிய முனாவர், எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போதுவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புஅதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு  அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் .

உணவுக்கூடத்தில் நாற்காலிகள் சிதறிக் கிடந்தன. உணவு பாத்திரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் அப்படியே இருந்தது.குண்டு வெடித்தபோது சிதறி ஓடியவர்கள் தரையில் படுத்து தப்பியவர்கள் மனத்திரையில் ஓடி மறைந்தனர். நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன்.

மாலை நான்கு  மணிக்கு மேல்,அனைவரும்  அமர்ந்து சாப்பிட்டோம்.  அனைவருக்கும் உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதிலேயே மனம் சுழன்றுகொண்டிருந்தது.

உடனே ரஸ்ஸல் மற்றும் அமெரிக்க அதிகாரி தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. வீரர்களுக்கு இரவுணவு கொடுக்கவேண்டுமென்றனர். பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும்,  பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றதால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

 

 

 

 

 

கனத்த மனதுடனும், பயத்துடனும் இரவில் தூங்கிகொண்டிருந்த போது சப்தம் கேட்டது. என்னுடன் வேலை செய்த மும்பையைச் சேர்ந்த இரு நண்பர்கள் கடுமையான வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்தனர். அருவருக்கதக்க கெட்டவார்த்தைகளை பிரயோகித்தனர். அவர்கள் இருவரையும் இணை பிரியாத நண்பர்களாகவே அனைவரும் அறிந்திருந்தோம். “மாதர் சோத் தும்ஹாரா மா ரண்டி”என்றான் ஒருவன். அடுத்தவன் “தேரீ மா ரண்டி ரே சாலா” என அதையே திருப்பி சொன்னான் குண்டுவெடிப்பில் சோர்ந்திருந்தவர்களுக்கு ரஸ்ஸல் தன்னிடமிருந்த பீர் பாட்டில்களை கொடுத்திருந்திருக்கிறார். ரோகன் தலைமையில் குடித்தவர்கள் போதை தலைக்கேறியதும் தகராறு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பே மனக்கசப்புகள் அவர்களுக்குள் இருந்திருக்கும். பொய்யாக நண்பர்களாக இருந்திருப்பார்கள் போல.

போதையில் மனதில் இருந்ததையெல்லாம் காது கூசும் வார்த்தைகளில் தாயை வைத்தே இருவரும் திட்டித் தீர்த்தனர். சப்தம் கேட்டு முகாமின் அமெரிக்கப் பொறுப்பாளர் வந்தார். அரை மணிநேரத்துக்கும் மேல் அறிவுரைகள் சொல்லி சமாதானமாகப் போகச் சொன்னார். “நீங்கள் மும்பையில் மீண்டும் சந்திக்கலாம். அப்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது இன்று நீங்கள் நடந்து கொண்டதை நினைத்து வெட்கப்படுவீர்கள்” என சொன்னார். மேலும் “இங்கு இன்னும் பலமான தாக்குதல்கள் நடக்ககூடும் என்பதால் தற்காலிகமாக இந்த முகாம் மூடப்படுகிறது” என்றார். ஒரு மாதம் எங்களின் கடின உழைப்பில் உருவாக்கிய முகாம் அது. ஒரு வேளை உணவை கூட முழுமையாக கொடுக்க முடியாமல் போயிற்று.

 

 

 

 

 

முகாம் மூடப்படும் தகவல் அறிந்ததும் கலவரங்களின்போது கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து கையில் கிடைத்ததை அள்ளிச் செல்லுவதுபோல் எங்களுக்கு உரிய தலையணைகள், போர்வைகள், கம்பளிகள், சீருடைகள் போன்றவற்றை ஒரு குழு தகர அலமாரியிலிருந்து அள்ளி எடுத்தது. எங்களுக்கு குவைத்திலிருந்து பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் ஒருவர் என்னிடம் நல்ல பழக்கம் கொண்டிருந்தார். அவரின் உண்மை முகமும் அப்போது தெரிந்தது. நாம் எல்லோருமே திருடர்கள்தான் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சந்தர்ப்பம் அமையும் போது மனிதனின் மனம் சுய கட்டுபாட்டை இழந்து விடுகிறது. நானும் வெங்கட்ராமனும் பார்த்துக்கொண்டே இருந்தோம். அந்த நிகழ்வால் கொஞ்சம் வருந்தினோம். பின்பு எப்போது தூங்கினோம் எனத் தெரியவில்லை. கதிரவன் எட்டிப் பார்க்கும் முன்பே கெட்டகனவுகள் வந்து துயில் கலைந்தது.

