ஈழத்தின் பிரசுரகளத்தில்
வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்.
என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.
வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஓகஸ்ட் 6ஆம் திகதி புதன்கிழமையன்று முதன்முதலாக 8 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. தனக்கெனவொரு தனியான கட்டிடத்தில் (இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில்) நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து இப்பத்திரிகை முதலில் வெளியிடப்பட்டது. வீரகேசரி பிரதியொன்றின் ஆரம்பகால விலை 5 சதம் மட்டுமே. அக்காலகட்டத்தில் இலங்கையில் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழகத்திலிருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி போன்றவையும், மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் என்ற பத்திரிகையும் இலங்கையிலிருந்து தொழிலாளி, தேசபக்தன் போன்ற சிற்றிதழ்களும் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன. தினகரன் 15.03.1932 இலேயே தொடங்கப்பட்டது. வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியராக பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களே பணியாற்றினார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதிலும், ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரியின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார். ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச்.நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு ஆக்க இலக்கிய, நாவல் எழுத்தாளருமாவார். இவர் வீரகேசரியில் அந்நாட்களில் பல விறுவிறுப்பான தொடர் கதைகளையும் எழுதி வந்தார்.
வீரகேசரி தொடங்கிய காலகட்டத்தில் 06.10.1930 முதல் எச்.நெல்லையா அவர்கள் எழுதிய ‘இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி’ என்ற தொடர்கதை வாரம் தவறாமல் வெளிவந்தது. (இது பின்னர் 1938இல் நூலுருவில் வெளிவந்தது). அதனைத் தொடர்ந்து வரலாற்றுப் போலிக் கற்பனையாக வீரமும் காதலும் கதைப்பொருளாக அமைய எழுதிய ‘சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி’ என்ற தொடர் கதை வீரகேசரியில் 26.02.1933 முதல் பிரசுரமாகி பெருமளவு வாசகர்களை வீரகேசரியின்பால் கவர்ந்திழுத்து வந்தது. இத்தொடர் கதை பின்னர் 1934இல் கொழும்பு சரஸ்வதி புத்தகசாலையினரால் முதலாம் பாகத்தில் 20 அத்தியாயங்களும், இரண்டாம் பாகத்தில் 17 அத்தியாயங்களுமாக மொத்தம் 37 அத்தியாயங்களில் இரண்டு பாகங்களில் நூலுருவானது.
‘நளின சிங்காரி அல்லது தோழனின் துறவு’ என்ற நாவல் வீரகேசரி பத்திரிகையில் 02.04.1936 முதல் 01.09.1937 வரை தொடராக வெளிவந்திருந்தது. அதே ஆண்டு ‘மங்கையர்க்கரசி அல்லது டாக்டர் கணேசின் மர்மம்’ என்ற நாவலையும் அவர்; 17.10.1937 முதல் தொடராக எழுதியிருந்தார். 1938இல் ‘இராணி இராஜேஸ்வரி அல்லது யுத்தத்தை வெறுத்த யுவதி’ என்ற தொடர்கதை 03.01.1938 முதல் 06.01.1939 வரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து 01.02.1939 முதல் 17.01.1940 வரை ‘பத்மாவதி அல்லது காதலின் சோதனை’ என்ற அவரது தொடர்கதை வெளிவந்தது. 1930 முதல் 1940 வரை இடையறாது தொடர் கதைகளை வீரகேசரியில் பிரசுரித்துவந்ததின் மூலம் எச்.நெல்லையா அவர்கள் தொடர்கதைப் பாரம்பரியமொன்றை வீரகேசரியில் தொடங்கி வைத்தார்.
இலங்கையில் நூலுருவில் வெளிவந்த ஆரம்பகால நாவல்களான ‘காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி'(1938), ‘சோமாவதி அல்லது இலங்கை இந்தியா நட்பு’ (1940), ‘பிரதாபன் அல்லது மஹாராஷ்டிர நாட்டு மங்கை’ (1941) ஆகியவையும் வீரகேசரி ஆசிரியர் எச்.நெல்லையா எழுதிய நாவல்களே.
