எது வரை யார் …

0
457
cover (2)-df253abe

எனக்கென்ன எல்லாம் என்னிடம்
என நான்கொண்ட இறுமாப்பெல்லாம்
இளக தொடங்கியது இப்போது …

கண்மூடி கிடக்கிறேன் காத்து
புகா நெகிழி பையில்  …
காலன் அழைத்துக்கொண்டான்
அவன் வசம் ,என உயிருக்கு
உறைத்தது உடல் அது
தனித்து கிடப்பதினால் …

உயிர் கொடுத்தவரையும்
உயிராய் வந்தவளையும்
நான் உயிர் தந்த எம் பிள்ளைகளையும்
உற்றார் உறவினரையும்
நான் கொண்ட நட்ப்புகளையும்
எவரையும் காணோமே
என்னருகில் …

எனை வருத்தி இவர் வாழ்வை
உயர்த்திட்டேனே!!! …
என் உயிர் போனப்பின்பு
உடல் காண ஒருவரையும்
காணோமே!!! …

உரத்து அழ ஆளில்லாமல் போறேனே
உளைச்ச எல்லாம் விட்டுவிட்டு போறேனே
எனக்கென எதுவும் தான் இல்லையோ???!!!
இவ்வுலகில் …

உடல் வாங்க யார் வருவா?
எங்கப்பன் வருவாரா ?
இல்லை என்பிள்ளை வருவானா ?
உடன்கட்டை ஏறாட்டியும் பரவாயில்ல
என் பொண்டாட்டி தான் வருவாளா ?
யாரையையும் காணலையே !!!…

எல்லாம் இருக்குதுனு
நான் போட்ட ஆட்டம் எல்லாம்
நாதியத்து கிடக்கயிலே
நசுங்கித்தான் போகுறேனே …

போன வர மாட்டேன்
போட்டாவா தான் இருப்பேன்னு
தெரிஞ்சும் காணலையே !!!…
தறிகெட்ட மக்கள் என்ன
போனா போகட்டும்னு
போட்டுவிட்டு போனாங்களோ ???…

பொருமி தவிக்கிறேனே
போட்டு எரிக்கும் முன்னே
எவர் முகத்தை பார்ப்பேனோ ???.

எவர் முகமும் பாக்காம
எரிஞ்சு தான் போவேனோ ???
எல்லாம் தெரிஞ்சதா என்
பேச்சு இருந்துச்சே , ஆனா
என் உசுரு போனப்பின்னே
எவரையும் காணாம எல்லாமே
பொசுங்கிடுச்சே …

சேர்த்து வச்ச சொத்து இல்ல…
செத்தா தேவையுன்னு நினைச்சிருந்த
சொந்தத்தையும் காணலையே …

சேர்ந்தே திறிஞ்ச
சேர்க்கையும் தான் காணலையே …
சேர்ந்தே சாவமுன்னு சிங்காரமா
பேசுனாளே அவளையும்  தான்
காணலையே …
கொள்ளிவைக்க , குலம் காக்க
வேணுமுன்னு வேண்டி பெத்த புள்ளையையும்
காணலையே …

எல்லாம் முடிஞ்சிடுச்சு
என் வண்டி கிளம்பிடிச்சு
எரிக்கட்ட வச்சாச்சு
எள்ளு தண்ணி தெளிச்சாச்சு
எவனோ கொள்ளி வைக்க
என் உடலும் வேகுது இப்போ …

எதுவும் இல்லாம போறேனே !!!…
எதுவரைக்கும் யாருன்னு
தெரியாம  போறேனே!!!…

எல்லாம் தெரிஞ்சவனே, எம் இறையே
என் கட்டை முழுசா வெகும் முன்னே
எனக்கு தான் சொல்வாயா
எதுவரைக்கும் யாருன்னு ???…

என்றும் அன்புடன்
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை-35

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments