யாரின் வருகைக்காக
என்னைக் காக்க வைக்கிறாய்?
அடிக்கடி ஜன்னலை திறந்து
தென்றலைத் தேடுகிறாய்
தேடிக் கொண்டே கடைவிழியில்
கண்ணீர் ஒதுக்குகிறாய்
ஆனபோதும்
உனக்காக காத்துக்கிடக்கும் என்னை
உன் தேடலில் தொலைத்து விடுகிறாய்
ஒன்று என்னை எடுத்துக் குடித்து
முடித்து விடு
இல்லை கீழே தட்டிவிட்டு
உடைத்து விடு
இப்படி காக்க வைக்காதே!
இதழ்வரை எடுத்துச் சென்றுவிட்டு
ஏன் கீழிறக்கி வைக்கிறாய்?
யார் யாரெல்லாம் உன்னைப்
புன்படுத்தியதற்காய்
என்னை ஏன் தண்டிக்கிறாய்?
உன் தேடலில் என்னை
நேரம் கடத்தும்
வேடிக்கைப் பொருளாக அல்லவா
காண்பிக்கிறாய்
யாரின் வருகையை எதிர்பாத்திருந்தாயோ
அவனை ஏன் எனக்கு
ஒரு பொழுதும் காண்பிக்க வில்லை நீ?
உன் விழிகளும் அவனை கண்டதாய்
சான்று பகிரவுமில்லையே!
ஏன் நீ வருகைதராதவனுக்காய்
எந்நாளும் என்னை ஏமாற்றுகிறாய்
உன்னால் தினமும் சூட்டிழந்து
குப்பைத் தொட்டிக்கல்லவா வீசப்படுகிறேன்
இன்றாவது என்னை சுவைத்துப்பார்!
உன் ரசனைக்கு ஏற்றவனாக இருப்பேன்!
தேநீர் கோப்பையாக நான்!!!