டோப்பியரி (Topiary) என்பது உயிர்ச்சிற்பக்கலை எனப்படும் புதர்களை வெட்டிச்சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தி அழகிய வடிவங்களில் தாவரங்களை வளர்க்கும் முறை. இது புதர்ச்சிற்பக்கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதுபோல வெட்டி வடிவமைக்கப்பட்டு வளரும் செடிகளும்’’டோபியரி’’ என்றே குறிப்பிடப்படுகின்றன.
குட்டையான , ஊசிபோன்ற மிகச்சிறிய இலைகளையுடைய, அடர்ந்த பசுமைமாறா, நேராக வளரக்கூடிய இயல்புடைய பல்லாண்டுத்தாவரங்களில் இலைகளையும் கிளைகளையும் சீராக குறிப்பிட்ட இடைவெளிகளில் நறுக்குவதன் மூலம் இதுபோன்ற வடிவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்படுத்திய வடிவங்கள் பலவருடங்களுக்கு அதே தோற்றத்தில் இருக்கவேண்டுமென்பதால் மிக மெதுவாக வளரும் தாவரங்களே இதற்கு தேர்வுசெய்யப்படுகின்றன.
கம்பிகளும், கம்பி வலைகளும், கம்பிச்சட்டங்களும் குறிப்பிட்ட வடிவங்களைக்கொண்டு வருவதற்கு சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தாவரங்கள் வளரும் முன்பே சட்டங்களை அவற்றைச்சுற்றிலும் பொருத்தி பின்னர் அவற்றை அந்த சட்டங்களுக்கு ஏற்றாற் போல வளர்த்தும் விரும்பிய வடிவங்கள் கொண்டுவரப்படுகின்ரன. தாவர வேலி (hedge) எனப்படும் புதர்கள், மரங்கள் முதலான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்படும் உயிர்வேலியானது மிக எளிய டோபியரி வடிவமாகும்.
ரோமானியர்களின் காலத்திலிருந்தே புதர்ச்செடிகளை விலங்கு பறவை, மனிதர்கள் , பந்துகள் மற்றும் எழுத்து வடிவங்களைப்போல வெட்டி சீராக வளர்க்கும் இக்கலை இருந்து வந்திருக்கிறது எகிப்தியர்களும் இவ்வடிவங்களை பல தோட்டங்களில் அமைத்திருந்தனர். வால்ட்டிஸ்னி 1962ல், டிஸ்னிஉலக கேளிக்கைப்பூங்காவில் பிரபல கார்ட்டூன் வடிவங்களில் டோபியரியை ஏற்படுத்தினார். அதன் பிறகு உலகின் பல தாவரவியல் தோட்டங்களிலும் வீடுகளிலும் இக்கலை பரவலாக்கப்பட்டது
அத்தி(Ficus), துஜா (Thuja), மருதாணி (Lawsonia), டுராண்டா (Duranta) லண்டானா (Lantana) , ஐவி (Ivy) தெட்சி (Ixora) போன்ற புதர்ச்செடிவகைகளே அதிகம் டோபியரிக்காக தேர்ந்தெடுக்கபடுகின்றன. ஊசியிலைத்தாவரங்கள் (conifers) டோபியரி மூலம் வடிவங்களைச்செய்து வளர்க்க மிக எளியதாகையால் உலகில் அதிகம் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதய வடிவம், குடை, பந்துகள், சதுரங்கள் போன்ற எளிய வடிவங்களிலிருந்து மிகச்சிக்கலான ஒட்டகச்சிவிங்கி யானை , இயந்திரங்கள் போன்ற வடிவங்களும் டோபியரியில் உருவாக்கப்படுகின்றன. ஆர்வமிருந்தால் போதும் அதிக செலவின்றி மிக அழகிய இந்த உயிர்ச்சிற்பங்களை தோட்டங்களில் உருவாக்கி வளர்க்கலாம்.
Very useful