வீரகேசரி ஆரம்பிக்கப்பட்டு ஓரிரண்டு ஆண்டுகளில் கொழும்பில் கிராண்ட்பாஸ் வீதி 185 ஆம் இலக்கத்துக்கு அதன் அச்சகம் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் தொடர்பான செய்திகளையும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்ட செய்திகளையுமே வீரகேசரி வெளியிட்டு வந்தது. நாளடைவில், இது இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கி ஒரு தேசியப் பத்திரிகையாக உருவெடுத்தது.
1943 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீரகேசரி ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறியது. சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் ஆரம்பத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது. பொது முகாமையாளராக இருந்த ஈஸ்வர ஐயர் மேலாண்மை இயக்குனரானார். கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் 1939-1959 காலகட்டத்தில் பிரதமஆசிரியராக பணியாற்றினார்;. சங்கரநாராயணன் பொது முகாமையாளரானார். இவர்கள் மூவரையும் தமிழ்நாட்டில் தனது சொந்த ஊரான ஆவணிப்பட்டியில் இருந்துகொண்டே சுப்பிரமணியம் செட்டியார் இயக்கினார். அவர் பின்னர் 23.01.1975இல் ஆவணிப்பட்டியிலேயே மறைந்தார்.
வீரகேசரியில் ‘ஊர்க்குருவி’ என்ற பெயரில் இவர் அன்றாடம் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. கே.பி. ஹரன் பின்னாளில் 1959இல் ஈழநாடு ஆரம்பிக்கப்பட்ட வேளை அதில் பிரதம ஆசிரியராக இணைந்து 1979வரை மேலும் 20 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பினார். 1979 இல் சென்னை திரும்பிய அவர் தனது 75 ஆவது வயதில் 14.10.1981 அன்று சென்னை மயிலாப்பூரில் காலமானார்.
கே. பி. ஹரனுக்கு முன்னர் அறிஞர் வ.ரா என அறியப்பெற்ற வ.ராமசாமி ஐயங்கார் அவர்களும் சிறிது காலம் வீரகேசரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழனான வ.உ.சிதம்பரம்பிள்ளை ஆகியோரின் தொடர்பிலிருந்த வ.ராவை இலங்கையில் வீரகேசரி நாளிதழுக்கு அறிமுகப்படுத்தியவர் வ.உ.சியாவார். வீரகேசரி நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று இங்கு இருந்த காலத்தில் பாரதியைப் பற்றி பல சொற்பொழிவுகளை கொழும்பில் அவர் ஆற்றியுள்ளார். பாரதியையும் அவரது எழுத்தையும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். வீரகேசரியில் நேருவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வந்தார். அவரது முக்கியமான மொழிபெயர்ப்புப் பணிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் வீரகேசரியுடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு உடனே தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட்டார் வ.ரா.
அவரைத் தொடர்ந்து வீரகேசரியில் இணைந்த கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து 1942 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார். அவரது அயராத உழைப்பினாலும் எழுத்துத் திறமையினாலும் வீரகேசரி பத்திரிகையின் நிருபராக, உதவி ஆசிரியராக, ஆசிரியராக, பின் 1953 ஆம் ஆண்டில் பிரதம ஆசிரியராக எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், மற்றும் சமூகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தார். வீரகேசரி பத்திரிகையில் குந்தளப் பிரேமா (1951), நந்தினி (1952), தாரிணி (1954), உதய கன்னி (1955), பத்மினி (1956), ஆஷா (1972), சிவந்தி மலைச்சாரலிலே (இது 1958-59 காலப்பகுதியில் கதம்பம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து, 1960இல் நூலுருவானது), அஞ்சாதே அஞ்சுகமே (1974) போன்ற பல துப்பறியும் புதினத் தொடர்களை ரஜனி, வால்மீகி ஆகிய புனைபெயர்களில் எழுதினார். பல ஆன்மீகக் கதைகளும் எழுதினார். இவரது தொடர்கதைகள் பல அக்காலத்திலே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தன. கே.வி.எஸ்.வாஸ் பத்திரிகை ஆசிரியர் தொழிலில் இருந்து 42 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுத் தமிழகம் சென்றார். அங்கும் அவர் தொடர்ந்து 1988இல் இறக்கும்வரை பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
மேலே குறிப்பிட்டிருந்த எச்.நெல்லையா, கே.வி.எஸ். வாஸ் போன்ற வீரகேசரி ஆசிரியர்களின் தொடர்கதைகளை நூலுருவாக்கிய வேளையில் ஜுலை 1955இல் நா.சுப்பிரமணியம் அவர்களின் ‘சிங்கள போதினி’ என்ற நூலையும் வெளியிட்டு கொழும்பு வீரகேசரி நிறுவனம் இலங்கையில் நூல்வெளியீட்டுப் பாரம்பரியம் ஒன்றினையும் தமிழர்களிடையே கட்டவிழ்த்துவிட்டிருந்தது.
இலங்கைத் தமிழ் எழத்தாளர்களைப் பொறுத்தவரையில் பதிப்புத்துறையின் ஆரம்பம் முதல் அவர்கள் ஆசிரிய/வெளியீட்டாளர்களாகவே (Author/Publisher) வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டிருந்தார்கள். ஆர்வ மிகுதியால் தனது சொந்த சேமிப்பையும் நகைகளையும் செலவிட்டு நூலொன்றை அச்சிட்டு, முறையான நூல் விநியோகத் திட்டமின்றி அச்சடித்த நூலை வாசகரிடையே விநியோகிக்க, விற்பனைசெய்ய முடியாது வெளியீட்டுவிழாவுடன் ஒதுங்கிக்கொண்ட எழுத்தாளர்களே எம்மிடையே மலிந்திருந்தார்கள். அவரது அனுபவத்தினைப் படிப்பினையாக எடுத்து முகிழ்ந்தெழும் இளம் திறமைசாலிகள்கூட தமது படைப்புத்திறனை வெளிக்காட்டத்தடுமாறினார்கள். வசதிபடைத்த ஒருசிலர் தமிழ்நாட்டில் பிரபல வெளியீட்டாளர்களின் துணையுடன் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்தனர்.
இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தக வெளியீட்டு முயற்சியில் அதிக கவனம் செலுத்தியது. அந்த நிறுவனத்திற்கு நாடளாவிய ரீதியில் இருந்த பத்திரிகை விநியோக வலையமைப்பும் அவர்களது நூல்வெளியீட்டு முயற்சியில் துணிச்சலுடன் ஈடுபடவைத்திருந்தது.
1971 தை மாதம் பிறக்க ஈழத்துப் படைப்பிலக்கியவாதிகளுக்கொரு வழியும் பிறந்தது. பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம் தொகுத்த பரிசுபெற்ற மலையகச் சிறுகதைகளின் தொகுப்பான ‘கதைக் கனிகள்’ வீரகேசரி பிரசுரத் திட்டத்தின் முதலாவது பிரசுரமாக வெளிவந்தது. வீரகேசரி நிறுவனம் முன்னைய ஆண்டுகளில் நடத்திய நான்கு சிறுகதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்குரிய 12 கதைகள் மாத்திரம் தெர்ந்தெடுக்கப்பட்டு இத்தொகுதியில் சேர்க்கப்பட்டிருந்தன.
வீரகேசரி பிரசுரத் திட்டத்தில் இரண்டாவது நூலாக ரஜனியின் (மு.ஏ.ளு.வாஸ்) ‘குந்தளப் பிரேமா’ வெளியிடப்பட்டது. 1949-50களில் வீரகேசரியில் தொடராக வெளிவந்த நாவல் இது. ஏற்கெனவே செப்டெம்பர் 1951 இல் முதற்பதிப்பைக் கண்டிருந்தது. தொடர்ந்து ரஜனியின் ‘கணையாழி’ மூன்றாவது பிரசுரமாக ஓகஸ்ட் 1971இல் வெளிவந்தது.
வீரகேசரியினால் களமமைத்துக் கொடுக்கப்பட்ட திருக்கோணமலையைச் சேர்ந்த ந.பாலேஸ்வரியின் முதலாவது நாவல் சுடர்விளக்கு என்ற பெயரில் வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து நினைவு நீங்காதது, உள்ளக் கோயில், எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு, தத்தை விடு தூது, என்ற வரிசையில் பல தொடர்கதைகளை அவர் எழுதியிருந்தார். அவரது ‘பூஜைக்கு வந்த மலர்’ என்ற தொடர்கதை நான்காவது வீரகேசரி பிரசுரமாக பெப்ரவரி 1972இல் வெளிவந்தது.
இப்படியாகத் தொடர்ந்த வீரகேசரி பிரசுரத் தொடரின் நூல்வெளியீட்டு முயற்சி 76ஆவது பிரசுரத்துடன் நின்று போயிற்று. ஜுலை கலவரத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த வீரகேசரி தன்னை சுதாரித்துக்கொண்டெழுந்து நவம்பர் 1983இல் இறுதி நாவலை வெளியிட்டது. ‘உள்ளக்கோயிலில்’ என்ற அந்த இறுதி நாவலும் ந.பாலேஸ்வரியினுடையதாகும்.
1971-1983 காலகட்டத்தில் வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்த 76 நூல்களின்; வழியாக அதிக எண்ணிக்கையான படைப்புகளை வழங்கியவர் ரஜனி (மு.ஏ.ளு.வாஸ்) ஆவார். அஞ்சாதே என் அஞ்சுகமே, ஆஷா, கணையாழி, குந்தளப் பிரேமா, தாரிணி, நெஞ்சக் கனல், மலைக்கன்னி, மைதிலி, ஜீவஜோதி ஆகிய 9 நாவல்களை இவர் வீரகேசரி பிரசுரங்களாக வழங்கியுள்ளார். இவை பெரும்பாலும் விரகேசரியில் முன்னர் தொடர் கதைகளாக வெளிவந்தவையே.
செங்கைஆழியான்(க.குணராசா) இரவின் முடிவு, கங்கைக் கரையோரம், கனவுகள் கற்பனைகள் ஆசைகள், காட்டாறு, பிரளயம், வாடைக்காற்று ஆகிய 6 நாவல்களை வீரகேசரி பிரசுரங்களாகக் கண்டுள்ளார்.
அ.பாலமனோகரன் (கனவுகள் கலைந்தபோது, குமாரபுரம், நிலக்கிளி), ந.பாலேஸ்வரி (உள்ளக்கோயிலில், உறவுக்கப்பால், பூஜைக்கு வந்த மலர்), இந்து மகேஷ் (இங்கேயும் மனிதர்கள், ஒரு விலைமகளைக் காதலித்தேன், நன்றிக்கடன்), பொ.பத்மநாதன் (புயலுக்குப் பின், பொன்னம்மாளின் பிள்ளைகள், யாத்திரை) ஆகியோர் தலா மூன்று நாவல்களை வீரகேசரி பிரசுரங்களாகப் பெற்றனர்.
கே.எஸ்.ஆனந்தன் (காகித ஓடம், தீக்குள் விரலை வைத்தால்), உதயணன் (அந்தரங்க கீதம், பொன்னான மலரல்லவோ), ஏபிரஹாம் வு கோவூர் (கோர இரவுகள், மனக்கோலம்), க.அருள் சுப்பிரமணியம் (அக்கரைகள் பச்சையில்லை, நான் கெடமாட்டேன்), சொக்கன் (சீதா, செல்லும் வழி இருட்டு), தி.ஞானசேகரன் (குருதி மலை, புதிய சுவடுகள்), ஞானரதன் (ஊமை உள்ளங்கள், புதிய பூமி), கே.டானியல் (உலகங்கள் வெல்லப்படுகின்றன, போராளிகள் காத்திருக்கின்றனர்), தம்பிஐயா தேவதாஸ் (இறைவன் வகுத்தவழி, நெஞ்சில் ஓர் இரகசியம்) ஆகியோர் தலா இரண்டு நூல்களையும், எஸ்.அகஸ்தியர் (மண்ணில் தெரியுதொரு தோற்றம்), அன்னலட்சுமி இராஜதுரை (உள்ளத்தின் கதவுகள்), வ.அ.இராசரத்தினம் (கிரௌஞ்சப் பறவைகள்), செ.கதிர்காமநாதன் (நான் சாகமாட்டேன்), இந்திராதேவி சுப்பிரமணியம் (கனவுகள் வாழ்கின்றன), கனக செந்திநாதன் (விதியின் கை), எஸ்.எம்.கார்மேகம் (கதைக்கனிகள்), புலோலியூர் க. சதாசிவம் (மூட்டத்தினுள்ளே), சுதாராஜ் (இளமைக் கோலங்கள்), தா.பி.சுப்பிரமணியம் (இதயங்கள் அழுகின்றன), முல்லைமணி (பண்டாரவன்னியன்: வரலாற்று நாடகம்), கோகிலம் சுப்பையா (தூரத்துப் பச்சை), செம்பியன் செல்வன் (நெருப்பு மல்லிகை), அருள் செல்வநாயகம் (மர்ம மாளிகை), மு.சு. டேவிட் (வரலாறு அவளைத் தோற்றுவிட்டது), தாமரைச்செல்வி (சுமைகள்), வே.தில்லைநாதன் (இதயத் தந்திகள் மீட்டப்படுகின்றன), தெணியான் (விடிவை நோக்கி), தெளிவத்தை ஜோசப் (காலங்கள் சாவதில்லை), நந்தி (தங்கச்சியம்மா), நெல்லை க.பேரன் (வளைவுகளும் நேர்கோடுகளும்), புரட்சிபாலன் (உமையாள்புரத்து உமா), அப்பச்சி மகாலிங்கம் (கமலினி), மொழிவாணன்(யாருக்காக?), வி.கே.ரட்ணசபாபதி (யுகசந்தி), வித்யா(உனக்காகவே வாழ்கிறேன்), கே.விஜயன் (விடிவுகால நட்சத்திரம்.), ளு. ஸ்ரீ ஜோன்ராஜன் (போடியார் மாப்பிள்ளை.) ஆகியோர் தலா ஒரு நூலையும் வீரகேசரி பிரசுரங்களாகப் பெற்றிருந்தனர். இவர்களில் பலர் பின்னாளில் தமது படைப்புக்களால் விதந்து பேசப்பட்டவர்கள்.
இக்காலகட்டத்தில் முஸ்லிம் படைப்பாளர்கள் இலங்கையில் பரவலாக எழுதி வந்தபோதிலும், வை.அஹமத் (புதிய தலைமுறைகள்), அ.ஸ.அப்துஸ் ஸமது (பனி மலர்) ஆகிய இருவரும் மாத்திரமே தங்கள் படைப்பாக்கங்கள் வீரகேசரி வெளியீடுகளாகக் கண்டிருந்தனர்.
நாவல்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளாக டானியலின் ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன’, எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் தொகுத்திருந்த ‘கதைக்கனிகள்’ என்ற மலையக பரிசுச் சிறுகதைத் தொகுப்பு ஆகியவையே காணப்படுகின்றன. ஏபிரஹாம் வு கோவூர் அவர்கள் எழுதிய மனக்கோலம், கோர இரவுகள் அகிய இரு உளவியல்துறை கட்டுரைத் தொகுதிகளையும் எஸ்.என்.தனரத்தினம் அவர்கள் தமிழாக்கம் செய்திருந்தார்.
மொழிபெயர்ப்பு நூல்களாக கருணாசேன ஜயலத் சிங்களத்தில் எழுதிய இறைவன் வகுத்தவழி, நெஞ்சில் ஓர் இரகசியம் ஆகிய இரு நாவல்களையும் தம்பிஐயா தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். கிருஷன் சந்தர் உருது மொழியில் எழுதிய நான் சாகமாட்டேன் என்ற நாவலை செ.கதிர்காமநாதன் தமிழாக்கம் செய்திருந்தார். அவ்வகையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களை வீரகேசரி பிரசுரம் உள்வாங்கியுள்ளது.
வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த ஒரே ஒரு நாடகம் முல்லை மணி எழுதிய பண்டாரவன்னியன்: வரலாற்று நாடகமாகும். இந்நாடகநூல் முதலில் பண்டாரவன்னியன் கழகத்தினரால் 1970இல் முதல் பதிப்பினைக் கண்டிருந்தது. விரிந்த வாசகர் உலகத்தைச் சென்றடையும் நோக்கில் மலிவு விலையில் வீரகேசரி வெளியீடாக அவர்களது பிரசுரத் தொடரில் ஆறாவது வெளியீடாக வெளியிடப்பட்டது.
எழுபதுகளில் பிரதேச மொழி வழக்கிற்கு படைப்பிலக்கியங்களினூடாக முக்கியத்துவம் கொடுத்ததில் வீரகேசரி பிரசுரங்களுக்கு முக்கிய பங்குள்ளது. கிழக்கிலங்கைப் பிரதேசத்திற்குரிய கதைப்புலத்தினைக் கொண்டவையாக நான் கெடமாட்டேன் (க.அருள் சுப்பிரமணியம்), பனிமலர் (அ.ஸ.அப்துஸ் ஸமது), புதிய தலைமுறைகள் (வை.அஹமத்), போடியார் மாப்பிள்ளை. (ளு. ஸ்ரீ ஜோன்ராஜன்) ஆகிய நாவல்களைக் குறிப்பிடலாம்.
வன்னிப் பிரதேசத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்களாக காட்டாறு (செங்கை ஆழியான்), குமாரபுரம் (அ.பாலமனோகரன்), நிலக்கிளி (அ.பாலமனோகரன்), யுக சந்தி (வி.கே.ரட்ணசபாபதி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தினை பின்னணியாகக் கொண்ட குறிப்பிடத்தக்க நாவல்களாக இரவின் முடிவு, வாடைக்காற்று, பிரளயம் (செங்கை ஆழியான்), ஊமை உள்ளங்கள் (ஞானரதன்), கமலினி (அப்பச்சி மகாலிங்கம்), சீதா, செல்லும் வழி இருட்டு (சொக்கன்), நெருப்பு மல்லிகை (செம்பியன் செல்வன்), புதிய சுவடுகள் (தி.ஞானசேகரன்), போராளிகள் காத்திருக்கின்றனர். (கே.டானியல்), விடிவை நோக்கி (தெணியான்) ஆகிய நாவல்களைக் குறிப்பிடலாம்.
மலையகப் பிரதேசம் சார்ந்ததும் அம்மக்களின் வலிகளைப் பேசுவதுமான நாவல்களாக தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை, தி.ஞானசேகரனின் குருதிமலை, கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை, புலோலியூர் க.சதாசிவம் எழுதிய மூட்டத்தினுள்ளே, மு.சு.டேவிட் எழுதிய வரலாறு அவளைத் தோற்றுவிட்டது, கே.விஜயன் எழுதிய விடிவுகால நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்திருந்த வரலாற்றுக் கற்பனை நாவல்களாக ரஜனி எழுதியிருந்த ஆஷா, மலைக்கன்னி, ஜீவஜோதி வ.அ.இராசரத்தினம் எழுதிய கிரௌஞ்சப் பறவைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ரஜனியின் தொடர்கதைகளாக வெளிவந்திருந்த மர்ம நாவல்களும் வீரகேசரி பிரசுரங்களாகப் பின்னாளில் வெளிவந்து 4000க்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருந்தன. கணையாழி, தாரிணி, நெஞ்சக் கனல், மைதிலி ஆகிய நாவல்களும், அருள் செல்வநாயகம் எழுதிய மர்ம மாளிகையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கவை.
தமிழகத்தின் மாத நாவல் பாரம்பரியத்தினை அடியொற்றி வீரகேசரி நிறுவனம், 1971 முதல் 1983வரை கட்டியெழுப்பியிருந்த நூல்வெளியீட்டு முயற்சியின் பயனாக 76 நுல்களை வெளியிட்டதுடன் தமது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. 1973 இல் ஜன மித்திரன் வெளியீடு என்ற பிறிதொரு பிரசுர வெளியைத் திறந்துவைத்து 1977 வரை 16 ஜனரஞ்சக நூல்களையும் அதனூடாக வெளியிட்டு வியாபார வெற்றியைக் கண்டார்கள். ஜனமித்திரன் வெளியீடுகளினூடாக அந்நிறுவனம் பெற்ற வருவாய்;, வீரகேசரி பிரசுரங்களின் தொடர் வருகைக்கு நிதிரீதியாக பெரும்பங்காற்றியிருந்தது.
ஜி.நேசன், ஷர்மிளா ஆகிய புனைபெயர்களில் எழுதிவந்த ஜி.நேசமணி, சாத்தானின் ஊழியர்கள், குஜராத் மோகினி, ஜமேலா, கறுப்புராஜா, அலிமாராணி, பட்லி, அன்பே என் ஆரயிரே, ஜினா, பாலைவனத்து ரோஜா, மர்ம மங்கை நார்தேவி ஆகிய 10 நாவல்களை ஜனமித்திரன் பிரசுரங்களாக எழுதிச் சாதனை புரிந்திருந்தார். ரஜனியின் ஜயந்தி, விதியின் வழியிலே, ஆகிய இரு நாவல்களும், ஜுனைதா ஷெரீப் எழுதிய அவன் ஒன்று நினைக்க என்ற நாவலும், கே.எஸ்.ஆனந்தனின் மர்மப் பெண் என்ற நாவலும் நவம் என்ற பெயரில் ளு.ஆறுமுகம் எழுதிய நிழல் மனிதன் என்ற நாவலும் ஜன மித்திரன் வெளியீடுகளாக இக்காலப்பகுதியில் வெளிவந்திருந்தன.
இலங்கையில் நடந்தேறிய 1977இன் தமிழினப் படுகொலை நிகழ்வுகளின்போது ஏற்பட்ட பாதிப்பு, வீரகேசரி நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அதுவே ஜன மித்திரன் வெளியீடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அதுபோல, 1983இல் நிகழ்ந்த பாரிய இனப்படுகொலை நிகழ்வுகளின் போதும் வீரகேசரி நிறுவனம் பாதிப்புக்குள்ளாகியது. அதன் பின்னர் வீரகேசரியும் தனது பிரசுரத் திட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இலங்கையில் தமிழ்ப் பதிப்புத்துறையின் வரலாற்றினை எழுத முனைபவர்கள், வீரகேசரி, ஜனமித்திரன் பிரசுரங்களைக் குறிப்பிடாமல் தமது ஆய்வுகளை நிறைவுசெய்யமுடியாது. அவ்வாறே ஈழத்தின் தமிழ் நாவல்துறைக்கு வீரகேசரி வழங்கிய பங்களிப்பினை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.
உங்களால் அறியக்கிடைத்த அரிய தகவல் இது. சிறப்பான பதிவு
நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்