உலகின் மிகப்பெரிய மான்கள் (Moose)

0
806

 

 

 

உலகின் மிகப்பெரிய மானினம் எது தெரியுமா…? வட அமெரிக்கா (அலாஸ்கா & கனடா) மற்றும் யூரேசியாவில் (வட ஐரோப்பா & ஆசியா) பரவலாக காணப்படும் மூஸ்களே. இதனுடைய பெரிய உருவமானது வெப்பமான சூழலுக்கு ஏற்றது அல்ல எனவே ஏரிகள் ஓடைகளுக்கு அருகாமையில் உள்ள காடுகளில் இவை வாழ்கின்றன.

உருவ அமைப்பு

மிகப் பெரிய உருவம் (உயரம்: 6 அடி, எடை: 450 கிலோ), கருப்பு நிறம், நீண்ட கால்கள், பெண்டுலம் போன்று நீண்டு தொங்கும் வாய் முகப்பு, காற்றில் அசைந்தாடும் தொங்குதாடை, தட்டையான அகன்ற மிகப் பெரிய கொம்புகள் என பார்ப்பதற்கே பிரம்மாண்டமான மான்கள் இவை .

முழுமையாக வளர்ந்த மான் கொம்பின் உயரம் எவ்வளவு தெரியுமா..? கிட்டத்தட்ட ஒரு மனிதனின் உயரம் (6 அடி). ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன இனச்சேர்க்கைக்கு பின்னர் இவை கொம்புகளை உதிர்த்து விடுகின்றன. உதிர்ந்த கொம்புகளை எலிகள் மற்றும் பிற கொறிக்கும் விலங்குகள் தங்களுடைய கால்சியம் தேவையை பூர்த்தி செய்வதற்காக உண்கின்றன.

பெண் மான்களுக்கு கொம்பு இல்லை என்பதால் பலவீனம் என எண்ணிவிட வேண்டாம்…! அதன் குட்டிகளுக்கு அருகில் ஏதேனும் விலங்குகள் வந்தால் எட்டி உதைக்கும் உதையில் எதிரிக்கு மரணம்தான் பரிசு..

உணவு பழக்கம்

மூஸ்கள் உயரமானவை, எனவே தரையில் உள்ளவைகளை உண்பதை விட இலைகள், பட்டைகள், சிறு சுள்ளிகளை உண்பதையே விரும்புகின்றன.கோடை காலத்தில் இலைகள், சுள்ளிகள் நீர்வாழ் தாவரங்களை உண்ணும் இவை குளிர்காலத்தில் காய்ந்த சுள்ளிகள் மற்றும் மரப் பட்டைகளை உரித்து உண்கின்றன. மூஸ் என்ற சொல்லுக்கு மரப் பட்டைகளை உரித்து உண்பவை என்றே பொருள்.

பெரிய உருவத்திற்கு ஏற்ப அதிக அளவு உண்பவை இவை. கோடை காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 33 கிலோ மற்றும் குளிர்காலத்தில் சராசரியாக 15 கிலோ உணவை உட்கொள்கின்றன.

தனித்துவமான பழக்கவழக்கங்கள்

பகல் நேர விலங்கினம் இது. அதிகாலை மற்றும் சூரியன் மறையும் அந்தி மாலைப் பொழுதுகளில் மிக மிக சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.
இம்மான்களுக்கு பார்வைத்திறன் குறைவு ஆனால் அதை ஈடு செய்வதற்காக மிகச்சிறந்த கேட்கும் திறன் உள்ளது. பிற மூஸ்களைப் பார்க்கும்போது வரவேற்கும் விதமாக சத்தம் எழுப்பிக் கொள்கின்றன.

இனப்பெருக்கம்

பெண் மான்கள் வசந்தகாலம் அல்லது கோடை காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனுகின்றன(கர்ப்பகாலம் 231 நாட்கள்). ஒரு நாளுக்குள் எழுந்து நிற்கும் குட்டிகள், ஒரு வாரத்திற்குள் நீந்த கற்றுக் கொள்கின்றன. வளர்ந்த மான்கள் மணிக்கு 6 கி. மீ வேகத்தில் நீந்தி செல்லும்.
குட்டிகள் நான்கு முதல் ஆறு வருடங்களில் முழு வளர்ச்சி அடைகின்றன. ஆனால் அதற்கு முன்பே 50% மூஸ்கள் கரடிகள் மற்றும் ஓநாய்களுக்கு உணவாகி விடுகின்றன.

இன்றைய நிலை

அதிகப்படியான புவி வெப்பமாதல் மூஸ்களின் எண்ணிக்கை குறைய காரணமாக உள்ளது. அதிகப்படியான வெப்பத்தை இவைகளால் சமாளிக்க இயலவில்லை. மேலும் அதிக வெப்பமானது மூஸ்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ள மூளை புழு தாக்குதல் மற்றும் உண்ணி தாக்குதலை அதிகப்படுத்துவதால் பெருமளவு இளம் மான்கள் பலியாகின்றன. உண்ணி தாக்குதலுக்காளான தோலினை வைத்துக்கொண்டு இவைகளால் குளிர் காலத்தையும் சமாளிக்க இயலவில்லை.

பரிசுக்காக வேட்டையாடுதல்

உலக அளவில் 15 லட்சம் மூஸ்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. எனவே அதனை வேட்டையாடுவதை பல நாடுகள் சட்டப்பூர்வமாக்கி உள்ளன. சுவையான இறைச்சிக்காகவும், கிராமப்புற மக்களின் வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் பெருமளவில் இவை வேட்டையாடப்படுகின்றன.
கொம்புகளின் தரத்தைப் பொருத்து மான் வேட்டையாடிகளுக்கு பரிசு தொகையாக 1,000 முதல் 5,000 வரை நிர்ணயிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மூஸ்கள் கொல்லப்படுகின்றன. எனில் வருங்காலத்தில் மூஸ்களின் நிலை என்னவாக இருக்கும்……?

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments