பழங்கள் எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை தரக்கூடியதோ, அதே போல உலர் பழங்களிலும் சுவையும், சத்துக்களும் அதிகம் உள்ளன. உதாரணமாக நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது பல்வேறு மருத்து குணங்களை கொண்டது. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சை பழத்தில், திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இவை எம்மாதிரியான நலன்களை உடலுக்கு தருகின்றன என்று இப்போது பார்க்கலாம்!
உலர் திராட்சையானது தாமிர சத்துக்களை கொண்டுள்ளதால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் ரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகும்.
குழந்தைகளுக்கு தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன் பாலுடன் உலர்திராட்சையை சேர்த்து காய்ச்சி கொடுத்தால் தேகம் வலுப்பெறும்.
கர்ப்பிணி பெண்கள் பாலுடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தார்களேயானால் பிறக்கும் குழந்தை மேலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
உடல் வலிக்கும் உலர் திராட்சை மருந்தாக பயன்படுகிறது. சுக்கு, பெருஞ்சீரகம் மற்றும் உலர் திராட்சையை தண்ணீர் சேர்த்து காய்ச்சி குடித்தால் உடல் வலி தீரும்.
பாலுடன் மிளகு, உலர் திராட்சையை சேர்த்து காய்ச்சி பருகினால் தொண்டை கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் தீரும்.