காலை பத்துமணிக்கு, இருபது பேர் வீதம் குழுக்களாக பிரிக்கப்பட்டு ராணுவத்தில் உளவியல் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஒரு கலந்துரையாடல் நடத்தினர். பலருக்கும் தலைவலி, இரவில் கெட்ட கனவுகள், சரியான தூக்கமின்மையாக இருந்தது. இதெல்லாம் உள்ளவர்கள் நார்மல் என்றனர். லஷ்மண் அந்த கலந்துரையாடலில் அமரவில்லை. தனியாக சுற்றிக்கொண்டிருந்தார் .”பக்குபா முகாமிலிருந்து அனைவரையும் குவைத்துக்கு அழைத்துச் செல்ல வண்டிவருகிறது தயாராகுங்கள்” என்றனர். “ரஸ்ஸல் செல்லும் காரில், அவர் லஷ்மணனை அழைத்துச் செல்வார். நமது நிறுவனத்துக்கான போக்குவரத்து பாதுகாவல் அதிகாரிகள் பாதுகாப்புக்கு வருவார்கள். நாம் காண்வாயில் செல்லவில்லை” என்றனர்.

மூன்று வாகனங்களில் நாங்களும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாகியுடன் முன்பும் பின்பும் என ஐந்து வகானங்களில் குவைத்தை நோக்கிப் புறப்பட்டோம். நான் கனவில் மூழ்கி மும்பையை ஒரு சுற்று சுற்றுவிட்டு மீண்டும் வாகனத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். செங்கதிர் மேகங்களில் பட்டு பிரகாசிக்கும் வேளையில் ஒரு முகாமுக்குள் இரவை கழிக்கும் பொருட்டு உள்ளே சென்றோம்.பக்குபா சென்ற புதிதில் எங்களுடன் இருந்து இந்த குண்டுவெடிப்பில் வேலைசெய்ய முடியாது என்று சொல்லிச் சென்றவர்கள் அனைவரும் அந்த முகாமில் மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தனர். அது ஒரு சிறிய முகாம் முப்பது பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் .

 

 

 

 

 

என்னுடன் குவைத்தில் இருந்த தீபக் தலைமைச் சமையல்காரன் ஆக பதவி உயர்வு பெற்றிருந்தான். “மச்சான், வாடா எப்படிடா இருக்க? நான் என் மேலதிகாரியிடம் சொல்லி உன்ன இந்த முகாமில் இருக்க ஏற்பாடு செய்றேண்டா” என்றான்.கோவாவைச் சேர்ந்த டோமிங்கோவும் பக்குபாவிலிருந்து பிரிந்து சென்றவன் . “ஷாகுல் நீ ரொம்ப ஒல்லியாயிட்டே. அங்க சாப்பாடு இல்லையா? கடுமையான வேலையா?” எனக் கேட்டான். பக்குபாவில் முகாம் துவங்குவது வரை நாங்கள் காலையில் சமைக்கவே இல்லை . சில நாட்கள் நானும் ,மணிகண்டனும் இரவில் சோற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி ஐஸ் பெட்டியில் வைத்து, மறுநாள் காலையில் பச்சை மிளகாவுடன் கஞ்சி குடிப்போம். அந்த சுவையே தனி .

இரவில் யாரோ தகவல் சொன்னார்கள். பக்குபாவில் காயமடைந்து குவைத் கொண்டு சென்றவர்களை, அங்கிருந்து எங்கள் நிறுவனம் தனி விமானத்தில் உயர்மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செண்டிருப்பதாக. முனாவருக்கு ஒரு கால் முழுமையாக துண்டிக்கப்பட்டது என கேட்டதும் எனக்கு அழுகையாக வந்தது. ஸ்காட்லாந்து பாதுகாப்பு அதிகாரிக்கு மார்பைக் கிழித்து அறுவை சிகிட்சை செய்ததையும், மற்ற நான்குபேர் ஆபத்தான நிலைமையில் இருந்து தேறிவருவதாகவும் தெரிவித்தார்கள்.

வெங்கட்ராமன் குவைத் சென்றபின் அங்கிருந்து மும்பை செல்வதாக உறுதியாக சொன்னான். என்னால் முடிவெடுக்க முடியவில்லை. மீண்டும் இவ்வளவு குறுகிய நாட்களில் மும்பை திரும்பிச் செல்ல என் மனம் விரும்பவில்லை.மேற்பார்வையாளர்கள் ரோகனும்,பிரதீக்கும் நாம் குவைத் சென்றால் நமக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றனர்.

ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையுடைய மாடி அறை. கோடையில் பகலில் அறையில் இருக்கவே முடியாது. அனல் போல் கொதிக்கும் வெப்பம். அறையிலிருந்து மாஹிம் ரயில் நிலையம் போகும் வழியில் நடைபாதையில் இருக்கும் மரத்துக்குக் கீழ் உள்ள சுவரில் தான் பெரும்பான்மையான நாட்களை கழித்திருப்பேன்.ரயில் நிலையம் செல்லும் மனித முகங்களை பார்த்துக்கொண்டே இருப்போம். இரவிலும் மின் விசிறிக்கு அடியில் படுத்து மெல்லிய துண்டால் கழுத்து பகுதியின் வியர்வையை துடைத்து கொண்டே படுத்திருப்போம்.பட்டினியாக வேலை தேடிய நாட்களே அதிகம். எனவே மும்பை திரும்பி போவதில்லை என்பதில் உறுதியானேன். பெரும்பான்மையானவர்கள் ஊருக்குச் செல்லும் முடிவில் உறுதியுடன் இருந்தனர். நான் மீண்டும் பக்குபா சென்று பணி செய்யவும் தாயாராயிருந்தேன்.

 

 

 

 

குவைத்திலிருந்து திக்ரித் செல்லும் வாகனம் ஒன்று அன்றிரவு நாங்கள் இருந்த முகாமில், இரவு தங்கினர். திக்ரித் செல்லும் பணியாளர்கள் பலர் பக்குபா குண்டுவெடிப்பை திகிலுடன் பெரேராவிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் திக்ரித் செல்லும் வாகனத்தில் வந்த அனைவரும் அங்கு செல்ல மறுத்து விட்டனர் .

ஐந்துபேர் மட்டும் திக்ரித் செல்லும் வண்டியில் இருந்தனர். திக்ரித் செல்லும் வாகனத்தில் அருகில் நின்று கூவி அழைத்தனர் யாராவது திக்ரித் வருகிறீர்களா ?என. நான் நண்பன் தீபக்கை தேடிக்கொண்டிருந்தபோது என் காதில் அது கேட்டது ‘திக்ரித்’, ‘திக்ரித்’ என . எதையும் யோசிக்கவில்லை. தீபக்கை பார்க்கவே இல்லை. நேராக என் பைகளுடன் சென்று திக்ரித் செல்லும் வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.

அதற்குள் தீபக் என்னைத் தேடி என் பேருந்து அருகே வந்துவிட்டான். “என்னடா மச்சான் நீ எனட்ட சொல்லாமலே போற, சரி போய்விட்டு வா” என மகிழ்ச்சியுடன் கையசைத்தான். நாங்கள் ஆறு பேர் மற்றும் ஒரு நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த அதிகாரியுடன் வண்டி புறப்பட்டது, பாக்தாத் ,பக்குபா வழியாக திக்ரித்தை நோக்கி.திக்ரித் சென்றிருந்த கார்த்திக், இலங்கையின் ஓட்டுனர் அமர் அங்கு சென்று வரும்போதெல்லாம், அவர் மூலம் கடிதம் அனுப்பினான். அறையின் ஜன்னலைத் திறந்தால் சலசலக்கும் நீர் என திக்ரித்தின் அழகையும், டைகிரிஸ் நதிக்கரையையும் வர்ணித்திருந்தான். கூடுதலாக அங்கு குண்டு வெடிப்பதில்லை எனவும், தூசியே இல்லாத மணல் பரப்பு எனவும் படிக்கும் போது வாய்ப்பைத் தவற விட்டு விட்டேன் என எண்ணுவேன்.

நண்பன் கார்த்திக்கிடம் மனதில் பேசிக்கொண்டிருந்தேன் நான் வருகிறேன் உன்னை நோக்கி என.

தொடரும்….

குறிப்பு : இத் தொடர் கதையில் பிரசுரிக்கப்படும் படங்கள் அனைத்துமே அந்தந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நிஜப்புகைப்படங்களாகும். கதையோடு ஒன்றிக்கும் வாசகர்களுக்கு மேலும் சுவாரஷ்யத்தை கூட்ட இங்கு பதிவிடுகின்றோம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments