“சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்” என்று ஒளவையார் தொடக்கி வைத்தது முதலே ‘மரம்’ என்ற சொல் மனிதனைச் சுட்டும் வசவு ஒன்றாகிப் போனது. மரம் போல என்று மனிதனை வசைபாடும் மனிதன் மரத்தின் மாண்பினை அறிந்தவனல்லன்.
மரங்கள் என்றால் அத்தனை இழிவா?
மண்ணே கருவறையாக விதையூன்றி வேரூன்றி பரந்து வானளாவ உயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர்த்துத் தன்னை மண்ணின் மைந்தன் என்று மார் தட்டிக் கொள்ளும் மனிதனுக்குத் தெரியவில்லை மண் தனக்கான புதைகுழி என்று.
மனிதனுக்கு முதல் நண்பன் மரம். மரத்திற்கு முதல் எதிரி மனிதன்.
மனிதன் கழிவாய் வெளியேற்றிய காபனீரொட்சைட்டைக் கூட உள்ளிழுத்து மீணடும் வடிகட்டி பிராண வாயுவை அள்ளிக் கொடுக்கும் மரங்களுக்கு மனிதன் நன்றி கொன்றான். மரத்திலிருந்து கோடரி செய்து மரங்களையே அழித்தொழிக்கின்றான்.
மரங்கள் மனிதனுக்கு இன்னுமொரு தாய்மடி.
குழந்தைப் பருவத்தில் தொட்டிலிட்டு, நடை பயில நடைவண்டியாகி, வளரும் போதில் விளையாட்டுப் பொருளாகி, கல்வி கற்றிட ஏடாகி, இளமைப் பருவத்தில் கட்டிலாகி, நோய் தீர்க்கும் மருந்தாகி, பட்டினியில் உணவாகி தள்ளாடும் வயதில் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோலாகி, இன்ன பிற தேவைகட்கும் பயனாகி உறவுகள் அற்றுப் போனாலும் உற்ற துணையாகி வருவதென்னமோ மரங்கள் தான்.
மரத்திற்கு கொடுக்கத் தான் தெரியும். மனிதனுக்கு எடுக்கத்தான் தெரியும்.
களைத்து வந்த வழிப்போக்கருக்கு மரம் புத்துணர்ச்சி அளிக்கிறது. வாடகை ஏதுமின்றியே பறவைகளுக்கு வசிப்பிடம் கொடுக்கிறது. சுற்றுச் சூழலுக்கு அழகைத் தருகிறது. மழையைப் பொழிவிக்கிறது. மண்ணைக் காத்து மனிதனை வாழ வைக்கிறது. அத்தனையும் அனுபவித்துக் கொண்டே மனிதன் மரங்களைக் கருவறுக்கிறான்.
மனிதனைக் காட்டிலும் மரங்கள் புனிதமானவை.
ஆதி மனிதனின் முதல் தெய்வம் மரங்கள் தான். வாயு தேவன் சீறிச் சினந்து புயலாய் உருவெடுத்து மனித குலத்தை அழிக்க வரும் போதெல்லாம் அவன் வேகத்தைத் தணித்துத் தடுப்பவை மரங்களே. வீறு கொண்டெழும் கடலன்னைக்கு அணைக்கட்டாகி அணைத்து ஆறுதல் சொல்பவை கடலோர மரங்கள் தான். நதியின் நீரோட்டத்தோடு இணைந்து செல்லும் மண்ணின் அரிப்பை இழுத்துப் பிடித்து இறுக்கிக் கொள்பவை மரங்களன்றி வேறென்ன?
மரந்தான் எல்லாம். அந்த நினைப்பை மறந்தான் மனிதன்.
மரம் என்பது வேறொன்றுமல்ல. இயற்கையின் இன்னுமொரு கரம். மனிதனை வாழ்விக்கும் வரம்.